அலசல்: பார்வையற்றோர் வாழ்வில் 2021 – ரா. பாலகணேசன்


      ஒவ்வொரு ஆண்டும் பார்வை மாற்றுத்திறனாளிகள் குறித்த நிகழ்வுகள் என்னென்ன நடந்தன என்பது குறித்து ஒரு பருந்துப் பார்வையை நாம் தொடர்ந்து பார்த்துவருகிறோம். இதழ் தொடங்கிய காலம் தொட்டு இது வரையிலும் இப்பகுதி வெளியாகிவருகிறது. அதற்கு முன்பே தனிப்பட்ட முறையில் 2013 முதல் இப்பணிகளை நான் மேற்கொண்டுவருகிறேன். இதற்கு ஆதரவளிக்கும் ஒவ்வொருவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள். இனி இந்த ஆண்டில் நடைபெற்ற பார்வைக் குறையுடையோர் தொடர்பான முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம்.

முதன்மை நிகழ்வு

      கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை இந்த ஆண்டில் உலகையே ஒரு பாடு படுத்திவிட்டது. இதில் பார்வைக் குறையுடையோர் பலரும் பாதிக்கப்பட்டனர். 2020-இல் பரவிய தொற்றின் முதல் அலையின்போது, ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கு உதவுவது எப்படி என்று மட்டுமே நாம் சிந்தித்துக்கொண்டிருந்தோம். ஆனால் இந்த இரண்டாம் பேரலையில், பல பார்வை மாற்றுத்திறனாளிகள் கொரோனாவின் பிடியில் மாட்டிக்கொண்டனர். பெரும்பாலோர் மீண்டுவிட்டனர்; சிலர் மீளாத் துயருக்கு நம்மை ஆட்படுத்திவிட்டனர்.

தமிழ்நாடு

      *மாற்றுத்திறனாளிகளுக்காகச் சிறப்பான சேவையாற்றியமைக்கான ஒன்றிய அரசின் விருதை இந்த ஆண்டு தமிழ்நாடு பெற்றது. மாநில சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் குடியரசுத் தலைவரிடம் இவ்விருதைப் பெற்றுக்கொண்டார்.

      *சேலம் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பாகப் பணியாற்றியமைக்கான தேசிய விருதைப் பெற்றது.

      *ஆதிதிராவிடர் நலத் துறையின் சார்பில் வழங்கப்படும் சிறந்த எழுத்தாளருக்கான விருதைப் பெற்றார் பேரா. மு. ரமேஷ். நந்தனம் அரசினர் கலைக் கல்லூரியில் பணியாற்றும் இவர், தனது சங்க இலக்கியத்தில் நிலங்களும், குடிகளும், வழிபாடும்என்ற ஆய்வு நூலுக்காக இப்பரிசைப் பெற்றார்.

      *தமிழ்நாடு அரசின் சார்பில்ரைட்ஸ்என்ற திட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலக வங்கியின் பங்களிப்போடு மேற்கொள்ளப்படும் திட்டம். இத்திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பெருமளவிலான சிக்கல்கள் சரிசெய்யப்படும் எனத் தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

      *மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கென குறை தீர் அலுவலர் ஒவ்வொரு அலுவலகத்திலும் நியமிக்கப்படவேண்டும் எனத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது இந்த ஆண்டில்தான்.

      *மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊர்திப்படி (conveyance allowance) விடுமுறைக் காலங்களில் நிறுத்திவைக்கப்படக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது நெடுநாளாக இருந்துவந்த சிக்கலுக்குத் தீர்வாகியுள்ளது.

      *மாற்றுத்திறனாளிகளோடு, அவர்களோடு உடன் பயணிக்கும் நபர்களுக்கும் நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் அனுமதிக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

      *கொரோனா தடுப்பூசி மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று செலுத்தப்படும் என்ற முன்னோடித் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதை வெகுவாகப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, பிற மாநிலங்களும் இத்தகைய முயற்சியை மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார்.

      *ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்தபடி ஆர்பிட் ரீடர் எனப்படும் பிரெயில் திரைக் கருவியைக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கும் பணி இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.

      *மதுரையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் கலைஞர் நூலகத்தில் பார்வையற்றோர் உட்பட மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு வசதிகள் செய்யப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது பயன்பாட்டிற்கு வரும்போது, தென் தமிழ்நாட்டில் வசிக்கும் பார்வையற்றோர் மிகவும் பயன் பெறுவர்.

      *இந்த ஆண்டு புதிதாகப் பொறுப்பேற்ற அமைச்சரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையை முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்களே தன் வசம் வைத்துக்கொண்டார். இதை மாற்றுத்திறனாளிகள் பலரும் வரவேற்றனர். ஆயினும், மானியக் கோரிக்கையைப் பேரவையில் தாக்கல் செய்வது, தேசிய விருது பெறுவது முதலிய முக்கியப் பணிகளை மாநில சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களே மேற்கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.

      *முன்னதாக தி.மு. தனது தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்என்று குறிப்பிட்டது மாற்றுத்திறனாளிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இது தேவையற்ற ஒன்று என டிசம்பர் 3 உள்ளிட்ட பல அமைப்புகள் கருத்து தெரிவித்தன.

      *அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் பற்றி இடம்பெற்ற செய்திகள் மாற்றுத்திறனாளிகளின் பரவலான கவனத்தைப் பெற்றன.

      *பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கென தனிக் கணினிப் பயிற்சி விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான தயாரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன என்றும், வரும் ஜனவரியில் பயிற்சி நடத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய பயிற்சி நடத்தப்படுவது இது்வே முதல்முறை. மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) ஹோப் ஃபவுண்டேஷனோடு இணைந்து இப்பயிற்சியை வழங்குகிறது.

      *சென்னை உயர்நீதிமன்றத்தின் உதவியாளர் பணிக்கு நடைபெற்ற தேர்வில் பார்வையற்றவர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையானது.

      *பார்வையற்ற வழக்கறிஞர்களுக்காகவும், பார்வையற்ற வழக்காடிகளுக்காகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரெயில் அ்ச்சுக் கருவி நிறுவப்பட்டுள்ளது.

      *சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டிப்பிற்குப் பிறகு பதிலி எழுத்தர்களுக்கான (Scribe) தெளிவான விதிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

      *பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விளக்கக் கூட்டம் பல்வேறு கட்சியினரின் முன்னிலையில் நடைபெற்றது. பார்வையற்றோருக்கான பெரிய அமைப்பு ஒன்று தங்கள் கோரிக்கைகளை நேரடியாக அரசியல் கட்சியினரை அழைத்துத் தெரிவிப்பது இதுவே முதல்முறை. காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

      *முன்னதாக பிப்ரவரி 17 தொடங்கி மார்ச் 1 வரை மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தியது பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம். பார்வையற்ற பட்டதாரிகளுக்கான பணி வாய்ப்புகள் தொடர்பாக நடத்தப்பட்ட இப்போராட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பொதுச் செயலர். ரவிக்குமார் ஆகியோர் முடித்துவைத்தனர்.

      *இந்த ஆண்டு நடைபெற்ற விடுபட்ட மாவட்டங்களுக்கான ஊராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தின் லெவிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினராக வென்றிருக்கிறார் சுடர் ஆனந்த் அவர்கள்.

இந்தியா

      *இந்த ஆண்டு இரு பார்வை மாற்றுத்திறனாளிகள் பத்மஸ்ரீ விருது பெற்றனர். கேரளாவைச் சேர்ந்த 211 நூல்களை எழுதிய எழுத்தாளர் பாலன் புத்தேரி, 1984-இல் நிகழ்ந்த போபால் விஷவாயுக் கசிவில் தனது பார்வையை இழந்தாலும், அந்த விபத்தில் பாதிக்கப்பட்டோருக்காகத் தன் வாழ்நாள் வரை போராடிய அப்துல் ஜபார் ஆகியோர்தான் அவர்கள். ஏற்கெனவே கிரிக்கெட் வீரர் சேகர் நாயக், இசை வல்லுநர் காயத்ரி சங்கரன், AIICB நிறுவனர் J..L. கௌல், ஓவியர் மனோகர் தேவதாஸ் முதலிய பார்வைக் குறையுடையோர் இவ்விருதைப் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

      *இந்த ஆண்டு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மளா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான ஒதுக்கீடு சென்ற ஆண்டைக் காட்டிலும் 12% குறைவாக இருப்பதாக எதிர்ப்புகள் எழுந்தன. கொரோனா தாக்கம் நாட்டில் பெருமளவில் இருந்தபோதிலும், மாற்றுத்திறனாளிகள் நலன் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக பல அமைப்புகள் வேதனை தெரிவித்தன.

      *நீதிபதிகளாகப் பார்வையற்றோர் பணியாற்றுவதில் எந்த ஒரு தடையுமில்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

      *மும்பை ரயில் நிலையத்தில் நடந்துவந்த தனது பார்வையற்ற தாயின் பிடியிலிருந்து விலகிய சிறுவன் தண்டவாளத்தில் விழுந்துவிட, ரயில் வேகமாக அவனை நோக்கி வந்துகொண்டிருந்த சூழலில் தண்டவாளத்தில் இறங்கி அவனை மேலே கொண்டுவந்து அந்தப் பார்வையற்ற தாயிடம் ஒப்படைத்தார் மயூர் ஷேல்கே. இவரது இச்செயல் பரவலான கவனத்தைப் பெற்றது.

சினிமா

      *நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்த நெற்றிக்கண்திரைப்படம் இந்த ஆண்டு வெளியானது. இது விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

      *ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி வெளியீடாக வந்ததுஅண்ணாத்த’. இத்திரைப்படத்தில் திருமூர்த்தி, சம்சுதீன் ஆகிய பார்வை மாற்றுத்திறனாளி பாடகர்கள்வா சாமிஎன்ற பாடலைப் பாடியிருந்தனர். இசையமைப்பாளர் D. இமான். ஏற்கெனவே சில பாடல்களைப் பார்வையற்றோர் தமிழ்த் திரையில் பாடியிருக்கிறார்கள் என்றாலும், வணிக முக்கியத்துவம் வாய்ந்த பெரிய அளவிலான திரைப்படம் ஒன்றில் பாடுவது இதுவே முதல்முறை.

      *நெட் ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்கள் ஒலி விவரணையுடன் (audio description) வெளியானது பார்வையற்றோரிடையே மகிழ்ச்சியைத் தந்தது. பாவக்கதைகள், ஜகமே தந்திரம் முதலிய திரைப்படங்கள் முதலில் ஒலி விவரணையுடன் வெளியாயின.

      *நெட் ஃஇலிக்ஸின் இந்த முன்னெடு்ப்பைத் தொடர்ந்துமாயோன்திரைப்படத்தின் முன்னோட்டமும் (Trailer) ஒலி விவரனையுடன் வெளியிடப்பட்டது.

      *புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான செல்வராகவன் பார்வைக் குறைபாடு காரணமாக தனது குழந்தைப் பருவத்தில் எதிர்கொண்ட இன்னல்களை ட்விட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்திருந்தார். இதற்கு அவரது ரசிகர்களும், பிற திரை ஆளுமைகளும் எதிர்வினையாற்றினர்.

தொழில்நுட்பம்

      *மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை வெளியிட்ட ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் முன்னிருக்கும் பொருள்களைப் பயனாளிகளுக்கு அறிவிக்கும் கருவி பரவலான விளம்பரம் பெற்றது.

      *முழுக்க முழுக்க குரல் வழியே மட்டும் இயங்கும் கிளப் ஹவுஸ் செயலி பார்வையற்றோருக்கு மிகப்பெரிய வரமானது. பல பார்வையுள்ளவர்கள் இதன் மூலம் பார்வையற்றோர் குறித்து புரிந்துகொண்டனர். பார்வையற்றவர்கள் இதனைப் பொழுதுபோக்காகவும், பயனுள்ளதாகவும், சம்பாதிக்கும் களமாகவும் பயன்படுத்திக்கொண்டனர். சிலர் தங்கள் வாழ்க்கைத் துணையைக் கிளப் ஹவுஸ் மூலம் பெற்றனர்  என்பது கூடுதல் செய்தி..

      *உலகிலேயே முதல்முறையாக முப்பரிமாண (3d) கண்விழி (eyeball) இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவருக்குப் பொருத்தப்பட்டுள்ளது. இது அவருக்குப் பார்வை தர வாய்ப்பில்லை என்றாலும், தன்னம்பிக்கை அளிக்கும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். மேலும், இத்தகைய வசதியின் மூலம் பார்வயற்றோருக்கு வேறு என்னென்ன செய்யமுடியும் என்று ஆராய்ந்துவருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

விளையாட்டு

      *மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட்டை அங்கீகரிப்பதாகவும், இனிமேல் அவர்களுக்கான போட்டிகளும் கண்காணிக்கப்படும் என்றும் இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதற்கென அமைக்கப்பட்ட குழுவில் பார்வையற்றோர் கிரிக்கெட்டுக்கான பிரதிநிதியாகச் செயல்படுகிறார் மஹந்தேஷ் கிவாதாசன்னவார்.

      *சர்வதேச அளவிலான குழு சதுரங்கப் போட்டியில் 8-ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறது இந்தியா. இப்போட்டியில் 60-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொண்டன. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரிமுத்து இப்போட்டியில் இந்திய அணியில் இணைந்து விளையாடினார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

      *இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற கோடைக்கால பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் இதுவரை இல்லாத அளவில் 54 பேர் கலந்துகொண்டனர். இந்த 54 மாற்றுத்திறனாளிகளில் சிம்ரன் சர்மா என்ற ஒருவர் மட்டுமே பார்வை மாற்றுத்திறனாளி என்பது சிந்திக்கத் தக்கது.

இறப்புகள்

      *பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான பத்மராஜன் வயது மூப்பு காரணமாகக் காலமானார்.

      *’ஒவ்வொரு பூக்களுமேபாடலில் தோன்றி நடித்தவரும், ‘முதன்முதலாய்படத்தின் இசையமைப்பாளருமான கோமகன் கொரோனா பெருந்தொற்று காரணமாக மரணமடைந்தார்.

      *பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான, மதுரையைச் சேர்ந்த வரதராஜன் இந்த ஆண்டு கொரோனா தொற்றின் விளைவாக மரணமடைந்தார்.

 

தொடர்புக்கு: balaganesan2285@gmail.com 

3 கருத்துகள்: