கருத்துக்களம்: ஆசைத்தம்பியும் அறிவுடை நம்பியும் - 8 - வினோத் சுப்பிரமணியன்

graphic இரண்டு நண்பர்கள் பேசிக்கொள்வது போல் அமைந்த கார்டூன் படம்

 

இன்று வழக்கத்துக்கு மாறாக நம்பி மிகவும் சோகமாக காட்சி அளித்தான்.

என்ன டா நம்பி! ஒரே பீலிங்கா? மூஞ்சியில  முக்கால்வாசி பாகத்த மூதேவிக்கு வாடகைக்கு விட்டுட்ட போல இருக்கு?” என்று தம்பி கலாய்க்க, அவனது ஏளனமான பேச்சைக் கேட்டு திரும்பினான் நம்பி.

ஆனால் பதில் எதுவும் பேசவில்லை.

நான் வேணும்னா சொல்லட்டுமா? என்றான்  தம்பி. அதற்கும் நோ ரெஸ்பான்ஸ் ஃபிரம்  நம்பி.

மகளீர் தினத்தை முன்னிட்டு நீ பேசுனதுக்கு,” என்று தம்பி சொல்லிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட நம்பி,

பரிசு கிடைக்கல அது மட்டுமில்லாம பெண்கள் கிட்ட இருந்து எந்த ஒரு பாஸிட்டிவ் ரெஸ்பான்சும் வரல அப்பிடிங்கரதுக்காக வருத்தமா இருக்கேன்னு நெனச்சியா?

ஆமாம் டா.” என்றான் தம்பி உடனே.

அட போடா!” என்று பேருமூச்சு விட்டபடி பின்னால் சாய்ந்த அறிவுடை நம்பி,

எனக்கு பரிசு கிடைக்கும்னோ இல்லனா மக்கள் கிட்ட இருந்து ஆதரவு கிடைக்கும்னோ அன்னைக்கு நான் அத பேசல. என்ன அங்க ஒரு 250 பேரு வந்திருப்பாங்களா?”

“284. நான்தான் ஏற்பாட்டாளர் தெரியும்ல.”

இருக்கட்டும். என்னுடைய இலக்கு நூரோ இரணூரோ இல்ல. கோடி. பல கோடி. பார்வையற்றவங்களப் பத்தி நான் இந்த உலகத்துக்கு பகிர்ந்துக்கிட்டிருக்க விஷயம் பலகோடி பேருக்கு போயி சேரனும். இது ஒரே நாளில் நடந்திடும்னு நெனைக்குற முட்டாள் இல்ல நான்.”

அப்படி நா வேற எதுக்காக சோகமா இருக்க?”

அது ஒண்ணுமில்ல. கடைசியா சொல்லுறேன்.” என்றான் நம்பி.

சொல்லு நம்பி சொல்லு! உன்னைய கஷ்ட படுத்தின விஷயம் எது? எந்த விஷயம், இல்லையினா எந்த சம்பவம், அப்படியும் இல்லையினா எந்த நிகழ்ச்சி உன்னைய கஷ்ட படுத்திச்சூனு சொல்லு. சொல்லு நம்பி சொல்லு!” என்றான் ஆசை ஆவலுடன்.

கிட்டத்தட்ட ரெண்டு பேரும் ஒரே கேள்வியத்தான் கேக்குறோம் தம்பி.” என்றான் அறிவுடை நம்பி.

நான் உன்னைய கேட்டேன். நீர் யாரைக் கேட்டீர்?”

எப்போவுமே யாரைக் கேட்பேனோ.” என்று சொல்லி நிறுத்தினான் நம்பி.

சில வாக்கியங்கள் முடியும் முன்னமே அதன் பொருளை கொண்டுபோய் சேர்த்துவிடுகின்றன. நம்பி சொல்லவந்ததன் பொருள் தம்பிக்கு புரிந்ததாதலால் அடுத்த கேள்வியை நாவில் வைத்து ஏவினான்.

நான் கேட்டா மாதிரியே எந்த சம்பவம் கஷ்ட படுத்திச்சூனு கேட்டியா?”

இல்ல. ஆனா ஆமாம்.”

இப்போது வாக்கியம் என்னவோ முடிந்துவிட்டது. ஆனால் பொருள்தான் தம்பிக்கு விளங்கவில்லை.

என்ன இல்ல? என்ன ஆமாம்?”

நீ கேட்டமாதிரியேதான் எந்த விஷயம் கஷ்டப்படுத்திச்சூனு கேட்டேன். ஆனா பொதுவா கேக்கல.” என்றான் நம்பி.

தம்பிக்குத் தெரியும் நம்பி தொடர்ந்து பேசுவான் என்று ஆகையால் எதுவும் பேசாமல் அமைதிகாத்தான்.

நீங்கள் பார்வை உள்ளவர்களோடு பள்ளியிலோ கல்லூரியிலோ சேர்ந்து படிக்கும்போது நடந்த எந்த சம்பவம் உங்களைக் கஷ்டப்படுத்திச்சூனு கேட்டேன்.”

நெறையா பேரு நெறையா சொல்லி இருப்பாங்களே?”

சொன்னாங்க. சொல்லுறேன்.” என்று தனது பேச்சைத் தொடங்கினான் அறிவுடை நம்பி.

அதாவது தம்பி. ஒரு பார்வையற்றவர் அவர்களுக்கான சிறப்புப் பள்ளியில படிக்கும்போது பொதுவா எந்த ஒரு பாகுபாட்டையும் அவங்க சந்திக்க நேரிடாது அப்படியும் சந்திச்சாலும் அது அவங்கள உளவியல் ரீதியா எந்த ஒரு தொந்தரவும் பன்னாது. ஆனா பார்வையுள்ளவங்களோட ஒருங்கிணைந்த கல்விக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் படிக்கும்போது நெறையா நிகழ்வுகள் அவங்கள மன வருத்தத்துக்கு உள்ளாக்கிடும். அதுல முதலாவதா இருக்குற பிரச்சின அவர்கள மத்தவங்க அழைக்கும் விதம். நம்முடைய கருத்துக்களத்துக்கு புதுசா வந்திருந்த தாஸ் அப்பிடிங்குரவரு ஒரு விஷயத்த சொன்னாரு. அதாவது அவரு ஒருங்கிணைந்த பள்ளியிலதான் படிச்சிருக்காரு. அந்தப் பள்ளியில பணி செஞ்ச சமூகவியல் ஆசிரியை பார்வையற்றவங்கள அழைக்கணும்னா பிளைண்ட் பாய்! அப்பிடினுதான் கூப்டுவாங்களாம். வகுப்புல ஏதாச்சும் கேள்வி கேக்கணும்னாலும் அந்த பிளைண்ட் பாய எழுப்பு அப்படினுதான் மத்தவங்க கிட்ட சொல்லுவாங்கலாம்.”

அடேங்கப்பா சோசியல் டீச்சர்ணா இப்படித்தான் இருக்கணும். என்னமா சோசியல் டிஸ்டன்ஸ் மெயிண்டேயின் பண்ணி இருக்காங்க. அதுவும் அந்த காலத்திலியே! நானெல்லாம் அங்க இருந்திருந்தா பல்பத்த எடுத்து பள்ளு மேலயே விட்டெறிஞ்சிருப்பேன். சரி எதுக்கு அப்பிடி பண்ணாங்கலாம்?”

ஒரு நல்ல டீச்சருக்கு அழகு மானவர்களோட பெயர நினைவுல வெச்சிருக்குறது. அவன் நல்லா படிச்சாலும் சரி படிக்காட்டியும் சரி. இந்த பழக்கம் அவங்களுக்கு இல்ல. அதனால அப்படி கூப்பிட்டிருக்காங்க. அவ்வளவு என் நல்ல படிச்ச பேராசிரியர்களே மாற்றுத்திறனாளிகளை மோசமான வார்த்தைகளை வெச்சித்தான் குறிப்பிடுறாங்க.”

அப்படினா பேப்பர திருத்துர பேராசிரியர்கள திருத்துரதுக்கே தனிச் சங்கம் அமைக்கணும் போல இருக்கே!” என்ற தம்பி,

இவங்க எல்லாம் படிச்சிட்டுதான வராங்க? அப்புறம் எப்படி அடுத்தவங்க மனசு கஷ்ட படுறது பத்தி யோசிக்காம இருக்காங்க?என்ற தம்பியின் கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த நம்பி,

அவங்க எல்லாம் அடுத்தவங்களுக்காக படிக்குராங்கணு  நீ நெனச்சா அது அவங்களுடைய தப்பு இல்ல தம்பி.” என்று சொன்ன நம்பி,

இதைவிட மோசமான செயல்களெல்லாம் பள்ளியில பார்வையற்றவர்களுக்கு நடந்து கேள்விப் பட்டிருக்கேன். பார்வை இல்லாம போன வெங்கடேசன அவங்க தாத்தா எங்க சேர்க்கிறதுணு தெரியாம ஒரு பால்வாடி பள்ளியில பார்வையுள்ளவங்களோட சேர்க்க, அங்கிருந்தவங்க எல்லாரும் அப்பப்போ வெங்கடேசனுக்கு ஏதாச்சும் சாப்பிட கொடுத்துக்கிட்டே இருந்தாங்கலாம். இவனுக்கும் ஒண்ணும் புரியல. அப்புறம் ஒருநாள் ஒரு கொழந்த ஏதோ ஒண்ண சாப்பிட பிடிக்காம யோசிக்க அப்போதான் அங்கிருந்த டீச்சர் பிடிக்கலனா அந்த கண்ணு தெரியாத பய்யங்கிட்ட கொடுத்துருனு சொன்னாங்கலாம். இப்படிதான் அன்னைக்கு வரைக்கும் வெங்கடேசன நடத்தி இருக்காங்க.”

என்ன டா சொல்லுற! கண்ணு தெரிஞ்ச கொழந்த சாப்பாடு வேணாம்னு சொன்னா அத பார்வை தெரியாத கொழந்தைக்கு கொடுப்பாங்களா!”

கொடுப்பாங்க. அப்படிபட்ட ஆட்களும் இருக்காங்க.”

அந்த டீச்சர் பேரு ஏதாச்சும் வெங்கடேசன் சொன்னாரா?”

தேவி.”

அடப்பாவமே! நானா இருந்தா அந்த சாப்பாட்ட தூக்கி முகத்தில எறிஞ்சிட்டு வந்திருப்பேன்.”

அதையேதான் வெங்கடேசனும் செஞ்சிருக்காரு.”

ஒரு அங்கண்வாடியில ஒண்ணா படிக்கப்போன பார்வையற்றவருக்கே இப்படி ஒரு நெலமையினா,” என்று தம்பி நிறுத்த,

உயர் கல்விக்கூடங்களிலயும் கல்லூரிகளிளையும் பார்வையற்றவங்களுடைய நெலைமை என்னணு யோசிக்கிற. நம்ம யோகேஷ் எல்லாம் ஒன்பதாம் வகுப்புல பார்வையுள்ள மானவர்களோட படிக்கப்போயி படாத பாடு பட்டு திரும்பி இருக்காரு.”

என்ன ஆச்சு?”

என்னத்த சொல்ல! முதல் நாள் வகுப்புக்குள்ள போனவுடனே பசங்க எல்லாம் கேலி பண்ணி சிரிச்சிருக்காங்க. அங்கேயே யோகேஷோட காண்பிடெண்ட் காலி. அப்புறம் எந்த வாத்தியாரும் கண்டுக்கல, அப்போதான் அல்ஜீப்ரா கணக்கு சொல்லித்தந்தாங்க இவருக்கு புரியல. சொல்லித்தர நண்பர்களும் இல்ல.

பலகைய பாக்க பார்வையும் இல்ல. ரிசோர்ஸ் ரூமுக்கு போனா அங்கிருந்த ரிசோர்ஸ் டீச்சர் ஒரு உதவியும் செய்யல. நோட்டும் இல்ல. புத்தகமும் இல்ல. பார்வையற்றவர்களுக்கான சிறப்பு உபகரணங்களும் இல்ல. அதுக்கு காரணமும் இல்ல. கால் பரிச்சையில பெயிலானாலும் அடுத்தடுத்த பரிச்சையில அடுத்து உட்கார்ந்து இருந்தவங்களுல ஒரு நாலு நல்லவங்களா பாத்து பிடிச்சு. பக்குவமா பிட் அடிச்சு பாசானா போதும்னு பாஸாகி பள்ளிய விட்டு பறந்திருக்காரு யோகேஷ்.”

அப்புறம் என்னாச்சு?”

அப்புறம் என்னாச்சு. மறுபடியும் பத்தாம் வகுப்பு பார்வையற்றோர்களுக்கான சிறப்பு பள்ளியில படிச்சிட்டு காலேஜ் போனாறு.”

கல்லூரியில என்ன நடந்தது?”

அப்படியே மேல சொன்னத காப்பி பேஸ்ட் பன்னிக்கோ தம்பி.”

டே என்ன டா!”

பின்ன என்ன டா! கல்லூரி வாழ்க்கையில எது உங்கள கஷ்ட படுத்திச்சூனு கேட்டா கல்லூரி வாழ்க்கையே கஷ்டம்தான் படுத்திச்சு நு சொன்னாரு யோகேஷ். ” என்று சொன்ன அறிவுடை நம்பி,

சேவ்யர் பிரதீப் சிங் அப்பிடின்கிற பேராசிரியரைத் தவிர வேற யாருடைய பாடத்துக்கும் மெட்டீரியல்ஸ் கிடைக்கலனு சொன்னாரு. சிலர் முழுசா நடத்தமாட்டாங்க. சிலர் பாதி சொல்லுவாங்க மீதி பலகையில எழுதிடுவாங்க அதனால பாடங்கள தெளிவா ரெக்கார்டு பண்ணவும் முடியாது. நண்பர்களும் யாரும் இல்ல. யாரும் கண்டுக்க மாட்டாங்க. அக்றீமெண்ட் போட்டா மாதிரி ஒரே ஒரு நண்பண்தான் இருந்தான் அந்த மூணு வருஷத்துக்கும். எல்லாத்துக்கும் அவன்தான். அங்கிருந்த ஒரு பொண்ணுதான் மெட்டீரியல்ஸ் கொடுத்து ஒரு வாசிப்பாளரையும் ஏற்பாடு செஞ்சி தந்தாங்க. அதுவும் எல்லா மெட்டீரியல்சும் அவங்க கிட்ட இருக்காது. அதையும் மீறி மெட்டீரியல்ஸ் கலக்ட் பன்னா   அதையும் முழுசா பயன்படுத்திக்க முடியாது. எதுக்குனா கென்னடி வீட்டுக்கு போயிடுவாண். அவன் கூடதான் போயாகனும்.”

யாரு கென்னடி?”

அதுதான் அந்த மூணு வருஷத்துக்கும் அக்றீமெண்ட் போட்டு வெச்சிருந்த நண்பன். அக்ரிமெண்ட் அப்படினா நீ தப்பா புரிஞ்சிக்க கூடாது. அந்த மூணு வருஷத்துக்கும் யோகேஷுக்கு வேறு யாரும் நண்பர்கள் கிடைக்கல அதனால அப்படி சொன்னேன்.”

எனக்கு சத்தியமா ஒண்ணு புரியல தம்பி. பார்வையில்லாதவங்கள நண்பர்களா ஏத்துக்கிறதுல பார்வை இருக்கவங்களுக்கு என்ன பிரச்சின!”

பார்வைதான் பிரச்சின.”

அப்படினா பார்வையில்லாதவங்களுக்கு பார்வை இருக்கவங்களுடைய நட்பு பாசிபிளே இல்லையா?” என்றான் தம்பி வியப்புடன்.

அப்படியெல்லாம் மொத்தமா சொல்லிட முடியாது. நம்ம மனோகர் சாருக்கெல்லாம் கல்லூரி காலத்தில எப்போதுமே மூணு பெண் தோழிகள் அவர் கூடவே இருந்தாங்கலாம். அவருக்கெல்லாம் எஞ்சாயி எஞ்சாமி வாழ்க்கைதான் அவர் கல்லூரியில.”

அதுசரி. அவனவன் சிங்கிள் டீ குடிக்கவே கஷ்ட பட்டிருக்கான் ஆனா இவரு தினமும் த்ரீரோசசயே  குடிச்சிருக்காரு.”

ஆனா அப்படி எல்லாருக்கும் அமையிரதில்ல. எனக்கு கல்லூரி காலங்களில பெருசா நட்பு வட்டாரம் இல்லாம போச்சு அப்படினு முத்துச்செல்வி மேடம் கூட பதிவு பண்ணியிருக்காங்க.” என்ற நம்பி,

இங்க அடிப்படையே தப்பா இருக்கு தம்பி. ஒரு வகுப்புல என்பது பேரு படிக்கிறாங்கனா அதுல நாலு பேரு பார்வைத்திறன் குறையுடையவங்க இருக்காங்க அப்படினா அத எப்படி பாப்பாங்க தெரியுமா?” என்று நிறுத்தி பின் அவனே தொடர்ந்தான்.

எழுவத்து ஆறு மாணவர்கள் அப்புறம் நாலு பார்வையற்றவர்கள். இதை இன்னும் கீழ இறங்கி சொல்லனும்னா எழுவத்து ஆறு மனிதர்கள் நாலு பார்வையற்றவர்கள்.” இந்த சமூதாயத்துல பெரும்பாலான இடத்தில பார்வையற்றவர்கள் மனிதர்களாக கூட கருதப்படுவதில்லை.” என்று சொல்லி மெலிதாய் சிரித்த நம்பி,அதன் ஆரம்பம்தான் ஒருங்கிணைந்த கல்விக்கூடங்களும் கல்லூரிகளும்.” என்று நிறுத்தினான்.

ஆனா அவங்களும் மனுஷங்கதான!” என்றான் தம்பி.

யாரு சொன்னா! அப்படி இந்த சமூதாயம் நெனச்சிருந்தா அவங்களுக்கு கஷ்டமே வந்திருக்காதே. உதாரணத்துக்கு ஒண்ணு சொல்லுறேன் கேளு. வெங்கடேசனோட வாழ்க்கையில ஒரு சம்பவம். ஏதோ பொருள் வாங்க எல்லாருக்கிட்டையும் பணம் வசூலிச்சிக்கிட்டிருந்தாங்க வெங்கடேசனுடைய தோழர்கள். ஆனா வெங்கடேசன் கிட்ட வாங்கவரும்போது ஒரு பேராசிரியர் தடுத்து இவர் கிட்ட வாங்கவேணாம்னு சொல்லி அந்த இடத்தில பாட்டுப்பாடி பிச்சை எடுத்துக்கிட்டிருந்த இன்னொரு பார்வையற்றவர காட்டி இந்த மாதிரி ஆளுங்க கிட்ட பணம் வாங்குவீங்களா நீங்க?’ அப்பிடினு கேட்டிருக்கார். இது நடந்தது ஒரு ரயில் நிலையத்தில. அவரைப் பொருத்தவரைக்கும் பிச்சை எடுக்கிறவனும் தன் கல்லூரியில படிக்கிற மாணவனும் பார்வையற்றவர்கள் அதனால் ரெண்டு பேரும் பிச்சைக்காரங்க.”

இந்த மாதிரியான அணுகுமுறைகள் எவ்வளவு கஷ்ட படுத்தும் இல்ல?”

ஆமாம். கல்லூரியில எல்லார்க்கிட்டையும் ஒருமையில நண்பர்கள் அப்பிடின்கிற எண்ணத்தோட பழகுற பலபேரு பார்வையற்றவர்கள் கிட்ட மட்டும் மரியாதையோட இடைவேளி கடைபிடிக்கிற விதமாதான் பழகுவாங்கணு நெறையா பார்வையற்றவர்கள் பகிர்ந்துக்கிட்டாங்க. போக போக சிலபேறு புரிஞ்சிக்கிட்டு சகஜமா பழக ஆரம்பிச்சிடுவாங்க ஆனா சில பேர் கடைசிவரை பார்வையற்றவங்கள புரிஞ்சிக்கவும் மாட்டாங்க அதுக்கு முயற்சி பண்ணவும் மாட்டாங்க. இதுல இன்னொரு கமெடியும் இருக்கு. இந்தியர் அனைவரும் சகோதர சகோதரிகள் அப்படினு உறுதிமொழி எடுத்தவங்க எல்லாம் அத எங்க கடைபிடிக்கிறாங்களோ இல்லையோ பார்வை இல்லாதவங்க கிட்ட மட்டும் சரியா கடைபிடிப்பாங்க. ”

சரி அதுல என்ன தப்பு இருக்கு? ஒரு பார்வையற்றவரைச் சகோதரராவோ சகோதரியாவோ நினைக்கிறதில என்ன தப்பு.”

தப்பு இல்லதான். ஆனா பார்வையின்மை அப்படின்கிற ஒரே காரணத்துக்காகவே அவங்கள அப்படி நினைக்கிறத எப்படி ஏத்துக்க முடியும்?” என்று கேட்ட நம்பி இடைவிடாது தொடர்ந்தான்.

உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்லுறேன். கல்லூரியில ஒரு மாணவனுக்கு பிறந்தநாள். கேக் வெட்டியாச்சு. அதைக்கொண்டுவந்து ஒரு பார்வையற்ற பெண்ணுக்கு இந்த பொண்ணு என் தங்கச்சி அப்படினு எல்லார் முன்னிலையிலும் சொல்லி ஊட்டிவிட்டான். இந்த விஷயத்த அந்த பார்வைத்திறன் குறையுடைய பெண்தான் பகிர்ந்திக்கிட்டாங்க. நான் பெயர் சொல்ல விரும்பல

அடே என்னதாண்டா பிரச்சினை உங்களுக்கு? கல்லூரியில கேக் ஊட்டிவிடுறது ஒரு கல்ச்சர். அதுல அவன் அந்த பார்வைத்திறன் குறையுடைய பெண்ணை தங்கச்சியா நினைச்சு ஊட்டிவிட்டிருக்கான். இதுல உங்களுக்கு என்னதான் பிரச்சினை?” என்றான் தம்பி கலாய்க்கும்படியாக.

அதுசரி. முதல்ல ஒருத்தங்களுக்கு கேக் ஊட்டுறதுக்கு முன்னாடி அவங்களுக்கு அந்த செயல் பிடிக்குமானு தெறிஞ்சி வெச்சி இருக்கணும். அந்த பெண்ணுக்கு அந்த செயல் பிடிக்கலனு பதிவு பண்ணியிருக்காங்க. சரி அதைவிடு. இதுல இன்னொரு ரெண்டு விஷயம் இருக்கு. ஒண்ணு, அந்த பையன் அவங்கள தங்கச்சியா நினைச்சிருந்தா அவங்களையும் இவனை அண்ணனா நினைக்க வெச்சிருந்திருக்கணும் இல்லையா? அப்படி இருந்திருந்தா அவங்களே எனக்கு ஊட்டு டா அண்ணா அப்படினு வாயைத்திறந்துக்கிட்டு வந்திருப்பாங்க. அன்னைக்கு வரைக்கும் ஸ்ற்றேஞ்சர் மாதிரி எங்கேயோ இருந்திக்கிட்டு திடீர்னு கேக் கொண்டுவந்து ஊட்டுனா எப்படி? அது எப்படி தம்பி அங்கிருந்த நாற்பது பெண்கள்ல ஒரே ஒரு பார்வையற்ற பெண் மட்டும் தங்கையா தெரிஞ்சாங்க? அப்படியே இன்னொரு கேள்வியும் இருக்கு. அது எப்படி அங்கிருந்த நாற்பது ஆண் மானவர்களுக்கும் அந்தப் பார்வையற்ற பெண் மட்டுமே தங்கச்சியா ஆனது எப்படி அப்படினு கேக்குறாங்க அந்தப் பார்வையற்ற பெண். அதோட நானும் ஒண்ணு கேக்குறேன். ஒருவேளை அவங்களுக்கு பார்வை இருந்து அந்த வகுப்புல வேற யாருக்காச்சும் பார்வையில்லாம இருந்திருந்தா தங்கச்சி போஸ்டிங்க் யாருக்கு கிடைச்சிருக்கும்?

புரியுது. கண்டிப்பா இவங்களுக்கு கிடைச்சிருக்காது. அதோட முக்கியம் கேக்கும் கிடைச்சிருக்காது.”

யாருக்கு டா வேணும் உங்க கேக்கு.”

இப்போ நீ என்னதான் சொல்லவர நம்பி?”

எதையும் சொல்ல வரல. ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொல்லுறேன் அதுல உனக்கு என்ன புரியுதோ எடுத்துக்கோ. நான் இவர இந்த கருத்துக்களத்துக்குள்ள இழுக்கக்கூடாதுனுதான் நினைச்சேன். ஆனா வேற வழி இல்ல.இவர் ஒரு பார்வையற்றவர். இவருடைய கல்லூரி காலத்தில இவருடைய வகுப்புல ஒரு பெண்ணுக்கு பிறந்தநாள். அதுதான் அவங்க கல்லூரியில் சேர்ந்ததும் கொண்டாடுர முதல் பிறந்தநாள். கேக் வெட்டப்பட்டது. அந்த வகுப்புல இவர் ஒருத்தருதான் பார்வையற்றவர். அந்தப் பெண் திடீர்னு வந்து இவருக்கு கேக்கை ஊட்டிவிட்டுட்டாங்க. ஒரு பெண் கேக் ஊட்டுறது அதுதான் முதல் முறை அவருக்கு. அவர் கையில வாங்க நினைக்கும்போதே கேக்கை வாய்க்குள்ள அனுப்பிட்டாங்க அந்தப்பெண்.”

சரி அதுக்கென்ன இப்போ?”

அந்தப் பார்வை உள்ள பெண்ணும் அந்தப் பார்வையற்ற ஆணும் காதலர்களும் கிடையாது சகோதரர்களும் கிடையாது. இன்னைக்கு வரைக்கும் நல்ல நண்பர்கள்.”

சரி புரியுது. ஆனா ஒண்ணுதான் புரியல. பார்வையற்ற மாணவர்களைப் பற்றி பார்வையுள்ள மாணவர்களுக்கு இருக்கிற அறியாமையையும் தவறான புரிதலையும் பேராசிரியர்களால் சரி செய்யமுடியாதா!” என்று ஆசைத் தம்பி ஆவலுடன் கேட்க,

அட யாருடா இவன் மறுபடியும் தொடங்கன இடத்துக்கே வரான்.” என்று சொல்லி சளித்துக்கொண்டான் அறிவுடைநம்பி.

அது இல்ல டா. பொதுவா பேராசிரியர்களுக்கு பார்வையற்ற மாணவர்களைப் பத்தி கொஞ்சம் புரிதல் இருக்கும்ல அதை வெச்சி பார்வையுள்ள மானவர்களுக்கு எடுத்துச் சொல்லி ஒரு நட்பு வட்டாரத்த உருவாக்க முடியும்னு சொன்னேன்.”

அப்படியா. பாலகணேஷ் சார் கல்லூரியில சேர்ந்திருக்காரு. வகுப்புல எல்லார் கிட்டையும் சகஜமா பேசி பாடம் எடுக்கிற ஒரு பேராசிரியை ஒருநாள் ஒரு படிவத்தைக் கொண்டுவந்து கொடுத்து எல்லாரையும் கையெழுத்து போட சொன்னாங்கலாம். அதுவரைக்கும் பார்வையற்ற பள்ளியில படிச்சிட்டுவந்த பாலகணேஷ் சார் நாங்க ரேகைதான் மேடம் எப்போதும் வைப்போம் அப்படினு சொல்லியிருக்காரு. இவங்கள வெச்சிக்கிட்டு என்ன டா பண்ணுறது அப்படினு சலிச்சிக்கிட்டு போயிருக்காங்க அந்த பேராசிரியர். சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும்.” என்று எதையோ சொல்லவந்த நம்பியை இடை நிறுத்திய தம்பி.

எதுக்கு பார்வையற்றவர்கள் ரேகை வைக்கணும்? சிக்நேச்சர் மிஸ்மேச் ஆகும் அப்படினுதானே? சரி நான் அப்படினா ஒண்ணு கேக்குறேன். சகலத்தையும் சொல்லிக்கொடுக்கிற பார்வையற்றோருக்கான சிறப்புப்பள்ளிகள் ஒரு கையெழுத்து எப்படி போடணும் அப்படிங்கிரதையும் அவங்களுடைய சின்ன வயசுலையே சொல்லிக் கொடுத்துட்டா பிற்காலத்தில அவங்க எங்கேயும் போயி அவமான படவேண்டியது இருக்காதுதானே. சிறுவயதிலிருந்தே கையெழுத்துப்போட பழக்கிவிட்டா அவங்க பார்வையுள்ளவங்களைவிட சிறப்பாவே கையெழுத்துப்போடுவாங்க அப்படின்கிறது என்னுடைய கருத்து.”

இருக்கலாம். ஆனா உன்னுடைய கருத்துக்கும் எதார்த்தத்துக்கும் தூரம் அதிகம். எதுக்குனா பார்வை இருக்கவங்களுக்கே நிறைய இடத்தில கையெழுத்து ஒத்துப்போறது இல்ல. அதுமட்டும் இல்லாம மிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கையெழுத்து தவறா போச்சுனா வாழ்க்கையே அவ்வளவுதாண். நீ சொல்லுரியே சிறப்புப்பள்ளிகள் இதை ஆரம்ப காலத்திலேயே அவங்களுக்கு கத்துக் கொடுத்திருக்கலாம் அப்படினு. பார்வையற்றவர்களுக்கு இவ்வளவையும் சொல்லிக்கொடுக்கிற சிறப்புப்பள்ளிகளுக்கு இது ஒரு விஷயம் கிடையாது. மற்றவர்கள்தான் இதை புரிஞ்சிக்கணும்.”

சரிவிடு இதுக்குனு தனியா ஒரு கருத்துக்களம் நடத்திடலாம். கையெழுத்துப்போடுர பார்வையற்றவங்க கிட்ட கையெழுத்தால  சந்திச்ச பிரச்சினைகளையும் ரேகை வைக்கிறவங்க கிட்ட ரேகையால வந்த பிரச்சினைகளையும் சொல்லுங்கணு கேப்போம். போச்சு டாபிக் எங்கேங்கையோ போகுது நம்பி. நீ எதையோ சொல்லிக்கிட்டிருந்தையே என்னதது?” என்று  தம்பி கேட்க,

ஆமாம் என்ன சொல்லிக்கிட்டிருந்தேன்?” என்று நம்பியும் யோசிக்க சட்டென்று நினைவு வந்தவனாய்,

கரக்ட்! வகுப்புல நல்லா படிக்கிறவரு பாலகணேஷ் சார். ஒருநாள் நல்ல மார்க் எடுத்தப்போ என்ன நல்ல ஸ்கிரைபா அப்படினு ஏளனமா கேட்டிருக்காரு பேராசிரியர். அது அவர கஷ்ட படுத்தி இருக்கு. வேணும்னா இன்னொருவாட்டி தேர்வு வைங்க அப்படினே சொல்லி இருக்காரு பாலகணேஷ்.”

இம். கஷ்டமாதான் இருக்கும். ஆனா ஸ்கிரைப் உதவியாலயே எத்தனையோ பார்வையில்லாதவங்க தேர்ச்சி பெற்று இருக்காங்க அப்படின்கிறது உண்மைதானே. அந்த மாதிரியான ஆட்களாலதான நல்லா படிக்கிற பார்வையில்லாதவங்களுக்கும் அவப்பெயர் வந்து சேருது?” என்றான் தம்பி முகத்தில் அறைந்தாற்போல்.

உண்மைதான் ஆனா இந்த சம்பவத்தைப் பொருத்தவரைக்கும் யாரு நல்லா படிக்கிற மாணவன் அப்படிங்கிரத கூடவா கண்டு பிடிக்க முடியாது? இத்தனைக்கும் பாலகணேஷ் வகுப்புல அடிக்கடி பதில் சொல்லுபவராம். மொத்தத்தில இது எப்படி இருக்கு தெரியுமா? முஸ்லீம்கள் எல்லாரும் தீவிரவாதிகள் அப்படினு சில பைத்தியக்காரங்க கத்திக்கிட்டிருப்பாங்களே அந்தமாதிரி கேவலமா இருக்கு.” என்று சொல்லி நிறுத்திய நம்பி,

மேல சொன்ன விஷயம் எல்லாம் கஷ்டப்படுத்தினாலும் ஏதோ ஒரு கட்டத்தில கடந்து போயிடலாம். ஆனா நான் இப்போ சொல்ல போற கடைசி ரெண்டு விஷயங்கள் ரொம்ப வலி நிரஞ்சது தம்பி.” என்று நம்பி சொல்லி மீண்டும் நிறுத்த,

அப்படி என்ன டா நடந்திச்சு?” என்று ஆர்வமுடன் கேட்டான் தம்பி.

முனைவர் பட்டம் வாங்கணும்னு ராஜாவுக்கு ஆசை. அதுக்காக கடினமா முயற்சி செஞ்சதுக்கப்புறம்தான் முனைவர் படிப்புக்கு வாய்ப்பே கிடைச்சிது. ஒருவழியா கேய்டையும் ரெடி பண்ணிட்டாறு. அவங்களும் அவங்களுக்கு கீழ இவர பி.ஹெச்.டி. பண்ண முதல்ல சம்மதிச்சு பிறகு அவங்களுக்கு வயிற்று வலியினும் இவருக்கு வழிகாட்டியா அதுதான் கெயிடா இருக்க முடியாதுணு சொல்லிட்டாங்க.

வயிறு வலிக்கும் கெயிடா இருக்கருதுக்கும் என்னடா சம்மந்தம். இவ்வளவு மொக்கையாவா காரனம் சொன்னாங்க

அப்படித்தான் சொன்னாங்கலாம். சொன்னவங்க அதுக்கப்புறம் என்ன பண்ணாங்கணு தெரியுமா?” என்று கேட்டு ஒருநொடி நிறுத்தினான் நம்பி. ஆனால் தனது பதிலை சொல்ல அந்த ஒருநொடியே அதிகமாக இருந்தது ஆசைத் தம்பிக்கு.

அதுக்கப்புறம் யாராச்சும் ஒரு பார்வையுள்ளவங்க பி.ஹெச்.டி. பண்ண இவங்களோட கெயிட்ஷிப் கேட்டு வந்திருப்பாங்க இந்த மேடமும் ஒத்துக்கிட்டிருப்பாங்க சரியா?”

ஆமாம். வேற ஒரு பையனுக்கு ஒத்துக்கிட்டாங்கலாம். பார்வையில்லாததுனாலையே புறக்கணிக்கப்பட்டார் ராஜா. அதுக்கப்புறம் அந்த வலி தாங்க முடியாம கடற்கரை மணல்ல தனது தோழியிடம் சொல்லி கண்ணீர்விட்டு அழுது இருக்காரு ராஜா. மாணவர்கள் பார்வையற்றவர்களை புறக்கணிச்சா பேராசிரியர்கள் கிட்ட சொல்லலாம். ஆனா அவங்களே இதை செஞ்சா?என்று சொல்லி கேள்வியுடன் நிறுத்தினான் நம்பி.

நீ சொல்லுறது சரிதான் தம்பி. ஒரு பி.ஹெச்.டி மானவர்களுக்கு வழிகாட்டியா இருக்கிற ஒரு பேராசிரியைக்கு ஒரு பார்வையற்ற மாணவன் மனம் வருந்தும்படி நடந்துக்கக்கூடாதுணு கூட தெரியலயே அப்படினு நினைக்கும்போது எனக்கு என்ன சொல்லுறதுணு தெரியல நம்பி.” என்று சொல்லிய ஆசைத் தம்பி,

சரி கிளம்பு நம்பி போவோம். நேரமாச்சு.” என்றான்.

போகலாம். ஆனா கடைசியா ஒரு சம்பவத்தை மட்டும் சொல்லிடுறேன்.” என்றான் அறிவுடை நம்பி.

சரி சீக்கிரம் சொல்லு.” என்றான் ஆசைத்தம்பி.

கல்லூரியில் படிக்கும்போது முத்துச்செல்வி மேடம் ஒருநாள் மற்றவங்களைக்காட்டிலும் அதிக மதிப்பெண் எடுத்து முதல் மாணவியா வந்துட்டாங்க. அதுவரைக்கும் வகுப்பில் முதல் மாணவியா வந்துக்கிட்டிருந்த ஒரு பார்வையுள்ள மாணவி இவங்கள பாத்து ஏளனமா ஒருவார்த்த சொல்லி இருக்காங்க. அது என்ன தெரியுமா?” என்று நம்பியே கேட்டு பின் தொடர்ந்தான்.

பரவாயில்லையே! நீ கூட எங்க ரேஞ்சிக்கு வந்துட்ட?’

என்ன என்ன என்ன கேட்டாங்க!” என்று புருவத்தை உயர்த்தினான் தம்பி.

பரவாயில்லையே நீ கூட எங்க ரேஞ்சிக்கு வந்துட்ட.” என்று மறுபடியும் அந்த வார்த்தையைச் சொன்னான் நம்பி.

பரவாயில்லையே, நீ கூட?என்று பாதி வார்த்தையைச் சொல்லி நம்பியை பார்த்தான் தம்பி.

நம்பி சொன்னது தம்பிக்குக் கேட்டுத்தான் இருந்தது ஆனால் ஜீரணிக்கதான் முடியவில்லை. இது நம்பிக்கும் புரியாமல் இல்லை. அதனால்தான் சளிக்காமல்,

எங்க ரேஞ்சிக்கு வந்துட்டனு கேட்டாங்க தம்பி.” என்று சொல்லி அதுவரை இரு இரு என்று சொல்லிக்கொண்டிருந்த நம்பி எழுந்து இரண்டடி நடக்க ஆரம்பித்தான். ஆனால் அதுவரை போகலாம் என்று சொல்லிக்கொண்டிருந்த ஆசைத் தம்பி அதே இடத்தில் அசைவின்றி கிடந்தான்.

graphic கட்டுரையாளர் வினோத் சுப்பிரமணியன் அவர்களின் படம்
கட்டுரையாளர் வினோத் சுப்பிரமணியன்

 

(கட்டுரையாளர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றுகிறார். ).

slvinoth.blogspot.com என்ற தளத்தில் தொடர்ந்து எழுதிவருகிறார்)

தொடர்புக்கு: slvinoth91@gmail.com

1 கருத்து:

  1. கட்டுரை அருமை.பள்ளி நாட்களிலே பார்வையற்றவர்களுக்கு கையெழுத்திட கற்றுத்தரவேண்டுமென்ற கருத்தை பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு