ஆளுமை: ஆபிரஹாம் நிமத் (16-10-1918 – 02-10-2013) - X. செலின்மேரி

  பார்வையற்றோர் பயன்படுத்தும் எழுத்து முறையை அகிலத்திற்கு  அறிமுகப் படுத்திய லூயி பிரெயிலின் பிறந்த நாளை சர்வதேச பிரெயில் தினமாக (International Braille Day) அனுசரிக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் அவையின் அறிவிப்பின்படி, இந்த ஆண்டு, முதல் சர்வதேச பிரெயில் தினம் பெரும்பாலான பார்வையற்ற கல்வி நிறுவனங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப் பட்டது. அன்று லூயி பிரெயிலின் வாழ்க்கை வரலாறு, பிரெயில் முறையின் அறிமுகம், பயன்பாடு, வளர்ச்சி, இன்றயனிலை என்ற இந்தத் தினத்தோடு தொடர்புடைய கருத்துக்களை உள்ளடக்கிய புகைப்படங்கள், கதை கவிதை கட்டுரைத் தொகுப்புக்கள், மற்றும் ஒலி ஃஒளி வடிவப் பகிர்வுகள் சமூக வலைதளங்களை அலங்கரித்தன. அதே நாளில் னினைவுகூரப்பட வேண்டிய மரியாதைக்குரிய மனிதர்தான், பார்வையற்றோர் இன்றளவும் பயன்படுத்தி வருகின்ற கனிதக் குறியீடுகள் மற்றும் அறிவியல் சமன்பாடுகளை அறிமுகப் படுத்தியவராகவும், “Louis Braille of Mathematics” என்ரு பரவலாக அரியப் படுபவருமாகிய டாக்டர். ஆபிரஹாம் நிமத் "Abraham Nemeth" அவர்கள்.

ஒருமுறை அமெரிக்கப் பார்வையற்றோர் சங்கத்தின் (American Foundation for the Blind AFD) தலைவரும், முதன்மை அலுவலருமாகிய கார்ல் அகஸ்டோ (Carl Augusto) என்பவர், "Braille was invented by Louis Braille almost two centuries ago. But for almost 150 years, until Abe Nemeth invented this math code, Braille was incomplete because there wasn’t a streamlined way to learn math and science skills.”என்று உறுதியாகக் கூறியிருக்கிறார். ஆம். அவர் கூறியது முற்றிலும் உண்மையே. இன்றைய காலகட்டத்தில் படித்துப் பட்டம் பெறுவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளில் புதிதாகத் தடம் பதிக்கும் அத்தனை இளம் பார்வையற்றோரின் உதடுகளும் மறவாமல் உச்சரிக்க வேண்டிய, ஆனால் காலத்தின் மாற்றத்தால் மறக்கடிக்கப் பட்டுவிட்டப் பெயர்தான் ஆபிரஹாம் நிமத் என்றால் அது மிகையாகாது.

கல்லூரி ஆசிரியர்களால் புறக்கணிக்கப் பட்ட போதும், தன் முதல் மனைவியின் தூண்டுதலின்பேரில் கணிதத்தை முறையாகப் பயின்று, இளம் தலைமுறையினருக்குப் பயிற்றுவித்த பேராஸ்ரீயர், கடின உழைப்பாளி, , பார்வையற்றோருக்கான கனித மற்றும் அறிவியல் குறியீடுகளை நிமத் கோட் "Nemeth Code" என்ற பெயரில் வழங்கிய படைப்பாளி, சிறந்த பியானோ இசைக் கலைஞர், பயணங்களை விரும்புபவர், சமூகச் சேவகற், துடிப்பான சங்கவாதி உள்ளிட்ட பன்முகத் திறமைகளை பெற்றிருன்த ஏப் நிமத் என்று அழைக்கப்பட்ட ஆபிரஹாம் நிமத் தான் இந்தப் பகிர்வின் கதா நாயகன்.

இளமைப் பருவம்
  டாக்டர். ஆபிரஹாம் நிமத் அமெரிக்காவின் நியூ யார்க்கில் உள்ள மேன் ஹாட்டன் (Mannhattan) பகுதியில் ஹங்கேரியிலிருந்து இடம்பெயர்ந்த யூதப் பெற்றோருக்கு 16-10-1918 அன்று முழுப்பார்வையற்ற குழந்தையாகப் பிறந்தார். அவருக்கு Macular degeneration தசைச் சிதைவு  மற்றும் 'Retinitis Pigmentosa' போன்ற குறைபாடுகள் இருப்பதும் பிறவியிலேயெ உறுதி செய்யப்பட்டன. அவரது தாய்மொழி இத்திஷ் (Yiddish). அவர் இளம் வயதில் சுறுசுறுப்பானவராகவும், அதிகமான நினைவாற்றல் பெற்றவராகவும் விளங்கியிருக்கிறார்.

பார்வையற்றோரின் அன்றைய சமூகக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொள்ள விரும்பாத நிமத்தின் பெற்றோர், அவரை மற்ற பார்வையுள்ள குழந்தைகளைப் போலவே வளர்த்தனர். அதாவது, அவரது தந்தை அவரை வாக்கிங் அழைத்துச் செல்லும்போது, எதிரில் படுகின்ற மெயில் பாக்ஸ்களின் raised letters என்று சொல்லப்படுகின்ற தொட்டு உணரக்கூடிய எழுத்துக்களைக் காண்பித்து விளக்குவார். மேலும், நடந்து செல்லும் திசைகள், வழியில் வரும் தடைகள், அவற்றைக் கடந்து செல்லும் முறைகள் என நடைப்பயிற்சி ஆசிரியர்போல ஒவ்வொன்றாகக் கற்றுக்  கொடுத்தார்.

அவரது தாயார், ஆங்கில எழுத்துக்களை முறையாக வரிசையாக வெள்ளைத் தாள்களில் எழுத கற்றுக் கொடுத்தார். மேலும் தொலைவில் உள்ள கடைகளுக்குத் தனியாக நடந்தோ, அல்லது டிரை சைக்கிளில் சென்றோ, குறிப்பிட்ட சில பொருட்களைச் சரியான எண்ணிக்கையிலும், தரத்திலும் வாங்கிவரப் பணித்ததன்மூலம், கவனம், நினைவாற்றல், 'Mobility and Orientation' பயிற்சிகளையும் தொடர்ந்து அளித்திருக்கிறார். அவரது  பெற்றோருடைய இதுபோன்ற வழி நடத்துதல்களே பின்னாளில் இவர் பெற்ற அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

கல்வி
  இவர் தம் தொடக்கக் கல்வியை சாதாரன அரசுப் பள்ளியில் (Public School) படித்தார். பின்னர், யாங்கர்ஸிலுள்ள Yonkers Jewish Guild for the blind பள்ளியில் தொடக்க மற்றும் இடைனிலைக் கல்வியை முடித்தார். அங்கு அவர் பிரெயில் எழுத்துக்களை முற்றிலுமாகப் பிழையின்றி எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார்.

முதலில் கணிதம் அவருக்குச் சற்றுக் கடினமாகவே இருந்தது. பின்னர், அல்ஜீப்ரா போன்ற அரியவகைக் கணக்குகள், சிறப்புக் கணித வடிவங்கள் மற்றும் புதுமையான கற்பித்தல் முறைகளால் ஈர்க்கப்பட்ட நிமத், விடாமுயற்சி மற்றும் கடின உழைப்போடு, தொடர் பயிற்சிகள்மூலம் அவரோடு பயின்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பயிற்றுவிக்கும் அளவுக்குத் திறமை பெற்றவராக வளர்ந்தார்.

கல்லூரிக் காலம்
  கணிதத்தை விரும்பிய அவருக்கு இயற்பியலை முதன்மைப் பாடமாகப் பயிலும் வாய்ப்பே முதலில்  கிடைத்தது. கணிதத்தில் நூற்றுக் கணக்கான குறியீடுகள் இருப்பதால் பார்வையற்றொர் அவற்றைப் புரிந்து படிக்க முறையான குறியீடுகள் பிரெயிலில் இல்லாததாலும், அப்படியே கணிதம் பயின்றாலும், அதற்கான வேலைவாய்ப்புகள் கிடைப்பது அரிது என்பதாலும், கணித ஆர்வத்தை விடுத்து உளவியல் படிக்கலாம் என்று அவரது ஆசிரியர்கள் சொல்லக்கேட்ட நிமத், விருப்பமில்லாமல் கணிதக் கற்றலை நிறுத்திவிட்டு, உளவியலில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார். 1940 இல் ப்ரூக்ளின் கல்லூரியில் Brooklyn college B.A பட்டமும், 1942 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் Columbia University முதுனிலைப் பட்டமும் பெற்றார்.

இதற்கிடையில் இசையில் அவருக்கிருந்த தீராத தாகத்தால், பிரெயில் புத்தகங்களின் இசைக் குறியீடுகளைப் பயன்படுத்தி சுயமாக பியானொ இசைக்கக் கற்றுக் கொண்டார். கல்லூரிக் காலமுதலே சிரந்த பியானோ இசைக் கலைஞராக அறியப்பட்டார்.

கணிதம் பெற்றுத்தந்த பணிவாய்ப்பு
  1944-ஆம் ஆண்டு, ஃப்ளாரன்ஸ் வைஸ்மேன் (Florence Weismann) என்ற குறை பார்வையுடைய பென்மணியை மணந்து கொண்டார். உளவியலில் பணிவாய்ப்பின்றித் தடுமாறிய  நிம, அமெரிக்கப் பார்வையற்றோர் சங்கத்தில் தலையணை உறைகளைத் தைத்தல், கடிதங்களுக்கு உறையிடுதல் உள்ளிட்ட சிறுதொழில்களைச் செய்யும் வேலையில் சேர்ந்தார். அவருக்குள் புதைந்திருந்த கணிதத் திறமையைக் கண்டு வியந்த அவரது மனைவி அவரிடம், “Would you rather be an unemployed psychologist or an unemployed mathematician?” என்ற கேள்வியை எழுப்பியதன்மூலம், அவருக்குள் கணிதம்  பயிலும் உற்சாகத்தை மீண்டும் விதைத்ததோடு, அவரது வளர்ச்சிக்குத் தூண்டுகோளாகவும் இருந்தார். அவரது அறிவுரையைக் கேட்ட நிமத், கொம்பு சீவிவிட்டக் காளையைப்போல , 1946 இல், இரவு நேரங்களில் வெவ்வேறு கல்லூரிகளில் பயிலும் கணித மாணவர்களுக்கும், இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டுத் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்த ராணுவ வீரர்களுக்கும் கணிதப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கும் பணியில் இறங்கினார்.

அதாவது, கணித ஆர்வலர்கள் மற்றும் மானவர்களுக்காக தனி அறை ஒதுக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி கரும்பலகைகள் கொடுக்கப்பட்டிருக்கும். கணித ஆர்வலர்கள் தாமாக முந்வந்து மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பர். அப்போது அங்கு சென்ற நிமத், ஒரு கரும்பலகையில் மற்றவகளைப்போல ஒவ்வொரு வரிசையாக முறையாக எழுதிப் பயிற்றுவித்து வந்தார். அதிக எண்களை நினைவில் கொள்ளும் அவரது அதீத நினைவாற்றலாலும்,  பார்வையுள்ளோர் போன்றே எழுதும் முறையாலும், எந்தவகைக் கணிதமாக இருந்தாலும், அதை சரளமாகக் கற்பிக்கும் முறைகளாலும் பலமுறை அந்த அறையையேக் கட்டிப் போட்டிருக்கிறார் அந்த வருங்காலக் கணிதப் பேராசிரியர்.

ஒருமுறை அவர் வகுப்பெடுப்பதை  ப்ரூக்லின்   கல்லூரியின் Chairman முற்றிலுமாகக் கவனித்து விட்டார். முழுமையாகக் கவனிக்கப்பட்டதை நிமத் அறியவில்லை. 2 நாட்களுக்குப் பிறகு ஒரு தந்தி நிமத்தின் வீடுதேடி வந்தது. அதில், டெற்றாய்ட் மெர்சி (Detroit Mercy) பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியர் உடல் நலமற்று இருப்பதாகவும், அவரது இடத்திற்கு நிமத் தேர்வாகியிருப்பதாகவும் குறிப்பிடப் பட்டிருந்தது. அதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்த நிமத், தன் மனைவியை அழைத்துக்கொண்டு, டெற்றாய்ட் மெர்சிக்குச் சென்று அப்பணியை ஏற்றுக் கொண்டதோடு, அங்கெயே தங்கி விட்டார். 1955 முதல் 1985 வரை 30 ஆண்டுகள் கணிதப் பேராசிரியராக அரும்பணியாற்றி இருக்கிறார். இவர் பணிபுரிந்த காலங்களிலும் கணிதப் பாடத்தைத் தொடர்ந்து படித்து வென்ஸ்டேட் பல்கலைக்கழகத்திடமிருந்து (Wein State University) Ph.D., பட்டமும் பெற்றிருக்கிறார். 1960களில் கணினி அறிவியல் பாடத்தில் பட்டப் படிப்பை முடித்ததோடு, அவர் பணிபுரிந்த பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பிரிவைத் தொடக்கி வைத்துப் பெருமைக்குரிய தலைவராக மிளிர்ந்திருக்கிறார்.

ஒருமுறை, அவர் கரும்பலகையில் வரிசையாகப் பிழையின்றி எழுதும் முறை குறித்து ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் தந்த பதில் என்ன தெரியுமா? முதல்வரியை தன் தலைக்கு மேலிருந்து எழுதத் தொடன்குவதாகவும், இரண்டாவது வரியை தன் கண்களுக்கு நேராக அமையும்படி எழுதுவதாகவும், 3 மற்றும் 4 வரிகளை முறையே தன் தாடை மற்றும் மார்புப் பகுதிகளை மையமாகக் கொண்டு எழுதத் தொடங்குவதாகவும் குறிப்பிடுகிறார். சாதாரண எழுத்துக்களைக் கரும்பலகைகளில் எழுதத் துடிக்கும் என்போன்ற முழுப் பார்வையற்ற ஆசிரிய அன்பர்களுக்கு இக்குறிப்பு  பேருதவியாய் அமையும் என நம்புகிறேன்.

நிமத் கோட் அறிமுகம்
  நிமத் கோட் என்பது, பார்வையற்றோர் பயன்படுத்தும் 63 வடிவங்களை உள்ளடக்கிய ஆறுபுள்ளி எழுத்து முறையில், கணித மற்றும் அறிவியல் பயன்பாட்டிற்கென, உருவாக்கப்பட்ட பிரெயில் குறியீடுகளின் தொகுப்பாகும். 1946-47களில் கணிதக் கற்பித்தலில் மிகுந்த ஈடுபாடு காட்டிய நிமத், சில கடினமான அல்ஜீப்ரா கணக்குகளைப் புரிந்துகொள்ள தனக்கென ஒரு குறியீட்டு முறையினை வகுத்து வைத்திருந்தார். அப்போது, கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பார்வையற்ற இயற்பியல் ஆசிரியரும்,  அவரது நன்பருமான (Clifford Wicher) டாக்டர். க்ளிஃபோர்டு விச்சர் என்பவர் நிமத்திடம், பார்வையற்றவர்கள் பயன்பாட்டிர்கென்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டக் கணிதக் குறியீடுகள் எவையேனும் இருக்கின்றனவா என்று வினவினார். தனிக் குறியீடுகள் இல்லை என்றும், சுய பயன்பாட்டிற்காக சில குறியீடுகளை உருவாக்கியிருப்பதாகவும் கூரிய நிமத், உடனடியாக விச்சருக்குப் பயிற்றுவிக்கத் தொடங்கினார். அவற்றைக் கேட்டு வியந்த விச்சர், 30 நிமிடங்களில் முழுவதுமாகக் கற்றுக் கொண்டார். அக்குறியீடுகள் புரிந்துகொள்ள எலிதாகவும், நடைமுறைக்கு உகந்ததாகவும் இருப்பதாகக் கூறிய விச்சர், நிமத்தை வெகுவாகப் பாராட்டினார்.

1950-இல் Joind Uniform Type கமிட்டியில் (அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் பிரெயில்சார் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் அமைப்பு) உறுப்பினராகச் சேர்ந்த விச்சர், நிமத்தின் குறியீடுகள் குறித்த விளக்கங்களைக் கொடுத்தார். 1951இல் நிமத்தை அழைத்துப் பரிசோதித்தறிந் அந்த நிறுவனம், 1952இல் அக்குறியீடுகளுக்கான முறையான அங்கிகாரம் வழங்கியதோடு, American Printing House for the blind (APH) மூலம் நிமத் கோட் என்ரு தலைப்பிட்டு அக்குறியீடுகளை வெளியிட்டது.

பின்னர், அக்குறியீடுகள், கனடா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் பரவத் தொடங்கியது. நிமத் பயணங்களை விரும்புபவர்; Guide Dogs பயன்படுத்துவதை விரும்பாதவர். ஊன்டுகோள்கள் பரிட்சயமும் இல்லை அவருக்கு. எனினும் நிமத் கோட் குறித்த விளக்கம் பெருவதற்காக எங்கு அழைக்கப் பட்டாலும், தன் 90-களிலும் கூட, உடனடியாகச் சென்றுவிடும் பழக்கம் உடையவர்.

1956, 1965, 1972 என 3 முறை திருத்தப்பட்ட வடிவங்கள் வெளிவந்ததாகச் சொல்லப் பட்டாலும், எவ்வித மாற்றமுமின்றித் தொடர்ந்து நிலைத்திருக்கிறது நிமத் குறியீடு.

பிரெயில் வளர்ச்சிப் பணிகள்
  ஆபிரஹாம் நிமத்தின் ஓய்வுக் காலத்தை “Retirement for Dr. Nemeth was not a time to relax but rather a time to pursue other scholarly and advocacy interests" என ஊடகங்கள் வர்ணித்தன. காரணம், கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற நிமத், AFD-யில் சேர்ந்து பார்வையற்றோருக்கான சமூகப் பணியில் இளமைத் துடிப்போடு இறங்கிவிட்டார். பிரெயில் பைபிள்களை வடிவமைப்பது, பிரெயில் புத்தகங்களின் எண்ணிக்கை பெருக வகை செய்வது, சுயமாக சிறுகதைகளை எழுதுவது என பிரெயில் வளர்ச்சிக்காக பல பணிகளை ஆற்றியுள்ளார். Talking Calculator உருவாக்கி பார்வையற்றோரிடையே கணிதம் குறித்த புரிதலையும், அவற்றைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். பிரெயிலில் ஏற்கனவே பயன்பாட்டிலிருந்த இலக்கியம் சார்ந்த எழுத்துக்களுடன் தாம் வகுத்த கணித மற்றும் அறிவியல் குறியீடுகளை ஒருங்கிணைத்து, "Nemeth Uniform Braille System" (NUBS) எனப் பெயரிட்டு அழைத்தார். இறை காரியங்களில் தீவிரம் காட்டிய நிமத், Jewish Braille Institute என்ற நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினார்.  பைபிள்கள் மற்றும் சில மதம்சார்ப் புத்தகங்களை ஆங்கில மற்றும் ஹீப்ரூ மொழிகளில் வெளியிட அரும்பாடுபட்டு வெற்றியும் கண்டார்.

பதவிகள் மற்றும் விருதுகள்
  1985-இல் ஓய்வுபெற்ற நிமத், National Federation of the Blind (NFB) நிறுவனத்தின் நிரந்தர உறுப்பினராகி, பார்வையற்றோர் மற்றும் பிரெயில்சார் நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். 1986 முதல் 2011 வரை நடைபெற்ற பார்வையற்றோர் சார்ந்த அனைத்து மாநாடுகளிலும் கலந்து கொண்டார். மாநாடுகள் அவரை பெரும் பேச்சாளராக உலகுக்கு அறிமுகம் செய்தன.

1991 முதல் 1993 வரை The Michigan Commission for the Blind அமைப்பின் Chairman பொறுப்பேற்றார். அப்போது, பார்வையற்ற குழந்தைகள் அனைவருக்குமான கட்டாய பிரெயில் பயிற்றுவித்தலை உறுதிசெய்ய, Braille Bill ஒன்றை அறிவித்து அமல் படுத்தினார். அவரைத் தேடி வந்த அத்தனை அரசியல் வாய்ப்புகளையும் நிராகரித்தார்.

1999-இல் AFD இவருக்கு 'The Migel Medal' விருதை வழங்கியது. 2001-இல் 'The Creative Use of Braille' என்ற விருது APH மூலம் வழங்கப்பட்டது. 2006-இல் லூயி பிரெயில் விருதை NFB நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொண்டார் நிமத். மேலும், The Division of Visual Impairments of the Council for Exceptional Children அமைப்பின் 'The Exemplary Advocate Award' உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இவரைத் தேடிவந்து பெருமைப் படுத்தின.

இறுதிக் காலம்
  இவரது முதல் மனைவி ஃப்ளாரன்ஸ் வைஸ்மன் 1970-இல் இறந்துவிட, ஒராண்டிற்குப்பின், இரண்டாவதாக எட்னா லாசர் Edna Lazar என்பவரை மணந்தார். அவரும் 2001-இல் உடல் நலக் குறைவால் உயிரிழந்து விட்டார். அவர்களுக்கு 3 குழந்தைகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர் இறுதிக் காலங்களை பெரும்பாலும் AFD-இல் கழித்தார். 2006-இல் NFB மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்த சமயத்தில்  திடீரென்று, Myocardial Infarction ஏற்பட்டுவிட்டது. விரைவில் அதிலிருந்து மீண்டு, மாநாட்டில் சிறந்த பங்களிப்பைச் செலுத்தினார் நிமத்.

அவரது 90-களிலும் ஆக்டிவாக இருந்திருக்கிறார். பியானோ இசைக்கலைஞராகப் பலரை மகிழ்வித்திருக்கிறார்; நகைச்சுவையாகப் பேசிச் சிரிக்க வைத்திருக்கிறார்; ஆங்கில வார்த்தை விளையாட்டுக்களை நடத்தும் பழக்கத்தைப் பெற்றிருந்தார்; பார்வையற்றோருக்காகத் தொடர்ந்து பாடுபட்டிருக்கிறார்; கணித மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு இறுதிவரைத் தம் பங்களிப்பை நல்கியிருக்கிறார்; எப்போது எங்கு எதற்காக அழைக்கப் பட்டாலும் மறுப்புத் தெரிவிக்காமல் செல்பவராகவும், ஓரிடத்திற்கு ஒருமுறை சென்றிருந்தால்கூட அந்த இடத்தின் அமைப்பு மற்றும் செல்லும் வழியை எளிதில் நினைவில் கொள்பவராகவும், தேவை ஏற்படின், எவருக்கும் வழிசொல்லும் சிறந்த வழிகாட்டியாகவும் வாழ்ந்திருக்கிறார். இப்படியாக பிரெயில் புத்தகங்கள், விருதுகள் மற்றும் பசுமையான நினைவுகளுடன் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் தம் நாட்களைக் கழித்து வந்த நிமத். 16-10-2013 அன்று, Michigan South field என்ற இடத்தில் உள்ள நிமத் அப்பார்ட்மெண்ட் என்ற தம் சொந்த வீட்டிலேயே திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இறைவனடி சேர்ந்து விட்டார். அவரது இறப்பு அமெரிக்காவுக்கே பேரிழப்பாக அமைந்தது. பார்வையற்ற சமூகம், கிடைத்தற்கரிய புதையலை இழந்து விட்டதாகக் கண்ணீர் வடித்தது.

நான் 9-ஆம் வகுப்புப் படிக்கும்போதுதான், கணிதக் குறியீடுகள் மற்றும் அறிவியல் சமன்பாடுகளை உள்ளடக்கிய பிரெயில் புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  அந்த வயதில், அப்பாடங்கள்மீது எனக்கிருந்த ஈர்ப்பும், ஈடுபாடும் விரைவாகக் கற்றுக்கொள்ள உதவியதோடு, என் வகுப்புத் தோழிகளுக்கும் பயிற்றுவிக்கும் புதியதோர் உத்வேகத்தையும் தந்தது. அப்போது நான் கற்ற குறியீடுகளே இன்றுவரை எனக்குக் கைகொடுத்து வருகின்றன. IAB பிரெயில் அச்சகத்தில் கணித மற்றும் கணக்குப் பதிவியல் புத்தகங்களைச் சரிபார்த்து அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தும் பணியைச் சிறிது காலம் செய்திருக்கிறேன். அப்போது, பார்வையற்ற சமூகத்திற்கும், பிரெயில் எழுத்துக்களின் நிலைப்பாட்டிற்கும் என்னுடைய சிறிய பங்களிப்பைச் செலுத்திய மன நிறைவு ஏற்பட்டதை உணர்ந்து மகிழ்ந்திருக்கிறேன்.

தொழில்நுட்ப மோகத்தில் மயங்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறையினர், பிரெயில் தெரியாது என்று சொல்வதையும், பொது வெளியில் பிரெயில் புத்தகங்களைப் படிப்பதைத் தவிர்ப்பதையும், பிரெயில் புத்தகங்களைச் சுமையாகக் கருதுவதையும் வழக்கமாகக் கொண்டிருப்பது மிகுந்த மன வேதனையைத் தருகிறது. அதற்காக, தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவறென்று சொல்லவில்லை. பிரெயில் முறையின் அவசியம் உணரப்பட வேண்டும் என்பதே என் கருத்து.

இனி வரும் காலங்களில், அனைத்துப் பார்வையற்ற குழந்தைகளும் சிறப்புப் பள்ளிகலில் அனுமதிக்கப்பட்டு முறையாக பிரெயில் கற்பிக்கப் படுவதும், அனைத்துப் பாடங்களுக்குரிய பிரெயில் புத்தகங்கள் அனைவருக்கும், தட்டுப்பாடின்றி வழங்கப் படுவதும், சிரமமாகக் கருதப்பட்டுத் தவிர்க்கப் படுகின்ற கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம், மாணவர்களுக்கு  எளிதில். புரிந்துகொள்ளும் வகையில் கற்பிக்கப்படுவதும், கனிதம் மற்றும் அறிவியல் பயின்றவர்களின் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் வழங்கப் படுவதோடு, வலுவான எதிர்காலத்தை அமைத்துத் தருவதும் உறுதிப்படுத்தப் படும்போது, ஒன்றல்ல இரண்டல்ல, ஆயிரம் நிமத்கள் அணிதிரண்டு வந்து நம் சரித்திரத்தில் இடம் பிடிப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை!
***

தொடர்புக்கு: celinmaryx@gmail.com

2 கருத்துகள்:

  1. இது போன்ற கட்டுரைகள் தொடர்ச்சியாக வரவேண்டும். நம் மொழியிலேயே இவரைப்பற்றி படிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இக்கட்டுரை பார்வையற்றோர் சமூகத்திற்கும், தமிழ் இணைய உலகிற்கும் கிடைத்த சிறந்த கொடை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பாராட்டுக்கு நன்றி. தொடர்ந்து எழுத முயல்கிறேன்.

      நீக்கு