நினைவுகள்: மூன்று நிகழ்வுகளும் கொஞ்சம் நீதிபோதனையும்:


graphic வெண்கோல் உதவியுடன் நடந்து செல்லும் பார்வையற்றவர்
 தலைப்பே கட்டுரையின் வடிவத்தை உங்களுக்கு உணர்த்தியிருக்கும். வாருங்கள் முதல் நிகழ்விற்குள் செல்லலாம். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை பேருந்து நிற்கும் நடைமேடையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது ஒருவர் என்னைத் தடுத்து நிறுத்தி, என்னோட வீட்டுக்காரம்மாவும் பிலையிண்டுதாப்பா. அதனால் பார்வையற்றவர்களைப் பார்த்தால் சாப்பாடு வாங்கிக் கொடுப்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறேன். வாங்க தம்பி இந்த ஹோட்டலில் சாப்பாடு வாங்கித்தருகிறேன் என்றதும், வேண்டாம் என மறுத்தேன். தம்பி எந்த ஊரு போகணும்? புதுக்கோட்டை சார். அவ்வளவு தூரம் பட்டினியாகவேவா போவீங்க கொஞ்சம் சாப்பிட்டுப் போங்க என்றார்.

அவரது அன்புத்தொல்லையின் காரணமாக இருவரும் உணவகத்திற்குள் நுழைந்தோம். அப்போது கல்லாவில் இருந்த முதலாளி எங்களை நோக்கி வேகமாக வந்தார். உன்னைய இந்தப்பக்கம் வரக்கூடாது என்று எத்தனை தடவை சொல்லி இருக்கேன்? நீ திருந்தவேமாட்டியா எனக் கூறி என்னை அழைத்து வந்தவரை வெளியே தள்ளினார்.  பிறகு, முதலாளி என்னிடம் பேசத்தொடங்கினார். உங்களைக் கூட்டி வந்தானே அவன் சரியான அயோக்கியப்பயப்பா. கண்ணுத் தெரியாதவங்களச் சாப்பிடக் கூட்டி வருவான். அவனும் சேர்ந்து சாப்பிடுவான். காசு கொடுக்கும் நேரத்தில் அமைதியாக வெளியே சென்று விடுவான். அவன் சாப்பிட்டதற்கும் சேர்த்து கண்தெரியாதவர் தான் காசு கொடுக்க வேண்டியிருக்கும். இப்படி இவன் பார்வையற்றவர்களை ஏமாற்றி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான் என்றார். தம்பி ஏதும் சாப்பிடுறீங்களா என கேட்டதும், இல்லை சார் என்றேன். எந்த ஊர் போகணும்? புதுக்கோட்டை சார். உடனே ஒரு ஊழியரை அழைத்து, புதுக்கோட்டை பஸ்சில் ஏற்றி விட்டு வா என பணித்தார். அன்புத்தொல்லையால் பெரும் தொல்லையில் மாட்டி இருப்பேன்! அன்று கைவசம் 50 ரூபாய் மட்டுமே இருந்தது. நல்லவேளை கடை முதலாளி காப்பாற்றிவிட்டார்.

இரண்டாம் நிகழ்வு முதுகலை முதலாமாண்டு படிக்கும்போது நிகழ்ந்தது. அன்று அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் வாகன விபத்து ஒன்று நிகழ்ந்தது. அதனால் பேருந்துகள் தாமதமாக வந்துகொண்டிருந்தன. கல்லூரிக்கு நேரமாகிக்கொண்டிருந்ததால் கூட்டமாக வந்த ஒரு பேருந்தில் அடித்துப்பிடித்து ஏறினேன்.

மேட்டுப்பட்டிக்கு அருகே திடீரென பேருந்தை ஓட்டுநர் நிறுத்தினார். இங்கெல்லாம் எதற்கு நிறுத்துகிறார் என எல்லோரும் கடுப்பாயினர். அவர் பேருந்திலிருந்து இறங்கி, சாலையைக் கடக்க நின்றுகொண்டிருந்த பார்வையற்றவரை சாலையைக் கடந்துவிட்டு வந்தார். அப்போது நடத்துநர், "காரும் லாரியும் அவர் கண்முன்னே நேருக்கு நேர் மோதிக்கொண்டதைப் பார்த்ததிலிருந்து அவர் மனதே சரியில்லை. ஒரு இடத்தில் நூலிழையில் விபத்திலிருந்து தப்பினார். அவர் மனைவி மாசமா இருக்காங்க. நல்லபடியா வீடு போய்ச் சேர வேண்டுமென எல்லா கோவில்களிலும் வேண்டிக்கொண்டே வந்தார். பார்வையற்றவர்களுக்கு உதவி செய்தால் கட்டாயம் கடவுள் காப்பாற்றுவார் அல்லவா? அதனால்தான் அவர் அவ்வாறு செய்தார்" என விளக்கம் கொடுத்தார். இருந்தாலும் அந்த விளக்கம் எவர் உள்ளத்தையும் உருக்கவில்லை. ஆபிசுக்கு நேரமாகிவிட்டது எனப் பலரும் முணுமுணுத்துக் கொண்டு இருந்தனர். அவரவர் பாடு அவரவருக்கு.

மூன்றாவது நிகழ்வைச் சொல்கிறேன் கேளுங்கள். திண்டுக்கல்லில் இருந்து புதுக்கோட்டை வந்தேன். புதுக்கோட்டையில்இறங்கியதுமே ஒரு இரும்புக் கரம் என்னைப் பிடித்தது. எந்த ஊரு போகணும்பா என்ற குரல் என் தலைக்கு மேலே கேட்டது. கத்தக்குறிச்சி போகணும் சார் என்றேன். வாங்க தம்பி டீ குடிச்சிட்டு போகலாம் என அவர் என்னை டீக்கடையை நோக்கி, என் சம்மதத்தையும் கேளாமல் அழைத்துச் சென்றார். அதிகாரத்தோரணையில் டீ கேட்டதும் கடைக்காரரும் போட்டுக் கொடுத்துவிட்டார். டீ குடித்துக்கொண்டிருக்கும் வேளையில் அங்கே இன்னொரு நபர் வந்தார். இருவரின் உரையாடலைக் கேட்கும்போதுதான் அவர்கள் காவலர்கள் என்பதை புரிந்துகொண்டேன். என்னை அழைத்து வந்தவர் இன்று நல்ல கலெக்சன் என்றார். உடன் பேசிக்கொண்டிருந்த காவலர் அங்கே செஞ்சதை இங்கே வந்து கழிக்கிற என்றார். தேநீர் அருந்தி முடித்ததும், என்னைப் பேருந்தில் ஏற்றிவிட அழைத்துச் சென்றார். எங்கள் ஊரில் லோக்கல் பேருந்துகள் மட்டுமே நிற்கும். அது மணிக்கு ஒன்றோ இரண்டோதான் இருக்கும். அவர் ஒரு பாயிண்ட்டு பாயிண்ட் பேருந்தில் ஏற்றி தம்பிய கத்தக்குறிச்சியில் இறக்கிவிட்டுடுங்க என நடத்துனரிடம் சொன்னார். தம்பி கண்டக்டர் ஏதாச்சும் சொன்னா இந்த நம்பருக்கு போன் பண்ணுப்பா என அவரது என்னையும் கொடுத்துவிட்டுச் சென்றார்.

இம் மூன்று நிகழ்வுகளும் உணர்த்தும் நீதி என்ன? மேற்கூறிய மூன்று நிகழ்வுகளில் நடந்தவற்றைக் குற்றங்கள் என்றே நான் வகைப்படுத்துவேன். ஏமாற்றியவர் சரி. சாலையை கடக்க உதவியவரும், தேநீர் வாங்கிக்கொடுத்தவரும் என்ன குற்றம் செய்தனர்? இந்த வினா படிக்கும் எல்லோருக்கும் எழும். முதல் நிகழ்வில் ஏமாற்றியவர் குற்றவாளிதான் என எல்லோருக்கும் வெளிப்படையாய் தெரிகிறது. அப்படிப்பட்டவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள பார்வையற்றவர்களுக்கு விழிப்புணர்வு இருந்தால் போதும். பொது சமூகமும் அவர்களை கண்டிக்கவோ தண்டிக்கவோ செய்துவிடும். அடுத்த இரு நிகழ்வுகளைத் தான் சற்று நுணுக்கமாக ஆராய வேண்டும்.

இரண்டாவது நிகழ்வில், சாலையைக் கடக்க உதவிய ஓட்டுநர் தன்னை கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் உதவுகிறார். இங்கே அநேகம் பேர் தாங்கள் செய்யும் அனைத்திற்கும் ஏதோ ஒரு பிரதிபலனை எதிர்பார்க்கின்றனர். சாலையைக் கடக்க அழைத்துச் செல்லுதல்  போன்றவற்றை உதவி என்று கூடச் சொல்லமாட்டேன். சிறப்புத்தேவை என்றே சொல்வேன். சாலையைக் கடக்க உதவும் அந்த ஐந்து நிமிடத்தில், எங்கள் முன்னரே பாவ புண்ணிய கணக்குகள் பற்றி வகுப்பு எடுப்பதைத்தான் எங்களால் சகிக்க முடிவதில்லை. உதவும் நீங்கள் மேலானவர்கள், உதவிபெறும் நாங்கள் கீழானவர்கள். ஏனெனில், உதவி பெறுவதற்கென்றே நாங்கள் பிறந்திருக்கிறோமென உங்கள் செயல்களின் வழி வெளிப்படுத்திவிடுகிறீர்கள். இவை உடல் சவால் உடையவர்களை வெகுவாகக் காயப்படுத்துகிறது. எனவேதான் இதனை நான் குற்றம் என்று வகைப்படுத்துகிறேன். பூத்தலும், காய்த்தலும் தாவரங்களின் இயல்பு. அதுபோலவே உடல்சவால் உடையவர்களின் சிறப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நாம் இயல்பாய் மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில், நாமெல்லாம் ஆறறிவு கொண்ட மனிதர்கள்.

இச்சமூகம் அழுகிய நிலையில் இருப்பதற்கு சான்று தான் மூன்றாவது நிகழ்வு. உங்கள் பாவக்கறைகளைத் துடைப்பதற்கும், பாவச்சுமைகளைக் குறைப்பதற்கும் நாங்கள் பிறப்பெடுக்கவில்லை. இந்நோக்கத்தோடு உதவ வருபவர்கள் மேலும் பெருங்குற்றம் புரிகிறீர்கள் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இவையே மூன்று நிகழ்வுகள் உணர்த்தும் நீதி என்பதைக் கூறி கட்டுரையை முடிக்கிறேன்.
***
தொடர்புக்கு: parvaiyatravan@gmail.com

3 கருத்துகள்: