என் கருவில் உருவாகி, எனதுதிறம்
உரிந்து, இவ்வுலகில் உதித்த உயிரே!
உந்தன் மழலை குரல் எந்தன்
செவியில்
ஒலித்த முதல் தருனம் நான் மறுமுறை பிறந்தேனடி
செல்வமகளென்று என் செல்லத்தைச் செவிலியரிடமிருந்து
பெற்றபின்பு
சேராத செல்வமெல்லாம் சேர்ந்ததென உணர்ந்தேனடி!
கண்போல காப்பேன் என்பார்களே! கண்ணொளி அற்ற
நானோ
என்னைப்போல் உன்னை
காப்பேனடி கண்ணுறங்கு
உறக்கம் விழித்து நீ விடும் சின்ன சிணுங்களெல்லாம்,
உனது விழிப்பை எனக்குச் சொல்லுமடி
ஒய்யாரமான உன் அழுவோசை பசியென்று பிணியென்று
பிரித்தறிந்து உணர்த்துமடி பாப்பா
கண்ணுறங்கு.
உன் மாமன் அணிவித்த வெள்ளிக் கொலுசோ, தத்தி
தவழ்ந்து
நீபோகும் திசையை எனக்குக் காட்டுமடி!
பிறரைப் பார்த்துக் குருநகைக்கும் நீ மறவாது
என்னைப் பார்த்து எப்போதும் குழந்தாய் குரலெழுப்பு.
மிருதுவான உடலுடைய உன்னை அன்பில் அனைத்துக்கொள்ளவும்,
பழுத்த பழம்போன்ற உன் முகத்தில் முத்தமிடவும்
குழலோசைக்கிணையான உன் குரலைக் கேட்கவும்
சின்னச் சின்ன செல்லச் சிரிப்பை ரசிக்கவும்
நான் காணாநிகழ்வெலாம் நீ காணகண்டு உவகையுரவும்
யுகம் பல வேண்டுமென வேண்டுவேன் வெண்ணிலவே கண்ணுறங்கு.
அன்றாடம் உனக்கு ஆரோக்கிய அறுசுவை உணவை
அள்ளித்தந்தும், ஊட்டிஊட்டியும் வளர்ப்பேனடி
கண்ணுறங்கு.
அங்காடிகளுக்கு அழைத்துச்சென்று ஆடைகளும்
அணிகலனும் பல வாங்கித்தந்து அழகுன்னை பார்ப்பேனடி!
பள்ளி முடிந்து துள்ளிவரும் உன்னைப் பசியாற்றி
வீட்டுப்பாடம் பக்குவமாய் படிக்கவைப்பேனடி கண்ணுறங்கு.
கண்ணசைவையும், காட்சியையும் பிரதானப்படுத்தும்
இப்பிரபஞ்சத்தில்
பிற புலன்களும் உண்டென்பதை
புரியவைத்திடவேண்டுமடி!
காலத்தில் கல்விகற்று, அறிவென்னும் ஆயுதமேந்தி
நற்பண்பில் உறவுபெற்று, ஞாலத்தில் வாகை பல சூடி
பேறுபெற்று நீ வாழ, வளர்த்தெடுப்பேன் விழி மூடி நீ உறங்கு.
(தொடர்புக்கு: Paripoorani2410@gmail.com)
அருமை. ஆனால் பழம்பாடல்.
பதிலளிநீக்குsuper feel
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு