தொழில்நுட்பம்: பிரெயில் மீ - ரா. பாலகணேசன்

  நாம் நம் பாடப் புத்தகங்களை எல்லாம் பிரெயிலில்தான் படித்திருக்கிறோம். சிறு வயதில் கவிதைகளை, கட்டுரைகளை பிரெயிலில்தான் எழுதியிருக்கிறோம். இப்போது ஏன் முடியவில்லை? ஏன் கணினியின் உதவியை நாடுகிறோம்?

graphic பிரெயில் மீ சாதனம்
பிரெயில் மீ சாதனம்
நம் அறிவு தாகத்தின் வேகத்திற்கு பிரெயிலால் ஈடு கொடுக்க முடியவில்லை. கணினி நம் தாகத்தைத் தீர்த்துவைக்கத் தயாராக இருக்கிறது. இதுதானே காரணம்.

ஆனாலும் பிரெயிலில் படிக்கும் சுகமே தனியானது என நீங்கள் கருதுகிறீர்களா? பார்வையுள்ளவர்கள் புத்தகத்திலும் வரி வடிவில் தான் படிக்கிறார்கள்; கணினியிலும் வரி வடிவில்தான் படிக்கிறார்கள். நாம் அப்படி இல்லை. பிரெயில் புத்தகங்களில் வரி வடிவில் படிக்கிறோம். மற்ற எல்லா விதங்களிலும் ஒலி வடிவில்தான் படிக்கிறோம். இந்தக் கருத்தை நீங்கள் புரிந்துவைத்திருக்கிறீர்களா? கணினியில் நாமும் வரி வடிவில், பிரெயிலில் படிக்க வாய்ப்பிருந்தால் நீங்கள் படிக்கத் தயாராக இருக்கிறீர்களா? உங்களுக்காகத்தான் வந்திருக்கிறது பிரெயில் மீ (Braille me).

மும்பை IIT-யின் முன்னாள் மாணவர்களான ஸ்யாம் ஷா, சுரபி ஸ்ரீவட்ஸவா ஆகியோரால் உருவாக்கப்பட்ட நிறுவனம் Innovision. இந்நிறுவனம் உருவாக்கியுள்ள புதுப்பிக்கத்தக்க பிரெயில் திரை தான் (Refreshable Braille Display) பிரெயில் மீ. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரே பிரெயில் திரை இதுதான்.

இந்தக் கருவியைக் கொண்டு நீங்கள் பிரெயிலில் வாசிக்கலாம்; எழுதலாம்; இருக்கும் தகவல்களைத் திருத்தலாம். மேலும், பார்வையுள்ளோர் படிக்கும் எழுத்துகளை பிரெயிலுக்கு மாற்றலாம்; பிரெயில் எழுத்துகளை பார்வையுளோர் படிக்கும் எழுத்தாகவும் மாற்றலாம். ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, மலயாளம் ஆகிய மொழிகளில் இது குறித்த சோதனைகள் நிறைவு பெற்றுவிட்டன. தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகளையும் இக்கருவிக்குள் கொண்டுவர முயற்சிகள் நடந்துவருவதாக இன்னோவிஷன் தெரிவிக்கிறது. பிரபல பார்வையற்றோருக்கான நிறுவனங்களான XRVC, NAB, NFB, ஸக்ஷம், enable India, சமர்த்தனம் முதலிய நிறுவனங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இக்கருவியில் பிரெயில் தட்டச்சுக் கருவியைப் போலவே பொத்தான்கள் இருக்கும். ஆம். 6 புள்ளிகளுக்கான பொத்தான்கள், space, backspace, enter ஆகிய பொத்தான்கள் இருக்கும். அவற்றைப் பயன்படுத்தி நாம் இக்கருவியை இயக்கலாம்.

பிரெயில் மீ-யின் சில சிறப்பு அம்சங்கள்
  • இது எளிதில் எடுத்துச் செல்லும் அளவு எடை குறைவானது; சிறிய அளவிலானது.
  • புளூடூத் வழியாக ஆண்டிராய்டு பேசியிலும், USB வழியாக கணினிகளிலும் இக்கருவியை இணைக்கலாம். இதனால் இக்கருவியை ஆண்டிராய்டின் talkback, ஆப்பிள் நிறுவனத்தின் Voice Over, விண்டோஸின் NVDA ஆகிய திரைவாசிப்பு மென்பொருள்களின் (Screen Reading Software) துணை கொண்டு இயக்க முடியும்.
  • இக்கருவியைக் கொண்டே நாம் ஆண்டிராய்டு பேசிகளை இயக்க முடியும். அதற்கு வசதியாக பல குறுக்கு வழிகள் (Shortcut Keys) இக்கருவியில் உருவாக்கித் தரப்பட்டுள்ளன.
  • SD கார்டு பொருத்தும் வசதியும் உண்டு. இதனால் இக்கருவியில் பிரெயில் கோப்புகளை நாம் சேமித்து வைக்க முடியும்.
  • பார்வையுள்ளோர் படிக்கும் வகையிலான எழுத்துகளில் இருக்கும் மின் நூல்களை பிரெயிலில் மாற்றி படிக்கலாம். அது போலவே, பிரெயிலில் இருப்பவற்றை பார்வையுளோர் படிக்கும் வகையிலும் மாற்றி அமைக்கலாம். இதற்கென ‘brailleme’ என்ற ஆண்டிராய்டு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயலியைத் திறந்து, பிரெயில் மீ கருவியை ஆண்டிராய்டு பேசியோடு இணைத்துவிட்டால், அலைபேசி LCD திரையாக மாறி பிரெயில் மீயில் உள்ள எழுத்துகளை பார்வையுள்ளோர்க்கான எழுத்துகளாக மாற்றித் தரும்.
  • 15 மணி நேரம் தாங்கக்கூடிய பேட்டரி இதில் உள்ளது. அது 1.5 மணி நேரத்தில் முழுமையான சார்ஜ் பெறக்கூடியது.


வாங்குவது எப்படி?
  தற்போதைக்கு இக்கருவியை கண்டுபிடிப்பாளர்களின் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தே வாங்க முடியும். கருவி குறித்த விளக்கங்களையும், பயிற்சிகளையும், விற்பனைக்குப் பிந்தைய ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாக இன்னோவிஷன் தெரிவிக்கிறது.

இக்கருவியின் விலை ரூ. 25,000 + 5% ஜிஎஸ்டி. இது இக்கருவியை ஒத்த பிற கருவிகளைக் காட்டிலும் 10 மடங்கு விலை குறைவானது என்கிறார்கள் இக்கருவியின் தயாரிப்பாளர்கள். ஆயினும், மொத்தமாக பலர் வாங்கினால் விலை குறைப்பு குறித்து நிறுவனம் பரிசீலிக்கும் என்றும் கூறுகிறார்கள். அப்படி வாங்க விரும்பும் அமைப்புகள் bd@innovisiontech.co என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரே பிரெயில் திரை இது. அதோடு, இந்திய மொழிகளை உள்ளடக்கிய ஒரே பிரெயில் திரை இதுதான். பார்வை மாற்றுத்திறனாளிகளின் அடையாளமான பிரெயில் முறையை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு சேர்க்கும் இக்கருவிக்கு ஆதரவு தாருங்கள்.

பார்வை மாற்றுத்திறனாளிகளின் தேவை அறிந்து சரியான நேரத்தில் மிக முக்கியமான கருவியை வடிவமைத்துள்ள இன்னோவிஷனுக்கு வாழ்த்துகள். கருவிக்கான விலை குறைப்பு இன்னும் அவசியமாகிறது. மத்திய, மாநில அரசுகள் இதற்கு மானியம் வழங்கலாம். குறைந்தபட்சம் GST வரியிலிருந்தாவது இக்கருவிக்கு விலக்கு அளிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு: +91-8291406811
மின்னஞ்சல்: info@innovisiontech.co
இணையம்: innovisiontech.co
யூடியூப் பக்கம்: https://www.youtube.com/watch?v=Fz1cUZcf-1A
***

தொடர்புக்கு: balaganesan2285@gmaill.com

1 கருத்து:

  1. காலத்திற்கேற்ப பிரெயிலும் தன்னை புதுப்பித்துகொள்வதில் மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு