ஓய்வறை: விளையாட்டு அரங்கில் மூடநம்பிக்கைகள் - சிதம்பரம் இரவிச்சந்திரன்


graphic விளையாட்டில் மூடநம்பிக்கைகள்

      இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு பாகமே மூடநம்பிக்கைகள். நம் பாட்டிகளும், அம்மாக்களும் நமக்கு நல்ல பழக்கவழக்கங்களைச் சொல்லிக்கொடுத்து வளர்த்தார்கள். என்றாலும், அவர்கள் அதிலும் சில மூடநம்பிக்கைகளைக் கலந்தே நமக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். நாம் எவ்வளவுதான் சீர்திருத்தச் சிந்தனை உடையவராக இருந்தாலும் நம் எல்லோருக்குள்ளும் ஒரு சில மூடநம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன. சாமான்யமானவர்களைப் பொறுத்தவரை இது ஒரு சாதாரண விஷயம். ஆனால், இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகள் அதிகமாக விளையாட்டுத்துறை பிரபலங்களின் இடையிலும் காணப்படுகிறது என்பதுதான் வியப்பூட்டும் விஷயம்.

      இத்தகைய மூடநம்பிக்கைகள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு இடையில்தான் அதிகமாக உள்ளது. இத்தகைய நம்பிக்கைகளே தங்களின் வெற்றிக்குக் காரணம் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இந்த மூட நம்பிக்கைகள் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இடையில் மட்டும் இல்லாமல், வெளிநாட்டு வீரர்களுக்கு இடையிலும் காணப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டில் காவியம் படைத்த சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் மட்டும் அரசராக இல்லை, மூடநம்பிக்கைகளிலும் அரசராக இருக்கிறார். அவரே தனக்கு உள்ள மூடநம்பிக்கைகளைப் பற்றிப் பல சமயங்களிலும் கூறியுள்ளார். மட்டை வீசி விளையாடச் செல்லும்போது தன் இடதுகாலில் பேடை (pad) முதலில் கட்டிக்கொள்வது அதிர்ஷ்டம் என்று நம்புகிறார். 2011ல் தன் கடைசி உலகக் கோப்பைப் போட்டியில், தன் அதிர்ஷ்டமான பேட்டை எடுத்துக்கொண்டு போனார். இன்னொரு சுவாரசியமான சம்பவமும் அந்த உலகக் கோப்பைப் போட்டியில் நடந்தது. அதிர்ஷ்டமான பேட்டைப் பயன்படுத்தி விளையாடிய சச்சின் ஸ்ரீலங்காவுடன் நடந்த கடைசிப் போட்டியில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற நேரிட்டது.

      அவுட் ஆகி வெளியில் வந்த பிறகும் சச்சின் தன் மூடநம்பிக்கையைத் துணைக்கு அழைத்துக் கொண்டார். அவுட் ஆனதால் ஏற்பட்ட சோகத்தைத் தாங்கிக் கொள்ளமுடியாத சச்சின் டிரசிங் ரூமிலேயே உட்கார்ந்துவிட்டார். தன்னுடைய குழுவினர் நன்றாக விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்த சச்சின் இருந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. தனக்குப் பக்கத்தில் இருந்த ஷேவாக்கையும் இடத்தை விட்டு நகர சச்சின் அனுமதிக்கவில்லை. இடத்தை விட்டு நகர்ந்தால் இந்திய அணி தோற்றுப் போய்விடுமோ என்று சச்சினுக்குப் பயமாக இருந்தது. சச்சின் இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்ததனாலோ என்னவோ இந்தியா அந்தப் போட்டியில் வெற்றி பெற்று உலகக் கோப்பையைச் சொந்தமாக்கியது.
graphic மைதானத்தில் மகிழ்ச்சியில் சச்சின் கைகளை உயர்த்துகிறார்

      இந்தியா முதல்முறையாக உலகக் கோப்பையை வென்ற 1983- ஆம் ஆண்டிலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. இந்தியாவிற்கும், ஜிம்பாபேவிற்கும் இடையில் நடந்த கால் இறுதி போட்டியில், 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் விழுந்திருந்த மோசமான நிலையில், இந்திய அணித்தலைவர் கபீல்தேவ் தன்னம்பிக்கையுடன் சிறப்பாக விளையாடுவதைப் பார்த்த  அன்றைய குழு மேலாளராக இருந்த மான்சிங் மற்ற வீரர்கள் அவர்கள் உட்கார்ந்திருந்த இருக்கைகளை விட்டு எழுந்திருக்கக்கூடாது என்று பிடிவாதம் பிடித்தார். அந்தப் போட்டியில் கபில்தேவ் அவுட் ஆகாமல் 175 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெறச் செய்தார். தனக்கு உள்ள திறமையில் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தான் இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளை நம்புகிறார்கள் என்று கருதும் கபீல்தேவ் எப்போதும் கழுத்திலும், கைகளிலும் அணிந்து கொண்டிருந்த மாலையையும், கைப்பட்டையையும் (bracelet) கழற்றி எறிந்தார்.

      சச்சின் தன் இடதுகாலில் முதலில் பேடைக் கட்டுவதை அதிர்ஷ்டமாகக் கருதினார். ஆனால், ராகுல் திராவிட் தன்னுடைய வலதுகாலில் பேடை முதலில் கட்டிக் கொள்வதை அதிர்ஷ்டமாக நினைத்தார். சச்சின் அளவிற்கு புகழ் பெற்றவர்தான் விராட் கொஹ்லி. ஆரம்பகாலங்களில் அவரும் சிறிதளவு மூடநம்பிக்கையுடந்தான் இருந்தார். அதிர்ஷ்டத்தைத் தனக்குக் கொண்டுவந்து சேர்ப்பது ஒரு ஜோடி கையுறைகள்தான் என்று அவர் நம்பினார். எப்போது பார்த்தாலும் ஒரே ஒரு ஜோடி கையுறைகளை மட்டுமே பயன்படுத்தி வந்த அவர் காலப்போக்கில் மெல்ல அந்த மூடநம்பிக்கையைக் கைவிட்டுவிட்டார். யுவராஜ் சிங்கும், மகேந்திரசிங் தோனியும் அவர்கள் அணிந்துகொள்ளும் ஜெர்சிகளில் உள்ள எண்களில் அதிர்ஷ்டம் இருப்பதாகக் கருதினர். யுவராஜ் பிறந்தது டிசம்பர் 12-ஆம் தேதி. அதாவது 12-ஆம் மாதத்தில் 12-வது நாள்.  அதனால் 12- தன் அதிர்ஷ்ட எண்ணாக நம்பிய அவர் அந்த எண்ணை உடைய ஜெர்சியை உபயோகித்தார். ஜூலை மாதம் 7-ஆம் தேதி அதாவது 7-வது மாதம் 7-வது நாளில் பிறந்ததால் தோனி தன் அதிர்ஷ்ட எண் 7 என்று நம்பினார். ஜெர்சியிலும் அவர் அந்த எண்ணையே பயன்படுத்துகிறார். இவர்கள் இருவரும் இப்படி இருக்க, வீரேந்திர சேவாக் நம்பரே இல்லாத ஜெர்சிதான் தனக்கு அதிர்ஷ்டம் என்று நம்பினார். விளையாட ஆரம்பித்தபோது 44-ஆம் எண்ணை உடைய ஜெர்சியைதான் அவர் அணிந்து கொண்டிருந்தார். பிறகு ஒரு ஜோசியரின் ஆலோசனைபடி நம்பர் இல்லாத ஜெர்சியை அவர் அணிய ஆரம்பித்தார். நம்பர் இல்லாத ஜெர்சிதான் தனக்கு அதிர்ஷ்டம் என்று அவர் கூறியுள்ளார். இந்திய பந்து வீச்சாளர் சஹீர் கானும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள்  தலைவர் ஸ்டீவ் ஓயும் துண்டுகளில்தான் அதிர்ஷ்டம் உள்ளது என்று கருதியிருந்தார்கள். சஹீர்கான் எல்லா முக்கியப் போட்டிகளிலும் ஒரு மஞ்சள் துண்டைக் கையுடன் வைத்துக்கொண்டார். ஸ்டீவ் தன் பாட்டித் தனக்குத் தந்த ஒரு சிவப்புத்துண்டில்தான் தன் அதிர்ஷ்டம் இருப்பதாக நம்பினார். முன்னாள் இந்திய வீரர் மொஹிந்தர் அமர்நாத்தும், தன் சிவப்புத்துண்டை அதிர்ஷ்டமாக நம்பினார். ஒரு இன்னிங்க்ஸில் 10 விக்கெட்டுக்களை வீழ்த்திய பெருமைக்கு உரியவர் அனில் கும்லே. அந்தப் போட்டியில் ஒவ்வொரு ஓவரிலும் பந்து வீச ஆரம்பிக்கும்போது சச்சினின் கையில் தன்னுடைய தொப்பியையும், ஸ்வெட்டரையும் தந்துவிட்டுப் போனார்.

      நாம் மூடநம்பிக்கையாகக் கருதுகிற விஷயம் ஒரு விளையாட்டுவீரரைப் பொறுத்தவரை அது அவரின் தன்னம்பிக்கையின் அடையாளமாக இருந்தது. தன் குருவின் புகைப்படத்தைத் தன் பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு போவதை சௌரவ் கங்குலி அதிர்ஷ்டமாக நினைத்தார்.

      பொதுவாக புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீட்டிற்குள், மங்களகரமான இடங்களில், விழா மேடைகளில்  வலதுகாலை முதலில் எடுத்துவைத்து நுழைவது என்பது அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்று நாம் நம்புகிறோம். அதனால் இத்தகைய பழக்கவழக்கங்களை மூடநம்பிக்கையாகக் கருதுவதைக் காட்டிலும் வீரர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் விஷயமாகவே நாம் கருத வேண்டியுள்ளது. பிரபல இந்திய வீரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆகியவர்கள் டிரசிங் ரூமில் இருந்து மைதானத்திற்கு பேட் செய்யப் போகும்போது,  கவாஸ்கரின் வலதுபக்கமாக நடப்பதை அதிர்ஷ்டமாகக் கருதி இருந்தார்கள். ஸ்ரீகாந்த் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தார். இவர் 1986 – 87ல் சுனில் கவாஸ்கர் தன் கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாம் இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்காகக் கிளம்பியபோது, ஸ்ரீகாந்திடம் நான் வலதுபக்கமாக நடக்கட்டுமா?”, என்று கேட்டார். மனதில்லாமல் ஸ்ரீகாந்த் அதற்கு ஒப்புக்கொண்டார். அந்தப் போட்டியில் 17 ரன்களில் இந்தியா தோல்வி அடைந்தது என்றாலும் கவாஸ்கர் 96 ரன்களைக் குவித்தார். ஆனால், இடதுபக்கமாக நடந்த ஸ்ரீகாந்த் வெறும் 6 ரன்களை மட்டுமே எடுத்தார்.

      ஸ்ரீலங்கா வீரர் சனத் ஜெயசூரியாவிற்கும் மூடநம்பிக்கை உண்டு. அவர் ஒவ்வொரு பந்தை எதிர்கொள்வதற்கு முன்பும் தன் கால்களில் உள்ள இரண்டு பேட்களையும், கையுறைகளையும், தலைக்கவசத்தையும் நேராக்கிக்கொள்வார். ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் விளையாடுவதற்காக மைதானத்திற்குள் நுழைவதற்கு முன்பு இசையை உச்ச சத்தத்தில்  கேட்பது வழக்கம்.  அவ்வாறு செய்வது தனக்கு அதிர்ஷ்டம் என்றும், அது தன் கவனத்தை அதிகரிக்க உதவும் என்றும் அவர் திடமாக நம்பினார். இன்னொரு ஸ்ரீலங்கா வீரர் மஹிளா ஜெயவர்த்தனே விளையாடிக் கொண்டிருக்கும்போது நிரந்தரமாக பேட்டிற்கு முத்தம் கொடுக்கும் வழக்கம் உடையவர். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி அவ்வப்போது பிங்க் நிற ஜெர்சியை அணிந்து கொள்வதற்குப் பின்னாலும் சுவாரசியமான கதை இருக்கிறது. மார்பகப் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் பிங் நிறத்தில் உள்ள ஜெர்சியை அவர்கள் அணிந்து கொள்கிறார்கள் என்றாலும் இதற்குப் பின்னால் ஒரு ரகசியமும் இருக்கிறது. பிங்க் நிற ஜெர்சியைப் போட்டுக்கொண்டு விளையாடிய எல்லா ஆட்டங்களிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றிருக்கிறது. அது போல .வி.டிவிலியஸ் இந்த ஜெர்சியை அணிந்துகொண்டு விளையாடியபோது சாதனைகளைப் படைத்தார்.

      இரவிச்சந்திரன் அஸ்வின் தன் மூடநம்பிக்கையைக் குறித்து ஒரு சமயம் இவ்வாறு கூறியுள்ளார். இங்கிலாந்துடன் ஆடிய ஒரு டெஸ்ட் தொடர் போட்டியில், இந்திய அணி 194 என்ற ஸ்கோரை எடுப்பதற்காக படாதபாடு பட்டுக் கொண்டிருந்தது. ஆடுகளத்தில், ஹார்திக் பாண்டியா ஆடிக்கொண்டிருந்தார். அஸ்வின் குளியல் அறையில் இருந்தார். டிரசிங் ரூமில் இருந்த அந்த குளியலறையிலேயே ஒருவேளை தான் இருந்தால் ஹார்திக் மறுபடியும் ரன்களைக் குவிப்பாரோ என்று நினைத்து குளியலறையிலேயே இருக்கவேண்டும் என்று நினைத்தார். ஆனால், அதிகநேரம் அவரால் குளியலறைக்குள்ளேயே இருக்கமுடியவில்லை. இந்தியா அந்தப் போட்டியில் 31 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

graphic கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தாட்டம் ஆடுகிறார்
      கிரிக்கெட் வீரர்களிடம் மட்டும்தான் மூடநம்பிக்கைகள் இருக்கின்றன என்று நினைத்து விடக்கூடாது. பிரபலமான மற்ற விளையாட்டு வீரர்களிடமும் மூடநம்பிக்கைகள் உள்ளது. கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டானின் நம்பிக்கை வினோதமானது. ஆரம்பகாலங்களில், அவர் விளையாடிய யுனிவர்சிட்டி ஆஃப் நார்த் கரோலினா சீருடைகளையே தான் விளையாடும் எல்லா ஆட்டங்களிலும் அணிந்துகொண்டார். அவர் அதை மறைப்பதற்காக அவற்றின் மேல் நீளமான டிரவுசர்களை அணிந்து கொண்டார்.  மற்றுமொரு பிரபல கூடைப்பந்து வீரர் ஜெய்சன் டெரியின் மூடநம்பிக்கை ஆச்சரியம் அளிக்கக்கூடியது. 5 ஜோடி சாக்ஸ்களைப் போட்டுக் கொண்டுதான் அவர் விளையாட்டுக் களத்திற்குள் நுழைவார். அது மட்டும் இல்லாமல் போட்டிக்கு முந்தையநாள் எதிரணியின் யூனிபார்ம் டிரவுசர்களைப் போட்டுக்கொண்டுதான் தூங்குவார். இதேபோல போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மூடநம்பிக்கை நமக்கு வியப்பை ஏற்படுத்துபவை. அணி பயணம் செய்யும் பஸ்ஸின் கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டுதான் அவர் எப்போதும் பயணம் செய்வார். அதுபோல பஸ்ஸில் இருந்து இறங்கும்போது கடைசியாகத்தான் இறங்குவார். ஆட்டத்தின் முதல் பாதிக்குப் பிறகு ஹேர்ஸ்டைலை மாற்றிக்கொள்வது, மைதானத்திற்குள் நுழையும்போது வலதுகாலை முதலில் எடுத்துவைத்து நுழைவது போன்ற மூடநம்பிக்கைகளும் அவருக்கு உண்டு. டென்னிசில் சாதனைகள் பல படைத்துள்ள ரபேல் நடாலிற்கும் மூடநம்பிக்கைகளின் ஒரு நீளமான பட்டியலே இருக்கிறது. கையில் ஒரே ஒரு ராக்கெட்டைப் பிடித்துக்கொண்டு மட்டுமே நடால் களத்திற்குள் நுழைவார். வலதுகாலை வைத்து டென்னிஸ் கோர்ட்டின் லைனைத் தாண்டிதான் மைதானத்திற்குள் நுழைவார். லைனை மிதிக்காமல் இருப்பதற்கு மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்வார். டென்னிஸ் கோர்ட்டுக்குள் நுழைவதற்கு சிறிது நேரத்திற்கு முன்புதான் அவர் தன் தலைப்பட்டையை (headband) அணிந்துகொள்வார். எதிராளி இருக்கையில் இருந்து எழுந்து நடுவரின் அருகில் கை குலுக்குவதற்காகச் சென்றபிறகே நடால் தன்னுடைய சீட்டில் இருந்து எழுந்திருப்பார். இரண்டு பாட்டில்களில் தண்ணீர் எடுத்துச் செல்லும் பழக்கம் உடைய நடால் தன்னுடைய இருக்கைக்குச் சற்று முன்பாக அவற்றை வைத்துக்கொள்வார்.      எதிராளிகளுடன் கோர்ட்டுக்குள் நுழையும்போது அந்தப் பாட்டில்களுடைய லேபிளைத் தான் விளையாடும் பாகத்தில் உள்ள பேஸ்லைனைப் பார்த்துத் திருப்பி வைத்துக்கொள்வார்.  

graphic செரினா வில்லியம்ஸ் ஆடுகளத்தில் இறகுப்பந்தாட்டம் ஆடுகிறார்
      ஆண்களிடம் மட்டும் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் காணப்படுவதில்லை. பெண்களிடமும் இவை உள்ளன. டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் குளிக்கும்போது பயன்படுத்தும் செருப்புகளையே கோர்ட்டுக்குக் கொண்டுவருவார். ஷூ லேஸை ஒரு வித்தியாசமானவிதத்தில் எப்போதும் கட்டிக்கொள்வது, முதல் சர்வீசிற்கு முன்பு ஐந்து தடவை பந்தை பவுன்ஸ் செய்வது, இரண்டாவது சர்வீசிற்கு முன்பு இரண்டு தடவை பந்தை பவுன்ஸ் செய்வது, ஒரு டோர்னமெண்ட் முழுவதும் ஒரே ஒரு ஜோடி சாக்சை மட்டும் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்ற பழக்கம் போன்றவையும் அவரிடம் உண்டு. வழக்கமாக செய்கிற இதை எல்லாம் செய்யாமல் போகும்போதுதான் தான் தோல்வி அடைவதாகவும் அவர் நம்புகிறார்.

      மூடநம்பிக்கைகளை வெறும் முட்டாள்தனமானவை என்று கருதி ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது. நம்மில் பலரும் கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்கும்போது இருந்த இடத்தை விட்டு நகராமல் இருப்போம். அப்படி என்றால் நாமும் இதேபோல மூடநம்பிக்கைகளுக்கு அடிமையானவர்கள்தானே! விளையாட்டுத் துறையில் மட்டும் அல்ல மற்ற எல்லாத் துறைகளிலும் இது போன்ற மூடநம்பிக்கைகளே தன்னம்பிக்கையை அளிப்பவையாக உள்ளன.

      நம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும் உங்களுடைய நம்பிக்கைகள் உங்களைக் காப்பாற்றட்டும்”.


(கட்டுரையாளர் ஓய்வுபெற்ற அறிவியல் ஆசிரியர். பல மலையாளச் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர். அறிவியல் இதழ்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்).

தொடர்புக்கு: nrvikram19@gmail.com

3 கருத்துகள்:

  1. மூடநம்பிக்கையை ஒருகாலும் நம்பிக்கையாகக் கொள்ள முடியாது. இருப்பினும் உங்கள் தொகுப்பு அருமை.

    பதிலளிநீக்கு
  2. மூடநம்பிக்கையை ஒருகாலும் நம்பிக்கையாகக் கொள்ள முடியாது. இருப்பினும் உங்கள் தொகுப்பு அருமை.

    பதிலளிநீக்கு
  3. மூடநம்பிக்கையை ஒருகாலும் நம்பிக்கையாகக் கொள்ள முடியாது. இருப்பினும் உங்கள் தொகுப்பு அருமை.

    பதிலளிநீக்கு