சிறப்புக் கட்டுரை: அரசின் தொடர் புறக்கணிப்பில் பார்வை மாற்றுத்திறனாளிகள் - டாக்டர் U. மகேந்திரன்

      இன்று உலகைப் பீடித்து இருக்கும் பெரும் பிணியாக  வந்து வாய்த்ததோடு மட்டும் அன்றி கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது கொரோனா என்னும் covid-19. அது சீனாவில் தொடங்கி இத்தாலி, ஈரான், இங்கிலாந்து, உலக வல்லரசாம் அமெரிக்கா வரை தான் யார் என்பதை ஈரக்குலை நடுங்கும் வண்ணம் காட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் ஏற்பட்டுள்ள இழப்புகள் எழுத்துக்குள் அடங்கா துக்க பிரம்மான்டங்கள். நான் இதை எழுதுகையில் (16-04-2020) இருக்கும் 134000 உயிரிழப்பு இந்தக் கட்டுரை வெளியிடப் பட்டிருக்கையில் எவ்வளவு நேர்ந்திருக்கும் என்பதை எண்ணுகையில் நெஞ்சம் சொல்லில் அடங்கா வேதனை கொள்கிறது.
      இந்த நூற்றாண்டின் மோசமான பேரழிவுகளில் முதன்மையானதாக இருக்க போகும் இந்த வைரஸ் செய்த எல்லாமே வேதனைக்குரிய சாதனை ரகம். இதனால் அம்பலப் பட்டு போன கோட்பாடுகள் அதிகம், ஆட்டம் கண்ட நிறுவனங்கள் எண்ணற்றவை, பிடி தளர்ந்த அரசியல் மற்றும் பொருளாதார பித்தலாட்டங்கள் கணக்கற்றவை, கையறுநிலையைக் கண்டு உணர்ந்த கட்டமைப்புகள் எண்ணில் அடங்காதவை, புறக்கணிப்புகளை உணர்ந்த மனித மனங்கள் மதிப்பிட முடியாதவை.
      இதில், மாற்றுத் திறனாளிகளில் மிகவும் விளிம்பு நிலையில் தொடர்ச்சியாக வைக்கப் பட்டிருக்கும் பார்வையற்றவர்கள் எதிர்கொண்ட இன்னல்கள் இந்தக் கட்டுரையில் அடக்க முடியாத அளவுக்கு அதிகமானவை. குறிப்பாக சமூக விலகல் வேண்டும், அது நோய் பரவலைத் தடுக்க இன்றிமையாதது என உலக சமூகமே உச்சரிக்க தொடங்கிய போது முதல் சிக்கல் ஆரம்பம் ஆனது.
      ஏதோ ஒரு விதத்தில் ஒழுங்கற்று இருக்கும் பாதைகளைக் கடக்க மற்றவரைச் சார்ந்து இயங்க வேன்டிய எங்களுக்குச் சமூக விலகல் ஆபத்துக் கலந்த பின்னடைவு. கரம் பற்றி நடந்தால் கொரோனா தொற்றுக்கு இரு தரப்பிலும் ஆளாக நேறிடும் அதே வேளையில், எங்களின் இயக்கத்தையே முற்றிலும் கேள்விக்கு உள்ளாக்கியது இந்தத் திடீர் மருத்துவத் தீர்வு.

இயங்காத மாற்றுத்திறனாளிகள் நலத் துறை
      இது ஒருபுறம் என்றால் எங்களை இமைபோல் இல்லாவிடினும் அவர்கள் வழங்கும் கருப்புக் கண்ணாடி போலேனும் காக்க வேன்டிய மாநில மாற்றுத் திறனாளிகள் நலத் துறை தன்னைக் குவாரன்டைன் செய்து கொண்டது. மாணவர்களாக, ஆசிரியர்களாக, வங்கி ஊழியர்களாக, அரசு துறை பணியாளர்களாக, மறுவாழ்வு மையத்து வாசிகளாக, அன்றாட தொழில் புரியும் வியாபாரிகளாக, பட்டதாரிகளாய் வேலை நாடுநர்களாக, நிச்சயமான நிற்கதி நிலையில் நிரந்தரமாக இருப்பவர்களாக, சில தொழில் கூடங்களில் தினசரி கூலிக்கு அயராது பாடுபடும் பாட்டாளிகளாக, கண்பார்வை அற்றோர் இருக்கிறார்கள் என்பதை, அரசுக்கே உரிய விதத்திலும், கடமை உணர்வோடும், துரிதமாகவும் யோசிக்காமல் போனது புறக்கணிப்பின் உச்சம்.
      பெரும்பாலும் உண்டு உறைவிட பள்ளிகளாக இருக்கும் சிறப்புக் கல்வி நிலையங்களில் பயிலும் பார்வையற்ற இருபால் மாணாக்கருக்கு எவ்வித பாதுகாப்பு வசதியும் இந்தத் துறையால் மேற்கொள்ள படவில்லை. அவர்கள் ஊரடங்கு விதித்து போக்குவரத்துத் தடைப்பட்டு விட்டால் தங்கள் ஊர் போய் எப்படிச் சேர்வார்கள் என்பதை நினைத்ததாக தெரியவில்லை. இவ்வாறே கல்வி உள்ளிட்ட பல அரசு துறைகளில் பணிபுரியும் பார்வையற்றோர் எதிர்கொள்ள நேரிடும் இன்னல்களை உணர்ந்து தடுக்கும் பொருட்டுத் தாமாக முன்வந்து உரிய ஆணைகளோ, உத்தரவுகளோ மாநில மாற்றுத் திறனாளிகள் நலத் துறையால் பிறப்பிக்கப் படவில்லை. போக்குவரத்து முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு நிலைகுலைந்து போன ரயில் மற்றும் பேருந்து வியாபாரிகளின் எதிர்காலம் குறித்துத் திட்டங்கள் ஏதும் இருக்கவில்லை. அதனை ஊரடங்கின் தொடக்கத்திலும், தொடர்ந்து வந்த நாட்களிலும் அப்பட்டமாக காண முடிந்தது.
      குறிப்பாக  ஏப்ரல் 12 அன்று தமிழக அரசு பிறப்பித்து அடுத்தநாளே திருத்திக் கொண்ட நன்கொடையாளர் உதவுதல் தொடர்பான அறிவிப்பை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று திருத்தம் பெற முயலவே இல்லை. பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆயிரக்கணக்கானோர் உணவுக்கும் வழி இன்றி இருக்கிறார்கள் என்பதை விவரித்து விலக்கு கோர ஒரு சிறு துரும்பைக் கூட இந்தத் துறை தாமாக முன்னெடுக்கவில்லை. இவர்கள் ஏற்பாடு செய்த உதவி எண் (18004250111) கூட பல அமைப்புகளின் தொடர் அழுத்தத்தின் பிறகே அமலுக்கு வந்தது. இதில் துயர் யாதெனில் இந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டு உதவி கேட்கும் பார்வையற்றோருக்கு ஒரே விதமான மளிகைப் பொருட்கள் தமிழகம் முழுமையும் வழங்கப்படவில்லை. சில இடங்களில் உதவி கேட்போர் மிரட்டப்படும் அவலமும் அரங்கேறவே செய்தது. சில நூறுக்குக் கூட விநியோகிக்க படாத நிவாரனத்துக்குச் சில ஆயிரம் செலவிடப் பட்டதாக கணக்குக் காட்டப்பட்டது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் அன்றி வேறு என்ன?
      பலர் சொந்த வீடற்று வாடகை வீட்டில் தங்கி அதனை தனது அன்றாட சொற்ப வருமானம் கொண்டே  நிர்வகித்து வந்தனர் என்பது கவனிக்கப்படாமலே போனது. ஊரடங்கு விலக்கிக் கொள்ளப் பட்டதும் அரசின் உத்தரவினால் வாடகை வசூலிக்காமல் இருந்தவர்கள் மொத்த பணத்தையும் ஒரே தவனையில் கேட்க வாய்ப்பிருக்கிறது, அதைத், தொழில்கள் பெரிதும் கைகொடுக்காத சூழலில் எப்படி அவர்களால் அடைக்க முடியும் என்ற எண்ணம் இல்லாமலே போனது.
      பட்டங்கள் பெற்றும் தகுதிக்குரிய பணிக் கிட்டாத வேளையில்; வருகைதரு விரிவுரையாளர்களாகவும், இசை ஆசிரியர் உள்ளிட்ட தொகுப்பூதியத்திலும், நாற்காலி பிண்ணிப் பிழைப்பை நடத்திய நிலையிலும், அன்றாட வியாபாரிகளாகவும், கணிப்பொறி பயிற்றுநர்களாகவும், கைவிடப்பட்ட கால் செண்டர் தொழிலாளிகளாகவும் இருப்பவர்களுக்கு எவ்வித சிறப்பு நிவாரனமும் அறிவிக்கப்படவில்லை. இவர்களுள் திருமணமாகி கைக்குழந்தைகளோடும் வயதான பெற்றோர்களோடும், வாடகை வீட்டில் இருப்பவர்களின் நிலை வேதனையின் உச்சம்.
      இதில் கொடுமை யாதெனில், அருகாமையில் சக பார்வை மாற்றுத் திறனாளிகள் இல்லாமல் குக்கிராமங்களில் தனித்து வசிக்கும் பார்வையற்ற குடும்பங்கள் படும் துயர் சொல்லி மாளாதது. இவர்கள் அநேக இடங்களில் வயதானவர்களாகவும் நோய்வாய்ப் பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். இத்தகு நிலை குறித்தோ, அவர்களுக்கு அரசால் கொடுக்கப்பட வேண்டிய நிவாரனம் தொடர்பாகவோ எந்த நிலையிலும் ஆலோசிக்கப் படவே இல்லை.
      எனது ஆதங்கம் எல்லாம் எத்தகு நிலையிலும் ஒரு பார்வையற்றவர் கூட கொரோனா தொற்றுக்கு ஆளாகிவிடகூடாது என்பதே ஆகும். அங்கணம் நேர்ந்தால் எங்களைச் சட்டப்படியோ அல்லது மருத்துவம் தொடர்பாக பெரிதாக வகுக்க படாத விதிகளுக்கு உட்பட்டு இந்தத் துறை அத்தகு தருனங்களில் துணை நிற்குமா? என்பது நம்பிக்கைக்கு நேர் எதிரானது. இதில் கசப்பான உண்மை யாதெனில், கொரோனா போன்ற சமூக விலகல் கடைபிடிக்கப்படும் காலக் கட்டங்களில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்குச் செய்து தரவேன்டிய பாதுகாப்பு அம்சம் குறித்து எவ்வித அறிவியல் மற்றும் மருத்துவ பூர்வ திட்டங்களோ, தீர்வுகளோ எங்களுக்கான அரசு சம்பந்தமான இந்தத் துறையிடம் இருக்காது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை.
      ஒருவேளை இருக்குமே ஆயின், கைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும் பொருட்டுப் பரிந்துரைக்கப் படும் சானிடைசர் மற்றும் முகக்கவசம் எங்களுக்கும் அவசியம் என்பதை அதிகம் பரவிய காலக் கட்டங்களில் உணராதது ஏன்? பார்வை அற்று இருந்தால் கொரோனா அண்டாது என்னும் ஆன்மீகச் சிந்தனை இதற்கு காரணமாக இருக்குமோ எனத் தெரியவில்லை. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பார்வைற்றவரை அடைந்துவிட்டால், தனிமை படுத்துதலில் எழும் சந்தேகங்களாவன;
*எப்படி மருந்து மற்றும் சிகிச்சை வழங்கப்படும்?
*உணவு உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் சரியாக நாங்கள் அனுகும் முறையில் சேர்க்கப்படுமா?
graphic பார்வையற்ற ஆணும் பெண்ணும் வெண்கோலூன்றி எதிரெதிரே வருகின்றனர், அவர்களுக்கு அருகே கொரோனா வைரஸ் இருக்கிறது.

  *மாற்றுத்திறனாளிகளுக்கு என இருக்கும் அலுவலகம் ஏதாவது சிறப்புக் கொரோனா சிகிச்சை தரும் மருத்துவ கூடமாக மாற்றப்பட்டுத் தயாராக இருக்கிறதா?
ஆகியவற்றிற்கு இந்தத் துறை அதிகாரிகளிடம் பதில் இருக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதையும் யாராவது அல்லது சில அமைப்புகள் போராடித்தான் பெற்றாக வேண்டும்.
       திடீரென்று பரிந்துரைக்கப்பட்டு ஏற்பாடான கடைகள், மருந்தகங்கள் மற்றும் சந்தைகள் முன் கட்டம் அமைத்துப் பின்பற்றப்படும் சமூக விலகலைப் பார்வை மாற்றுத் திறனாளிகள் எங்ஙனம் கடைபிடிக்க முடியும்?” என்று கேட்கிறார் பார்வையற்ற கல்லூரிப் பேராசிரியர் முருகானந்தன்.  நீண்ட காலமாக வலியுறுத்தப்படும் திரை வாசிப்பானுக்கு உகந்த வலைதளங்கள் மற்றும் அரசு கோப்புகள் பயன்பாட்டையே அசர வைக்கும் விதத்தில் கண்டுகொள்ளாத இந்த மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, கங்கனம் கட்டிகொண்டா இந்தக் கட்டம் அமைப்பதற்கு விடை கானப் போகிறது என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
      பார்வையற்றவர்களில் தீவிர உடல் உபாதைகளுக்கு ஆளாகி நீரிழிவு, ஆஸ்துமா, புற்றுநோய், இன்னும் இதர இன்னல்களை அனுதினமும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு லாக்டவுன் காலத்துக்கு முன்பே தீர்வுகள் இருந்தது இல்லை. அப்படி என்றால் இது போன்ற அசாதாரனமான சந்தர்ப்பங்களில் அத்தகையோர் மருத்துவ உதவி பெற என்ன வழிவகை இருக்கிறது? அவர்களுக்கு என்று சிறப்பு நடமாடும் மருத்துவ குழுக்கள் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்படாதது அரசின் அலட்சியம் அன்றி வேறு என்ன?
      இப்படிக் கேட்டாலே எங்களை நோக்கி இரக்கம் இன்றி வீசப்படும் வினா என்ன தெரியுமா? எல்லோரும் இன்னல் படும் வேளையில் சிறப்புக் கவனம் உங்களுக்குத் தர அரசால் இயலுமா? என்பதே அது. சமூக விலகல் என்கிற தொடர் அறிவுறுத்தலில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் பார்வையற்றோர் என்பதை  உணர்ந்திருந்தால் அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ள தயக்கமே ஏற்பட்டிருக்க போவதில்லை. அதைச் செய்தால் தான் என்ன? ஏன் நாங்கள் இந்தத் தமிழ் மண்ணின் பிரஜைகள் இல்லையா? அடிப்படையில் எங்களுக்கான துறை இத்தகைய நெருக்கடி காலக் கட்டங்களில் எங்களின் நிலை பேண இயங்கவில்லை என்றால் பிறகு எதற்கு இந்தத் துறை?
      வெறும் மாதாந்திர உதவி தொகை வழங்குதல், மடக்குக் குச்சியோடு, கண்ணை மூடிக்கொண்டு எங்கள் கண்ணை மறைக்கும் கருப்புக் கண்ணாடி அளித்தல், சிரமப்பட்டு இலவச பேருந்து அட்டைக்கான ஆண்டு அனுமதி வழங்குதல், கல்வி உதவி தொகையை ஆண்டுதோறும் பட்டதாரிகள் சங்கம் சண்டை இட்டுக் கேட்ட பிறகு பட்டுவாடா செய்ய ஆவனம் செய்தல் போன்றவற்றிற்காக மட்டும் தானா இந்தத் துறை? இது போண்ற ஆபத்து நாட்களில் முன் மாதிரியான பாதுகாப்புத் திட்டங்களைத் தீட்டித், துரிதமாக அமல் படுத்தி, அவற்றை சட்டத்தின் ஏடுகளில் விதிகளாக ஏற்றும்படி செய்யும் பொறுப்பும் இத்துறைக்கு இருக்கிறது அல்லவா?
      கொரோனா ஊரடங்கில் பன்மடங்கு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் பார்வையற்ற தரப்புகளாக நான் கருதுவது: ரயில் மற்றும் பேருந்துகளில் வியாபாரம் செய்தவர்கள், நடமாடும் இசை குழுக்களை நம்பி வாழ்க்கையை அனுதினமும் நகர்த்தியவர்கள், தீப்பெட்டி, பட்டாசு, ஊறுகாய் தயாரித்தல், வாகனங்களுக்குத் தேவைப்படும் சிறு பொருட்களைச் செப்பணிடுதல் உள்ளிட்ட பலவிதமான தொழில் கூடங்களில் பணிப் புரிந்தவர்கள், மளிகை, இறைச்சி மற்றும் மொத்த கொள்முதல் கடைகளில் பணியாற்றி வந்தோர், தனியார் மென்பொருள் மற்றும் இதர இடங்களில் பணிபுரிந்து வந்தவர்கள், ஆதரவு அற்று யாசகம் செய்து வந்த, குடும்பங்களால் கைவிடப்பட்ட வயது முதிர்ந்த இருபால் பார்வையற்றோர் போன்றவர்கள் தான். இவர்களுக்கு இழப்பீடு கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

களமிறங்கிய பார்வையற்ற தன்னார்வலர்கள்
      இத்தகைய வேளைகளில் மிகுந்த நம்பிக்கை அளித்த செயலாக, ஆங்காங்கே பார்வையற்றவர்களே  இன்னலுறும் சக பார்வையற்றோறுக்கு உதவும் பொருட்டுச் செய்த ஆகச்சிறந்த செயல்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அரசு பணியில் இருக்கும் பார்வையற்றவர்கள் தமது தொடர்பில் இருக்கும் இன்னல் படுவோரைக் கைதுக்கி விடும் பொருட்டு நிதி திரட்டியும், நன்கொடையாளர்களை அனுகி உதவி பெற்றும் சிறிய அளவிலேனும் அவர்களுக்குக் கைகொடுக்கும் பெரிய முயற்சி மேற்கொண்டனர். ஏறத்தாழ பத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் இத்தகைய களப்பணியில் அயராது ஈடுபட்டன என்பது சிறு ஆறுதலைத் தந்தது. இருப்பினும் பேராசிரியர் முருகானந்தன் வினவுவதும் இங்கே கவனிக்க தக்கதாக இருக்கிறது. ஒரு அரசு செய்ய வேண்டியதைத் தன்னார்வலர்கள் எப்படிச் செய்ய இயலும். அது நிச்சயமாக யானை பசிக்கு இட்ட சோலப்பொறியாக தானே இருக்க முடியும் என்கிறார் அவர். அதுதான் உண்மையும் கூட. களப்பணியில் இருந்த பார்வையற்ற சகோதர, சகோதரிகள் அனைவரும் ஒப்புக்கொண்டது யாதெனில், வழங்கிய மளிகை பொருட்களும், வங்கி கணக்கில் செலுத்திய சிறு தொகையும் கட்டாயம் அவர்கள் அதிக தேவை என்கிற கடலில் கரைத்த சிறு நம்பிக்கை என்கிற பெருங்காயமாக தானே இருக்க முடியும் என்பதே.
      அப்படி என்றால் இதற்கு என்ன நிரந்தர தீர்வு என நீங்கள் கேட்கலாம். கொரோனா லாக்டவுன் தொடர்ச்சியாக அறிவிக்கப் பட்ட கால கட்டங்களில் தேவை இருப்பவர்களின் எண்ணிக்கையை ஊனமுற்றோர் அடையாள அட்டையை வைத்துக் கணக்கெடுப்பு மேற்கொண்டு இக்குறைகளை நிவர்த்தி செய்ய தொடர்ந்து முயன்று இருக்க வேண்டும். நலிவடைந்த பார்வையற்றோர்களை வகைப்படுத்தி ஒருங்கிணைக்க இதைக் காட்டிலும் ஒரு சந்தர்ப்பம் சேவை உள்ளம் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் அரசுக்கு எப்படி வாய்க்கும் எனத் தெரியவில்லை. இதைச் செய்யாமல் இருப்பதற்கு என்ன தடை இருக்க முடியும்?.
      மாற்றுத்திறனாளிகள் ுறித்து, குறிப்பாக பார்வையற்றோர் தொடர்பான உளவியல் மற்றும் வாழ்வியல் ஆகியவற்றில் பெரிதாக பரிட்சியம் இல்லாத அதிகாரிகள் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் பணி அமர்த்தப்படுவது சிக்கலை விளைவிக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. அதுபோல மாற்றுத் திறனாளிகள் துறையைத் தனித்த அதிகாரம் பெற்ற அமைச்சகத்தின் கீழ் நிரந்தரமாக கொண்டுவராமல், சமூக நலன் மற்றும் சத்துணவு துறையின் கீழ் வைத்திருப்பது இதற்கு தேவைப்படும் அவசியமான முக்கியத்துவம் கிடைக்காமல் இருக்க காரணமாக இருக்கிறதோ என்கிற ேள்வியும் விடைவேண்டி தொக்கி நிற்கிறது.
      இந்தத் துறை அதிகாரிகள் எதுவுமே செய்யவில்லை என்பது எனது கட்டுரையின் வாதம் அல்ல. அங்கனம் இருட்டடிப்புச் செய்யும் நோக்கம் இல்லை என்பது புரியும் தன்மை கொண்டவர்களுக்குப் பெரும் புதிரும் அல்ல. அப்படிப் புரிந்துகொள்ளுதல் எங்களின் தொடர் இன்னல்களைப் பாரா முகம் கொண்டு பார்ப்பதாகவே அமைந்து விடும் என்பதைப் பணிவோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவற்றை விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு இது  போன்ற தருணங்களிலேனும் வெளிப்படுத்தவில்லை என்றால், எல்லாம் நடந்து, கடந்து போன பிறகு பேசி என்ன பலன் இருந்து விட போகிறது என்பதே எனது வாதம்.

என்ன செய்திருக்கவேண்டும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை?
1. உண்டு உறைவிட சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ மாணவியர் பாதுகாப்பாக தமது வீடுகளுக்குச் சென்று சேர வேண்டியதில் அவர்கள் அவசரமாக கவனம் செலுத்தியிருக்கவேண்டும்.  அரசின் அனுமதி உடனடியாக பெற்றுச் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்திருந்தால் கூட்டத்தில் சிக்கித் தவித்துப் பயணித்து ஊர் சேர்ந்திருக்க வேண்டிய அவலம் அத்தகைய மாணாக்கருக்கு நேர்ந்திருக்காது. வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பார்வையற்ற ஆசிரியர்கள், இதர அரசு ஊழியர்கள், மற்ற தொழில்களைச் சார்ந்தவர்கள் பயணிக்கையில், வாகனங்கள் கிடைக்காமலும், அப்படியே கிடைத்தாலும் உட்கார இடமின்றியும் பயணப்பட நேர்ந்திருக்கிறது. இதற்காக ஒரு உடனடி அறிவுறுத்தலைப் போக்குவரத்துத் துறைக்கு அத்தகு காலக் கட்டத்தில் பிறப்பித்து இருக்க வேண்டும்.
2. பார்வையற்றவராக இருப்பதால் தாமாக வாகனங்களை இயக்கும் சாத்தியமே இல்லை என்பதை உணர்ந்து எவரும் பாதிப்புக்கு உள்ளாகும் முன்னரே, அதிலும் பார்வையற்ற அத்தியாவசிய துறை சார்ந்த அரசு ஊழியர்கள் தீர்வு அறியாமல் தவித்துக் கோரிக்கை வைப்பதற்கு முன்னரே, தனது கடமையை உணர்ந்து விலக்கு அளிக்கும் ஆணையைப் பிறப்பித்து இருக்க வேண்டும். ஒவ்வொரு முறை லாக்டவுன் நீட்டிக்கப்பட்ட போதெல்லாம் கவன ஈர்ப்புக் கோரிக்கை வைக்கும் நிலையே இருந்தது. அல்லது அவர்கள் அலுவலகம் சென்றுவர இதர ஊழியர்களுக்குச் செய்திருந்தது போல பேருந்து வசதி செய்திருக்க வேண்டும். அதுவும் இல்லை என்றால் இத்தகைய பல துறைகளில் பணிபுரியும் பார்வையற்ற அரசு ஊழியர்களைச் சிறப்பு அதிகாரிகளாக நியமித்துப் பார்வையற்றோருக்காகவே களப்பணி செய்ய வைத்திருக்கலாம்.
      இது தொடர்பாக,  சுகாதாரத் துறையில் இளநிலை ஊழியராகவும், தமிழ்நாடு பார்வையற்றோருக்கான கைப்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் யங்கிவரும் திரு பழனிச்சாமி அவர்களிடம் பேசியபொழுது இவ்வாறு தெரிவித்தார். இது சுயநலமானது என்று கருதிவிட கூடாது என்று கூறி தொடர்ந்த அவர், “ஒவ்வொரு அரசு துறையில் பணியாற்றும் பார்வையற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு சிறப்புக் குழு அமைத்து அந்தந்தத் துறை சார்ந்த மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை நிவர்த்தி  செய்திருக்கலாம். மேலும் அந்தக் குழுவை மாற்றுத் திறனாளிகளின் துறையோடு இணைத்து நலிவடைந்த பார்வையற்றோர் மற்றும் இதர ஊனமுற்றோர்க்கு உடனுக்குடன் உதவும்படி செயல்பட வைத்திருக்கலாம். அங்கனம் செய்கையில் நெருக்கடி காலங்களில் அரசுக்கு உறுதுணையாக இருந்த திருப்தியும் ங்களுக்குக் கிடைத்திருக்கும். பார்வையற்றோர் படுகிற இன்னல்களைக் களப்பணி ஆற்றி அரசின் வழியே தீர்க்கவும் உடனுக்குடன் முடிந்திருக்கும் என்று முடித்துக் கொண்டார்.
      மாற்றுத் திறனாளிகள் நலத்  துறையில் இருக்கும் அதிகாரிகளைத் தேவை ஏற்படும் பொழுது (deputation) முறையில் பல்வேறு துறைகளில் பணிபுரிய உத்தரவு இடுகையில் அவர் சொன்னது கட்டாயம் சாத்தியம் என்றுதாண் தோன்றுகிறது!
3. விவரிக்க இயலா விளிம்பு நிலையில் இருக்கும் பலதரபட்ட பார்வையற்ற வியாபாரிகள் மற்றும் நலிவுற்றோருக்கு அடிப்படை வசதிகளும், மருத்துவ மற்றும் நிதி உள்ளிட்ட உதவிகளும், நிவாரனங்களின் வழியே தொடர் தீர்வுடன் கூடிய பாதுகாப்பும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதனை அரசு மட்டுமே செய்ய இயலும். அல்லது அரசுதான் செய்தாக வேண்டும். இல்லை என்றால், வியாபாரம் செய்து பிழைப்பை நடத்திவரும் திரு கணேசன் குறிப்பிடுவது போல கொரோனாவில் இல்லாவிடினும் அநேக பார்வையற்றவர்கள் பட்டினி கிடந்தே மரணிக்க நேரிடலாம்!
4. அனைத்து விதமான மாற்றுத்திறனாளிகளும் அறிந்து கொள்ளும் பொருட்டுக் கொரோனா தொடர்பான விளக்கங்களை வழங்கியிருக்க வேண்டும். குறிப்பாக சொல்வது என்றால் பார்வையற்றோர் படித்து உணர்ந்து கொள்ளும்படி பிரெயில் வடிவத்திலோ அல்லது தெளிவாக  அணுகி வாசிக்க தக்க  (accessable) எழுத்துருவில் இந்த நோய் பற்றி தகவல்களையும், விளக்கங்களையும், பாதுகாப்பு அம்சங்களையும் வழங்கியிருக்க வேண்டும். பரவலாகவும், தீவிரமாகவும் பரிந்துரைக்கப்படும் முக கவசம் மற்றும் சனிடைசர் உள்ளிட்டவற்றின் பயன்பாடு மற்றும் அவசியம் குறித்து விளக்கி அவை எளிதில் கிடைக்கும்படி செய்திருக்க வேண்டும். இந்த நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டால் பார்வையற்றோரையும், இதர மாற்றுத்திறனாளிகளை அனுகும் விதம் குறித்தும் தெளிவான அறிவுறுத்தல் அல்லது வழிகாட்டி விளக்கங்கள் இப்பொழுது அயராது சேவை ஆற்றி கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் வழங்கியிருக்க வேண்டும். வெகுஜன ஊடக செய்திகளில் இருக்கும் குறைபாட்டை உணர்ந்து, கொரோனா தொடர்பான துள்ளிய தகவல்கள் அனைத்தும் உடனுக்குடன் மாற்றுத் திறனாளிகளின் மாநில ஆணையரகத்தின் வலைதளத்தில் திரை வாசிப்பான் உள்ளிட்ட மென்பொருட்கள் கொண்டு வாசிக்கும் வண்ணம் வழங்கிட வேண்டும். அவற்றுள் பிரத்யேகமாக மாற்றுத்திறனாளிகள் கடைபிடிக்க வேண்டிய ஏற்பாடுகளையும் விவரிக்க வேண்டும். இப்பொழுது அநேகரால் உபயோகிக்கப்படும் ஆண்ட்ராய்டு மொபைலில் பதிவிறக்கம் செய்து படித்து அறியும் வண்ணம் சிறப்புச் செயலியை அறிமுகம் செய்தும் கூட மாற்றுத் திறனாளிகளுக்கு இத்தகைய செய்திகளையும் பாதுகாப்பு அம்சங்களையும் கிடைக்கும்படி செய்வது ஒன்றும் தவறு ஆகிவிடாது.
5. மனநலம் குன்றிய பார்வையற்றோர், செவி மற்றும் வாய்பேச இயலா பார்வையற்றோர், கை கால் பாதிப்போடு கூடிய பார்வையற்றோர் படும் இன்னல்கள் விவரிக்க இயலாதது. இவர்கள் குறித்த சரியான தரவுகள் முறையாக ஏதும் பராமரிக்கப்படவில்லை. இத்தகையோர் இந்தக் கொரோனா தீவிரமாக பரவும் காலகட்டங்களில் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து இருக்கிறது. இவர்களை இனம்கண்டு உரிய பாதுகாப்பு அளித்து நோய்த்தொற்று இருப்பின் சிகிச்சை அளிக்காவிட்டால் அது மிகப்பெரிய விளைவுகளுக்கு இட்டுச்  சென்றுவிடும்.
6. சொற்பமான ஒதுக்கீடு பெறுகிற துறையாக இந்தத் துறை வைக்கப் பட்டிருப்பது முதலில் மாறுதலுக்கு உள்ளாக வேண்டும். இல்லையென்றால் இத்தகைய அவல நிலைகளைப் பேரிடர் நாட்களில் போக்குவது பெரும் சவாலுக்கு உரியதாகவே தொடரும். இதை மாற்ற உடனடியாக சிறப்பு நிதி அல்லது அவசரகால நிதியம் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று தேசிய மற்றும் மாநில அளவில் ஏற்படுத்தப்பட வேண்டும். அத்தகைய நிதி திட்டம் சட்டப்படி அவசரம் கருதி உடனடியாக அமல்படுத்தபடுமே என்றால், தொகுப்பூதியத்திலும், முறைசாரா தொழிலிலும், தனியார் கல்வி மற்றும் இதர நிறுவனங்களிலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரிகளில் வருகை தரு விரிவுரையாளர்களாகவும் பணி புரிந்து நிற்கதியாக நிற்கும் பார்வையற்ற அறிவுசார் பட்டதாரிகளுக்குக் குறைந்த பட்சம் 10000 (பத்தாயிரம்) முறையே மாதம் தோறும் வழங்கிட இயலும். இது புறக்கணிக்க இயலா ஒன்று. காரணம் நன்கு படித்துத், தேர்வெழுதி, அரசு வேளைக்குச் சென்றுவிடலாம் என நம்பி இருந்தவர்களுக்கு இந்த எதிர்பாரா தொடர் லாக்டவுன் கடுமையான மன உளைச்சலைக் கொடுத்திருக்கிறது. இந்த பாதிப்பு எதிர்காலத்தில் மன நல ஆலோசனை வழங்கும் நிலைக்கு அவர்களை இட்டுச் செல்லாமல் இருக்க இந்த நிவாரனம் அவசியம் என்றே தோன்றுகிறது. இவர்களை நம்பி இருக்கும் குடும்பமும் அதனால் விளையும் சுமையும் இந்த மாதாந்திர உதவித் தொகையின் வழியே அவர்களுக்குச் சற்றுக் குறையும் என்பது திண்ணம். இதனோடு பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி தொகையான Old Age Pension (OAP) மற்றும் Unemployed Relief Fund (URF) ஆகியவற்றை விலைவாசி ஏற்றத்தைக்  கருத்தில் கொண்டு மூன்று மடங்கு உயர்த்தி தாமதிக்காமல் வழங்கவேண்டும்.

சட்டமும், நடைமுறையும்
      மாற்று திறனாளிகள் உரிமை சட்டம் 2016 இல், குறிப்பாக சம  பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை தொடர்பான பிரிவில் பேசப்பட்டிருக்கும் 4 முக்கியமான சட்ட விதிகளில் ஒன்றுகூட முறையாக சம்பந்தப்பட்ட துறைகளின் சட்ட பகுதியைச் சென்று சேராததால் அவை இருந்தும் எந்தப் பயனையும் அளிக்கவில்லை என்பது இதுபோன்ற நெருக்கடி காலக் கட்டங்களில் தெளிவாகவே உணர கிடைக்கின்றனஎன்கிறார் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான பார்வை மாற்றுதிறனாளி பேராசிரியர் சிவகுமார்.
      முதலாவது விதியாக இருக்கக்கூடிய சம பாதுகாப்பு வழங்குதல். எத்தகைய தருணங்களில் என்றால் ஆபத்து நேரங்கள், யுத்த காலங்கள், மனிதத்தை மையப்படுத்திய அவசர நிலை மற்றும் இயற்கை பேரிடர் போன்ற காலக்கட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்கிற விதி இதுவரை பின்பற்றப் பட்டதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் அது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் எந்தப் பகுதியிலும் சேர்க்கப்பட்டு ஒரு வார்த்தை அளவில் கூட பேசப்படவே இல்லை.
      இரண்டாவது விதியாக இருக்கக்கூடிய தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் யுத்தம், மற்றும் இயற்கை பேரிடர் நேரும் காலகட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் என்பதால் புறக்கணிக்க படாமல் இருப்பதை உறுதி செய்யும்படி வலியுறுத்துகிறது. ஆனால் இதுதொடர்பாக இப்பொழுதோ அல்லது இதற்கு முன்னரோ எந்த அறிவிப்பும் வழிகாட்டுதலும் மாற்றுத்திறனாளி நலத்துறை அல்லது பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டதாக தெரியவில்லை.
      மூன்றாவதாக சுட்டிக்காட்ட பட்டுள்ளபடி மாவட்ட பேரிடர் மேலாண்மை துறையிடம் மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக தகவல்கள் இருக்க வேண்டும் என்பதும் பின்பற்றப் பட்டதற்கான அறிகுறி ஏதும் இருக்கவில்லை.
      நான்காவதாக பேரிடர் மேலாண்மை துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் இதர செயல்பாடுகள் அனைத்தும் மாநில மாற்றுத் திறனாளிகள் ஆணையரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று மாற்றுத்திறனாளிகளும் அவற்றை படிக்கும் விதத்தில் அவர்களுக்கு உரிய வடிவத்தில் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் இதுவும் இதுகாரும் பின்பற்றப் பட்டதாக சான்று ஏதும் கிடைக்கவில்லை.
      இந்த விதிகள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தோடு இருக்கிறதே அன்றி சம்பந்தப்பட்ட பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 அல்லது அதை அடியொற்றி வகுக்கப்பட்ட விதிகளில் இதுவரை சேர்க்கப்படவில்லை. அதுமட்டுமல்ல பேரிடர் கால கட்டங்களில் அதிக ஆபத்து நேரிட்டால் பெண்கள், வயது முதிர்ந்தோர், குழந்தைகள் உள்ளிட்டோர் முதலாவதாக மீட்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் விதி சொல்கிறது. இதில் கவனிக்கவேண்டிய ஒன்று யாதெனில், அந்த இடத்தில் கூட மாற்றுத்திறனாளி என்கிற வார்த்தை சேர்க்கப்படவில்லை என்பதே. அதுமட்டுமல்ல, பேரிடர் மேலாண்மை சட்ட விதிகள் எந்தக் காரணங்களைக் கொண்டு மீட்பதையோ, உதவி புரிவதையோ நிறுத்தக்கூடாது என்று விவரிக்கும் இடத்தில் கூட மாற்றுத்திறனாளி என்பதால் உதவி மறுக்கக்கூடாது என்று இருக்கவில்லை. அதில் மீட்புப்பணி மேற்கொள்ளும் வேளையில் பாலினம், ஜாதி, மதம் உள்ளிட்ட காரணத்தால் பாகுபாடு காட்டக்கூடாது என்று இருக்கிறது. இங்கு கூட மாற்றுத்திறனாளி என்பதால் மீட்பது அல்லது இதர ஏற்பாடுகள் உத்திரவாதப் படுத்துவது போன்ற எவற்றையும் பாரபட்சம் காட்டி மறுக்க கூடாது எனச் சொல்லவில்லை. இவை அனைத்தும் விதிகளாக வகுக்கப் பட்டு, அரசால் கண்டிப்போடு வெளியிடப்படாததால் மாற்றுத் திறனாளிகளும் குறிப்பாக பார்வையற்றோர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஏராளமாக இருந்து வருகின்றன.
      மாற்றுத் திறனாளிகளுக்கு அதிலும் குறிப்பாக பார்வையற்றவர்களுக்குப் பேரிடர் நேரங்களில் கிடைக்காத அரசின் சட்ட உதவி குறித்து, அலகாபாத் வங்கியின் மேலாளரும், பார்வையற்றோருக்கான அகில இந்திய கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும் இருக்கக்கூடிய திருமதி முத்துச்செல்வி பாண்டியராஜன் அவர்களிடம் வினவியபோது  அவர் சொன்ன செய்தி திகைப்பூட்டுவதாகவும்  அதிர்ச்சி தரக்கூடியதாகவும் இருந்தது. “தற்போதைய பிரதமரும், உள்துறை அமைச்சரும் 2019 செப்டம்பரில் பேரிடர் மேலாண்மை விதியை மாற்றுத் திறனாளிகளுக்கு  அறிமுகம் கொடுத்து வெளியிட்டு இருந்தாலும், இதுவரை அந்த விதிகளில் விவரிக்கப்பட்ட எந்த முறையுமே நிறைவேற்றப்படவே இல்லை. அது இன்னும் ஏட்டளவில் மட்டுமே இருந்து வருகிறது. எண்ணற்ற பக்கங்களில் மாற்றுத்திறனாளிகளைப் பேரிடர் நேரங்களில் கையாள வேண்டியது குறித்தும், சம உரிமை வழங்குதல் குறித்தும், பாதுகாப்பு அளித்தல் குறித்தும் சொல்லப்பட்டு இருந்தும் பின்பற்றப்படாமல் தொடர்வது மத்திய மற்றும் மாநில அரசுகளின்  அலட்சியத்தையும், பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறதுஎன்றார்..
      இதுவரையில் இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டவை மிகவும் சொற்பமே. இதனூடே முடிந்தவரை பார்வையற்றோர் அரசால் எங்கனம் புறக்கணிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதை எடுத்துக் கூற முயன்றிறுக்கிறேன். என்னால் ஒன்றை மட்டும் ஜீரனித்துக் கொள்ளவே முடியவில்லை. கோரிக்கை வைத்து அல்லது கவனத்திற்கு எடுத்துச் சென்றுதான் எதையுமே பெற முடியும் என்றால் பிறகு எதற்கு இந்தத் துறை என்பதே அது.       இதுபோன்ற நேரங்களில் மாற்றுத் திறனாளிகளை அத்தியாவசிய பொருட்களைத் தொடர்ந்து பெறும்படியாவது செய்தாக வேண்டும். அதற்கேனும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு கொடுக்கப்படும் பொருட்கள் குடும்ப அட்டையைச் சான்றாக கொள்ளாமல் இந்த அரசால் வழங்கப்பட்ட  உடல் ஊனமுற்றோர் அட்டையைக் கொண்டு வழங்குதலை உறுதிப் படுத்த வேண்டும்.
      இந்தக் கட்டுரையின் சில இடங்களில் ஆதங்கத்தோடு சில செய்திகள் ஒருமுறைக்கு மேல் பேசப்பட்டிருப்பதாக தோன்றினால் அது அடக்க இயலா வேதனையில் வெடித்து விழுந்த கருத்துகள் என்பதாக புரிந்து கொண்டால் நலமே. இப்படி எல்லா நிலையிலும் அரசால் புறக்கணிப்புக்கு உள்ளாகும் பார்வையற்றோரின் நிலை பேசு பொருளாக்கப் பட வேண்டும் என்பது எனது நோக்கம் எனக் கொள்க. இதற்கு என்ன தீர்வு இருக்க முடியும் என்றால் இவற்றை ஆழமாக அறிந்து வைத்தலும், அவற்றை களையும் பொருட்டுச் சட்ட முன்னெடுப்புகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளுதலுமே ஆகும்.
      நான் தெளிவு படுத்த விரும்புவது இந்தக் கட்டுரை பார்வையற்றோரின் இடர்பாடுகளைத் தொட்டு மட்டுமே காட்டி இருக்கிறது என்பதே. இதைவிட பேசவும், எழுதவும் ஏராளம் இருக்கின்றன என்பதைப் பணிவோடு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்தக் கொரோனா வைரஸ் நமக்கு அளித்த படிப்பினை நாம் எங்கனம் சட்டம் அல்லாத சட்டப் பிரிவுக்குள் வைக்கப் பட்டு வழிநடத்த படுகிறோம் என்பதே. இறுதியாக, இவற்றை களைய அதிர்ந்து முழங்குவோம். நாங்கள் இல்லாத எங்களைப் பற்றிய அரசுமயம் வேண்டாம்  என்று!

(கட்டுரையாளர் சென்னை சர். தியாகராயர் கல்லூரியின் ஆங்கிலத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்).
தொடர்புக்கு: mahendranbefrank@gmail.com

13 கருத்துகள்:

  1. மிக நீண்ட நல்ல கட்டுரை மகேந்திரன்! உண்மையாகவே நம்மிடம் சமூக விலகலைச் சரியாகக் கடைபிடிப்பது மாற்றுத்திறனாளிகள் நலத்துறைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள் பேராசிரியரே! அவர்கள் ஒரு போதும் நம் சமூகத்தோடு ஒன்றாமல் விலகியிருந்து இப்பொழுது பேசப்படும் சமூக விலகலை உலகிற்கு அறிமுகப்படுத்திய அறிவு கூட்டத்தினராக இருப்பார்களோ என எண்ணத் தோன்றுகிறது!

      நீக்கு
  2. அந்தந்த அரசுத்துறைகளில் பணியாற்றும் பார்வையற்றோரை ஒருங்கிணைத்துக் குழு அமைத்திருக்க வேண்டும் என்பது புதுமையான தொலைநோக்கில் மிகவும் பயன்தரக்கூடிய யோசனை. பேரிடருக்குப் பின்னான காலங்களில் உங்கள் கட்டுரையை மூல ஆவனமாகக்கொண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயல்பட்டாலே போதுமானது.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் ஊக்கம் தரும் பின்னூட்டத்தை அளித்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சார்.

      நீக்கு
  3. உங்கள் எதிற்பாற்பு நிரைவேறவில்லை மகேந்திரன். தஞ்சாவூரின் ஒரு பார்வையற்றவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அவரது சகோதரன்ன் துனைக்கொண்டே, அந்த பார்வையற்றவர் அதில் இருந்து மீண்டு வந்துல்லார். மிகநீண்ட கட்டுறை ஆணாள் மிகவும் பயனுல்ல பதிவு. எணக்கு சின்ன வருத்தம் மட்டும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி உங்களுக்கு. வருத்தம் எது என சொல்லாமல் விட்டது ஏனோ

      நீக்கு
  4. வணக்கம் மிக நீண்ட நல்ல கட்டுரை நமக்கு பேரிடர் காலங்களில் அரசு என்னென்ன செய்ய வேண்டும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் சிறப்பாக எழுதி இருந்தீர்கள் வாழ்த்துக்கள் அரசுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற கருத்துக்களை எல்லாம் நாம் தான் வலியுறுத்த வேண்டும் அதற்கு நம்மை போன்று இருக்கின்றவர்கள் அங்கே பணியாற்றவேண்டும் மாற்றுத்திறனாளி துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகமான பணி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் அந்த அலுவலகத்தில் நம்மைப் போன்றவர்கள் இருந்தால் நம் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள் அல்லது நமது சங்கங்கள் அந்த அதிகாரிகளோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் தொடர்ந்து அவர்களிடம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் அவ்வாறு தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசும்போது நடவடிக்கைகள் எடுப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று நினைக்கிறேன் அவர்களுக்கு அடிக்கடி நம்மைப் போன்று இருப்பவர்களை பற்றி சிந்திக்க நேரமில்லை என்று நினைக்கிறேன் அல்லது அதிகாரம் இல்லை என்றும் நினைக்கிறேன் நாம் அரசை குறை கூறி கட்டுரைகள் எழுதினால் அரசு உண்மையிலேயே குறை இருக்கிறது என்று நினைப்பதை விட்டுவிட்டு இவர்கள் எதிர்க்கட்சிகள் எதிர்க்கட்சியின் தூண்டுதலில் இவ்வாறு எழுதுகிறார்கள் என்று நம் மேல் கோபம் கொள்ளும் அரசாகத்தான் இப்போது இருக்கிறது பல நிகழ்வுகளில் பார்த்துவிட்டேன் அவர்களுக்கு ஏதோ குறை இருக்கிறது அதனால்தான் போராடுகிறார்கள் என்று நினைக்காமல் எதிர்க்கட்சி நமது புகழை சிதைக்க இவர்கள் மூலம் முயற்சி செய்கிறது என்று மட்டுமே உணரும் அரசாகத்தான் இந்த அரசு இருக்கிறது எனவே குறை கூறுவது நாம் எதிர்க் கட்சியின் பிரதிநிதி என்பதன் அடையாளமாக அரசு எடுத்துக்கொள்கிறது எனவே முடிந்தவரை அருளோடு குறை ஏதும் இல்லாதது போல் பழகி நமது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள முயற்சி செய்தால் நலமாக இருக்குமோ என்று நினைக்கிறேன் என்றால் எந்த அரசின் போக்கு இப்படித்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் மிக நீண்ட நல்ல கட்டுரை நமக்கு பேரிடர் காலங்களில் அரசு என்னென்ன செய்ய வேண்டும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் சிறப்பாக எழுதி இருந்தீர்கள் வாழ்த்துக்கள் அரசுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற கருத்துக்களை எல்லாம் நாம் தான் வலியுறுத்த வேண்டும் அதற்கு நம்மை போன்று இருக்கின்றவர்கள் அங்கே பணியாற்றவேண்டும் மாற்றுத்திறனாளி துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகமான பணி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் அந்த அலுவலகத்தில் நம்மைப் போன்றவர்கள் இருந்தால் நம் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள் அல்லது நமது சங்கங்கள் அந்த அதிகாரிகளோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் தொடர்ந்து அவர்களிடம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் அவ்வாறு தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசும்போது நடவடிக்கைகள் எடுப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று நினைக்கிறேன் அவர்களுக்கு அடிக்கடி நம்மைப் போன்று இருப்பவர்களை பற்றி சிந்திக்க நேரமில்லை என்று நினைக்கிறேன் அல்லது அதிகாரம் இல்லை என்றும் நினைக்கிறேன் நாம் அரசை குறை கூறி கட்டுரைகள் எழுதினால் அரசு உண்மையிலேயே குறை இருக்கிறது என்று நினைப்பதை விட்டுவிட்டு இவர்கள் எதிர்க்கட்சிகள் எதிர்க்கட்சியின் தூண்டுதலில் இவ்வாறு எழுதுகிறார்கள் என்று நம் மேல் கோபம் கொள்ளும் அரசாகத்தான் இப்போது இருக்கிறது பல நிகழ்வுகளில் பார்த்துவிட்டேன் அவர்களுக்கு ஏதோ குறை இருக்கிறது அதனால்தான் போராடுகிறார்கள் என்று நினைக்காமல் எதிர்க்கட்சி நமது புகழை சிதைக்க இவர்கள் மூலம் முயற்சி செய்கிறது என்று மட்டுமே உணரும் அரசாகத்தான் இந்த அரசு இருக்கிறது எனவே குறை கூறுவது நாம் எதிர்க் கட்சியின் பிரதிநிதி என்பதன் அடையாளமாக அரசு எடுத்துக்கொள்கிறது எனவே முடிந்தவரை அருளோடு குறை ஏதும் இல்லாதது போல் பழகி நமது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள முயற்சி செய்தால் நலமாக இருக்குமோ என்று நினைக்கிறேன் என்றால் எந்த அரசின் போக்கு இப்படித்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மை பிரதிநிதித்துவ படுத்த நம் சார்பாக ஒருவர் என்றில்லாமல் நாமே நமக்காக இயங்கும் அரசு அலுவலகங்களில் பெருந்திரளாக பணியாற்றும் வாய்ப்பு சூழல் ஏற்படவேண்டும் என்பதே எனது கருத்து. கட்டுரையின் சாரத்தை உள்வாங்கிக்கொண்டு உற்சாகப்படுத்துகிற வார்த்தைகளால் வாழ்த்து சொன்ன உங்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. அரசின் தொடர் புறக்கணிப்பில் பார்வை மாற்றுத்திறனாளிகள் என்ற பேராசிரியர் டாக்டர் யூ மகேந்திரன் அவர்களது கட்டுரை, அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய தொலைநோக்கு பார்வை கொண்ட கட்டுரையாகவே நான் அதை படித்து வியந்தேன். கட்டுரையில் கூறப்பட்டிருந்த கருத்துக்களும், தகவல்களும் அரசிற்கு சென்று சேருமே ஆனால், அதைவிட பெரிய வெகுமதியை இக்கட்டுரைக்கு எவராலும் கொடுத்துவிட இயலாது என்பதே எனது கருத்து.. மாணவர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், முதியவர்கள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டோர் என பார்வையற்ற சமுதாயத்தில் அனைத்து பிரிவினரின் இன்னல்களையும் அலசி ஆராய்ந்தால் மட்டுமே, இப்படிப்பட்ட சமுதாய நலன் பயக்கும் கட்டுரையை எழுத இயலும். அதை நீங்கள் திறம்பட செய்து முடித்து இருக்கின்றீர்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அதனால் கட்டுரையின் நீலத்தை நான் ஒரு பொருட்டாக பார்க்கவில்லை. அதன் தரமே இங்கு வென்றுள்ளது. மேலும் ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் 2006 இன் படி சம பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை பிரிவின்கீழ் கூறப்பட்ட நான்கு விதிமுறைகளையும் அரசு பின்பற்றவில்லை என்ற உங்களது கருத்தை வாசித்த பிறகு தான், அரசாங்கத்தால் நாம் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றோம் என்பது வெட்டவெளிச்சமாகி இருக்கின்றது.., ஆகவே இக்கட்டுரை அனைத்து பார்வையற்றோரின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கின்றது!
    இதுவே ஒரு சிறந்த எழுத்தாளருக்கு கிடைக்கக்கூடிய வெற்றி. வாழ்த்துக்கள்! உங்கள் பணி செவ்வனே தொடர!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது கட்டுரையை படித்து உணர்ந்து கட்டுரையின் பால் நின்று அதில் சொல்லப்பட்டதை மிகச் சரியாக அவதானித்து நீங்கள் இட்டிருந்த பின்னூட்டம் எனக்கு கிடைத்த பெரும் பேறு. என்னால் முயன்றவரை பார்வையற்றவர் இன் நிலைகளை எடுத்துச் சொல்ல முயன்றேன். எனது இந்த முயற்சி சரியாக வெளிப்பட்டிருக்கிறது என்பதை உங்களின் கருத்தின் வழியே புரிந்து கொள்ள முடிந்தது. இதனை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பார்க்கும் விதத்திலான முயற்சி எடுக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. அது விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன். என்னை உளமார வாழ்த்திய உங்களின் பெயர் சொல்லி நன்றி உரைக்கும் வாய்ப்பை வழங்காமல் விட்டது ஏன்? ஏதாவது தொழில்நுட்ப சிக்கலாக இருக்கலாமோ என்று நினைக்கிறேன். இருப்பினும் எனக்கு கிடைத்த ஆக சிறந்த வாழ்த்தை தந்த உங்களுக்கு எனது இதய பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!

      நீக்கு
  7. ஆங்கிலப் பேராசிரியர் அழகு தமிழில் வடித்திருக்கும் ஆகச் சிறந்த படைப்பு இது. விளிம்பு நிலை பார்வை மாற்றுத் திறனாளிகள் குறித்த அடிமனதின் ஆதங்கங்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் மிகத் துல்லியமாக வெடித்துச் சிதறி இருக்கின்றன. தகவல்களைத் திரட்டியதிலூம், கிடைக்கப் பெற்ற கருத்துக்களுக்கு எழுத்துருவம் கொடுத்ததிலும் கட்டுரையாளரின் ஆர்வம், ஈடுபாடு, கவனம், சமூக அக்கறை, தொலைநோக்கு பார்வை உள்ளிட்ட மெச்சத் தகுந்த அம்சங்கள் தெளிவாகவே வெளிப்பட்டிருக்கின்றன.
    வாழ்த்துக்கள் நண்பரெ!
    By Celin X.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது கட்டுரைக்கு இப்படி ஒரு நல்வாழ்த்து கிட்டுமென்று நான் எதிர் பார்க்கவில்லை மேடம். நமது மின் இதழுக்கு தலைசிறந்த படைப்புகளை தந்து எழுத்தில் முத்திரை பதித்து பல உயரங்களை தொடை இருக்கும் நீங்கள் என்னை வாழ்த்தியது உள்ளபடியே விவரிக்க இயலா மகிழ்வைத் தந்தது. உங்களின் சில வார்த்தை கொண்டு எனது கட்டுரையை அளந்து தந்திருக்கும் அந்த வாழ்த்து மொழி என்னை மேலும் உயர்த்தும் என்ற நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. தொடர்ந்து பயணிப்போம் செலின் மேடம்!

      நெஞ்சார்ந்த நன்றி உங்களுக்கு தோழமையுடன்.

      நீக்கு