சந்திப்பு: இதுவரை 500 பார்வை மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு உதவியிருக்கிறோம் U. சித்ரா

       கொரோனா ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதர்களில் முக்கியமானவர்கள் பார்வை மாற்றுத்திறனாளிகள். அவர்களின் துயர் துடைக்க ஓரளவு நல்ல நிலையில் இருக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகள் களம் இறங்கியது, நம்மிடம் இருக்கும் மனிதநேயத்தை இன்னொரு முறை எடுத்துரைத்திருக்கிறது. கடைநிலையில் இருக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காகப் பார்வையற்றோருக்கான பல்வேறு அமைப்புகள்  உதவின; உதவிக்கொண்டிருக்கின்றன. இந்த முயற்சிக்குத் தொடக்கப் புள்ளியிட்டு, தமிழகமெங்கும் இருக்கும் 500 பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குத் தலா 1000 ரூபாயை நன்கொடையாளர்களிடம் பெற்று வழங்கியிருக்கிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம். இந்த அமைப்பின் தலைவர். U. சித்ரா அவர்களைத் தான் இந்த இதழில் நாம் சந்திக்கவிருக்கிறோம். இவரை இதழுக்காகச் சந்திக்கிறார் ரா. பாலகணேசன்.

பாலகணேசன்: ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம் பற்றியும், அதில் உறுப்பினராகச் சேர்வதற்கான நடைமுறை பற்றியும் வாசகர்களுக்குச் சொல்லலாமே?

சித்ரா: ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பெற்றுத்தருவதுதான் இச்சங்கத்தின் பணியாக இருக்கிறது. மாற்றுத்திறனாளிகளின் கல்வி, வேலை வாய்ப்பு, பொதுச் சமூகத்துடனான ஒருங்கிணைப்பு ஆகியவையே எங்கள் நோக்கம். மாற்றுத்திறனாளிகள் மட்டுமே இச்சங்கத்தில் இணைய வேண்டுமென்றெல்லாம் இல்லை. மாற்றுத்திறனாளிகள் மீது அக்கறை உள்ள யார் வேண்டுமானாலும் இணையலாம். ஆண்டுச் சந்தா ரூ. 300.

பா: இந்த ஊரடங்கு காலத்தில் நலிவுற்ற பார்வையற்றோருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது?

சி: மார்ச் 22 ஆம் தேதி பிரதமர் ஒரு நாள் ஊரடங்கு அறிவித்த போதே, எதிர்காலத்தில் ஊரடங்கு ஏற்படப் போகிறது என்ற செய்தி உறுதியானது. அது பொதுத்தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்த காலம் என்பதால், பார்வைமாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் குறித்துச் சில கோரிக்கைகளை மாநில மாற்றுத்திறனாளிகள் நலத் துறை இயக்குனருக்கு அனுப்ப நானும், சங்கத்தின் இணைச் செயலர் சரவணமணிகண்டனும் தயார் செய்துகொண்டிருந்தோம். அப்போது, ஊரடங்கு என்றால் ரயில்கள் இயங்காது. எனவே ரயில் வியாபாரம் செய்யும் பார்வைமாற்றுத்திறனாளிகளின் நிலை என்ன? அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தோம். தொடர் ஊரடங்கு அறிவித்ததும், அவர்களுக்கு ஏதேனும் உதவிசெய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அதை எவ்வாறு செய்வதென்று தான் தெரியவில்லை. ஏனெனில், எங்களிடம் அவர்கள் தொடர்பான தகவல்கள் ஏதுமில்லை. அப்படிப்பட்ட சூழலில்தான், என்னோடு பணியாற்றும் பார்வையற்ற ஆசிரியர்களிடமும், முன்னாள் மாணவர்களிடமும் பேசி்னேன். நலிவடைந்த பார்வை மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விவரங்களைத் தொடர்ந்து களச் செயல்பாடுகளில் இருக்கும் பார்வை மாற்றுத்திறனாளி பெரியவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டேன். நாங்கள் எங்களால் முடிந்தவரை உதவுவோம் என்ற ஒரு எண்ணத்தில்தான் இதைத் தொடங்கினோம்.
graphic மேலே ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தின் பேனர் கட்டப்பட்டிருக்கிறது, அதன் கீழ் நாற்காலியில் சித்ரா அவர்கள் அமர்ந்துள்ளார்

பா: தமிழக முழுவதும் உங்கள் உதவிக்கரங்கள் எவ்வாறு நீண்டன?

சி: சரவணமணிகண்டனும், செயற்குழு உறுப்பினர் விசித்திராவும் பார்வைமாற்றுத்திறனாளிகளுக்கு உதவக்கோரி ஒரு காணொளி தயாரித்து வெளியிடலாம் எனக் கூறினர். இதற்கிடையே பயனாளர்கள் பட்டியல் கிடைத்தது. அவர்களுக்கு மளிகை பொருட்களை வாங்கிக் கொடுத்து விடலாம் என முடிவு செய்தோம். அதனால் காணொளி தயாரிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை. பொருட்களை வாங்கி விநியோகிப்பதற்கு செல்வக்குமார் என்பவர் முன்வந்தார். நடமாடுவதில் கெடுபிடிகள் அதிகரிக்கவே பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பிறகுதான், 27ஆம் தேதி ஒரு கட்டுரை எழுதலாம் என முடிவு செய்தோம். சரவணமணிகண்டன் அந்தக் கட்டுரையை எழுதி 28-ஆம் தேதி சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.அதன் பிறகு உதவிகள் வரத்தொடங்கின. சென்னையில் எங்கள் பணியைத் தொடங்கினோம்.  

அப்போது பலரும் அறிந்த பார்வை மாற்றுத்திறனாளி ஒருவர், நீங்களும் சென்னையிலிருந்தே உதவத் தொடங்கியிருக்கிறீர்களே! மாறாக திருச்சியிலிருந்து தொடங்கியிருக்கலாம்என்றார். எங்களுக்குத் தெரிந்த இடத்திலிருந்துதானே தொடங்கமுடியும்என்றேன். அதற்குச் சொல்லவில்லை. அங்கு இருப்பவர்களுக்கு எப்படியாவது உதவி கிடைத்துவிடும். உள்மாவட்டங்களில் இருப்பவர்களுக்குத் தான் உதவி கிடைப்பதில் சிக்கல்  ஏற்படும்என்றார். அவர் சொல்லியதும் சரி என்று பட்டது.

அப்படி உதவலாமென்று பார்த்தால், உதவி தேவைப்படும் பார்வையற்றோர் எந்தந்தப் பகுதிகளில் வசிக்கிறார்கள் என்ற தரவுகள் எங்களிடமில்லை. புதுக்கோட்டையில் மோசஸ் சார், சிவகாசியில் பால்பாண்டி, ராமநாதபுரத்தில் முத்துசாமி சார் என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பார்வைமாற்றுத்திறனாளி நன்பர்கள் உதவி தேவைப்படுவோரை எங்களுக்கு அடையாளம் காட்டினர். இப்படி பலரது உதவியால்தான் தமிழகம் முழுதும் உதவ முடிந்தது.

பா: உன்மையில் மிகப்பெரிய அளவிலான  உதவிகளைச் செய்திருக்கிறீர்கள்!

சி: இதை நன்கொடையாளர்கள் தான் சாத்தியமாக்கினர். கட்டுரையைப் பொது வெளியில் பகிர்ந்த பிறகு, 100 குடும்பங்களுக்கு உதவுமளவிற்கு மட்டுமே நன்கொடைகள் வருமென எதிர்பார்த்தோம். ஆனால்,இத்தனை உதவிகள் வருமென எதிர்பார்க்கவில்லை. கட்டுரை எழுதிவிட்டு, அதில் தொடர்புகொள்ள உங்களது என்னை கொடுக்கிறேன் என மணிகண்டன் சொன்னார். நானும் சம்மதித்தேன். அந்தக் கட்டுரையைப் பார்த்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அழைப்புகள் வர தொடங்கின.அதன் பிறகே நம்மால் பெரிய அளவில் உதவமுடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

பா: உலகம் முழுவதிலிருந்தும் உங்களுக்கு நன்கொடைகள் வந்திருக்கின்றன. அதில் பார்வை மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பைப் பற்றிக் கூறுங்கள்?

சி: பொது சமூகத்தை ஒப்பிடும்போது பார்வைமாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு குறைவுதான் என்றாலும், கல்லூரி மாணவர், பகுதிநேரப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என இருபதிற்கும் மேற்பட்ட பார்வைமாற்றுத்திறனாளிகள் நன்கொடை அளித்திருக்கின்றனர். நம்மவர்கள் தான் பல்வேறு அமைப்புகள் வழியாக உதவிக் கொண்டிருக்கிறார்களே! அதனால் எங்கள் அமைப்பிற்கு வந்த நன்கொடைகளை மட்டும் வைத்து பார்வை மாற்றுத்தி்றனாளிகளின் நன்கொடை அளிக்கும் தன்மையை மதிப்பிட முடியாது.

பா: மாணவர்கள் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள் என்கிறீர்கள். அவர்களைப் பற்றிய விவரத்தை தரலாமே?

சி: கல்வியியல் பட்டப் படிப்பு பயின்று வரும் ஜகன், தந்தையை இழந்து பெரியப்பாவின் அரவனைப்பில் வாழ்ந்து வருகிறார். அவர் நம்மவர்களுக்குத் தனது உதவித் தொகையின் ஒரு பகுதியை  நன்கொடையாக அளித்தார். இன்னொருவரைப் பற்றியும் சொல்லியாக வேண்டும், மிகவும் சொற்ப ஊதியத்தில் பகுதிநேர இசையாசிரியராக பணியாற்றி வருகிறார் பெருமாள் சார். பதிவிட்ட முதல் நாளே தொலைபேசி வாயிலாக நன்கொடை தர முன்வந்தார். அவரது நிலைமை எங்களுக்குத் தெரியும் என்பதால் வேண்டாமென்றோம். என்னை விட மிகவும் சிரமப்படுபவர்களுக்கு உதவ விரும்புகிறேன். அதனால் என் உதவியை மறுக்காதீர்கள்எனக் கூறி நன்கொடை கொடுத்தார்.

பா: கட்டுரையைப் பொதுவெளியில் பகிர்ந்ததுமே பயனாளிகளிடம் இருந்து அழைப்புகள் வந்தனவா?

சி: முதல் மூன்று நாட்கள் நன்கொடையாளர்களிடமிருந்தே அதிக அழைப்புகள் வந்தன. அதன்பிறகு பயனாளர்களிடம் இருந்தே அதிக அழைப்புகள் வரத்தொடங்கின. ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போதே, அடுத்தடுத்து அழைப்புகள் வந்தன. அழைத்த அனைவருக்கும் என்னால் ஃபோன் செய்ய இயலவில்லை. இப்படி என்னால் பேச இயலாமல் போனவர்களுக்கு கூடுதலாக உதவிகள் தேவைப்பட்டிருக்குமோ என்ற மனவருத்தமும் இருக்கத்தான் செய்கிறது.

பா: உங்கள் சங்கத்தில் பெரும்பாலானோர் பார்வைமாற்றுத்திறனாளிகள். இச்சூழலில்  இத்தனை பேரைக் கண்டறிந்து, அவர்களின் கணக்கில் பணம் அனுப்பும் மிகச் சிக்கலான பணிகளை எவ்வாறு கையாண்டீர்கள்?

சி: தொடக்கத்தில் நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடித்தான் போனோம். பயனாளிகளின் பட்டியலை வாங்கி, ஒவ்வொருவருக்கும் தொலைபேசி செய்து பேசி, அதன்பிறகு வங்கிக்கணக்கு எண்ணை வாங்கி பணப்பரிமாற்றம் செய்துகொண்டிருந்தோம். அதனால் நேரம் விரயமானது. பயனாளிகளின் பட்டியலோடு அவர்களது வங்கிக் கணக்கு எண்ணையும் சேர்த்து வாங்கினால் விரைந்து செயல்படமுடியும் என்பதை தாமதமாகத்தான் உணர்ந்தோம். நான் தொலைபேசி அழைப்புகள் மூலம் பயனாளிகளை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டேன். சங்க செயற்குழு உறுப்பினர் ஜெயபாண்டி பயனாளிகளின் வங்கிக் கணக்கு விவரங்களை தொலைபேசியில் கேட்டுப் பெற்றார். சரவண மணிகண்டன் பணம் அனுப்பும் பணியை மேற்கொண்டார். ஒருவருக்குச் சோர்வோ, வேறு பணியோ வரும்போது மற்றவர்கள் வேலைகளைப் பகிர்ந்துகொண்டோம். . என் அப்பா நன்கொடையாளர்களின் விவரங்களை எழுதுவதற்கு உதவினார். எனது அக்கா மகன் கூகுள்பேயில் பணப்பரிமாற்றம் செய்ய உதவினான். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் சங்க உறுப்பினர்கள்தான். இப்படிப் பலரும் இணைந்துதான் இப்பணியை மேற்கொண்டோம்.  

பா: நன்கொடை பெறுவதில் ஏதேனும் சங்கடமான விடயங்கள் ஏற்பட்டுள்ளனவா?

சி:  அப்படியெல்லாம் எதுவும் ஏற்படவில்லை.  இது பண விவகாரம் என்பதால், பலர் அதிக வினாக்களைக் கேட்டனர். அது தெரிந்துதான் இப்பணியில் இறங்கினோம். நாங்கள் பண உதவி செய்ததும், நன்கொடையாளர்களுக்குப் பணப்பரிவர்த்தனை செய்த விவரங்களை அனுப்பிவைத்து விடுவோம்.

பா: பல பயனாளிகளோடு தொடர்பு கொண்டு பேசி இருப்பீர்கள். அதில் உங்களுக்கு நெகிழ்வான தருணங்கள் ஏதேனும் இருந்ததா?

சி: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பயனாளர்களைத் தொடர்புகொண்டு பேசும்போது, அவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது. வங்கிக் கணக்கு என்னை மட்டும் வைத்துக்கொண்டு பணம் அனுப்ப இயலாதா?” என்றெல்லாம் கேட்டனர். அவர்களுக்கு I.F.S.C.  எண் குறித்தெல்லாம் போதிய விழிப்புணர்வு இல்லை.
அங்கே  அழகர்சாமி என்பவரிடம் உரையாடிக்கொண்டிருந்தேன். என்ன செய்கிறீகள்?” என்று கேட்டபோது, “சும்மாதான் இருக்கிறேன். அரசு தரும் O.A.P. பணத்தில்தான் வாழ்க்கையை நடத்துகிறேன்என்றவர் தன் கதயைச் சொன்னார். “12 ஆண்டுகளுக்கு முன்புவரை கார்பென்டர் பணி செய்து வந்தேன். எனக்குக்கீழ் 20 பணியாளர்கள் இருந்தனர். கணவன், மனைவி சண்டையின்போது, என்  மனைவி ஆசிட் ஊற்றியதால், இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனது. அதன்பிறகு மனைவியைவிட்டு பிரிந்து, என் அக்காவின் பராமரிப்பில் வாழ்ந்துவந்தேன். சில மாதங்களுக்கு முன்பு என் அக்காவும் இறந்துவிட்டார்என்று சொன்னார். அவர் கதையைக் கேட்டதும் உடைந்துவிட்டேன்.

சேலத்தைச் சேர்ந்த சேகர் பிறவியிலேயே பார்வை இழந்தவர். ஒரு விபத்தில் காலையும் பறி கொடுத்திருக்கிறார். இருந்தபோதும் ரயிலில் தவழ்ந்தபடி வியாபாரம் செய்து தன் வாழ்வை நடத்தி வருகிறார். மனைவி இறந்துவிட்டார். அண்மையில்தான் அவரது மகளையும் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். தற்போது தனியாக வசித்து வருகிறார். ஒன்றுக்கும் மேற்பட்ட உடல் குறைபாடுடையவர்கள் பராமரிக்க யாருமில்லாமல் தனியாக வசிப்பது தான் மிகப்பெரிய கொடுமை.

பா: பலரோடு உரையாடும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதன் வழியே புதிய கண்திறப்பு கிடைத்திருக்கும் அல்லவா?

சி:  நிச்சயமாக! நாம் பார்வைச் சவாலுடையவர்கள்; நிறைய சவால்களை எதிர்கொண்டு வாழ்கிறோம் என்றெல்லாம் சொல்கிறோம். அவர்களது கதையை கேட்கும்போது, நாம் சந்திக்கும் பிரச்சனைகளெல்லாம் ஒன்றுமே இல்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.
கணவன்,  மனைவி இருவருமே பார்வையற்றவர்களாக இருந்த குடும்பங்களில், அவர்களிடம் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்கும்போது தடுமாறிவிட்டனர். ஒரு பார்வை உள்ள நபரை அழைத்து வந்து, வங்கிக் கணக்கு எண் சொல்வதற்காக தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் பொழுது, நாங்கள் வேறு ஒரு நபருடன் பேசிக் கொண்டிருந்தால் அவர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அச்சூழலில் அதிக அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. பிறகு அதைத் தவிர்ப்பதற்காக, முதலில் நான் அவர்களுடன் பேசிவிட்டு, சரவணமணிகண்டன் அவர்களின் என்னை கொடுத்து,பார்வை உள்ளவர் கிடைத்ததும் அவரிடம் வங்கிக் கணக்கு விவரங்களைக் கொடுக்கச் சொன்னேன்.   அவரிடமும் தற்போது தொலைபேசி வரும், எனவே வேறு எந்த அழைப்பையும் மேற்கொள்ள வேண்டாம் எனச் சொல்லிவிடுவேன்.

பா: உதவி வழங்குவதில் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்திருக்கிறீர்களா?

சி: அப்படிச் சில சம்பவங்கள் நிகழ்ந்தன. முதலில் அதைக் கேள்விப்பட்டதுமே நிறைய பேர் அப்படி செய்திருப்பார்களோ? என்றெல்லாம் பயந்துவிட்டேன். அதுபோன்ற தவறுகள் மிகக்குறைவாகவே நடந்திருக்கின்றன என்று அறிந்தபோது மனம் நிம்மதி கொண்டது.

பா: எப்படிப் பயனாளர்களின் நிலையைச் சரிபார்க்கிறீர்கள்?

சி: பயனாளிகள் சிறப்புப் பள்ளிகளில் பயின்றவர்களாக இருந்தால் பிரச்சனையே இல்லை. சிறப்புப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் தங்கள் நன்பர்களோடு தொடர்பிலிருக்கின்றனர். அதனால் தங்கள் நன்பர்கள் எங்கே வசிக்கின்றனர், அவர்களின் பொருளாதார நிலை போன்றவற்றை அறிந்து வைத்திருந்தனர். அதனால் விரைவாக ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்தி உதவமுடிந்தது. ஆனால்,  ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் படித்தவர்கள் பார்வையற்ற சமூகத்தோடு தொடர்பு இல்லாமல் துண்டிக்கப்பட்டு தனியாக  வசித்து வருகின்றனர். அதனால், அவர்கள் உதவி கேட்பதிலும் அவர்களுக்கு உதவியைக் கொண்டுசேர்ப்பதிலும் பெரும் சிக்கள் நிலவுகிறது.

பா: இக்காலகட்டத்தில் பல பார்வையற்ற அமைப்புகளும், பார்வையற்றவர்கள் குழுவாக இணைந்தும் உதவி செய்து வருகின்றனர். அவர்களில் யாரேனும்  உங்களோடு ஒருங்கிணைப்பை வைத்துக் கொண்டார்களா?

சி: மிகச் சிலர்தான் கேட்டிருக்கிறார்கள். பயனாளர்கள் தொடர்பான தரவுகளையும், தான் உதவி வழங்கவிருக்கும் பயனாளருக்கு ஏற்கனவே எங்கள் அமைப்பின் சார்பில்  உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறதா என்ற தகவல்களையும் கேட்டுப் பெற்றுக்கொண்டார்கள்.

பா: எதிர்மறை விமர்சனங்கள் எதுவும் வந்ததா?

சி: வந்திருக்கின்றன. ஆனால் அது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. ஒரு நேர்மறை விமர்சனத்தை மட்டும் இங்கே சொல்கிறேன்.
உதவிக் கொண்டிருந்த அந்த இரு வாரங்களிலும் வேறு நபர்களோடு பேசநேரமில்லை என்பதால், எங்களைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. ஒரு நாள் பார்வையற்றோர் நந்நலச் சங்கத்தைச் சேர்ந்த கீதாவுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும்பொழுது, “நீங்கள் எவ்வித  ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உதவிசெய்து வருவது பலராலும் பாராட்டப்படுகிறதுஎன்றார். எங்களது அணுகுமுறையை நம்மவர்கள் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

பா: இந்தக் கொரோனா காலத்தில் பலருக்கும் முன்மாதிரியான அமைப்பாக ஹெலன் கெலர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மாறி இருக்கிறது. பலருக்கு உதவியதன் மூலம் இச்சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்றதோடு பல படிப்பினைகளையும் பெற்றிருப்பீர்கள். அதனடிப்படையில் உங்களது எதிர்கால திட்டம் என்ன?

சி: இது வரை எங்கள் சங்கம் சிறப்புப் பள்ளிகள் தொடர்பான பிரச்சனைகளை மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுதல், பள்ளி  இறுதியாண்டு பயிலும் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் தொடர்பான கருத்தரங்குகளை நடத்துதல் போன்ற பணிகளைச் செய்து வந்தோம். இனி களப்பணி செய்து நலிவுற்ற பார்வையற்றவர்களைக் கண்டறிந்து, அவர்களது மேம்பாட்டிற்கு உதவவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோம்.

பா: நன்கொடையாளர்களும், பயனாளர்களும் தொடர்புகொள்வதற்காக உங்களது எண் பொதுவெளியில் பகிரப்பட்டது. அதனால் தேவையற்ற  அழைப்புகள் ஏதும் வந்தனவா?

சி: அப்படி எந்த அழைப்புகளும் வரவில்லை. ஆனால், தொண்டு நிறுவனம் நடத்தும் சிலரிடமிருந்துதான் தேவையற்ற அழைப்புகள் வந்தன. சரவணமணிகண்டனுக்கு ஒருவர் போன் செய்து,“”என் மூலம் நீங்கள் நான்கு பேருக்கு உதவியிருக்கிறீர்கள் சார்என்று சொல்லியிருக்கிறார். இப்படிச் சிலர் அருகில் ஒருவரை வைத்துக்கொண்டு அவர்களை விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். இதைக் கேட்டபோது கோபம் வந்தது. அதைவிட பொதுவெளியில் எங்கள் சங்கத்தின் பெயரைக் கூறிக்கொண்டு தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு விடுவார்களோ என்ற அச்சமும் இருந்தது.

பா: விரல்மொழியர் வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

சி: விரல்மொழியருக்கு எங்கள் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விரல்மொழியர் மின்னிதழ் வாட்ஸப் குழுவில் இருந்த பலரும் சமூக ஊடகங்களில் இச்செய்தியைக் கொண்டு சேர்த்தனர். பார்வையற்றவன் முகநூல் பக்கத்தைப் பார்த்துவிட்டு லதா ராமகிருஷ்ணன் அவர்கள் பார்வையற்றோர் நந்நலச் சங்கத்தின் (welfare foundation of the blind-WFB) வாயிலாக 70,000 ரூபாய் நன்கொடை வழங்கினார். அதுமட்டுமல்லாது சிறப்பு வாய்ந்த கட்டுரையை எழுதிய சரவணமணிகண்டனுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சமூக ஊடகங்களில் பரவியதால்தான் எங்களுக்கு மிகப்பெரிய  உதவிகள் கிடைத்தது.
ஒருநாள் காலையில் சரண்யா என்பவர் எனது வாட்ஸப்பிற்கு  அமெரிக்காவிலிருந்து பேசுகிறேன்என்று ஒரு தகவல் அனுப்பியிருந்தார். முதலில் யாரோ என்னை கேலி செய்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். அவரது தொலைபேசி எண்ணைப் பார்த்தால் அது வெளிநாட்டு எண்ணாக இருந்தது.  பிறகு அவர் ஃபோன் செய்து, “ஜாக்கி சினிமாஸ் வழியாக நீங்கள் உதவுவதை அறிந்தேன்என்றார். எங்களுக்கோ ஜாக்கி சினிமாஸ்  என்றால் என்னவென்றே தெரியாது. நாங்கள் பிறகு தேடிப்பார்த்த போதுதான் அது ஜாக்கி சேகர் அவர்களின் யூடியூப் சேனல் என்று தெரியவந்தது. அதில் உதவி தேவைஎன ஒரு காணொளி தயாரித்து அதில் எனது எண் கொடுக்கப்பட்டிருந்தது. இப்படி கலிபோர்னியா, கத்தார் என உலகத்தின் பல மூலைகளிலிருந்தும் நன்கொடை வருவதற்கு இந்தச் சமூக ஊடகங்களே உதவியாக இருந்தன.

பாலகணேசன்: எங்களுக்காக நேரம் ஒதுக்கி எங்கள் வினாக்களுக்கு பொருமையாக பதிலளித்தமைக்கு விரல்மொழியர் மின்னிதழ் சார்பாக நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

சித்ரா: நன்றி.

சித்ரா அவர்களைத் தொடர்புகொள்ள: anbirkiniyaval@gmail.com
ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தைத் தொடர்புகொள்ள: helenkellerforpwd@gmail.com
இணைய தளம்: www.association.matruthiran.com
(தொகுப்பு: பொன். சக்திவேல்)

4 கருத்துகள்:

  1. Great work, and really a role model initiative! Yes, this critical situation has taught us the importance of working among the blind people at the grassroots.

    பதிலளிநீக்கு
  2. இந்தப் பணியின் தொடக்க நாட்களில் உண்மையான பயனாளிகளை அடையாளம் கண்ட்உ தருவதில் எங்களுக்கு அதிகம் உதவியவர் திரு. செல்லமுத்து அவர்கள். அவருக்கும் உளமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. உங்களால் நாங்களும் பணிசெய்ய ஊக்குவிக்கப்பட்டோம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
    உங்கள் பணி தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் தொடக்கம் முதல் விடுமுறை நெடுகிலும் செயல்பட்ட விதத்தை விவரித்து இருந்தீர்கள். உங்களுக்கு கிடைத்த அனுபவம் பலருக்கும் ஊக்கமாக அமையும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. பணியை சிறப்பாக விவரித்த உங்களுக்கும் முக்கியமான வினாக்கள் தொடுத்து அவற்றைப் பெற்றுக்கொண்ட பாலகணேசன் சார் அவருக்கும் பாராட்டுக்கள். உங்களின் எதிர்கால நல்ல நோக்கங்கள் நிறைவேற மனதார வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு