எனக்குப் பிடித்த பாடல்: உங்களில் யார் உண்டு? – ரா. பாலகணேசன்

      அன்று கடுமையான மன அழுத்தத்தில் இருந்தோம். +2 பொதுத் தேர்வின் முதல் நாள். பள்ளி ஆசிரியர்கள், விடுதியில் தங்கிப் பயிலும் மூத்த அண்ணன்கள், அக்காக்கள், இளைய தம்பி தங்கைகள், பள்ளி நிறுவனர் என்று அனைவரும் சேர்ந்து எங்களை மிகப்பெரிய பரபரப்பிற்குள் உட்படுத்தியிருந்தனர். தேர்வை எதிர்கொள்வது குறித்த அறிவுரைகள், வாழ்த்துகள், இனிப்பு வழங்கல்கள் எனப் போர்க்களத்திற்குத் தயாராகும் வீரர்களைப் போல எங்களைத் தயார்படுத்தி வைத்திருந்தனர்.

      எங்களை ஏற்றிக்கொண்டு தேர்வு மையத்திற்கு வேன் புறப்பட்டது. “இவர்கள் பாடத்தைக் கொஞ்சம் ஒலிபரப்புங்கள். கேட்டுக்கொண்டே வரட்டும்என்றார் எங்களுக்குத் துணையாக வந்த ஒரு பணியாளர். உடனே எல்லோரும் அதை மறுத்தோம்.     சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர்கவலப்படாதீங்க. அப்படியெல்லாம் செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டு, ஒரு பாடலை ஒலிபரப்பினார். ‘வசீகரா!’. பாடலைக் கேட்டுவிட்டு அந்தப் பணியாளர் சொன்னார்: “எனக்கு ஒருவேளை ஆண் குழந்தை பிறந்தால் வசீகரன்னுதான் பெயர் வைப்பேன்என்று. அந்த அளவிற்குப் பலர் மனதிற்குள்ளும் இடம் பிடித்தவை ஹாரீஸ் ஜெயராஜ் பாடல்கள்.

      ஹாரீஸ் குறித்து பலரும் பல குற்றச்சாட்டுகளையும் சொல்வதுண்டு. ஏன்? நானும்கூட சொல்வேன். இந்தப் பாட்டு அந்தப் பாட்டைப் போலவே இருக்கிறது, இது அந்தக் கிறிஸ்துவப் பாடல் மாதிரி இருக்கிறது, இதே இசையைத் தானே ஏற்கெனவே இன்னொரு பாடலில் பயன்படுத்தியிருந்தார்இப்படி நிறைய. ஆனாலும் எனக்கு ஹாரீஸ் பாடல்கள் மிகவும் பிடித்தமானவையாகவே இருந்தன. எனக்கு மட்டுமல்ல. 2000-ங்களில் இவர் இசையில் எந்தப் பாடல் வெற்றியடையாமல் இருந்திருக்கிறது? அவர் ஒரு ஒலிப் பொறியாளரும் கூட என்பதால், பாடலில் அவர் காட்டும் நுட்பங்களை, நுணுக்கங்களை நான் தேடித் தேடி ரசிப்பதுண்டு.

      வைரமுத்துவின் தமிழுக்கு மயங்காதவர் யார் உளர்? 1990-களில் வளர்ந்த நான் அவர் நிகழ்த்திய மாயத்தின் இரண்டாம் அலையில் மூழ்கிப்போனேன். ஒவ்வொரு பாடலையும் வரி வரியாக ஆராய்வது, அதன் மறைபொருளை அம்பலப்படுத்தி மகிழ்வது என்று நாங்கள் செய்த குழுச் செயல்பாடுகள்தான் எத்தனை எத்தனை?

      சௌக்கியமா கண்ணே! சௌக்கியமாஎன்று நித்யஸ்ரீ பாடத் தொடங்கினால் இப்போதுவரை மனம் அந்தப் பாடலுக்குள் மட்டும்தான் பயணிக்கிறது. அந்த வயதில், எங்கு அந்தப் பாடல் ஓடினாலும் கேட்டுவிட்டுத் தான் அடுத்த வேலை. அப்போதிலிருந்து நித்யஸ்ரீயும் எனக்கு மிகவும் பிடித்தவராகிவிட்டார். கனீர் குரல், தெளிவான தமிழ் உச்சரிப்பு, எவ்வளவு சத்தமாக வேண்டுமானாலும் பாடும் திறன், எந்த ஸ்ருதியிலும் குரல் தடுமாற்றம் இன்றிப் பாடும் முறை முதலிய இவர் தனித்தன்மைகளால் ஈர்க்கப்பட்ட நான், இவர் வெளியிட்ட கர்நாடக இசைப் பாடல்களையும் தேடித் தேடிக் கேட்கத் தொடங்கினேன்.

      மேலே நான் சொன்ன மூவருக்கும் இருக்கும் ஒரு முக்கியமான ஒற்றுமை, தெளிவான உச்சரிப்பு. வைரமுத்து அதை மிகவும் விரும்புவார்; நித்யஸ்ரீ அதைத் தன் குரல் வழி நிறுவுவார்; ஹாரீஸ் அதை முழுமையடையச் செய்வார். இந்த மூவரும் இணைந்தால்நடந்தது. ஒரே ஒரு முறை மட்டும் நடந்தது.

      சாமுராய் படத்திற்காகஒரு நதிஎன்று தொடங்கும் பாடலைப் பாடியிருந்தார் நித்யஸ்ரீ. நித்யஸ்ரீயா பாடியது? முதல்முறை பாடலைக் கேட்கும்போது நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் அவரேதான். அவர் குரலேதான். ஹாரீஸ் இசையில், வைரமுத்து வரிகளில், நித்யஸ்ரீ குரலில் மயங்கித்தான் போனேன்.

      பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில்  2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சாமுராய். படம் அந்த அளவு வெற்றிபெறவில்லை என்றாலும், பாடல்கள் பயங்கர வெற்றி. ஹாரீஸ் பாடல்கள் எப்போது வெற்றியடையாமல் இருந்திருக்கின்றன? அதிலும் இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள். நித்யஸ்ரீ அதற்கு முன்போ, பின்போஇப்படி ஒரு பாடலைப் பாடியதே இல்லை. இனிமேல் இப்படிப் பாடவும் வாய்ப்பில்லை.

      பல்லவியை இரு முறை பாடுவார் நித்யஸ்ரீ. முதல்முறை கீழ் ஸ்ருதியில் பாடும்போது ஏதோ ஒரு மேற்கத்திய இசையில் வல்லவரான பாடகர் பாடுவதாகவே தோன்றும். அடுத்து மேல் ஸ்ருதியில் பாடும்போதுதான் நித்யஸ்ரீ என்பதை உறுதிப்படுத்த முடியும். இந்தப் பாடலுக்கு எப்படி ஹாரீஸ் நித்யஸ்ரீயைத் தேர்ந்தெடுத்தார், எப்படிச் சம்மதிக்கவைத்தார், எப்படி அவரிடம் வேலை வாங்கினார் என்று நான் பல முறை நினைத்ததுண்டு.

      சரணத்தில் இருமுறை பாடப்படும் பாடல் பகுதிகளில் முதல் முறை பாடுவதைப் போலவே இரண்டாம் முறை பாடமாட்டார் நித்யஸ்ரீ. எனக்குத் தெரிந்து நித்யஸ்ரீ ஸ்வரங்களையோ, கமகங்களுடன் கூடிய தேர்ந்த ஆலாபனைகளையோ பாடாத ஒரே பாடல் இதுவாகத்தான் இருக்கமுடியும். அவரது கர்நாடக இசைத் தன்மைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுத் திரைப்படப் பின்னணிப் பாடகியாக மட்டும் இங்கு பாடியிருக்கிறார். இருந்தாலும், கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீ கொஞ்சம் எட்டிப்பார்க்கத்தான் செய்கிறார்.

      வைரமுத்து தமிழில் விளையாடியிருக்கிறார்.’போகாத எல்லை போய்வந்தாலும் புன்னகை செய்யும் ஒருவன்’, ‘நான் போதும் போதும் என்னும் வரையில் புதுமை செய்யும் ஒருவன்என்ற வரிகள் எல்லாம் அட்டகாசமானவை. ‘கேளாமல் போன பாடலையெல்லாம் திரட்டிக் கொடுக்கும் ஒருவன்எனக்குப் பிடித்த வரி. எனக்கும் கொஞ்சம் அந்தத் தகுதிப்பாடு இருப்பதாக மனதுக்குள் ஒரு நினைப்பு.

      முதல் சரணத்தில் ஆண்கள்நான்தானா?’ என்று கேட்க, ‘நீயில்லைஎன்று நயமாக எடுத்துச் சொல்கிறார் நித்யஸ்ரீ. இரண்டாவது சரணத்தில்நீதானா?’ என்று அதிகார தோரணையில் நித்யஸ்ரீ கேட்க, ‘நான் இல்லைஎன்று பயந்து நடுங்குகிறார்கள் ஆண்கள். பெண்மைத் தெளிவோடும், திமிரோடும் பாட நித்யஸ்ரீயைப் போல வேறு யாரால் முடியும்?

      இப்பாடலில் சில இடங்களில் கொஞ்சுகிறார்; சில இடங்களில் கெஞ்ச முயல்கிறார்; சில இடங்களில் அதிகாரம் செலுத்துகிறார். ஆனால், எல்லா இடங்களிலும் நம் மனதில் ஆதிக்கம் செலுத்திவிடுகிறார். கடைசியில் வரும் ஹம்மிங் வரை ஒரு புதுமையான நித்யஸ்ரீயை இப்பாடலில் என்னால் கேட்கமுடிந்தது.

 

என் தேடல் அது  வேறு அடப்போடா நீயில்லை!” என்று பாடும் நித்யஸ்ரீக்கும்,

நான் தேடும் சிருங்காரன் இங்கு ஏனோ ஏனில்லை?” என்று ஏமாந்த நிலையில் பாடும் நித்யஸ்ரீக்கும் எத்தனை நுட்பமான வேறுபாடு?

கேட்டுப்பாருங்கள்; கருத்துகளைத் தாருங்கள்.

 

பாடலைக் கேட்க்க

 

தொடர்புக்கு: balaganesan2285@gmail.com 

2 கருத்துகள்: