சினிமா: காஞ்சனா 3: அருவருப்புகளின் அணிவகுப்பு!

முனைவர் கு. முருகானந்தன்
graphic காஞ்சனா 3 படத்தின் போஸ்டர்
ராகவா லாரன்ஸ் திரைக்கதை வசனம் மற்றும் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பாக வெளியாகியிருக்கிறது காஞ்சனா III திரைப்படம். முனி திரைப்பட வரிசையில் காஞ்சனா படங்களை இணைத்துள்ளார் லாரன்ஸ். அதாவது மெர்சலூட்டும் திகில் பேய் படங்கலாம்! நல்லவர்கள், குறிப்பாக பாலியல் வல்லுனறவுக்கு இரையாகி இறந்துபோன பெண்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மனிதர்கள் தமது இறப்புக்குப் பின்னர் பேயாக உருவெடுத்து தமது சாவுக்குப் பழிதீர்ப்பது கோலிவூட், ஹாலிவூட் மட்டுமல்ல, நமது கிராமங்களிலும் அதரப் பழசான டெம்ப்ளேட் தான். அந்த வரிசையில் லாரன்ஸ் சில புதிய விளிம்புநிலை மனிதர்களை பேயாக அவதாரமெடுக்கச் செய்து அழகு பார்த்துள்ளார் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். முதல் காஞ்சனாவில் ஏமாற்றிக் கொலை செய்யப்பட்ட திருநங்கை பேயாகி பின்னர் அந்த “டவுசர் ராகவன்” மூலம் பழி வாங்குகிறார் என்றாள், லேட்டஸ்ட் மூன்றாம் பாகத்தில் “குப்பத்து மக்களின் காவலன், மாற்றுத்திறனாளிகளின் மீட்பாளன், எல்லோருக்கும் அண்ணன் காளியும், அவனது கோ-ப்ராட்டப் காதலி ரோசியும் பேயாகி அதே டவுசர் ராகவனை ஆட்கொண்டு வில்லன்களை பழிவாங்குகிறார்கள். வாருங்கள், முதலில் கதைச்சுருக்கத்தைப் பார்த்துவிடுவோம்!படம் நகரும் போக்கில் கதைசொல்ல எனக்குத் தெம்பு வரவில்லை.
மொத்தமாக திரைக்கதையைக் கூட்டி அள்ளி என்னுடய சொந்த டைமிங் ரைமிங்கில் புரிந்ததைச் சொல்கிறேன்! கோயம்புத்தூருக்கும் சென்னைக்கும் நடுவில், அனேகமாக கோவைக்கு அருகில் உள்ள ஒரு குப்பம். அந்தக் குப்பத்திற்கு அருகில் ஆஸ்ரமம் நடத்தி வருகிறார் அன்னப்பூர்ணா அம்மா. மேற்படி ஆஸ்ரமத்தில் மேற்படி அம்மாவின் மகன் காளியும், வெளிநாட்டில் பிறந்த அல்லது ஆங்க்லோ-இந்தியன் வகையைச் சார்ந்த வெள்ளைக்காரச் சிறுமியும், மேலும் சில  சிறுவர்களும் வளர்க்கப்படுகின்றனர். காளி உட்பட சிறுவர்கள் பசியில் வாடிக்கொண்டிருக்கும் ஒரு முன்னிரவில், காளியிடம் கடவுள் மீது நம்பிக்கைவைக்குமாறு போதிக்கிறார் அம்மா. சரியாக அதே நேரத்தில் ஆஸ்ரமத்தின் கதவு தட்டப்படுகிறது. மீதமான திருமணச் சாப்பாடு வழங்கிச் செல்கின்றனர் சிலர். “நீ சாப்பிடு, மிச்ச சாப்பாட்டை பக்கத்தில் இருக்கும் குப்பத்து ஜனங்களுக்கு கொடுத்திடலாம்” என்று அம்மா சொல்ல, “இல்ல, குப்பத்து மக்களுக்கு கொடுப்போம், மிச்சம் இருந்தால் நாம சாப்பிடலாம்” என்று காளி புல்லரிக்க வைக்க, புளகாங்கிதம் அடைகிறா அம்மா. அப்போது தனியாக சாப்பாடு ஒதுக்குகிறாள் அந்த வெள்ளைக்காரச் சிறுமி, “FOR KALI!” என்றும் சொல்கிறாள். இந்த காட்சி அம்மா,, மகன், அவனது வூட்பீ மூன்றுபெரும் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கான சேம்பில்! அந்த அம்மா திடீரென இறந்துவிட, ஆஸ்ரமத்தை தொடர்ந்து நடத்தும் பொறுப்பு காளிக்கும், காளிக்கு சாப்பாடு எடுத்துவைப்பது உட்பட அவனை நிர்வாகிக்கும் பொறுப்பு அந்தச் சிறுமிக்கும் வந்துசேருகின்றன.
அமைதியாக ஆஸ்ரமம் நடத்திவரும் காளியின் வாழ்க்கைப் பயணம் திடீரென இடைமறிக்கப்படுகிறது. கோயம்புத்தூர் அமைச்சர் ஒருவரின் தம்பி காளியைச் சந்தித்து தான் இருபது கோடி பணம் நன்கொடையாகக் கொடுப்பதாகவும், ஆனால் அதற்கு கைமாறாக நூறு கோடி கருப்புப்பணத்தை காளி தனது அறக்கட்டளை மூலம் வெள்ளைப் பணமாக மாற்றித் தரவேண்டுமென்றும் டீல் பேசுகிறார். மேலும் காளியின் அறக்கட்டளையின் மூலம் மட்டும்தான் பணத்தை மாற்ற முடியும் என்றும் கண்வின்ஸ் செய்து பார்க்கிறார். இந்த டீளுக்கு காளி நோ-டீல் சொல்லிவிட, அவன் தனது காதலி ரோசியுடன் பைக்கில் செல்லும்போது வில்லனின் அடியாட்கள் விபத்து ஏற்படுத்துகின்றனர். விபத்தில் ரோசி உடனே இறந்துவிட,, காளியின் ஆஸ்ரமம் எரிந்து சாம்பலாகும் காட்சியைக் காண முடியாமல் காளியும் இறக்கிறான்.
இப்படி இறந்துபோகும் ரோசியும் காளியும் பேயாக உருக்கொண்டு ஒரு பணக்கார இளம்பெண்ணின் உடலுக்குள் புகுந்துகொள்கின்றனர். ரஷியாவிலிருந்து வரவலைக்கப்படும் பேயோட்டுவதில் உலகப் பிரசித்திபெற்ற வல்லுனர்கள் வந்து அந்த இரண்டு பேய்களையும் ஒரு குடுவைக்குள் அடைத்து காட்டில் ஒரு மரத்தில் ஆணியடித்துவிட்டுச் செல்கின்றனர். சென்னையிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் ராகவனின் குடும்பம் அந்த குறிப்பிட்ட மரத்தில் அடிக்கப்பட்ட ஆணியையும் குடுவையையும் தற்செயலாக எடுத்துச்செல்ல, ராகவன் அந்தக் குடுவையை முதலில் திறக்க, அந்த இரண்டு பேரும், அதாவது காளி ரோசி இருவரின் பேய்களும் ராகவனின் உடலுக்குள் புகுந்துகொள்கின்றன. வீட்டுக்குள் பேய் இருப்பதை அறிந்து காளி கோயில் சாமியாரை வைத்து அதனை விரட்ட முயல்கின்றனர். ஆனால், அந்தப் பேய்களின் ஹிஸ்டரியை அதாவது வரலாற்றை, அறிந்துகொள்ளும் சாமியார் அதனை விரட்ட மனமில்லாமல் விட்டுவிட்டுச் செல்கிறார். பின்னர் அந்தப் பேய்களின் கதையை சாமியாரிடமிருந்து அறியும் ராகவனின் வீட்டார் அந்தப் பேய்களை தம் கொலைக்குப் பழிதீர்க்கச் சொல்லி உசுப்பிவிட, நேராக வில்லனை அழிக்கச் செல்கிறான் ராகவன் உடலுக்குள் இருக்கும் பேய் காளி பல்வேறு தடைகளைத் தாண்டி எப்படி  “பேயா வேலைசெய்யனும் குமாரு’ என்று வில்லனைப் பழிவாங்குகிறான் என்பதுதான் படம்.
இந்தப் படத்தில் பேய், குறிப்பாக ரோசியின் பேய், பார்ப்பதற்கு மிகவும் அருவருப்பாக இருப்பதாக பார்த்தவர்கள் கூறுகின்றனர். திகிலூட்டும், பயத்தையும் அருவருப்பையும் ஒருங்கே மனதில் உருவாக்கும் பின்னணி இசையும் பேயை பயங்கரப் பேயாக கட்டமைப்பதற்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நமக்கோ அந்தப் பேயைவிட அருவருப்பான பல கூறுகள் படத்தை வியாபித்திருப்பதாகவே படுகிறது!
அவற்றுள் முதல் அருவருப்பு முறைப்பெண்கள் என்ற பெயரில் பிக் பாஸ் புகழ் ஓவியா உள்ளிட்ட மூன்று ஹீரோயின்களை வைத்துப் லாரன்ஸ் பண்ணியிருக்கும்  காமெடிகள். உச்சாப் போகக்கூட துணைக்கு ஆள் தேடும் ராகவன் எப்போது வருவான், அவனை யார் அதிகம் கவர்ந்து தன்னை மட்டுமே அவன் லவ் பண்ணுகிறேன் என்று சொல்லவைக்க மூன்று முறைப்பெண்கள் கோயம்புத்தூரில் காத்திருக்கிறார்களாம், அவர்கள் இருப்பதால்தான் ராகவன் அங்கே போகிறானாம்! ராகவன் கனவில் முறைப்பெண்கள் வருவதுபோல் அமைத்திருந்தால் கூட கொஞ்சம் பார்ப்பதற்கு லாஜிக்கலாக இருந்திருக்கும். ஏதோ அவர்கள் மூன்று பேறும் ராகவனை காதலித்து கூடி மகிழ்ந்திருக்கவே இந்தப் பூவுலகில் பிறப்பெடுத்து வந்ததுபோல தனது ஹீரோ இமேஜ் மோகத்தின் உச்சத்தில் சித்தரித்திருக்கிறார் லாரன்ஸ். அந்தப் பெண்கள் மூன்றுபேரும் அந்த ராகவனை மாற்றிமாற்றி லவ் பண்ணுமாறு மேக்கப் போட்டுக்கொண்டு வந்து மயக்க முயல்வதும், எல்லோரும் சேர்ந்து தமது அழகிற்கு அவனை வசியப்படுத்த குடும்பமே வேடிக்கை பார்க்க ஆடுவதும், அவர்களிடம் கமிட்டாக ராகவன் பண்ணும் அலப்பறைகளும் உண்மையாகவே ரொம்ப ஓவர்! கதையோட்டத்தில் எந்தவிதமான முக்கியத்துவமும் தரப்படாத இந்த மூன்றுபேரும் வெறும் ஆடல் அழகிகளாக மட்டுமே வந்து போகின்றனர். அவர்கள் தம் வாழ்நாளில் இளம் ஆண்கள் யாரையும் சந்தித்திராத, ஓர் ஆணின் காதலுக்கு அல்லது கூடலுக்கு அலைபவர்கள் போல காட்டப்படுகின்றனர். இந்தச் சித்தரிப்புகள் லாஜிக்கலாக இல்லை என்பது மட்டுமல்ல, ஆகக் கீழ்த்தனமான, அப்பட்டமான ஆணியச் சிந்தனையின் வெளிப்பாடாகவே படத்தின் காட்சி அமைப்புகளும் மூன்று பெண்களின் பாத்திரப் படைப்புகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
சந்தடி சாக்கில் இந்து சாமியார் வெர்ஸஸ் கிருத்துவ சாமியார் அரசியலையும் புகுத்திவிடுகிறார் லாரன்ஸ். அதாவது, உலகில் பேய்களை அடக்கி ஓட்டுவதில் வல்லுனர்கள் பலர் பல்வேறு நாடுகளில் இருக்கிறார்களாம். அவர்களுள் ரஷியாவிலிருந்து வரும் வெள்ளைக்கார பேயோட்டும் நிபுணர்கள் படத்தில் இரண்டு இடங்களில் வந்து காளி பிளஸ் ரோசி பேய்களை ஓட்டுகிறார்கள். ஆனால் இங்கிருக்கும் அம்மன் கோவில் லோக்கல் சாமியாரோ பேயோட்டும் நிபுணர் மட்டுமல்ல, மனிதாபிமானம் மிக்க, தர்மத்தின் பக்கம் நிற்கும் சாமியாராம்! என்ன, ஏது, எதற்கு என்று கேட்காமல் ரஷிய நிபுணர்கள் பேய்களை ஓட்டிவிடுகின்றனர். ஆனால் லோக்கல் சாமியாரோ அந்தப் பேய்களின் கதையைக் கேட்டு அவற்றை அழிக்காமல் ராகவனை ஆட்கொள்ள அனுமதிக்கிறார், கூடவே இறுதிக் காட்சியில் ரஷிய நிபுணர்களிடமிருந்து அவற்றைக் காளிதேவியின் அருள் கொண்டு காப்பாற்றி வில்லனைப் பழிவாங்க வைக்கிறார்! ரஷியா பொதுவாகவே முற்போக்குச் சிந்தனைகள் நிறைந்த சோசலிச சிந்தனைப் பாரம்பரியம் கொண்ட நாடு. பேய்களையும் பிசாசுகளையும் நம்பும் கூட்டம் மேற்கத்திய நாடுகளில்இல்லாமல் இல்லை என்றாலும் அது மிகச் சிறுபான்மையே. வெள்ளைக்காரப் பேயோட்டும் நிபுணர்கள் இருப்பதாகக் காட்டி ‘நாம் மட்டும் முட்டாள்கள் அல்ல, உலகமே அப்படித்தான் இருக்கிறது’ என்று உணர்த்த விரும்புகிறார் போலும் லாரன்ஸ்! இதில் இந்து சாமியாருக்கு மனிதாபிமான, மனசாட்சி பில்டப் வேறு போனசாகக் கொடுத்திருக்கிறார்.
பேய்களின் பிளாஷ்பேக் என்ற பெயரில் இடம்பெற்றிருக்கும் அருவருக்கத்தக்க அம்சங்கள் தான் நமக்கு படத்திலிருக்கும் முக்கியமான பிரச்சனை. காளி அண்ணங்களின் நாயக பிம்பத்தை உயர்த்தி அவர்களைக் கடவுளின் அவதாரங்களாகக் காட்டுவதற்கு இன்னும் எவ்வளவு காலம்தான் குப்பத்து / சேரி மக்களும் ஊனமுற்றோரும் சோற்றுக்குக் கையேந்தும், கைவிடப்பட்ட, தம்மால் எதையும் சொந்தமாகக் கேட்கக்கூட முடியாத அபலைகளாக கலைப் படைப்புகளில் நீடித்திருக்க வேண்டும்? ஏழைகளையோ ஊனமுற்றோரையோ திரைப்படங்களில் காட்டக்கூடாது என்றோ, அப்படி யாரும் இல்லையென்றோ நாம் வாதிடவில்லை. ஆனால் அவ்வாறு அவர்கள் காட்டப்படுவதன் நோக்கம் அவர்களின் வாழ்க்கையை உயர்த்துவதையோ, உரிமைகளைப் பெருவதையோ, சுயத்தை மீட்டெடுப்பதையோ இலக்காகக்கொள்ளாமல் ஒரு நாயகனின் இமேஜ் போதைக்கு ஊருகாயாகப் பயன்படவேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளையே மையமாகக் கொண்டிருக்கும்போது அந்தத் திரைப்படத்தை விமர்சிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது, இருக்கவும் கூடாது. காளி அண்ணனின் அருட்கொடையில் வாழ்வோர் குப்பத்து மக்களும் “மாற்றுத்திறனாளிகளும்” தான். குப்பம் என்று சொல்லப்பட்டாலும் அது சேரி மக்களைக் குறிப்பதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது அந்தக் “குப்பத்தின்” அமைப்பையும் மக்களின் நிலையையும் உணர்த்தும் காட்சிகளில் தெளிவாகச் சொல்லப்படுகிறது. ஊனமுற்ற சிறுவர்கள் காளியின் ஆஸ்ரமத்தில் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்குக் கல்வி கற்பிக்கப் படுவதாகவோ பிற பயிற்சிகள் வழங்கப்படுவதாகவோ காட்டப்படவில்லை. அந்தச் சேரி மக்களின் வாழ்வாதாரம் உயரவும் அவர்கள் சுரண்டல்களிலிருந்து தப்பவும் காளி ஒன்றும் செய்யவில்லை. முந்தய கால ரஜினி கமல் போன்ற ஹீரோ பில்டப் படங்களில் குறைந்தபட்சம் அரசியல்வாதிகள், ரௌடிகள், ஆக்கரமிப்பாளர்கள் போன்றவர்களுக்கு எதிராக சண்டைப்போடும் காட்சிகளும் கதை அமைப்பும் இருக்கும். இங்கு சோறு போடுவதை மட்டுமே முற்று முழுதான வேலையாகச் செய்யும் ஒரு பக்காவான என்‌ஜி‌ஓ ஆசாமியாக வலம் வருகிறார் காளி அண்ணன். அவர் நடத்தும் அறக்கட்டளை மூலமாகத்தான் தனது வெளிநாட்டுக் கறுப்புப் பணத்தை வாங்குவேன் என்று அடம்பிடிக்கிறார் அமைச்சரின் தம்பி. இவரோ கண்டிப்பாக முடியாது என்கிறார், இருவருக்கும் தகராறு வரக் காரணம் இதுதானாம்! அப்படிப் பணத்தைப்பெற்று வழங்கும் பல அறக்கட்டளைகள் இயங்குவதும், அறக்கட்டளைகள் தொடங்கி பணத்தை நன்கொடையாகப் பெற்று கமிஷன் வாங்கும் பலர் இருப்பதும், அமைச்சரின் தம்பி நினைத்தால் நூற்றுக்கணக்கான அறக்கட்டளைகளைத் தொடங்க முடியும் என்பதும் நம்மை விட அறக்கட்டளை மற்றும் என்‌ஜி‌ஓ தொழிலில் பழம்தின்று கொட்டை போட்டிருக்கும் லாரன்ஸ் அண்ணனுக்கு நன்றாகவே தெரியும்!
கைகால் ஊனமுற்றோர் தமது பிற உடலுறுப்புகளையும் தொழில்நுட்பத்தையும் வைத்து அன்றாட வேலைகளைச் செய்வதும், கைய்யில்லாமல் வண்டி ஓட்டுவதும், காலில் எழுதுவதும் காளியை ஹீரோ ஆக்க அல்ல. தமது ஊனத்தைக் கடந்து சுயமரியாதையோடும் தர்ச்சார்போடும் வாழ அவர்கள் அனுதினமும் போராட வேண்டியுள்ளது. ஆனால் அவர்களின் மாற்றுத் திறன்களை ஏதோ சர்க்கஸ் காட்சிகளைப் போன்று காட்டி அவர்கள் காளி அண்ணனுக்காகப் பழிவாங்கப் படுவதாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். ரம் கைகளை இழந்த நிலையிலும் வண்டியில் தப்பிச்செல்லும் ஒரு ஊனமுற்ற பைய்யனின் மீது வில்லனின் ஆட்கள் கத்தியை வீசுகின்றனர். அதில் கழுத்து அறுக்கப்பட்டு அவன் உயிரிழக்கிறான். உண்மையில் இந்தக் காட்சி மிக மலிவான கழிவிரக்கத்தை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது. லாரன்ஸ் அவர்களே, ஊனமுற்றோருக்கு எதிரான உண்மையான கழுத்தறுப்புகள் இவ்வாறு நேரடியாக நிகழ்ந்துவிடுவதுமில்லை, அது உங்களைப்போல என்‌ஜி‌ஓ வரம்புக்குலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியப் போவதுமில்லை! ‘படித்துவிட்டுப்போ, ஆனால் வேலை தரமாட்டேன்; போராடு ஆனால் உனது உரிமைகளைத் தரமாட்டேன்’ என்கின்றன தற்போதய அரசுகள். ‘எந்த நிலையில் இருந்தாலும், என்ன வேலைக்குப் போனாலும் சமமாகவும் மரியாதையுடனும் நடத்தமாட்டேன்’ என்கிறது சமூகத்தின் பொதுப்புத்தி. ‘ஊனமுற்றவர்கள் பாவம், ஆனால் அப்படி அவர்கள் ஆனதற்குக் காரணம் பூர்வஜென்மப் பலன்’ என்கிறது இங்கிருக்கும் பெரும்பான்மை மதத்தின் நம்பிக்கை. இந்த மறைமுகத் தாக்குதல்களைவிடவும் நேரடியான கழுத்தறுப்புகள் அதிக வலியை தராது என்பதே நமது துணிவு. சேரி மக்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு எதிரான வன்முறைகள் பரவலாக நிகழத்தான் செய்கின்றன. ஆனால் அத்தகைய வன்முறைகளைக் காட்சிப்படுத்தி அதன்மீது காளி அண்ணன் சவாரிசெய்வது மோசடியானது. இன்னும் எத்தனை காலம்தான் நாயகன் பெரிய நாயகனாக பில்டப் பெற்று வளர்வதற்காக அவர்களின் தங்கைகள் வல்லுறவு செய்யப்படுவதும், ஏழைகள் சோற்றுக்கில்லாமல் தவிப்பதும், ஊனமுற்றோர் பரிதாப நிலையில் இருப்பதும் தமிழ் சினிமாவில் தொடர வேண்டும்? அவ்வாறு தொடரச்செய்யும் வேலையை ஊனமுற்றோருக்காகவும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சேவை ஆற்றுவதாகக் கூறிக்கொள்ளும் லாரன்ஸ் போன்றவர்களே செய்தால் அது அறிவுடமைதானா? அதெல்லாம் போகட்டும், கழுத்தறுக்கப்பட்டு உயிரிழக்கும் அந்த ஊனமுற்ற சிறுவன் பேயாக வராதது ஏனோ? இரண்டு பேய்கள்  வரும்போது மூன்றாவதாக அந்தப் பய்யனும் பேயாக உருக்கொண்டிருந்தால்தான் என்ன?
இலவச இணைப்பாக காமிடி டயலாக் என்ற பெயரில் ஒரு மிகக் கேவலமான வேலையைச் செய்திருக்கிறார் லாரன்ஸ். படத்தின் முதல் பாதியில் அந்த மூன்று பெண்களின் உடை ஒப்பனை குறித்து கோவை சரளா ஏதோ கேட்க, ‘இதுதான் ட்ரெண்டி (TRENDY)’ என்கிறார் ஒருவர். ‘ட்ரெண்டி’ என்பதற்கு ரைமீங் எதிர்வினையாக ‘என்னது? நொண்டியா?’ என்கிறார் சரளா. ‘மாற்றுத்திறனாளி’ என்ற சொல்லை கவனமாகப் பயன்படுத்தியிருக்கும் லாரன்ஸ் “நொண்டி” என்ற சொல்லை சிறிதும் அவசியமில்லாத, பொருத்தமற்ற சூழலில் அபத்தமான முறையில் தனது திரைக்கதை வசனத்தில் பயன்படுத்தியிருப்பது வெட்க்கக்கேடான பேரவலம். ‘ட்ரெண்டி’ என்பதற்கு “நொண்டி”மட்டும்தான் ரைமீங் ஆகவேண்டுமா? “வண்டி”, ‘பன்டி’, கூன்...’ என்று எதையாவது பயன்படுத்தித் தொலைத்துவிட்டுப் போகவேண்டியதுதானே! “மாற்றுத்திறனாளி” என்று ஆயிரம் தடவைகள் லாரன்ஸ் அறைகூவி அழைத்தாலும் “நொண்டி” என்ற சொல் வெறும் காமெடி நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு அவர் இய்யக்குனர் மற்றும் திரைக்கதை வசனம் எழுதியவர் என்ற முறையில் பொறுப்பேற்கத்தான் வேண்டும்.
‘சரி எல்லா விமர்சனங்களும் இருக்கட்டும், ஒரு பேய் படத்தில் இப்படியெல்லாம் லாஜீக் பார்க்கலாமா? பேய் படம் என்று வந்துவிட்ட பின்னர் அதில் லாஜீக் எங்கிருக்கும்?’ என்று நண்பர்கள் எண்ணக்கூடும். உண்மைதான். பேய் கடவுள், காதல் எல்லாம் லாஜீக் வரம்புகளுக்கு உட்படாதவை என்றுதான் சொல்லப்படுகின்றன. அதனால் பேய் படத்தில் தாராளமாக லாஜீக் மீறல்கள் இருக்கலாம், இருக்கத்தான் செய்யும். ஆனால் அவ்வாறு எதார்த்த வரம்புகளுக்கு உட்படாமல் என்ன வேண்டுமானாலும் சலுகையைப் பேய்களுக்குத்தான் வழங்க முடியுமே தவிர எதார்த்த நிலையில் காட்டப்படும் பாத்திரங்களுக்கும் சூழல்களுக்கும் அதை நீட்டிக்க முடியாது! செத்தவர்கள் இரண்டு பேர் எப்படி பேயாக மாற முடியுமென்றோ, டவுசர் ராகவன் திடீரென எப்படி காளியாக ஹீரோ அவதாரம் எடுக்க முடியுமேன்றோ நாம் தர்க்கம் புரியவில்லை. பேய் எந்த பிளாஷ்பேக் கன்றாவதியும் இல்லாமல் வந்து என்ன சேட்டைகள் செய்து யாரைக் கொன்றாலும் நமக்குக் கவலையில்லை. எதார்த்தச் சூழலில் பேய்களின் அருவருப்பை விஞ்சி நிற்கும் இத்தனை அருவருக்கத்தக்க காட்சி அமைப்புகளும், கதை அம்ஸங்களும், பாத்திரப் படைப்புகளும், வசனங்களும் எதற்கு என்பதுதான் லாரன்ஸ் அவர்களிடம் நாம் எழுப்ப விரும்பும் கேள்வி. லாரன்ஸ் அவர்களே, அறக்கட்டளை நடத்துங்கள், விளம்பரம் தேடுங்கள், நல்ல சமூகப் பணிகளைக்கூட செய்யுங்கள். ஆனால் உங்கள் ஹீரோ இமேஜ் வளர ஊனமுற்றோர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களை ஊருகாயாகப் பயன்படுத்துவதை இனியாவது நிறுத்துங்கள் — உங்கள் திரைப்படங்களிலும்தான், எதார்த்தத்திர்ளும்தான்!
திரைப்படக் காட்சிகளை வர்ணனை செய்து உதவிய சக்தி பிருந்தா அவர்களுக்கு நன்றி.
 கட்டுரையாளர் கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார், இவர் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் நிறுவன உறுப்பினர்.
தொடர்புக்கு: send2kmn@gmail.com

நீங்கள் இதைத் தவறவிட்டிருந்தால்

  இருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக