கவிதை: காணா மணிகள் - முனைவர் U. மகேந்திரன்

graphic ஒருவர் முககவசத்துடன் மருத்துவத்தைக் கேடயமாக கொண்டும் தடுப்பூசியை வாளாக கொண்டும் கொரோனாவை எதிர்த்துப் போரிடும் கார்ட்டூன் படம்

 

இதய வாட்டத்தை இயல்புக்கு மாறாக நீட்டித்த  நிமிடங்கள்.

நிறைவு ஓலைகள்  நித்தமும் சத்தமின்றி வாசிக்கப்பட்ட கண்ணீரின் கணங்கள்.

இறப்பு அவலத்தை   எடுத்துச் சொல்லவே எரிச்சலாய் இயங்கியே கிடந்தது ஆதிமனிதனின் மரணப் பறை இசை.

 

அதிகப் பிறப்பைப் பரிகசித்த பொருளியியல் புலிகள்,

கண் அசை நிமிட மரணங்கள் கண்டு விக்கித்து வாய்ப்பூட்டு கொண்டன.

உடன் வாழ்ந்த உணர்வுகள் உரைந்தன

அவற்றோடு பிணைந்திருந்த காதல் கரைந்தது

இந்த விளைவுக்கு விடை தந்து

ஆத்மாவின் ஜீவன் முறிந்தது.

 

அவனைக் காதலித்த அவள்,

அவளை மணந்த அவன்,

அவர்களை ஆண் பெண்ணாக்கிய  அவைகள் என

எல்லாவற்றிலும்

ஏதோ ஒரு இறப்பு ஆணி அறையப்பட்டது.

காத்தவனுக்கு மருந்து தர கரங்கள் இல்லை

 உடலானவரை எடுத்துச் சென்றவரின் உடல்களை  உடன் இருந்து எடுக்க ஆளில்லை,

அதுவரை தூய்மை செய்தவரின் உடல்கள் அசுத்தப் பட்டன

 தானே பெரியவன் என்று இருந்தவனை எல்லாம் சிறியதாய் இருந்த அந்தப் பெரியது தொட்டுப் பொசுக்கியது.

பிடித்தவர்  மரணித்தும் அழக்கூடாது என்பதனால் முதன்முறையாய் கண்ணீர் சிந்த பழகிக் கொண்டனர் நகக்கண்கள்.

ஒதுக்கீட்டை மனிதர்கள் அறிந்திருக்கிறார்களோ இல்லையோ,

 உயிர்களின் இழப்பீட்டில்  அதனை அச்சுப் பிசகாமல் பின்பற்றி இருக்கிறது இந்தப் பாவிப்பய கொரோனா.

 

பார்வையற்றவரையும், பல்துறை வல்லுநரையும்,

ஆள்பவரையும், ஆள்பவர்களுக்காக வாழ்பவரையும்

ஒரு சதவிகிதமாவது சாய்த்திருக்கிறது இந்தச் சதி நீதி சாத்தான்!

 

இவனால்,

பூஞ்சைகளில்  நெஞ்சங்கள் பொசுங்கின,

உயிர்க்காற்று இன்றி இதயங்கள் துடிக்க மறந்தன,

அவசர ஊர்திகளில் ஆயிரம்  ஆயுள்கள்  பறிக்கப்பட்டன.

இவன் தொட்டதனால் இறந்த உயிர்களைக் காட்டிலும்,

இவன் தொடர்ந்து தொடக்கூடாது என்பதற்காக விட்ட விடுப்பினால்,

அவை அதிகரித்த வேலையின்மை மற்றும் பசி பினியினால் 

மரணித்தனர் அப்பாவி மாந்தர் பலர்.

 

நல்லதொரு வேளை வரும், அன்று உனக்கு மரண மாலை வரும் என்று நம்பினோம்,

இப்படி அடுக்கடுக்காய் அலைவரும்  அதில் உன்னால் பல கொலை விழும் என்று எதிர்பாராமல் வெம்பினோம்.

 

கை குலுக்கலில்  கலந்துவிடுகிறாய், அன்பாய்

கட்டியணைத்தலில் கிளர்ந்து எழுகிராய்,

பாச முத்தம் தருகையில் ரத்தம் சேர்கிறாய்.

உன்னை எப்படித்தான் வீழ்த்துவது

கண்ணறியா நுண்  விஷமே!

 

நிச்சயம் ஒரு நாள் உன்னால் நாங்கள் பண்படுவோம்,

முகக் கவசம் விட்டெறிந்து, மனிதப் பண்ணிசைப்போம்,

அறிவியலின் துணை கொண்டு உன்னைக் கொன்றொழிப்போம்!

graphic பேரா. U. மகேந்திரன் அவர்களின் படம்
கவிஞர் முனைவர் U. மகேந்திரன்

 

(கவிஞர், சென்னை சர். தியாகராயர் கல்லூரியின் ஆங்கிலத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்).  

தொடர்புக்கு: mahendranbefrank@gmail.com

3 கருத்துகள்:

  1. கவிதை மிக மிக அருமை.
    கவிதையில் கையாண்டுள்ள வார்த்தைகளை வாசித்தபின், கருத்துக்கள் பதிவிட வார்த்தை ஏதும் எனக்கு தோணவில்லை.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்களை வழங்கிய நல்ல உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு