விழிப்புணர்வு: கண்ணுக்கு கண்ணாக  கண்ணின் ஒளியாக – சிதம்பரம் ரவிச்சந்திரன்

                      முயற்சி செய்திருந்தால் இந்தப் பெரும் துயரத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று உலகில் பல கோடி மனிதர்களும் நினைத்து வருத்தப்படும் ஒன்றுதான் இதுபிடுங்கித் திண்ணும் வறுமையும், சத்துக்களின் குறைபாடும், சரியான நேரத்தில் சரியான சிகிச்சையை எடுத்துக் கொள்ளாமல் போனதும் எல்லாமுமாக சேர்ந்து இவர்களில் பலரையும் பிறவியில் இருந்தே வாழ்க்கை முழுவதும் இருட்டில் தள்ளிவிட்டிருக்கிறது

      பார்வையின் முக்கியத்துவத்தை அது இல்லாமல் இருப்பவர்களால் தான் நன்றாக உணர்ந்துகொள்ளமுடியும்பார்வையின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அதன் நலத்தைப் பாதுகாப்பதைப் பற்றியும் விழிப்புணர்வு பெறுவதற்காக வருடத்தில் ஒரே நாள்தான் அக்டோபர் மாதத்தில் வரும் இரண்டாவது வியாழக்கிழமை.

      உலகில் ஏறக்குறைய 4 கோடி பார்வையற்றவர்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றனஇவர்களைத் தவிர 25 கோடி மக்கள் உலகில் மிகவும் மோசமான பார்வைக் குறைபாடுகளால் வாழும் காலம் முழுவதும் கஷ்டங்களை அனுபவிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்இதில் 80% மனிதர்களிடமும் காணப்படுகின்ற பார்வை இழப்புச் சிகிச்சை அளித்தால் சரியாகக் கூடியதே.   இத்தகைய குறைபாடுகளைப் பற்றிய விழிப்புணர்வு கண்டிப்பாக உலக சமுதாயத்திற்கு தேவையானதாகும்குழந்தைகளிடம் உண்டாகும் பார்வைக் குறைபாடுகள் எந்த அளவுக்கு விரைவாக, இளம்வயதிலேயே பரிசோதிக்கப்படமுடியுமோ அந்த அளவுக்கு சீக்கிரமாக கவனிக்கப்படவேண்டியதாகும்இந்தியாவில் குறிப்பாக, பார்வை இழப்பைத் தடுக்கும்வகையில் செயல்பட்டுவரும் பார்வை இழப்புக்கான திட்டங்கள் இதற்கான சிகிச்சையை முற்றிலும் இலவசமாகவே எல்லா மக்களுக்கும் அளித்துவருகிறது.  ‘ எல்லோருக்கும் நலமான பார்வை’ (eye care for all’) என்பதுதான் இந்த சர்வதேச பார்வை நல பாதுகாப்பு தினத்தின் முழக்கமாக உள்ளது

      குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்வதற்கு முன்பாகவே அவர்களுடைய இரண்டு கண்களின் பார்வைத்திறனைப் பரிசோதிக்கவேண்டும்ஒரு கண்ணில் மட்டும் பார்வை குறைபாடு இருந்தால், அது கவனிக்கப்படாமல் போகலாம்இவ்வாறு நேரிடும் ஒரு கண்ணுக்கு மட்டும் ஏற்படும் பார்வை குறைபாடு சிறுவயதில் சிகிச்சையளிக்கப்பட்டு கவனிக்கப்படாமல் விடப்பட்டால், அது சோம்பேறிக்கண்ணாக ‘(lazy eye) மாறும் நிலைமையும் ஏற்பட்டுவிடும்ஆரம்ப பள்ளி நிலையிலும், இடைநிலை பள்ளிநிலையிலும் ஒவ்வொரு தடவையும் கண்கள் பரிசோதிக்கப்படவேண்டும்மாறுகண் போன்ற பிரச்சனைகள் இருந்தால், சிறுவயதிலேயே அதை கவனித்துச் சிகிச்சை அளித்துக் குணப்படுத்த முயலவேண்டும்உலக பார்வை நாளான அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை அன்று ஒருநாள் என்று மட்டும் இல்லாமல் நாம் வாழும்காலம் வரையிலும், கண்ணுடைய, அதன் பார்வையுடைய நலமான பாதுகாப்புக்காக அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்வோம்.. 

      பார்ப்பவர்களைவிடவும்  பார்க்கமுடியாதவர்களுக்குத்தான் பார்வையின் அருமை மிக நன்றாகத் தெரியும்நிழலின் அருமை வெய்யிலில்தானே தெரியும்.?  பார்வையிழந்தவர்கள் பார்வை என்ற இந்த ஒரு திறன் கிடைக்கப்பெறாமல் வாழ்க்கை முழுவதும் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்இவர்கள் மற்றவர்கள் செய்யும் சாதாரணமான ஒரு வேலையைச் செய்வதற்கு அவர்களை விட பல மடங்கு கடினமாக பயிற்சிகள் எடுத்து, உழைத்துச்  செய்யவேண்டியதாக இருக்கிறது.

      உலக பார்வைக்கான இந்த ஒரு நாள் (World Sight Day) மூலமாவது உலகத்தில் நல்ல பார்வை இருந்தும் பார்வையற்றவராக வாழ்பவர்களின் கண்களைத் திறக்கும் நோக்கத்தில் கொண்டாடப்பட்டுவருகிறதுஉலகம் முழுவதும் சுமாராக 285 மில்லியன் மக்கள் முழுமையான பார்வை இழந்தவர்களாகவோ அல்லது பகுதியளவு பார்வை இழப்போடு இருப்பவர்களாகவோ இருக்கிறார்கள்இவர்களில் ஏறக்குறைய 40 மில்லியன் மக்கள் முழுமையான பார்வையிழப்புடன் வாழ்நாள் முழுவதும் வாழ்பவர்களாக இருக்கிறார்கள்இவர்களின் பார்வையிழப்புச் சரிப்படுத்தமுடியாத ஒன்றாகும்இந்தப் புள்ளிவிவரங்கள் நமக்கு வலியுறுத்தும் உண்மை ஒன்றே ஒன்றுதான்..  பூமியில் மனிதராக பிறந்த நம் ஒவ்வொருவருக்கும் கண் பார்வை என்பது நலமாக இருக்கவேண்டும் என்பதுதான் அதுதப்பித்தவறி குறைபாடுகள் ஏதாவது பார்வைக்கு ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்யமுடிந்தால் அதை உடனடியாக அக்கறையுடன் கவனித்துச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளைச் சுறுசுறுப்பாக எடுக்கவேண்டும்..  சரிசெய்யமுடியாதவர்களுக்கு மறுவாழ்வு அளித்து அந்த நிலைமையில் அவர்களால் பயனுள்ள மதிப்புமிக்க ஒரு மேன்மையான வாழ்க்கையை வாழ்வதற்கான அணைத்து உதவிகளையும் இந்தச் சமுதாயம் செய்யவேண்டும்இதை முன்னின்று செய்யவேண்டியது அரசாங்கமே ஆகும்இத்தகைய உயர்ந்த இலட்சியங்களை இலக்காக வைத்தே இந்த உலக பார்வை நாள் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது

      பொதுவாக பார்வை இழப்பு இரண்டுவகைகளாக மருத்துவ அறிஞர்களால் வகைப்படுத்தப்பட்டுள்ளதுசரிசெய்யக்க்கூடிய பார்வை இழப்பு, சரிசெய்யமுடியாத பார்வை இழப்புபிறவியிலேயே ஏற்படும் பார்வை இழப்பு என்பது ஒரு சிறிய விழுக்காடு மக்களில் மட்டுமே காணப்படுகிறதுமரபணு காரணங்கள், பிறக்கும்போதே கண்கள் சுருங்கி இருப்பது, கண்ணில் வளர்ச்சி இல்லாமல் இருப்பது போன்றவை சரிசெய்யமுடியாத வகையில் அடங்கும்இத்தகையவர்களுக்கு அவர்களின் இழப்பை சரிசெய்ய பெரிதாக நம்மால் ஒன்றும் செய்யமுடியாதுஅதனால் உலக மருத்துவ சமுதாயத்தின் இலட்சியம் என்பது யார் யாருக்கு எல்லாம் சரிசெய்யமுடியும், யார் யாருக்குத் தவிர்க்கமுடியும் என்ற வகையிலேயே அமைந்துள்ளது

      தடுக்கக்கூடிய பார்வை இழப்பு என்று வரும்போது இந்தியாவைப் பொறுத்தமட்டும் முதலாவது இடம்பிடிப்பது கண்புறை ஆகும்அடுத்த இடத்தில் வருவது கண் அழுத்தநோய்அடுத்தது ஒளிப்பண்பில் ஏற்படும் கோளாறுகள் அல்லது ரிப்ராக்ட்டிவ் குறைபாடுகள்( refractive error) ஆகும்      கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு அவர்களுடைய இளம்வயதில் மைனஸ் 6 அல்லது மைனஸ் 7 என்று கண்ணில் இருக்கும் குறைபாட்டை சரிசெய்யாமல், முன்கூட்டியே கண்டுபிடித்திருந்தாலும் அப்படியே எதுவும் செய்யாமல் விட்டுவிடுவதால், இறுதியாக அந்த குழந்தை பார்வை இழப்பை சந்திக்க நேரிட்டுவிடுகிறது.  15 வயதுக்கும் மேல் நாம் என்னதான் சிகிச்சைகள் அளித்தாலும் இத்தகைய குறைபாடுகளை நம்மால் சரிசெய்யமுடிவது இல்லைஅதனால் இந்தவகையில் உண்டாகும் குறைபாடுகள் எல்லாவற்றையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரிசெய்துவிடவேண்டும்

      பிறவியிலேயே ஏற்படும் பார்வை இழப்புகளைத் தடுப்பதற்காக இப்போது நிறைய குடும்ப கலந்தாலோசனைகள் (family counseling) வழங்கப்பட்டுவருகிறதுஉதாரணமாக சொந்தத்தில் திருமணம் செய்துகொள்வதுஇந்த மாதிரி சொந்தத்திற்குள் கல்யாணம் செய்துகொண்டால் ஏற்படும் மரபணு குறைபாடுகளை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் அளவுக்குத் தொழில்நுட்பம் இந்தியாவில் இன்னும் வளர்ச்சி அடையவில்லை

      கண் அழுத்த நோயை நம்மால் சரிசெய்ய முடியாது என்றாலும், ஆரம்பத்திலேயே அதை நம்மால் கண்டுபிடித்துவிடமுடியும்அவ்வாறு ஆரம்பத்திலேயே இந்த வியாதியை கண்டுபிடித்துவிட்டால் இதனால் ஒரு பாதிப்பும் ஏற்படாமல் நம்மை நாம் காத்துக்கொள்ளலாம்அதேநேரத்தில் இதை முன்கூட்டியே கண்டறியாமல் விட்டுவிட்டால்தான் முழுபார்வை இழப்பு ஏற்படுகிறதுஅதனால் அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்குக் கண் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.   பார்வை இழப்பு ஏற்படப்போகிற கண் சிறிதுசிறிதாக ஒதுங்க ஆரம்பித்துவிடும்அப்போது அந்தக் கண் மாறுகண் போல ஆகும்இதெல்லாம் பார்வை இழப்பு ஏற்படப்போகிறது என்பதைக் கண்டறியும் சில அறிகுறிகள் ஆகும்ஆனால் மாறுகண் போன்ற குறைபாடுகள் இருந்தால் நம் நாட்டில் அதை ஒரு அதிர்ஷ்டம் என்று தவறாக எடுத்துக்கொள்கிறார்கள்

      குழந்தைகளுக்குப் பள்ளிகளில் கண் பரிசோதனை செய்யப்பட்டிருக்கவேண்டும்வீடுகளில் பெற்றோர்களும் வருடத்துக்கு ஒரு தடவையாவது கண் மருத்துவரிடம் சென்று பார்வையைப் பரிசோதித்துப் பார்த்துக்கொள்ளவேண்டும்சிலருக்குப் பார்வை நூற்றுக்கு நூறு சதவிகிதம் நன்றாக இருக்கும்..  ஆனால்அவர்களால் நிறங்களைப்  பிரித்து அறியமுடியாதுஇதுதான் நிறக்குருடு (colour blindness) என்று அழைக்கிறார்கள்இதையும்கூட நம்மால் ஆரம்பத்திலேயே கண்டறிந்துகொள்ள முடியும்பல குழந்தைகளுக்கும் தாங்கள் ஒரு பொறியாளராக வேண்டும், ஒரு விமான பைலட்டாக வேண்டும், ஒரு கடல்சார் அறிவியல் அறிஞராக ஆகவேண்டும் என்று பலப்பல குறிக்கொள்கள் இருக்கும்இதெல்லாம் படித்து முடித்துவிட்டு அப்போது அந்தக் குழந்தைக்கு இந்த நிறக்குருடு இருந்தால், அவர்கள் பார்க்கின்ற வேலைக்கு அவர்கள் தகுதி உடையவர்களாக ஆகமாட்டார்கள்

      நிறக்குருடு என்பது சரியாக்க முடியாத ஒன்றுதான் மரபணு கோளாறினால் வரும் இந்தக் குறைபாட்டை முற்றிலும் சரிசெய்யமுடியாதுதான் என்றாலும், அதன் குறைபாட்டுக்கு ஏற்றமாதிரி அதன் எதிர்கால வாழ்க்கைக்கு நம்மால் சிறப்பாக திட்டமிடமுடியும்

      வருமுன் காப்பதையும் தாண்டி கண்ணில் கண் புறை அல்லது கண் நீர் அழுத்த நோயோ வந்துவிட்டால், ஆரம்பத்திலேயே ஒரு மருத்துவரிடம் சென்று காட்டினால் அதற்கேற்றவாறு வாழ்க்கையை அவர்கள் மேற்கொள்ள முடியும்வெள்ளை முடி வருவது போலவே கண் புறையும் ஒவ்வொருவருக்கும் வருவதுண்டுஆரம்பநிலையிலேயே இந்த விஷயத்தைக் கவனித்தால் இந்தக் குறைபாட்டை நம்மால் தவிர்க்கமுடியும்இப்படிப்பட்ட ஒருவர் இந்தக் கோளாறுகளால் ஏற்படுகின்ற குறைபாட்டைக் குறைக்க வழிசெய்யமுடியும்வயதோடு தொடர்புடைய நோய் இது என்றாலும் ஆரம்பகட்டத்திலேயே இதைக் கண்டுபிடித்துச் சிகிச்சை அளித்தால் இதன் தீவிரத்தை நம்மால் வெகுவாக குறைக்கமுடியும்..  குறிப்பாக நீரிழிவு வியாதியுடையவர்களுக்கு இது ஏற்படுவது இயல்பானதாகும்      விழித்திரையில் ஏற்படும் குறைபாடுகள் கவனிக்கப்படாமல் விடப்பட்டால் முழுமையான பார்வை இழப்பு அவர்களுக்கு ஏற்பட்டுவிடும்சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு கண்புறை நோய் அதிகமாக வருகிறதுஅதனால் இதை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தால் ஔரளவுக்கு ஆரம்பகாலகட்டத்தில் இதைக் கண்ணாடிகள் அணிந்துகொள்வதன் மூலம் சில நாள்கள் சமாளிக்கமுடியும்ஆனால் இந்தக் கண்புறையின் அளவு 20 முதல் 25% வரை ஆகும்போது அவர்கள் செய்கின்ற அன்றாடவேலைகளை அவர்களால் சரிவரசெய்யமுடியாமல் போய்விடுகிறதுஅந்த மாதிரி சமயத்தில் இதை ஒரு சிறிய அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்துகொள்ளலாம்ஆனால் விழித்திரையில் சர்க்கரை நோயால் பாதிப்பு ஏற்பட்டால், இதன் பாதிப்பும் அதிகமாக ஏற்பட்டுவிடுகிறதுஆனால் இந்தியாவில் இது பற்றிய போதுமான விழிப்புணர்வு சர்க்கரை நோயுள்ளவர்களிடம் அதிகமாக இன்னும் ஏற்படவில்லை

      ஐந்துவருடங்களுக்கு மேல் சர்க்கரையின் அளவு இரத்தத்தில் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருந்தால், இவ்வாறு விழித்திரை பாதிப்பு ஏற்படுகிறதுஅதனால் இதை வருமுன் காப்பது அவசியம் ஆகும்இந்த பாதிப்பு முழுக்க முழுக்க நம்மால் தவிர்க்க முடியக்கூடிய ஒன்றாகும்சரியாக இதைக் கவனிக்காமல் விட்டுவிடுவதால் நிறையபேர் இதன் பாதிப்பால் முழுவதும் பார்வையை இழந்துவிடுகிறர்கள்விழித்திரையை ஆரம்பநிலையிலேயே பரிசோதனை செய்து பாதிப்பு வரப்போகிறது என்பதைக் கண்டுபிடித்துவிட்டால், சர்க்கரையின் அளவைக் குறைத்தோ அல்லது மிகச்சிறிய அளவுள்ள லேசர் அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்துவிடலாம்

      கண் நீர் அழுத்த நோய் இதற்கு முற்றிலும் வேறுபட்டு ஆரம்பநிலையிலேயே கண்டுபிடிக்க முடியாமல் ஒருவருக்கு ஏற்படுகிறதுவருவதே தெரியாமல் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டுவிடுவதால் இந்த நோய்க்குபார்வைத் திருடன்என்று பட்டப்பெயரும் உண்டுஒரு திருடனைப் போல வருவதும் தெரியாமல், போவதும் தெரியாமல் இந்த நோய் ஒருவருக்கு ஏற்ப்படுவதை ஒருவரால் கண்டுபிடிக்கமுடிவது இல்லை..  இதற்கு ஒரு முக்கிய காரணம் இது எந்தவிதமான பெரிய அறிகுறிகளுடன் வருவது இல்லைமிகவும் உன்னிப்பாக கவனிக்கும் நோயாளிகள் தங்களுக்குப் பார்வை குறைவதைப் புரிந்துகொள்ளும்போதோ அல்லது அடிக்கடி கண்ணாடியை மாற்றவேண்டியிருக்கும் சூழ்நிலை ஏற்படும்போதோ இதை ஔரளவுக்குக் கண்டறியமுடிகிறதுஅதனால் வருடத்துக்கு ஒரு தடவை கண் நீர் அழுத்த நோய் இருக்கிறதா என்று தவறாமல் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.   எவ்வாறு ஒரு பொதுவான மருத்துவர் நாம் எப்போது சென்றாலும் நம்முடைய இரத்த அழுத்தத்தை பரிசோதிக்கிறாரோ அதுபோலவே கண் மருத்துவர்களும் கண்ணில் இருக்கும் அழுத்தத்தை இப்போது பரிசோதித்துப் பார்க்கிறார்கள்ஆனால் அழுத்தம் இருக்கிறது என்பதை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவருக்கு இந்த நோய் இருக்கிறது என்று சொல்லிவிடமுடியாதுஅதனால் பொதுவாக கண் மருத்துவர்கள் அழுத்தம் இருக்கிறதா என்பதை மட்டும் பார்க்காமல் அதோடு சேர்ந்து பார்வை நரம்புகளையும் ஒரு சிறிய பரிசோதனை மூலம் பார்க்கும்போது, இந்த நோயை 95% மருந்துகளின் மூலமே சரிசெய்துவிடமுடியும். இதைக் கண்டுபிடிக்க முடியாமல் விட்டுவிட்டால்தான் சரியாக்கமுடியாத பார்வை இழப்பு நேரிடுகிறதுஅப்போது கண் நரம்புகளும் பாதிக்கப்பட்டுவிடுகிறது

      சாதாரணமாக கண்ணில் மூன்றுவகையான பார்வை குறைபாடுகள் ஏற்படுகின்றனகிட்டத்துப் பார்வை குறைபாடு சிறுகுழந்தைகளுக்கு ஏற்படுகிறதுஇந்தக் குறைபாட்டுடன்தான் நிறையபேர் இருக்கிறார்கள்மையோபியா என்று அழைக்கப்படும் இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு அருகில் இருப்பது மட்டுமே தெரியும்இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக்கண்ணாடிகளை அணிந்துகொள்வதன் மூலம் சரிசெய்துவிடலாம்துரத்துப் பார்வை என்பது தூரத்தில் இருப்பது மட்டுமே நன்றாக தெரிகிற ஒரு குறைபாடு ஆகும்மற்றொன்று நாற்பது வயதுக்கு மேல் வருகிற வெள்லெழுத்து குறைபாடு ஆகும்செல்போனின் திரையை தொடர்ந்தும் உன்னிப்பாக பார்ப்பதால், கண்ணில் எரிச்சல் வருவது, தலைவலி வருவது, கண்களில் நீர் வருவது போன்ற பிரச்சனைகள் சிறுகுழந்தைகளுக்கும்கூட ஏற்படுகிறதுபார்ப்பது டிவியாக இருந்தாலும், கணினியாக இருந்தாலும் தொடர்ச்சியாக பார்க்காமல், இவற்றுக்கு அடிமையாகிவிடாமல் இருப்பது நம் கண்களுக்கு எப்போதும் நலம் பயக்கும்.

      இந்த உலகப் பார்வை நாளில் எல்லோருக்கும் பார்வை நல்லப்படியாக இருக்கவேண்டும், எல்லோருக்கும் சரியான சிகிச்சை கிடைக்கவேண்டும் என்பதும் முக்கிய நோக்கமாக இருக்கிறதுஇந்தியாவைப் பொறுத்தமட்டும் இப்போது எல்லா அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்கூட கண் மருத்துவர் என்று ஒருவர் இருக்கிறார்இது தவிர தனியார் துறையிலும் கண் மருத்துவமனைகள் செயல்பட்டுவருகின்றனபள்ளிகளில் குழந்தைகளுக்கு வருடம்தோறும் கண் பரிசோதனை செய்யப்படுகிறதுஇதற்கென்று ஒரு திட்டமும் செயல்படுகிறதுஆனால் பார்வையில் ஏற்படும் குறைபாடுகளைச் சரியானநேரத்தில் சென்று மருத்துவரிடம் காட்டி தகுந்த சிகிச்சை பெறவேண்டும் என்கிற விழிப்புணர்வு பொதுமக்களிடையே இப்போதும் குறைவாகவே இருக்கிறதுஅதனால்தான் தவிர்க்கக்கூடிய பார்வை இழப்புகள் உலகில் இந்தியாவில் அதிகமாக காணப்படுகிறதுஊடகங்கள் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகித்துவருகின்றனஆனாலும் உட்புற கிராமப்புறங்களில் கண் பாதுகாப்பு மற்றும் பார்வை இழப்புத் தவிர்ப்பு பற்றிய போதிய அளவிலான விழிப்புணர்வு இன்னமும் அதிகமாக ஏற்படவேண்டும்குக்கிராமங்களுக்கும் கண் மருத்துவத்திற்கான சிகிச்சை வசதிகள் செய்யவேண்டியுள்ளது

      கண் தானம் செய்வது பற்றிய தவறான கருத்துக்களும் சமூகத்தில் இருந்து அகற்றப்படவேண்டும்இறந்தபிறகும் நாம் தானமாக கொடுக்கும் கண்களின் வழியாக இந்த எழில் கொஞ்சும் பூமியைத் தரிசிக்கமுடியும் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கை நம்மிட இன்னும் அதிகமாக ஏற்படவேண்டும்

      பார்வையற்றவர்கள் படும் கஷ்டங்களைச்  சரியாக புரிந்துகொள்ளவேண்டும் என்றால் ஒரே ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு சிறிது தூரம் நடந்தாலே போதும்அப்போது அவர்கள் படும் சிரமங்களை நம்மால் நன்றாக உணர்ந்துகொள்ளமுடியும்அப்படிப்பட்ட அற்புதமான ஒரு புலனறிவை இயற்கை நமக்கு வரப்பிரசாதமாக அளித்திருக்கும்போது அதைச் சரிவர கவனிக்காமல் இழப்பை ஏற்படுத்திக் கொள்வதை விட இந்த மனிதப்பிறவியில் நாம் செய்யும் பெரிய அநியாயம் வேறொன்றும் இருக்கமுடியாதுஅதனால் பார்வையின் மகத்துவத்தை முழுமையாக உணர்ந்துகொண்டு செயல்படுவோம்இனி சாலையில் செல்லும்போது ஒரு பார்வை இழந்தவர் சாலையைக் கடக்க தட்டுத் தடுமாறிக்கொண்டிருந்தால் நம்மால் முடிந்த சிறிய உதவியாக அவருடைய கரங்களை ஆதரவோடு பிடித்து அவருக்குச் சாலையைக் கடக்க உதவுவோம்.. 

ஒளியும், வண்ண வண்ண நிறங்களைக் காணும் பார்வை என்று எல்லாமும் இருந்தும் நம்மில் பலரும்  வாழ்க்கையை இருட்டாகவே காண்கிறோம்பல சமயங்களிலும் காணவேண்டியது பலதும் காணாமல், அதன் மூலம் அறியவேண்டியது பலதையும் அறியாமல் போகும்  ஒரு இருட்டுவாழ்க்கையைத்தான் நாம் இன்றும், இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்..  வாழ்க்கையை மகத்தான தங்களின் அகக்கண்களைக் கொண்டு காணும் இவர்களைத்தான்பார்வையற்றவர்கள்என்று பழம்புராணம் சொல்லி, ஒதுக்கித்தள்ளுகிறோம் நாம்அதனால்தான் உள்நோக்கி பார்க்கும் பார்வை இல்லாமல் நமக்கு இடையே பெரும்பான்மையினராக வாழும் பலரின் கண்களைத் திறக்க இத்தகைய ஒரு நாள் நமக்கு அவசிமாகிறது.

**     **    ** 

(கட்டுரையாளர் ஓய்வுபெற்ற அறிவியல் ஆசிரியர். பல மலையாளச் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர். அறிவியல் இதழ்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்).

தொடர்புக்கு: nrvikram19@gmail.com    

1 கருத்து: