கவிதை: மனை தாண்டி மல்லுக்கு வா!


மொ. பெரியசாமி

 கழிவறையிலும் காரிகை நீ கவனமின்றி இருந்திடாதே!
அழிவுதனை அளிக்கும் கருவி அங்கேயும் காத்திருக்கும்.
குளியலறை என்று நீயும் குதுகலமாய் குளித்திடாதே!
எளிதாக உன் எழிலோ எங்கெங்கோ சென்றுவிடும்.

ஆடைமாற்றும் அறையினையும் அசட்டையாக எண்ணிடாதே!
மேடையேறி உன் வனப்பும் மேகத்தையே தொட்டுவிடும்.
அப்பனென்றும் ஆதரவாய் அரை நொடியும் பேசிடாதே!
தப்பாமல் தடம்மாற்றி தன்னிச்சையும் தீர்த்திடுவான்.

சகோதரன்தான் என்றுநீயும்  சலனமின்றி இருந்திடாதே!
அகோரமாக்கி அவனும் உனை அல்லலிலே ஆழ்த்திடுவான்.
தோழனென்றும் தோகைநீயும் தோல் சாய்ந்து தூங்கிடாதே!
ஆழம் பார்க்க அவனும் உனை அழகாய் படம் எடுத்திடுவான்.
துணைவனென்று துணிவு கொண்டு தூயவளே நீ துயின்றிடாதே!
இணையவழி பதித்துவிட்டு இரவைப் பகலாக்கிடுவான்.

அங்கத்தினர் யாரும் உந்தன்  அங்கத்தையே நாடிடுவார்.
மங்கை உன்னை தோலுரித்து மாபொருளைத் தேடிடுவார்.
வீதியில் நீ இறங்கிவிட்டால் வெறிநாய்கள் கடிக்க வரும்.
நாதியற்ற உந்தனையே நச்சுப்பாம்பும் தொடர்ந்துவரும்.
சாதிக்கும்முன் சமூகம் உன்னை சருகெனவே மாற்றிவிடும்.
பாதித்திடும் உந்தனையே பரிகசித்து தூற்றிவிடும்.

கதியற்று கலங்கிடாது காரிகையே விழித்திடம்மா!
சதிகாரர் சூழ்ச்சிக்கெல்லாம் சாட்டையடி கொடுத்திடம்மா!.
விதி அதனை வென்று காட்டி வீறுநடை போட்டிடம்மா!
மதியற்ற மானிடரை மண்ணுக்கு இரை ஆக்கிடம்மா!

கற்புகண்ணிமை  என்பதிரு  கட்சிக்கும் பொதுவில்லை எனில்.
பிற்போக்கை விட்டொழித்து பீடுநடை போட்டிடம்மா!
அச்சம் மடம் நாணம் எல்லாம் அடைந்ததெல்லாம் போதுமம்மா!
துச்சாதனரை துடைத்தெறிந்திட துணிந்தாயுதம் ஏந்திடம்மா!

மனை தாண்டி மல்லுக்கு வா!
உன் மாபலத்தை உணர்த்திட வா!
உனை பொருட்டாய் உணராதோற்கு


(கவிஞர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தேரிப்பட்டு அரசு மேல்நிலைப்  பள்ளியின் தமிழாசிரியர்)
தொடர்புக்கு: 9344614631

1 கருத்து:

  1. பெரியசாமி ஐயா அவர்கள் கவிதை எழுதுவதில் வல்லவர் பல வாட்ஸ் அப் குழுக்களில் இவரது கவிதையை நான் இவரது குரலையே கேட்டிருக்கிறேன் மிகச்சிறந்த திறமையாளர் இந்த கவிதையில் பெண்களின் பிரச்சனைகள் குறித்தும் சகோதரன் என்று எண்ணி விடாதே அவனும் சலனப் பார்வை கொண்டு வந்தான் என்று மிகச்சிறப்பாக இன்றைய சூழலை கவிதையில் ஏற்றி பெண்களுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார் அப்படிப்பட்ட சூழலிலும் நல்ல ஆண்களும் இருக்கிறார்கள் மென்மை குணம் கொண்ட பெண்களை மதிக்கின்ற நல்ல ஆண்களும் இருக்கின்றனர் பேய் குணம் கொண்ட பெண்களை ஒரு பொருளைப் போன்று நினைத்துக்கொண்டு மிரட்டும் தொனியில் அழைக்கின்ற மிருகங்களும் இருக்கத்தான் செய்கின்றன பெண்களில் கூட அவ்வாறு மிரட்டும் ஆண்களையே சிறந்தவர்களாக நினைத்து போற்றும் பெண்கள் சீரழிவது காணக்கூடியதாக இருக்கின்றது சிறந்த கருத்துக்கள் பெரியசாமி ஐயா அவர்களே வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு