கவிதை: உப்பு போட்டு தான் திங்கிறோம்! - பார்வையற்றவன்

போராளி முகிலனின் புகைப்படம்
போராளி முகிலன்

உப்பு போட்டு தான் திங்கிறோம்,
சோத்துல உப்பு போட்டு தான் திங்கிறோம்.

எங்களுக்கு,
சூடு இருக்கு; சொரண இருக்கு;
மானம் இருக்கு; மரியாத இருக்கு.
திருமணத்துக்கு பத்திரிக்கை கொடுக்காத பங்காளி வீட்டுல
பச்சத் தண்ணிக் கூட குடிக்க மாட்டோம்!

இது வீரம் வெளஞ்ச மண்ணுங்க;
இங்கே நாங்களெல்லாம் டானுங்க;
எங்க புரோஃபைல போயி பாருங்க!

கால மிதிச்சவன் சங்க,
கடுங்கோபம் கொண்டு அறுப்போம்!
ஹைட்ரோ கார்பனுக்காய் எங்க நெலத்த எடுத்தாலும்,
எட்டுவழிச் சாலைக்காய் எங்க வீட்ட இடிச்சாலும்,
இந்த அரசு எதுவுமே சொல்லாம எங்க தலைய அறுத்தாலும்,
வேற யாராச்சும் போராடனும் என்றுதான் நினைப்போம்;
பலன்களை அனுபவிப்பது மட்டுமே எங்க வழக்கம்!

போராட்டம் எல்லாம் வெட்டிப்பய பொழப்பு;
இப்படி நினைக்கும் கூட்டத்துல
முகிலன் வந்து பிறந்ததுதான் தப்பு!
பாதுகாப்பான நாட்டுல
பல நாளா ஒருத்தர காணல;

போராடுனாரு முகிலன்,
இந்த மண்ணையும் மக்களையும் காக்க!
ஒரு பயலுக்கும் தோணலையே,
முகிலன் எங்கேனு கேட்க?

ஆனாலும் எங்களுக்கு,
சூடு இருக்கு; சொரண இருக்கு;
மானம் இருக்கு; மரியாத இருக்கு.
ஆமாங்க,
நாங்க உப்பு போட்டு தான் திங்கிறோம்,
சோத்துல உப்பு போட்டு தான் திங்கிறோம்!(?)
***

தொடர்புக்கு: parvaiyatravan@gmail.com

6 கருத்துகள்: