வரதராஜன் |
உலகம் முழுவதும் கொரோனா தனது இரண்டாவது முகத்தைக் காட்டத் தொடங்கி நம்மை அச்சுருத்தி வறுகிறது. அது ஆல்ஃபா, பீட்டா, டெல்ட்டா, டெல்ட்டா பிலஸ் என நான்கு வகையான மாற்றங்களைக் கொண்டிருக்கிறதென வல்லுநர்கள் கூறுகின்றனர். இதில் இந்தியாவில் பரவும் வைரஸ் உருமாறிய டெல்ட்டா வகை எனத் தெரிவிக்கிறார்கள். உத்திரபிரதேசம், குஜராத், போன்ற மாநிலங்களில் இறந்தவர்களைப் புதைக்க இடமில்லாத நிலை முதலாம் அலையில் இத்தாலி நாட்டிற்கு ஏற்பட்ட நிலைமையை நமக்கு நினைவூட்டுகிறது.
மகாரஷ்ட்ரா, தமிழ்நாடு, குஜராத், உத்தரபிரதேசம் முதலியன இந்தியாவில் கொரோனாவின் ஹாட்ஸ்பாட் எனச் சொல்கின்றனர்.. இதை எழுதிக் கொண்டிருக்கும் வேலையில் தமிழகத்தின் ஒரு நாளைய பாதிப்பு 25000மாக இருக்கிறது. நிலமை இவ்வாறு இருக்க,ஏப்ரலில் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் இறந்துள்ளார்கள். இதில் ஏப்ரல் 13-2021 அன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிருவனர்களுள் ஒருவரும், காரைக்குடி அழகப்பா கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியருமான திரு. வரதராஜன் கொரோனாவிற்குப் பலியானார்.
பிறப்பும் கல்வியும்:
மலைசாமி மற்றும் மயில் தம்பதியினருக்குக் கடைசி மகனாக பிறந்தவர்தான் இந்த வரதராஜன். அவரது தொடக்கக் கல்வியை மதுரை சிம்மக்கல்லில் உள்ள மங்கையர்க்கரசி பள்ளியில் முடித்தார். அதன் பிறகு அவருக்குப் பார்வைகுறையத் தொடங்கியதும் ஆறாம் வகுப்பு முதல் மதுரையில் உள்ள இந்தியப் பார்வையற்றோர் சங்கம் IABயில் படித்தார். தனது இளங்கலைப் பட்டத்தை அமெரிக்கன் கல்லூரியிலும், முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திலும் முடித்தார். பேராசிரியருக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்விலும் தேர்ச்சிப் பெற்றுள்ளார். தனது கல்வியியல் பட்டயப்படிப்பைச் சென்னையில் உள்ள இந்திரா அறக்கட்டலையில் முடித்தார். பின்பு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தற்காலிக பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். பவுன் என்கின்ற பார்வைமாற்றுத்திறனாளியைத் திருமனம் முடித்தார். இவர்களுக்குப் புகழ்ராஜ் என்கின்ற அழகான ஆண்மகன் பிறந்து 17 மாதங்கள் இருக்கும் பொழுதே, திரு. வரதராஜன் கொரோனா காரணமாக மரணமடைந்திருக்கிறார்.
இந்திய பார்வையற்றோர் சங்கமும் வரதராஜனும்;
தனது ஆறாம் வகுப்பு முதலே திரு வரதராஜனின் பார்வையற்றோர்களுடனான வாழ்க்கைக் கணக்கு ஆரம்பித்தது. இங்கிருந்துதான் பார்வையற்றவர்களுக்கான இவரது சேவை பயணமும் தொடங்கியது. பள்ளிப் படிப்பின் போது அவருக்கு கணிதத்தின் மீதிருந்த காதல் அவர் சதுரங்கத்தின் மீது கவனம் குவிக்கக் காரணமாக இருந்தது. அன்று அவர் கற்றுக்கொண்ட கணிதம் அவரோடு கடைசிவரை பயணித்தது எனச் சொல்லலாம். IABயில் படிக்கும் பொழுதெ சதுரங்கம், கிரிக்கெட், கைப்பந்து போன்ற விளையாட்டுகளில் இவர் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். IAB விடுதியில் தங்கி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டிருக்கும்போதே IAB Sports Club-இல் தலைவர், செயலாளர் போன்ற பதவிகளிலிருந்து சக மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிக்க தொடங்கிவிட்டார். இந்நிகழ்வுதான் அவர் நண்பர்களோடு இணைந்து பிற்காலத்தில் பார்வையற்றோருக்கான தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை நிறுவ காரணமாக அமைந்தது.
பார்வையற்றோரைப் பொருத்தமட்டில் அதிக நண்பர்களைச் சேர்த்துக் கொண்டவர்கள் தங்களது வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியைக் காண்பார்கள் என்பது எழுதப்படாத விதி. இதுதான் திரு வரதராஜன் வாழ்க்கையிலும் நடந்தது. அவருடன் தங்கி கல்லூரியில் பயின்ற பெரும்பான்மையானோரின் காலை உணவு வரதராஜன் வீட்டில்தான் இருந்தது. காரணம், அவ்விடுதியில் காலை உணவை 6 மணிக்கே தந்து விடுவார்கள். அந்நேரத்தில் உணவைச் சாப்பிட முடியாது என்பதனால் அவர்களது காலை உணவு அங்கு அமைந்தது. அவர் வீட்டில் இருப்பவர்களும் அவர் நன்பர்களை ’மயனே’ என்றுதான் அழைப்பார்கள். சில நேரங்களில் அவரது வீடு நன்பர்களின் கூடாரமாகவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மீட்டிங் அரங்கமாகவும் இருந்தது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் வரதராஜனும்:
பள்ளி காலத்திலேயே இவர் விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அப்போதிலிருந்து மாநிலம், தேசிய அளவிலான சதுரங்கம், கிரிக்கெட் போன்ற போட்டிகளிலும், மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளிலும், தேசிய அளவிலான தடகள போட்டிகளிலும் கலந்துகொண்டு பல பரிசுகளைப் பெற்றார்.