அலசல்: இணைய வழித் தேர்வு விழிச்சவால் உடையவர்களுக்குச் சாதகமா? பாதகமா? - ம. முத்துக்குமார்

graphic ஒருவர் கணினியின் முன் அமர்ந்து தாளில் தேர்வு எழுதுவது போன்ற கார்ட்டூன் படம்

       பொதுவாக தேர்வு எழுதுவதில் விழிச்சவால் உடையவர்கள் பல சவால்களைச் சந்திக்க நேரிடுகிறது.  அதிலும் (exam from Home) வீட்டில் இருந்து தேர்வு எழுதுவதில், இன்னும் ஒரு படி அதிகமாகவே சவால்களை எதிர்கொள்கிறார்கள்.

      பதிலி எழுத்தர் (scribe) கிடைப்பது, பதில்களைத் தேடிக் கொடுப்பது, குறிப்பிட்ட நேரத்தில் தேர்வை எழுதி முடிப்பது, எழுதிய காகிதத்தை அலைபேசி மூலம் தெளிவாக (scan) படியெடுப்பது, சரியாக பதிவேற்றம் செய்வது, இதில் ஏதாவது தவறு இருந்தால் மீண்டும் எழுத்தரின் உதவியை நாடுவது, குறிப்பிட்ட நேரம் தவறும் பொழுது கல்லூரியில் சிறப்பு அனுமதியைப் பெறுவது, என்று இன்னும் பல பது, வதுகள் உள்ளது.

      இத்தனை இடையூறுகளுக்கு இடையில் சில கல்லூரிகளில், பதிலி எழுத்தர் யார் என்பதை உறுதி செய்து, கடிதமும் கொடுக்க வேண்டுமாம்.  ஏனெனில், இரத்த உறவுகள் தேர்வு எழுதக் கூடாதாம்.  சிலர் இத்தனை தடைகளையும் தாண்டி தேர்வுகளை எழுதியும், சில கல்லூரிகளில் உள்ள விதிமுறைப்படி விடைத்தாளின் முன் பக்கத்தில் நிரப்பவேண்டிய விடயங்களில் செய்த சிறிய தவறுகளால், அந்த விடைத்தாள்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல், அரியர் கணக்கில் சேர்க்கப்பட்ட நிகழ்வும் நடந்துள்ளது.

      கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இணைய வழியில் முதல்முறையாக, இரண்டாயிரத்து இருபதில் நடைபெற்ற தேர்வில், மதுரையில் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற பொறியியல் தேர்வுகளைப்போல் தேர்வு நடத்தப்பட்டதாம்.  அதாவது தேர்வு எழுதுவதை (camera) கேமரா மூலம் கண்கானித்துக் கொண்டே இருந்தார்களாம்.  அதிலிருந்து யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படவில்லை.  அந்தத் தேர்வில் பார்த்து எழுதும் வாய்ப்புகளும் இல்லை.  பின்னர் அடுத்த தேர்வில் இருந்து அந்த விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது என்று, அந்தக் கல்லூரி மாணவர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

       என்ன செய்வது. கொரோனா என்ற ஏழரை சனி பலரை நேரடியாகவும், பலரை மறைமுகமாகவும் பிடித்து ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது.  இதற்கு கல்லூரியில் வைத்தே தேர்வு எழுதுவது பெட்டர் என்கிறீர்களா?  ஒருசில கல்லூரிகளில் விழிச் சவால் உடையவர்களுக்கு, அந்த வாய்ப்புகளும் வழங்கப்பட்டிருக்கிறது.

       அப்படி வழங்கப்பட்ட வாய்ப்புகளில், புதிதாக ஏதும் விதிமுறைகள் சேர்க்கப்படவும் இல்லை, விதிவிலக்கு ஏதும் வழங்கப்படவும் இல்லை.  அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பதிவேற்றம் செய்யவே, அந்த வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

      இப்படிப் பல பாதகங்கள் இருக்கும் இந்த இணைய வழி தேர்வில், சாதகங்கள் எதுவும் இல்லையா? என்று கேட்டால், இருக்கிறது.

       கொரோனாவிடம் சிக்காமல் தப்பித்துக் கொள்ளலாம், அல்லது சிக்குவதைத் தவிர்க்கலாம்.  அதைத் தவிர்த்து எத்தனை சாதகங்கள் இருந்தாலும், அது அறிவைக் கொல்லும் கொரோனாவாகத்தான் இருக்கும் என்பதுதான் உன்மை.  இதுதான் பெரும்பாலான விழிச் சவால் உடைய மானவர்களின் எண்ணமாகவும் இருக்கிறது.

மின் புத்தகங்களின் பரவலாக்கம்

      இணைய வழியில் வகுப்புகள் மாறிவிட்ட பின்னர், பல பார்வையுள்ள மாணாக்கர்களும் காகித பாடப் புத்தகங்களுக்கு விடை கொடுத்து விட்டார்கள்.  மின் புத்தகங்களைப் பயன்படுத்தியோ, அல்லது இணையத்தில் தேடியோ படிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.  இந்த மாற்றத்தால், விழிச் சவால் உடைய மாணாக்கர்களுக்கு முன்பை விட எளிதாக பாடம் சம்மந்தப்பட்ட மின் புத்தகங்களும், ஒலிப் புத்தகங்களும் அதிகமாகக் கிடைக்கிறது.  இந்தக் கேள்வியை நாம் கேட்கையில், பலர் அதை சாதகமென்றே ஆமோதித்தார்கள்.

எனக்கான தேர்வில் என் பங்களிப்பு வேண்டாமா?

      ஒரு சிலர் தேர்ச்சி பெற்றால் போதும் என்று இருந்தாலும், பெரும்பாலான மாணவர்களின் மத்தியில் இந்த முறைத் தேர்வு அறிவுக் குறைபாடாகவே பார்க்கப் படுகிறது.  இதைப் பற்றி மாணவர் ஒருவர் நம்மிடம் கூறியதாவது,

      நான் முதலில் தேர்வு எழுதும்பொழுது, நான் ஓர் இடத்திலும், என்னுடைய பதிலி எழுத்தர் ஓர் இடத்திலும் இருந்தோம்.  நான் அவரிடம் அலைபேசி மூலம் பதிலைக் கூறுகிறேன் என்றேன்.  அவர், ‘எனக்குக் கேட்டு எழுதுவது சிரமம்என்றார்.  அதன் பின்புதான் கூகுளில் தேடி அனுப்பினேன்என்றார்.

      இன்னொரு மாணவர், “நான் ஆடியோ ரெகார்ட் செய்து, வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தேன். ஆனால்,  என்னுடைய பதிலி எழுத்தர், நான் இணையத்தில் தேடி எழுதிக்கொள்கிறேன்என்று கூறிவிட்டார் என்றார்.

      இவர்கள் எல்லோரும் தங்களுடைய பதிலி எழுத்தர்களிடம், இப்படிக் கூறுவதற்கு, அவர்களின் கசப்பான அனுபவங்களே காரணமாக இருக்கும்.  பொதுவாக ஒவ்வொரு விழிச் சவால் உடைய மாணாக்கரும், ஒருங்கிணைந்த பள்ளியிலோ, (integrated school) அல்லது கல்லூரியிலோ, படிக்கும் பொழுது தங்களுடைய சக மாணவ மாணவிகள், மற்றும் ஆசிரியர்கள், அவர்களைக் குறைத்து மதிப்பிடுவதே இதுபோன்ற மனநிலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

      நீ கூட எங்க ரேஞ்சுக்கு வந்துட்ட”, “இவங்களும் படிக்கிறாங்கப்பா”, என்று சில மாணவ மாணவிகளிடமிருந்து வரும் வார்த்தைகளும், “பாத்துதான எழுதுன? உனக்கு எழுதுனவங்கதான எழுதிவச்சாங்கஎன்று சில ஆசிரியர்களிடமிருந்து வரும் சுடுகேள்விகளும், அவர்கள் மனதில் ஆராத வடுவாக தங்கி விடுகிறது.  ஒரு சிலருக்கு மட்டுமே, இதுபோன்ற அனுபவங்கள் நேரிடுகிறது.

       பார்வை உள்ள மாணவர்களைப் போல், விழிச் சவால் உடையவர்கள் இருந்துவிட முடியாது.  ஒரு பார்வை உள்ளவர் படிக்கவில்லை என்றாலும், அவரின் தேர்வை அவரே பார்த்து எழுதுவார்.  அதனால் அவருக்கு அந்தப் பாடத்தில் எதாவது ஒரு விடயம் தெரிந்திருக்கலாம்.  ஆனால் ஒரு விழிச் சவால் உடையவர் அப்படி இருந்தால், அது அவரின் அறிவுக்கு ஆபத்தாகவே அமையும்.

      எனவே விழிச் சவால் உடையவர்கள் வீட்டில் இருந்து தேர்வு எழுதினாலும், அவர் நேரடியாகச் சென்று படித்து எழுதுவது போல் எழுதினால்தான், அவருக்கும், அவரின் அறிவுக்கும், முக்கியமாக அவரின் தன்மானத்திற்கும் நல்லது.

பதிலி எழுத்தர் எனும் பாரியப் பிரச்சனை

      இந்த இணைய வழித் தேர்வில் விழிச் சவால் உடையவர்கள் சந்திக்கும் மிகப் பெரியப் பிரச்சினை, எழுத்தர் கிடைப்பது.  பல சிக்கல்கள் இங்கிருந்துதான் தொடங்குகிறது.

      ஒருசில கல்லூரிகள் தானாகவே முன்வந்து, எழுத்தர்களை ஏற்பாடு செய்து தருகிறார்கள்.  பலர் தாங்களாகவே எழுத்தர்களைத் தேடிக் கொள்கிறார்கள்.  சில தொண்டு நிறுவனங்களும் தன்னார்வலர்களை ஏற்பாடு செய்து தருகிறார்கள்.

       எழுத்தரே கிடைக்காமல் ஓரிரு தேர்வுகளை, எழுதாமல் ஒத்தி வைத்தவர்களும் உண்டு.  இப்படி ஏதாவது ஒரு வழியில் எழுத்தர் கிடைத்தாலும், பலரால் அருகிலிருந்து எழுத இயலாது.

       பெரும்பாலும் எழுத்தர்களைத் தொலைவிலிருந்துதான் ஏற்பாடு செய்ய முடிகிறது.  ஏனெனில், எல்லோரும் தேர்வு எழுத முன்வர மாட்டார்கள்.  தேர்வு நேரத்தில் அலைபேசி மூலமாகவே, தகவல் பரிமாற்றங்கள் நடைபெறுகிறது.

      இப்படி எழுத்தர் தன் சொந்த இடத்திலிருந்து எழுதுவதால், அவரது இருப்பிடச் சூழ்நிலை, அவரின் கவனத்தைப் பல இடங்களுக்குத் திசைதிருப்பிக்கொண்டே இருக்கும்.  இதனால் குறிப்பிட்ட நேரத்தில் தேர்வை எழுதி முடிக்க முடியாத சூழலும் உருவாகிறது.

      மாணவர் ஒருவர், விரல்மொழியருக்காக தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்பொழுது, இப்படிக் கூறினார்.

      ஒருநாள் ஒரு எழுத்தர் எனக்குத் தேர்வு எழுதிக் கொண்டிருந்தார்.  நான் புலனம் (WhatsApp) வழியா பதில் அனுப்பிக்கிட்டிருந்தேன்.  சரியா பனிரெண்டு மணி இருக்கும்.  அவர் என்னைத் தொடர்பு கொண்டார்.

தம்பி சாரி தம்பி, யம் வெறி சாரி’.

அப்படினு சொன்னதுமே எனக்கு ஏதோ பிரச்சனைனு புருஞ்சிருச்சு.

அப்புரம் அவர் சொன்னார்.

தம்பி, இப்ப திடிர்னு எங்க ஆஃப்ஃபிஸ்ல இருந்து ஃபோன் பன்னாங்க.  நான் இப்ப உடனே அங்க போகனுமாம்.  நீங்க வேர யாரையாவது வச்சு எழுதலாமா?’ அப்படினு கேட்டாங்க.

அதல்லாம் ஒன்னும் பிராப்லம் இல்ல மேம். நான் யாரையாவது வச்சு எழுதிக்கிரேன். நீங்க போய்ட்டுவாங்க மேம்அப்படின்னேன்.

‘5 மார்க் எல்லாம் எழுதிட்டேன்.  10 மார்க் மட்டும் எழுதச்சொல்லு.  நான் மதியம் வந்து ஸ்கேன் பண்ணி அனுப்பிச்சுருதேன். ஏதும் வருத்தம் இல்லல்லா தம்பி?  தப்பா நினச்சுக்காதிங்க தம்பி.  யம் சாரிஅப்படினு கேட்டுட்டு ஃபோன கட் பண்ணிட்டாங்க.

      எனக்கு என்ன பண்ணன்னு தெரியல.  எனக்கு காலேஜில இருந்துதான் ஸ்கிரைப் அரேன்ஜ் பண்ணிக் கொடுத்தாங்க.  உடனே நான் காலேஜிக்கு ஃபோன் பண்ணி இன்ஃபாம் பண்ணேன்.  ஒரு பத்து நிமிஷத்துக்கு அப்பரம், இன்னொரு ஸ்கிரைப் ரெடிபண்ணிக் கொடுத்தாங்க.  பழைய ஹேண்ட் ரைட்டிங் மேச் ஆகாதுன்னு முதல்ல இருந்து எழுத வேண்டியதா ஆயிருச்சு.  அப்பரம் அன்னைக்கு கொஞ்சம் லேட்டாதான் அப்லோட் பண்ண முடிஞ்சுது. இதல்லாம் நினைக்கும்போது, காலேஜில நேரடியா போய் எழுதுவதுதான் பெட்டருனு தோனுதுஎன்று கூரினார்.

      பி.யெட் படிக்கும் மாணவர்களின் நிலைமையைப் பார்க்கும் பொழுது, பரிதாபமாக உள்ளது.  இரவு ஏழு மணிவரை இணையவழி வகுப்புகள் நடைபெறுகிறதாம்.  இதுதவிர ஊரடங்கு காலத்திலும், அவர்களின் ரெகார்ட், சாட் போன்ற அசைன்மென்ட் பணிகளை முடிக்க, அவர்கள் பட்ட சிரமம், மற்றும் கமிஷனில் அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் என்று, அவர்களின் கஷ்டங்களை ஒரு தனிக் கட்டுரையாகவே எழுதலாம்.

      ஒவ்வொரு விழிச் சவால் உடைய மாணாக்கரும் இப்படி ஏதாவது ஒரு தடைகளைக் கடந்துதான், ஒவ்வொரு தேர்வையும் எதிர்கொள்ளும் சூழ்நிலை இதுவரையிலும் காணப்படுகிறது.

       அதுபோலவே ஒவ்வொரு எழுத்தரும் தங்களுடைய வேலைகளை விடுத்து, தேர்வுகளை எழுதித் தருவதற்கு முன்வந்து நேரம் ஒதுக்குவது என்பது, மிகப் பெரிய பாராட்டுதலுக்கு உரிய செயலாகும்.  அதிலும் வீட்டில் உள்ள வேலைகளையும், பிரச்சனைகளையும் சமாளித்து எழுதுவதற்கு மிகப்பெரிய பொறுமை தேவை.  அத்தகைய சேவைகளைச் செய்துகொண்டிருக்கும் அனைத்து பதிலி எழுத்தர்களுக்கும், அனைத்து விழிச்சவாலுடைய மாணவ, மாணவிகளின் சார்பாக விரல்மொழியரின் வாழ்த்துகள். 

எல்லோரையும் சென்றடைந்துவிட்டதா தொழில்நுட்பம்?

      உலகமே இணையதளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில்,  விழிச் சவால் உடைய மாணவ மாணவிகளின் மத்தியில், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கல்வி கற்கும், மற்றும் தேர்வுகளை அணுகும் திறன் எப்படி இருக்கிறது?  குறைந்த பட்சம் ஒரு தொடுதிரை அலைபேசி இருந்தால் போதும்.  இணைய வழி வகுப்புகளையும், தேர்வுகளையும் எளிதாக எதிர்கொள்ளலாம்.

      சமிபத்தில் நான், விழிச்சவால் உடையவர்கள் பயிலும் ஒரு பிரபல பள்ளிக்குச் சென்றிருந்தேன்.  அந்தப் பள்ளியின் விடுதியில், கல்லூரிகளில் பயிலும் ஒரு சில மாணவர்கள் மட்டும் தங்கியிருந்தார்கள்.  அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில், “இணைய வழியில்தானே வகுப்புகள் நடைபெறுகிறது, நீங்கள் வீட்டுக்குச் செல்லவில்லையா?” என்று கேட்டேன்

graphic மாணவர் ஒருவர் கணினியின் முன் அமர்ந்து இணையவழிக் கற்றலை மேற்கொள்ளும் கார்ட்டூன் படம்

       அதற்கு அவர், “எங்களில் ஒரு மூன்று நபர்களுக்குத் தொடுதிரை அலைபேசி இல்லையென்றும், நாங்கள் நண்பர்களின் அலைபேசியில்தான் சேர்ந்து வகுப்புகளைக் கவனிக்கிறோம்என்றும் கூறினார்.

      இப்போது அவர் அரசு வழங்கிய அலைபேசியைப் பெற்றுள்ளார்.  இதில் இன்னொரு விடயம் என்னவென்றால், அந்த அலைபேசியைப் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான், பத்தாயிரம் ரூபாய் மதிப்பில் ஒரு தொடுதிரை அலைபேசியையும் வாங்கியிருந்தாராம்!

      இன்னொரு நண்பரிடம் உரையாடிக்கொண்டிருந்தபொழுது, “உங்களின் தொடுதிரை அலைபேசியின் உருப்படிவம் (model) என்னஎன்று கேட்டேன்.

      அதற்கு அவர், தான் இதுவரை தொடுதிரை அலைபேசியையே பயன்படுத்தியதில்லை என்றும், தன்னிடம் சாதாரண அலைபேசியே பயன்பாட்டில் இருப்பதாகவும் கூறினார்.  மேலும், தனக்கு அரசு வழங்கிய விலையில்லா அலைபேசியைப் பற்றி எதுவும் தெரியாது என்றும், அதை நண்பர்கள் வாங்கிய பிறகுதான் அதுபற்றி தான் தெரிந்துகொண்டதாகவும் கூறினார்.  இத்தனைக்கும், அவர் இந்த வருடந்தான் இசைக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

      இதையெல்லாம் கேள்விப்படும் போது, "உலகறிய உற்றதோழன், தொடுதிரை அலைபேசிதான் என்று ஆணித் தரமாக அடித்துக் கூறலாம்.

      பல மாணாக்கர்களிடம், “உங்களின் கல்லூரியின் இணையதளப் பக்கத்தைப்  (website) பயன்படுத்தியிருக்கிறீர்களா?” என்று கேட்டோம். அவர்களில் பலரிடமிருந்து இல்லை என்றே பதில் வந்தது.  அதற்கு அவர்கள் கூறிய காரணம், அது நாம் பயன்படுத்தும்படி வடிவமைக்கப்படவில்லை என்பதுதான்.  சிலர், அப்படி ஒரு சூழ்நிலை இதுவரை எங்களுக்கு இல்லை என்று கூறினார்கள்.  இன்னும் சிலர், யாராவது ஒரு பார்வை உள்ளவரை வைத்துதான் பயன்படுத்துவேன் என்று கூறினார்கள்.  மிகச்சிலரிடமிருந்துதான், ஆம்! பயன்படுத்துவேன் என்ற பதில் வந்தது.

      ஆரம்ப காலகட்டத்தில், (zoom) மற்றும் (Google meet) போன்ற செயலிகளைப் பயன்படுத்தி இணையவழி வகுப்புகளை அணுகுவதில், விழிச் சவால் உடைய மாணவ மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், சற்று சவாலாகவே இருந்தது.  மேலும் அந்த விடயத்தில் நம்மவர்களிடம், சற்று தயக்கமும் காணப்பட்டது.  வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, காணொளி (video),  மற்றும் ஒலிவாங்கி (mike) இரண்டும் தடை (mute) செய்திருக்கிறதா என்பதை அடிக்கடி பார்த்துக் கொள்வேன் என்று, பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

      இணைய வழி வகுப்புகளிலும், நேரடி வகுப்புகளிலும் விழிச் சவால் உடையவர்கள் தங்களின் வேலைகளை தாங்களே செய்ய, தொழில்நுட்பங்கள் தேவைகளில் ஒன்றாகும்.  அதைக் கற்றுக் கொள்ளுதல் என்பது, அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும்.

       ஒரு விழிச் சவால் உடையவருக்கு, பிரெய்லி எழுத்துக்களை கற்று கொடுப்பதைப் போலவே, அவரின் பள்ளிப் பருவத்திலேயே அவருக்குக் கணினியும் கற்றுக் கொடுக்கப்படவேண்டும்.  கல்வித் தேர்வுகளிலும், போட்டித் தேர்வுகளிலும் எழுத்தரின் உதவியின்றி, அவர்களே சுயமாக எழுதும் வசதிகளை அரசு செய்து தரவேண்டும்.  இது சாத்தியப்படாத ஒரு விடயமில்லை.  சில நாடுகளில் இந்தமுறைதான் பின்பற்றப் படுகிறது.  இந்தியாவிலும் இது சாத்தியமே!  சிலர் கணினி வழியாக தேர்வு எழுத அனுமதி பெற்று, அதைச் சாத்தியப்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார்கள்.  

graphic ஓவியா
ஓவியா

       கடலூர் மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி ஓவியா என்பவர், தனது பத்தாவது வகுப்பின் பொதுத் தேர்வை, தானே கணினியில் எழுதினார் என்பதை பலரும் கேள்விப்பட்டிருக்கக்கூடும்.

முன்னுதாரணமமாய் சில கல்லூரிகள்

      விரல் மொழியரின் இந்தக் கட்டுரைக்காக, திருநெல்வேலியில் ஒரு பிரபலமான கல்லூரியில், இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்று கொண்டிருக்கும், ஒரு நண்பரிடம் பேசினேன்.  அப்போது அவர் நமக்குக் கூறிய செய்தி இதுதான்.

      எங்களது கல்லூரியைப் பற்றிக் கூறவேண்டுமானால், இங்கு பார்வை உள்ளவர், இல்லாதவர் என்றெல்லாம் வேறுபாடுகள் கிடையாது.  எல்லோருக்கும் ஒரே விதிமுறைதான்.  நம்மால் எதையெல்லாம் செய்ய முடியும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.  அதற்கு ஏற்றவாறு, சுதந்திரமும், விதிவிலக்கும், நமக்கு வழங்கப்படுகிறது.  இணைய வழி வகுப்பிற்கு முன்பும், இணையவழி வகுப்பிலும் நம்முடைய ஒப்படைவு (assignment) மற்றும் அகமதிப்பீட்டுத் தேர்வு (internal exam) போன்றவற்றை, நாமே கணினியில் தட்டச்சு செய்து வழங்கும் நடைமுறைதான் உள்ளது.  இது எனக்கு மிகுந்த மண நிறைவைத் தருகிறது.  கணினியை இயக்கத் தெரியாத ஒரு விழிச் சவால் உடையவர், எங்கள் கல்லூரியில் சேர்ந்தார் என்றால், அவரது கல்லூரி வாழ்க்கை சவாலாகவே அமையும்எங்கிறார்.

ஆசிரியர்கள் என்ன நினைக்கிறார்கள்?

      இணையவழி வகுப்புகளிலும், தேர்வுகளிலும் ஆசிரியர்களாக அவர்களின் கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்கள்.

      எவ்வளவு அறிவும், திறமையும் இருந்தாலும், பார்வையின்மை என்னும் சவால் நம்மை துரத்திக்கொண்டேதான் இருக்கிறது.  மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள்களை ஸ்கேன் செய்து அனுப்பினாலும், உதவியாளரின்றி அதை நாமே திருத்தும் அளவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சி இதுவரை சாத்தியப்படவில்லை.  இதுபோன்ற விடயங்களில் பார்வையுள்ள ஒருவரை விட, நாம் சற்று பின்தங்கியுள்ளோமோ? என்ற எண்ணமே மேலோங்குகிறது.  இணைய வழியில் கல்வி என்பது, விழிச் சவால் உடைய மாணவ மாணவிகளுக்கு அறிவு குறைபாடு மட்டும் அல்ல, ஆபத்தானதும்கூட.

       பொதுவாக ஒரு பேராசிரியராக எங்களுக்கு நேரடி வகுப்புகளில் கிடைக்கும் மன நிறைவு, இணையவழி வகுப்புகளில் கிடைப்பதில்லை.  மாணவர்கள் ஆசிரியர்களின் அருமைகளையும், ஆசிரியர்கள் மாணவர்களின் சூழ்நிலைகளையும் புரிந்துகொள்வதில் பல தடைகள் உள்ளது.  நாங்கள் ஒவ்வொரு நாளும் இதை நேரடியாகவே கண்டும், உணர்ந்தும் வருகிறோம்.  விழிச் சவால் உடைய எங்களின் தம்பி தங்கைகள், நேரடி வகுப்புகளில் இருந்ததைவிட, இணையவழி வகுப்புகளில் கூடுதல் கவனத்துடன் உங்களின் கடமைகளைச் செய்யவேண்டும். 

      இது உங்களுக்குக் கிடைத்திருக்கும் பொன்னாண நேரம்.  இதை உங்களின் எதிர்கால வாழ்க்கைக்காகவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள்.  எதிர்வரும் நாட்களை எண்ணிப் பார்க்கையில், அவப்பெயர்களையும் அவமானங்களையும் மட்டுமே சம்பாதிக்க நேரிடும்.

       ஒட்டுமொத்த விழிச் சவால் உடைய சமூகத்தையும், பெருமைப் படுத்துங்கள்.  ஏனெனில், ஒவ்வொருவரின் நடவடிக்கைகளையும் தனி மனிதரின் நடவடிக்கைகளாக பார்க்கும் இந்த உலகம், நம்முடைய நடவடிக்கைகளை ஒரு சமூகத்தின் நடவடிக்கைகளாகவே பார்க்கிறது”.

      இப்படியாக ஆசிரியர்கள் தங்களுடைய ஆலோசனைகளையும் பகிர்ந்துகொண்டார்கள்.

      முயலைப் பிடிக்க நினைத்தால் அதன் பின்னால் ஓடாதே. முயல் எங்கே ஓடும் எனக் கணித்து அங்கே காத்திரு!”  இது ஓர் ஆப்பிரிக்கப் பழமொழியாம்.

      இந்த நெருக்கடியான காலகட்டத்தில், இணையவழிக் கல்வி என்பது ஒரு ஆரம்பம் மட்டுமே.  எதிர் வரும் காலங்களில், இது போன்ற பல சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம்.  வருமுன் நம்மை நாமே தயார் செய்து காத்திருப்போம்.  புதிய விடயங்களையும், தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொண்டு, முடிந்தவரை பிறரின் உதவியைத் தவிர்த்து வாழப் பழகிக் கொள்வோம்.

      இனியும் மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் பயனில்லை.  காலங்கள் கடந்து விடும்.  வாய்ப்புகளைக் கேட்டுப் பெற்று, மாற்றங்களை ஏற்படுத்துவோம்.  ஏனெனில், சந்தர்ப்பங்கள் காற்றில் மிதக்கின்றன; சாமர்த்தியசாலி மட்டுமே அதை சுவாசிக்கிறான்!

 

(பின்குறிப்பு:  விரல்மொழியரின் இந்தக் கட்டுரைக்காக தங்களின் பொன்னாண நேரத்தை ஒதுக்கி, தங்களின் அனுபவங்களையும், ஆலோசனைகளையும் வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் நன்றி.  தயவுசெய்து பொருத்தருளுங்கள்.  உங்கள் ஒவ்வொருவரின் பெயர்களையும் என்னால் குறிப்பிட இயலவில்லை).