நூல் அறிமுகம்: லக்ஷ்மி சரவணக்குமார் எழுதிய ஐரிஸ் என்ற குறுநாவல் - அப்சரன் ஃபெர்ணாண்டொ.

graphic ஐரிஸ் குறுநாவலின் அட்டைப் படம்

      காதலிக்காத மனிதனும், காதலிக்கப்படாத மனிதனும் சபிக்கப்பட்டவர்களென நம்புகிறேன்  என்று தன் முன்னுரையில் கூறுகிறார் லட்சுமி சரவணக்குமார். காதல் என்ற ஒற்றைக் கருவை கையில் எடுத்து ஒரு நாவலைப் படைத்திருக்கிறார். ‘கோடைக் காலத்தின் காதல்கள்என்ற பெயரில் மூன்று வெவ்வேறு கதைகளை இணைத்து நாவலாக படைக்க முயன்றவருக்கு இக்கதை தனித்து நின்றதால்,  ஒரு தணி நாவலாக மாற்றி நம் மனதிலும் தனித்து நிற்கச் செய்கிறார் லட்சுமி சரவணக்குமார்.

      இக்கதையின் கருவை ஒற்றை வரியில் சொல்லிவிடலாம்தான். ஆனால் சுவாரசியம், சுவை இவற்றை மனதில் கொண்டு கருவைத் தொடாமல் இப்புத்தகத்தை அலசலாம் என நினைக்கிறேன். “உங்கள் முழு வாழ்நாட்களுக்கும் அர்த்தப்பூர்வமாக ஏதாவது ஒன்றைச் செய்யவேண்டுமென்பது உங்களின் விருப்பமென்றால், சாவை நெருங்கும் நொடிவரை யாரையேனும் காதலித்துக்கொண்டே இருங்கள்என்று முன்னுரையில் ஒரு ஆழமான வரியைக்  கூறியிருக்கிறார் லட்சுமி சரவணக்குமார். அதற்கேற்றார்போல  காதலின் ஆழத்தைப், புனிதத்தை இக்கதை மிக அழகாய் தொட்டுச்செல்கிறது.

      பொதுவாக திரைப்படங்களும் புதினங்களும் வெற்றி பெறுவதற்குக் காரணம் அவை யதார்த்தத்தை மீறிய ஒரு பரவச உணர்வை வாசகனுக்கும் பார்வையாளர்களுக்கும் தருவதால்தான். இக்கதையும் ட்ரான்ஸ்கிரஷண்  எனப்படுகிற எதார்த்தத்தை மீறிய, இவ்வுலகமும்,  இச்சமுதாயமும்   கட்டுப்படுத்தி வைத்திருக்கும்  காதலை மீறி பரவசமூட்டும் ஒரு காதலைத் தொடுகிறது.    இக்கதையின் சிறப்பம்சமே மனோவையும், பிரியதர்ஷினியையும் அவர்களாகவே உலவ விட்டதுதான். அதனால்தான் என்னவோ நம் இதயத்தோடு ஒன்றி விடுகிறார்கள் இருவரும்.

      வெவ்வேறு இடத்தில்  வெவ்வேறு துறையில் இருக்கும் மனோவும் பிரியதர்ஷினியும்  ஒரு முக்கியப் புள்ளியில் ஒன்றினைகிறார்கள். இதனால் அவர்களுக்குள் ஏற்படும் காதல், அதை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் என இந்நாவல் அத்தியாயத்திற்கு அத்தியாயம் சுவை கூட்டுகிறது. அதிக கதாபாத்திரங்கள் இல்லாவிட்டாலும் ஒரு சில கதாபாத்திரங்களை வைத்து சுவாரஸ்யம் குறையாமல் சுவையோடு கதையை நகர்த்தியிருப்பது  லக்ஷ்மி சரவணக்குமாரின்  எழுத்தாளுமைக்கான ஒரு சான்று  என்றுதான் சொல்ல வேண்டும்.

      12 அத்தியாயங்கள் மட்டுமே கொண்ட ஒரு குறுநாவல் இது. ஆனால், படித்து முடிக்கையில் நம் மனதில் ஏற்படுத்துகின்ற தாக்கம் அதிகம். முதல் அத்தியாயத்தில் கதாநாயகனின் தவிப்போடு தொடங்கி, 2 முதல் 8 அத்தியாயங்கள் வரை நம்மைக் காதலில் மூழ்கடித்து, காமம், மோகம் இவற்றிற்கெல்லாம் புது அர்த்தம் காட்டி பின்னால் 9 முதல் 12-ஆம் அத்தியாயம் வரை நம் இதயத்தை கனக்கச் செய்கிறது இக்கதை.

      கலவிக்காக வருவதல்ல காதல்; காதலின் முழுமை தான் கலவி என்று மனோவும் பிரியதர்ஷினியும் காதலர்களாகச் சந்திக்கும் அந்தத் தருணத்தில் வெளிப்படுத்திய விதம் உண்மையிலேயே நமக்குள் ஒரு நிறைவைத் தருகிறது. உறவுகள் வெளியில் உருவானாலும் இணைவது உடலில்தான் என்ற காதலின்  இன்னொரு பரிமாணத்தை அழகாய் தொட்டிருக்கிறார் இக்கதை ஆசிரியர்.

      காதலோடு சேர்த்து இந்திய செவ்வியல் கலைகளின் சிறப்பையும் சுவை குன்றாமல் கூறியதோடு மட்டுமின்றி, ஆங்காங்கே வருகின்ற இயற்கை வருணனைகள் இக்கதையின் கூடுதல் அழகியல். இயற்கையின் அலாதியய் மிகாமலும் அதேசமயம் அதன் சுவை குன்றாமலும் வர்ணித்திருப்பது சிறப்பு. காதல் என்றாலே தாஜ்மஹால் மட்டுமே பெரும்பாலோனோருக்கு நினைவு வரும். அப்படி இருக்கையில் தேவகிரி கோட்டை, காமாக்யா கோவில், லோநாவாலா போன்ற இடங்களைத் தொட்டுச் சென்றது காதலின் சுவையை இன்னும் அதிகரிக்கிறது.

      ஓரிடத்தில் மனோ, “அப்டி இல்ல பிரியா, எனக்குப் புடிச்ச நான் நேசிக்கிற எல்லா இடத்துக்கும் உன்னோட போகனும்னுதான் ஆசப்படறேன். ஏன்னா என் வாழ்க்கையோட கடைசி நாட்கள்ல எனக்கு மிஞ்சியிருக்கற நினைவுகள் எல்லாத்துலயும் நீ மட்டுந்தான் இருக்கனும். அதனாலதான் எனக்குப் புடிச்ச எல்லாத்துலயும் உங்கூட இருக்க நினைவுகள நிரப்பி வெச்சிட்டு இருக்கேன்என்கிறான்.  

       ஒவ்வொரு சராசரி மனிதனும் தனக்குப் பிடித்த இடத்திற்குத் தனக்கு ரொம்பப் பிடிச்சவங்ககூட போகணும்னு ஏக்கம் இருப்பதை யாரால் மறுக்கமுடியும்?  பின்னால் அவர்கள் இல்லாமல் போனாலும் அந்த இடங்களுக்கு நாம் செல்லும்போது இந்த இடங்களுக்கு எல்லாம் நம்மோடு பிடித்தவர்களோடு  வந்தோம் என்ற நினைவே அலாதியானது. நம்ம ஒருத்தர ஆழமா காதலிக்கிறோம் அப்படின்னா அதற்கான காரணம் என்ன என்று யாராவது கேட்டால், நமக்கு அதை சரியாக சொல்லத் தெரியாது. அவங்களுடைய இருப்பும், ஸ்பரிசமும், அருகாமையும் நம்மை எங்கேயோ கூட்டிட்டு போகும்! அப்படிப்பட்ட ஒரு காதல்தான் இங்கேயும் பதிவு செய்யப்பட்டிருக்கு.

      மனோவும் பிரியதர்ஷினியும் ஒருவரோடொருவர் மின்னஞ்சல் வாயிலாக பேசிக்கொள்ளும் போது இருவரும் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகளும், ஒருவருக்கு ஒருவர் வெளிப்படுத்தும் ஆனந்தத் தேடலும் அந்த ஆழத்தை நம்மிடையே கொண்டு வருகிறது.  எழுத்தாளர் பஷீர் வீட்டிற்குச் செல்லும் பகுதி, இடையிடையே மேற்கோல்காட்டப்படும் புத்தகங்கள் முதலியவை உணர்வுப்பூர்வமான அறிவுத்தேடலுக்கும் வித்திடுகிறது.

      பொதுவாக நாம் காதலிக்கும்போது சின்ன சின்ன விஷயங்கள் கூட அர்த்தமாகவும்,  அழகாகவும் தெரியும் அப்படின்னு சொல்லுவாங்க. அப்படித்தான் இந்த இருவருக்கிடையில் ஒரு சின்ன மழைக்காளான் கூட ரொம்ப அழகா தெரியுது.

      மனோ, பிரியதர்ஷினி இந்த ரெண்டு கதாபாத்திரத்தையும் தாண்டி மகி கதாபாத்திரத்தையும் நம்ம நிச்சயமாகப் பேசணும்; எதார்த்தத்தில் இப்படி ஒரு கதாபாத்திரம் உண்மையிலேயே இருக்குமா அப்படிங்கிற கேள்வி எழுந்தாலும், குணத்தில் இவங்க ரெண்டு பேரையும்விட தனித்துத் தெரிகிறார் மகி. பல நேரங்களில் அவர் எடுக்கும் முடிவுகளும், சில விஷயங்களை அவர் எதிர்கொண்ட விதங்களயும் பார்க்கும்போது உண்மையிலேயே மகியும் நம் மனதில் நிற்பது தவிர்க்க முடியாததாகிறது.

      இவ்வாறாக பல அழகியல் அம்சங்களை உள்ளடக்கிய இந்த ஐரிஸ் என்ற குறுநாவலை ஒரு முறையாவது நல்ல மனநிலையில், அழகான ஒரு தனிமையில் நாம் ஒவ்வொருவரும் படித்துப்பார்க்க வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள். நாம் காதலிக்கிற, நம்மை காதலிக்கிற ஒவ்வொருவருக்கும் இந்த நூலைச் சமர்ப்பிக்கலாம்.

 படித்தது: அமேசான் கிண்டில் தளத்தில்

 

graphic கட்டுரையாளர் அப்சரன் ஃபெர்ணாண்டொ அவர்களின் படம்
கட்டுரையாளர் அப்சரன் ஃபெர்ணாண்டொ

(கட்டுரையாளர் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார்).

தொடர்புக்கு: tamilfernando@gmail.com

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக