புகழஞ்சலி: வழிகாட்டிய ஒளி விளக்கு அணைந்தது பேரா. ம. உத்திராபதி

graphic திரு. A. பத்மராஜன் அவர்களின் படம்
திரு. A. பத்மராஜன் அவர்கள்

                                                     தோற்றம் - 16/06/1950

                                                      மறைவு - 10 /09/2021

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்றுஎன்பது வள்ளுவர் வாக்கு. அந்த வள்ளுவர் வாக்கிற்கேற்ப பார்வையற்றவர்கள் இந்தச் சமூதாயத்தில் பிறப்பதே பெரும் குற்றமாக கருதப்பட்ட ஒரு காலம். அந்த காலத்தில் எல்லாவகையான தடைகளையும் கடந்து எல்லா வகையான நிலைகளையும் கடந்து பார்வையற்ற சமூகத்திற்கு வழிகாட்டியாக விளங்கியவர் மறைந்த பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பேராசிரியர் A. பத்மராஜன் அவர்கள். 

      1978 என்பது பார்வையற்றவர்கள் கல்லூரிகளில் மெல்ல மெல்ல சேர தொடங்கிய காலம். பார்வையற்றவர்கள் படிப்பதற்குரிய படிக்கும் கருவிகள் இல்லாத காலம். தொழில்நுட்ப வசதி என்னவென்று அறியாத ஒரு காலம். எல்லாப் பக்கமும் இருள் சூழ்ந்திருந்த நேரம். படிப்பதற்கு பல மைல்கள் சென்று எங்காவது வாசிப்பாளர்கள் கிடைப்பார்களா? என்று ஏங்கிக் கொண்டிருந்த காலம். கல்லூரிகளுக்குள் அடி எடுத்து வைத்து விட்டோம். ஆனால் படிப்பதற்கும், பல்வேறு படிப்புத் தொடர்பான வசதிகளைப் பெறுவதற்கும் வாய்ப்பில்லாமல் இருந்த காலம்

      பல்வேறு சங்கங்கள் அந்தக் காலத்தில் செயல்பட்டன. பிரம்பு நாற்காலி பிண்ணும் பார்வையற்றோர்க்காண ஒரு சங்கம், பார்வையற்ற தொழிலாளர் தொடர்பான ஒரு சங்கம், பார்வையற்ற சமூகத்திற்காக பார்வை உள்ளவர்கள் செயலாற்றிய ஒரு சங்கம் எனப் பல்வேறு சங்கங்கள் இந்தக் காலத்தில் செயலாற்றின. ஆனால் யாரும் பார்வையற்றோரின் படிப்புக்காக, படிப்பு வசதிக்காக செயல்படவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் கல்லூரியில் படிப்பவர்களுக்காகவும், படித்து முடித்து வேலை இல்லாதவர்கள் வேலை பெறுவதற்காகவும் பார்வையற்றவர்களுக்கு என்று ஒரு சங்கம் வேண்டும் என்ற எண்ணம் அப்போது படித்துக்கொண்டிருந்த எங்கள் மனதில் ஏற்பட்டது. கிறித்துவக் கல்லூரியில் அப்போது பயின்றுகொண்டிருந்த திரு. பத்மராஜ் அவர்களுக்கும் இந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் ஏற்பட்டது. பல இரவுகளில் கிருத்துவக் கல்லூரியில் சந்தித்து இதுகுறித்து நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். இப்படி ஒரு சங்கத்தை வடிவமைப்பதுஅதை வடிவமைத்து எப்படி  இயங்கச்செய்வது என்ற பல்வேறு திட்டங்களை வகுக்க நாங்கள் தலைப்பட்டோம். அப்படி தலைப்படுகிற நேரத்தில் பல இரவுகளில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. எல்லா நேரங்களிலும் திரு. பத்மராஜ் அவர்கள் உடன் இருந்தார்.

      படிப்படியாக நாங்கள் பேசிய அந்த பேச்சுகளின் விளைவாக  ஒரு காலகட்டத்தில் 1980-இல் அந்த அமைப்பிற்கு ஒரு உருவமும் வடிவமும் கிடைத்தது. அப்படிப் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் என்கிற ஒரு சங்கத்தைத் தொடங்குவதற்கு அவர் பெரிதும் காரணமாக அமைந்தார்

      அதற்கு முன்பே 1974இல் பார்வையற்றோருக்காக இருக்கிற பூந்தமல்லி அரசுப் பள்ளியில் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நாங்கள் நடத்தினோம். அன்றைய பள்ளி முதல்வரை எதிர்த்து, அவரது அராஜக போக்கைக் கண்டித்து, உணவு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினோம். அந்தப் போராட்டத்திற்கு ஒரு வடிவம் கொடுத்து, அந்தப் போராட்டத்தை வெளி உலகிற்குக் கொண்டுவர மாணவர் அமைப்போடு இணைந்து திரு. பத்மராஜ் அவர்கள் செயல்பட்டார். அப்போது அவர் படித்துக் கொண்டிருந்த நேரம். அந்த நேரத்திலும் பார்வையற்றவர்களாக போராடுகிற எங்களையெல்லாம் வந்து பார்த்து ஊக்கப்படுத்தி அந்த ஊக்கத்தின் விளைவாக இந்தப் போராட்டத்திற்கு ஒரு வடிவம் கொடுத்து அதை உலகிற்குத் தெரியப்படுத்தியவர் அவர். பல்வேறு அரசியல் கட்சிகளும் அந்த பள்ளிக்கு வந்து எங்களைச்  சந்திக்கிற ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

       இப்படிப்  பார்வையற்றோர் சமூகத்தின் பல்வேறு போராட்டங்களுக்கு இவர் வழிகாட்டியாக விளங்கியுள்ளார்

      பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் தொடங்கப்பட்டுவிட்டது. அவர்தான் முதல் தலைவராகவும், நிறுவன உறுப்பினராகவும் இருந்தார். அதன்பிறகு பல்வேறு பணிகள். முதல் போராட்டமாக உண்ணாவிரதப் போராட்டம். இப்படிப் பல்வேறு போராட்டங்களைச் சங்கம் நடத்திச்செல்வதற்கு அவர் அடிப்படைக் காரணமாக விளங்கினார்.

      திருப்பூரில் அவருக்கு வேலை கிடைத்தது. சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்தச் சூழ்நிலையிலும் ஒவ்வொரு நாளும் சங்கத்தைப் பற்றி சென்னையில் இருக்கிற எங்களிடத்தில் கேட்டுத் தெரிந்துகொள்வார். என்ன செய்யவேண்டும் என்று அங்கிருந்தே வழிகாட்டுவார். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து எங்களோடு உட்கார்ந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகளாக என்ன செய்ய வேண்டும். அரசுக்கு நம் கோரிக்கைகளை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் விளக்கிச் சொல்வார். தனக்கு வேலை கிடைத்துவிட்டது, தான் வாழ்ந்தால் போதும் என்று எண்ணுகிற எண்ணம் அவருக்கு இல்லை. அவருடன் மற்றவர்களும் வேலை பெற வேண்டும், உயர் நிலைக்கு வரவேண்டும் என்ற உன்னத குறிக்கோளை மனதில் தாங்கி அதற்காக அல்லும் பகலும் உழைத்தவர் அவர்

      இந்தச் சங்கத்தினுடைய வளர்ச்சியிலே அவருடைய பங்கு பெரும் பாராட்டிற்குரிய ஒன்றாக விளங்கியது. அவருடைய அந்தப் பங்களிப்பு சங்கத்தைப் பல்வேறு நிலைகளில் உயர்த்திப்பிடித்தது. அரசுக்கும், கல்லூரிகளுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. குறிப்பாக சமூகத்திற்கே பார்வையற்றவர்கள் என்றால் அவர்கள் பெரும்பாரம் அல்ல என்கிற ஒரு எண்ணத்தை ஏற்படுத்தியது இந்த அமைப்பு.

      அதன்மூலமாக இன்றைக்கு ஆயிரக்கணக்கான பார்வையற்றவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பார்வையற்றவர்கள் வளமான வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் அடிப்படையாக, ஒரு ஊன்றுகோலாக, ஒரு ஊற்றுக்கண்ணாக விளங்குவது இந்தச் சங்கம். அதை தொடங்கியவர் திரு. பத்மராஜ் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை

      அதற்குப் பிறகு பார்வையற்ற ஆசிரியருக்கு என்று ஒரு சங்கம் வேண்டும். ஆசிரியர்கள் பல நிலைகளில் இருக்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற சங்கம் வேண்டும் என்று பார்வையற்ற ஆசிரியர் சங்கத்தைத் தொடங்கி வைத்தார். அதன் அடிப்படையிலே இன்று ஆசிரியர்கள் பல்வேறு நிலைகளில் ஒன்றிணைந்து தங்களுடைய கோரிக்கைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்று கொண்டிருக்கிறார்கள்

      சென்னையிலே பார்வையற்ற மாணவிகள் பல்வேறு சிரமங்களை அனுபவித்தார்கள். 2000-ஆம்  ஆண்டுகளில் அவர்களின் வருகை மிக அதிகமாக இருந்தது. அரசினுடைய விடுதி கிடைக்கும் வரை அவர்களுக்குத் தங்கும் இடம் கிடைக்காமல் பல்வேறு நிலைகளில் அவர்கள் இன்னல் பட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த சூழ்நிலையிலே தனியாக ஒரு விடுதியைப் பார்வையற்ற பெண்களுக்கு என்று தொடங்க வேண்டும் என்று எண்ணி ஒரு விடுதியைத் தொடங்கினார் திரு பத்மராஜ் அவர்கள். பத்மம் அறக்கட்டளை அதாவது லோட்டஸ் அறக்கட்டளை என்கிற பெயரில் தொடங்கப்பட்ட அந்த அறக்கட்டளை பல்வேறு வகைகளில் பார்வையற்ற பெண்களுக்காக செயலாற்றிக் கொண்டிருந்தது. முதலில் பல்லாவரம், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் எனப் பல இடங்களில் இயங்கிய அந்த விடுதி இறுதியில் அவருடைய பெருமுயற்சியால் மயிலாப்பூரில் சொந்தக் கட்டடத்தில் செயல்படத் தொடங்கியது.

      மிகவும் பாதுகாப்பாகவும், நல்ல உணவும், சிறந்த வழிகாட்டுதலும் அந்த மாணவிகளுக்குக் கிடைக்க அவர் அடிப்படைக் காரணமாக விளங்கினார்

      பார்வையற்ற பெண்களுடைய முன்னேற்றத்திற்கும், அவர்களின்  கல்வி வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. இன்றைக்குச் சமூகத்தில் பல பார்வையற்ற பெண்கள் பல நிலைகளில் உயர்ந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு அவரும் ஒரு அடிப்படைக் காரணம் என்பதை யாரும் மறந்து விடவோ, மறுத்து விடவோ முடியாது.

      அப்படிப்பட்ட அவர் அந்த அறக்கட்டளையில் இருந்து ஏதோ ஒரு காரணத்தினால் நீக்கப்பட்டு வெளியே வந்தார். பிறகு தனியாக ஒரு விடுதி தொடங்கினார். முதுமையின் காரணமாகவும், இயலாமையின் காரணமாகவும் அவரால் தொடர்ந்து அந்த விடுதியைப் பராமரிக்க முடியவில்லை. அதனால் அந்த விடுதி மூடப்பட்டுவிட்டது.

      முதுமையின் காரணமாக உடல்நிலை மிகவும்  குன்றிப்போய் சில ஆண்டுகள் கோமா நிலையில் இருந்தார். அதற்குப்பிறகு அண்மையில் இந்த ஆண்டு அவர் மறைந்துவிட்டார்

      ஒரு மனிதன் வாழ்கிற போது எதையாவது சாதித்துவிட்டு வாழ வேண்டும் என்பது வரலாறு காட்டுகிற உண்மை. சரித்திரத்தைப் படிப்பதைவிட சரித்திரமாய் ஆகவேண்டும், சரித்திரத்தைப் படைக்க வேண்டும் என்பதிலே மனிதர்கள் அக்கறை காட்ட வேண்டும் என்பது ஒரு பொன்மொழி. அந்த வகையிலே அவர் சரித்திரத்தைப் படைத்தவர். சரித்திரப் பேராசிரியராய் பல ஆண்டுகள் பணியாற்றியவர். சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு அரசு கலைக் கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் அவர் வரலாற்றுத் துறை பேராசிரியராக பணியாற்றினார். அவர் ஒரு வரலாறாய் மாறிப்போனார். இன்றைக்கு பார்வையற்றவர்களின் இதயங்களில் பிரிக்க முடியாத, அழிக்க முடியாத வரலாற்று நாயகராக விளங்குகிறார் திரு. பத்மராஜன் அவர்கள்

      அவரைப்போல பார்வையற்றோர் சமூகத்திற்கு, இந்தச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாகவும், உதவியாகவும் இருக்க வேண்டும் என்பதை எல்லோரும் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். அவரைப்போல உழைத்து உழைத்து இந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்கிற முனைப்பும், முன்முயற்சியும் எடுக்கவேண்டும். அதுதான் நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலி.

  

(கட்டுரையாளர் ஓய்வு பெற்ற பேராசிரியர். பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொருளாளர்).

தொடர்புக்கு: 9629632926 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக