அரசியல்: சுடர் விடும் சுடர் ஆனந்த் ரா. பாலகணேசன்

     


      தமிழ்நாடு வரலாற்றிலேயே இத்தகைய குழப்படியான உள்ளாட்சித் தேர்தலை நாம் எதிர்கொண்டிருக்கமாட்டோம். ஊரகப் பகுதிகளுக்கென தனித் தேர்தல், அந்த நேரத்திலேயே புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டதால் அவற்றிற்கு மட்டும் நிறுத்திவைக்கப்பட்டு பின்பு நடத்தப்பட்ட புதிதாக மாவட்ட எல்லை வரையறை செய்யப்பட்ட ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல், இப்போது நடக்கும் அப்போது நடக்கும் என இழுத்துக்கொண்டிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல். இந்தக் குழப்பமான தேர்தல்களுக்கிடையேதான் சில தெளிவான ஒளிக் கீற்றுகள் நமக்குக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன.

            2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் சரண்யா என்ற ஒரு பார்வையற்ற பெண் போட்டியிட்டார். நாமக்கல் மாவட்டம் ராசம்பாலையம் ஊராட்சி மன்றத்தின் தலைவராக இவர் போட்டியிட்டார். இன்னும் சில மாற்றுத்திறனாளிகளும் இப்படிப் போட்டியிட்டனர்.

      இந்த ஒளிக்கீற்று தற்போது நடந்து முடிந்திருக்கும் புதிதாக வரையறை செய்யப்பட்ட மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் கொஞ்சம் சுடர்விடத் தொடங்கியிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லெவிஞ்சிபுரம் ஊராட்சியின் 4-ஆவது வார்டு உறுப்பினராகியிருக்கிறார் சுடர் ஆனந்த் என்ற பார்வை மாற்றுத்திறனாளி.

      தனது 2 வயதில் பார்வையை இழந்த இவர்,தற்போது M.A., M.Ed., M.Phil. பட்டதாரி. தற்போது இவர் திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு பயின்றுவருகிறார்.

பார்வையின்மையும், வறுமையும், உறவுகளின் அரவணைப்பின்மையும் தன் வாழ்வில் தொடர்ந்து நடந்துவந்தாலும், அந்த அவமானங்களையெல்லாம் உரமாக மாற்றிவருகிறார் சுடர் ஆனந்த்.

      தனக்குக் கிடைத்திருக்கும் மிகக் குறைந்தபட்ச பார்வையைக் கொண்டு அதிக பட்சமாக உதவவேண்டும் என நினைக்கிறார்.

தன்னால் முடிந்தவரை தன் வாழ்க்கைக்கு எனப் பல சம்பாத்தியங்களை மேற்கொண்டிருக்கிறார். குறிப்பாக, சென்னையில் ஒரு வேலை செய்யச் சென்ற இடத்தில், வேலை காரணமாக திண்ணையிலேயே (veranda) படுத்துறங்கும் சூழ்நிலை ஏற்படவே, கொசுக்கடியால் அவதிப்பட்டதையும், அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி வந்த சூழ்நிலையையும் நம்மிடம் எதார்த்தமாய் எடுத்துரைக்கிறார்.

நம்பிக்கையளித்த நேரு யுவகேந்திரா

      நேரு யுவகேந்திரா என்ற அமைப்பில் இவருக்குக் கிடைத்த வேலைதான் இவருக்குக் கொஞ்சம் வாழ்க்கை மீதான நம்பிக்கையைத் தந்தது; அதோடு, இவரை இவருக்கும், இவர் சார்ந்த ஊருக்கும் அடையாளம் காட்டியது. நேரு யுவகேந்திராவில் ஊர் மக்களுக்குத் தேவையான சான்றிதழ்களைப் பெற உதவுவது, உதவித் தொகை பெற உதவுவது முதலிய பணிகளைப் பம்பரமாய்ச் சுழன்று செய்திருக்கிறார். அதன் விளைவு தான் இந்த வார்ட் உறுப்பினர் பொறுப்பு.

தேர்தல் பரப்புரை

      இயல்பாகவே இவருக்கு அரசியல் ஆர்வமும் இருக்கிறது; சமூக சேவை செய்யும் மனமும் இருக்கிறது. அதனால்தான் இந்த முறை தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார் சுடர் ஆனந்த். பரப்புரை என்று தான் பெரிதாக எதுவும் செய்திடவில்லை என்று குறிப்பிடும் சுடர் ஆனந்த் தோழி ஒருவரின் உதவியோடுஒரு சிறு துண்டறிக்கையை மட்டும் தயாரித்து வாக்காளர்களுக்கு வழங்கியிருக்கிறார். ஒரே ஒரு முறை வாக்குக் கேட்டு ஒவ்வொரு வீட்டிற்காய் சென்றிருக்கிறார். அப்போதே, “நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்களுக்குத்தான் எங்கள் ஓட்டு. இனிமேல் நீங்கள் அலையவேண்டாம்என்று பெரும்பாலான வாக்காளர்கள் தெரிவித்துவிட்டனர். அதனால் பெரிய அளவில் பரப்புரை செய்யவில்லை என்கிறார் இவர்.

      தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இருவரைக் காட்டிலும் அதி்க வாக்குகளைப் பெற்று, திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் லெவிஞ்சிபுரம் ஊராட்சியின் நான்காவது வார்டு உறுப்பினரானார் சுடர் ஆனந்த். தமிழ்நாட்டில் இப்படி 9 மாற்றுத்திறனாளிகள் வெற்றி பெற்றிருப்பதாய் தெரிவிக்கிறது ஒரு பத்திரிகைச் செய்தி.

      இது என் பார்வையின்மைக்குக் கிடைத்திருக்கும் அனுதாப ஓட்டு அல்ல; பணத்தால் பெற்ற தவறான ஓட்டும் அல்ல; மக்களுக்கு நான் ஆற்றிய சேவைக்குக் கிடைத்திருக்கும் நம்பிக்கை ஓட்டுஎன்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார் சுடர் ஆனந்த்.

      ஒவ்வொரு ஞாயிறு அன்றும் தனது வார்டு பகுதியில் முழுமையான ஆய்வை மேற்கொள்கிறார் இவர். தனது வார்டு மக்களைச் சந்திக்கும் இவர், அவர்களது குறைகளைக் கேட்டறிகிறார். அவற்றை மனுக்களாக அவர்கள் தரும் பட்சத்தில் பெற்றுக்கொள்கிறார்; அதே வேளை, அவர்கள் வாய்மொழியாகக் கூறும்போது, அவற்றைத் தனது நோட்டில் குறிப்பெடுத்துக்கொள்கிறார். குறைந்த பார்வையே இருக்கும் தனக்கு இது ஒரு பெரிய சவால்தான் என்கிறார் இவர். வார்டு பகுதியில் சிரமப்பட்டு குறைகளைத் தனது நோட்டில் சுருக்கமாக எழுதிக்கொள்ளும் சுடர், வீட்டிற்கு வந்து அவற்றை விரிவுபடுத்திக்கொள்கிறார்.

      மேலும், பலரும் தன்னை நலம் விசாரிக்கும்போதும், உரிமையாக உரையாடும்போதும் அவர்களை அடையாளம் கண்டுகொள்வது சிரமமாக இருப்பதாகத் தெரிவிக்கிறார் இவர். “தம்பி! எங்க வீட்டுப் பக்கத்துல சாக்கடத் தண்ணி தேங்கியிருக்குப்பா! வேகமா அதச் சரி பண்ணனும்ப்பா!” என்று ஒரு அம்மையார் இவரிடம் பேசுவதாக வைத்துக்கொள்வோம். “ஒருவேளை எனக்குப் பார்வை இருந்திருந்தால், பேசியவர் யார், அவர் வீடு அமைந்திருக்கும் பகுதி எது என்று என் மனம் விரைவாகக் கணக்கிட்டு அவற்றைக் குறித்துக்கொள்ளும். நான் பலரைச் சந்திப்பதால், அவர்கள் குரலை மட்டும் வைத்துக்கொண்டு அடையாளப்படுத்த முடியவில்லை. நீங்கள் எந்தப் பகுதியில் இருக்கிறீர்கள், உங்கள் வீடு எங்கு உள்ளது, உங்கள் பெயர் என்ன என்ற கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்கவேண்டியுள்ளது. இது அவர்களிடமிருந்து கொஞ்சம் என்னை அந்நியப்படுத்திவிடுமோ என்று சில வேளைகளில் தோன்றியது உண்டு. என் செயல் வேகம் அவற்றை மாற்றிவிடும் என்ற நம்பிக்கையும் உடனே வந்துவிடும்என்கிறார் சுடர் ஆனந்த்.

      இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருக்கும் இவர், பல போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார். இருந்தபோதிலும், இந்த வார்டு உறுப்பினர் பொறுப்பிற்குக் கட்சி சார்பற்று பல நல்லவர்களின் ஒத்துழைப்போடே போட்டியிட முடிந்தது என்று குறிப்பிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது தனக்கு உறுதுணையாக இருந்த இந்து முன்னணி பிரமுகரை நன்றியோடு நினைவுகூர்கிறார்.

      தனது வார்டில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும், பள்ளிக்கூடமும் அமைப்பதே தனது லட்சியம் என்று கூறும் சுடர் ஆனந்த் குறிப்பிடும் இன்னொரு கருத்து சிந்திக்கத்தக்கது.

      சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது போலவே ஊராட்சி, நகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் மேம்பாட்டு நிதி வழங்கப்படவேண்டும். அதைக் கொண்டு அவர்களால் தங்கள் வார்டுகளைச் சிறப்பாக்க முடியும்என்கிறார்.

      சுடர் ஆனந்தின் அரசியல் வாழ்வும், சமூக அக்கறையும் இன்னும் சுடர்விட வேண்டும். இவரது தனிப்பட்ட வாழ்க்கையும் சிரமங்களிலிருந்து மீளவேண்டும் என்று வாழ்த்துகிறது விரல்மொழியர்.

 

சுடர் ஆனந்தைத் தொடர்புகொள்ள: 9487841797

 

தொடர்புக்கு: balaganesan2285@gmail.com


2 கருத்துகள்: