வர்ணனையாளற் அறை: பார்வையற்றோர் வாழ்வில் வர்ணனைகள் - டாக்டர். U. மகேந்திரன்


Graphic: ஆடுகளத்தை வர்ணனையாளர் அறையில் இருந்து இரு உருவங்கள் பார்வையிடுகின்றன

     வர்ணனைகள் இல்லாத விளையாட்டுகளே இல்லை என்பது நிதர்சனம். இருப்பினும், சர்வதேச கவனம் பெற்ற ஹாக்கி, டைப்பந்து, டென்னிஸ் தொடங்கி நமது மண்ணோடும், மக்களின் வாழ்வியலோடும் இரண்டறக் கலந்துபோன பாரம்பரியம் மிக்க மஞ்சுவிரட்டு, ரேக்ளாரேஸ், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விளையாட்டுகள் வரை வர்ணனை ஆதிக்கம் செலுத்திக் கொண்டுதான் இருக்கிறது.

     இதுபோன்ற வர்ணனைகள் எவையும் பார்வையற்று இருக்கும் தரப்பினரை உள்ளடக்கும் நோக்கத்திற்காகச செய்யப்படுவது இல்லை. ஆனால், அவற்றைத தங்களுக்கான வாய்ப்புகளாக இயல்பாகவே கருதும் பார்வையற்றவர்கள், அத்தகைய வர்ணனைகளின் ஊடே தங்களுக்குத் தேவைப்படும் செய்திகளைக் கிரகித்துக் கொள்கின்றனர்.

      அலங்காநல்லூர், லமேடு ஆகிய பிரசித்திப் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நேரடி ஒலிபரப்புச் செய்கையில் வீட்டில் இருக்கும் ஒருவர் ஒலி அளவைக் குறைத்து விட்டால் பார்வையற்றவருக்கு வருகிற ஆத்திரத்தைக் கொண்டு கண்டிப்பாக இரண்டொரு காளைகளை அடக்கி விடலாம்! அப்படியென்றால் பார்த்துக் கொள்ளுங்கள் வர்ணனை மீது விழிசசவால் கொண்டவன் எத்தகைய காதலைக்  கொண்டிருக்க முடியும் என்று.

      சமுகத்தில் பொதுபுத்திக் கொண்டிருக்கிற முரட்டுச் சித்தாந்தங்களில் ஒன்று பார்வையற்று இருந்தால் கடவுள் சகட்டுமேனிக்கு ஆற்றலை வாரிக் கொடுத்திருப்பான் என்பது. பெரியாரின் வார்த்தையில் அதை மறுப்பதென்றால் அந்த வெங்காயமெல்லாம் ஒன்றும் கிடையாது. ஐம்புலன்களில் பெரும்பாலும் ஆதிக்கபபுலனாக இருக்கும் கண் இயங்கத் தொடங்குவதற்கு முன்போ அல்லது இடையிலேயோ விருப்ப ஒய்வு பெற்று விடுவதால், செவியின் ஆற்றலைக் கூர்தட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது அவ்வளவுதான்.

      அவ்வாறு வியந்தோதத்தக்க பேராற்றலைப் பார்வையற்றவரின் செவிகள் அநேக நேரங்களில் பெற காரணமாக இருப்பது பலதரப்பட்ட கவனித்தல்,  அதாவது (listening). அதுபோன்ற பலதரப்பட்ட கவனித்தலில் நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் விளையாட்டு வர்ணனைகளுக்கு ஆகச் சிறந்த இடம் உண்டு.

      இது ஒரிடத்தில் மனதை நிறுத்தி நினைவாற்றலைப் பெருக்கிக் கொள்கிற வாய்ப்பைப் பார்வையற்றவர்களுக்கு நிரம்பததருகிறது என்று சொன்னால் அது சற்று மிகையாக இருந்தாலும் அதிலும் உண்மை இருப்பதை மறுதலிக்க முடியாது.
விளையாட்டுச் சார்ந்த வர்ணனையும், பார்வை உள்ள அல்லது அரைபார்வை கொண்ட உற்ற சகாக்கள் மற்றும் உறவுகள் புற உலகத்தை விவரித்துசசொல்கிற விளக்கங்களும் ஒரு பார்வையற்றவரின் வாழ்வில் கைகோர்த்துப் பயணிப்பது மிகவும் நுட்பமாக கவனித்து அறியததக்கதாகும்.

      இது ஒருவிதத்தில் அவர்களின் மொழிபபுலமையைப் பட்டை தட்டுகிற காரியத்தையும் செய்கிறது. வெகு இயல்பாக ஆங்கிலத்தையும் ஹிந்தியையும் பார்வையற்றவன் முறையான பயிற்சி பெறாமலேயே பேச துவங்க வர்ணனை கவனிப்பு முக்கியககாரணமாக இருந்து வருகிறது. ஆங்கில ஆசிரியரிடமிருந்து கற்றுக் கொள்வதைககாட்டிலும் விளையாட்டு வர்ணனையாளர்களின் மொழிபபயன்பாட்டிலிருந்து தெரிந்து கொள்வது சற்று அதிகம். அல்லது வகுப்பில் ஆசிரியர் கற்பிக்கும் ஆங்கிலம் மெருகேர வர்ணனைகள் பயன்பட்டதைச் சில நண்பர்கள் அறுதியிட்டுசசொல்லககேட்டிருக்கிறேன்.

வர்ணனை வெறியர்கள்:

      பார்வையற்றோருக்கான சிறப்பு உண்டு உறைவிடபபள்ளிகளில் கிரிக்கட் வர்ணனைகள் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருப்பது அதன் அடையாளங்களில் ஒன்று. அதில் சில அதிதீவிர கிரிக்கட் வர்ணனை பிரியர்கள், இல்லை இல்லை வெறியர்கள் அங்கு சில வேளைகளில் வழங்கப்படும் சிறப்பு உணவைப் புறக்கணித்தாவது வர்ணனையை உண்டு ஏப்பமிடுவது வழக்கம். அதிலும் சிலர் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் அல்லது உலகக்கோப்பை போட்டிகள் ஒலிபரப்பு செய்யும் போது சிக்லீவ் எடுத்துத் தினசரி வகுப்புகளைததியாகம் செய்வர்.

      நண்பன் ஒருவன் தனக்குபபிடிக்காத கணிதததேர்வைததன்னைககவர்ந்த இந்தியா - ஆஸ்திரேலியா விளையாட்டை ரசிக்க எழுதாமல் போனான் என்பது இங்கு அடிக்கடிடததக்கது. தனக்கென நியமிக்கப்பட்ட எழுத்தர் எனும் பரிட்ச்சை வர்ணனையாளர் காத்திருப்பார் என நன்கு அறிந்தும், தனது உள்ளம் கவர்ந்த பிரேம்குமார் என்கிற கிரிக்கட் வர்ணனையாளரின் குரலைததரிசிக்கததுணிந்தான். அதுவே எதிர்காலத்தில் இளங்கலையில் ஆங்கிலம் எடுத்துபபடிக்கும் துணிவைததந்து இப்பொழுது வெற்றிகரமான ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகததான் பணியாற்ற அடித்தளuம் அமைத்துததந்ததாகசசொல்கிறார் அவர்.

வாரியம் பொறுப்பல்ல:

      இதுபோன்ற வர்ணனைகளைக் கேட்டு மெய்சிலிர்க்கககாரணமாக அமைந்தது ஒலிநாடாக்களில் பாடங்களைபபதிவுசெய்து படிக்கும் முறை. அதாவது பாடங்கள் படிக்கபபயன்படும் டேப்ரெகார்டர் பண்பலை நிகழ்ச்சிகளைக் கேடகிற வசதியையும் கொண்டிருந்ததால் பாடத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளககூடிய தகவல்கள் விளையாட்டு வர்ணனைகளிடம் இருந்து உள்வாங்கிக் கொள்ளும் மொழி அறிவின் வழியே வெளிப்படுவது ஒரு தன்முனைப்போடு கூடிய கேட்டல், கற்றல் முறைக்குச் சான்றாக அமைந்து விட்டது. அப்படி ஒருமுறையே உளவியலில் இல்லையே என உள்ளம் கொதிப்படைந்தால் அதறகு வாரியம் பொறுப்பல்ல... வாரியமா என வியக்காதீர். சங்கம் பொறுப்பல்ல என்கிற சொலவடை முறையில் கட்டுரையின் தன்மையை உள்வாங்கி பன்னப்பட்ட உல்ட்டா அது!

வர்ணனை பற்றி நம்மவர்கள்

      வர்ணனை என்று எடுத்துக் கொண்டால் கிரிக்கெட்டுக்குச் செய்யப்படுகிற ஒன்று தான் பார்வையற்றவரை ஆட்டிப் படைக்கிறது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. பார்வையற்றவர்கள் பயிலும் இடங்களிலும், அவர்கள் வசிக்கிற பட்டித்தொட்டி தோறும் பெரும்பந்தமாக பிணைந்து தொடர்வது கிரிக்கெட் வர்ணனை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பல பார்வையற்றவர்களை விளையாட்டை நோக்கிக் கைபிடித்து அழைத்து வந்த பெரும்பொறுப்பை ரேடியோவில் செய்யப்படும் வர்ணனை செய்தது என்றால் அது மிகையில்லை. தடகளம் உள்ளிட்ட பலதரப்பட்ட போட்டிகளில் மாநில மற்றும் தேசிய அளவில் பார்வையற்றவர்கள் கோலோச்சிநாளும், கிரிக்கெட் வர்ணனையை மெய்மறந்து கேட்பதற்கு நிகராக வேறு எந்த விளையாட்டு வர்ணனையும் அவர்களைச் சென்று சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
களநிலவரம் இப்படி இருப்பதன் காரணத்தால், கிரிக்கெட் வர்ணனை ஏற்படுத்திய தாக்கம் குறித்து சில நண்பர்களிடம் பேசியதை இனிக் காண்போம்.

      வர்ணனை குறித்தான தனது அனுபவத்தை சுவாரசியமாகபபகிர்ந்து கொண்ட விரல்மொழியர் இதழின் இணையாசிரியரும், புதுக்கோட்டை மாவட்டம் கரூர் அரசு மேல்நிலைபபள்ளியில் தமிழசிரியராகப் பணிபுரிந்து வருபவருமான திரு. பொன். சக்திவேல், தனது பள்ளிப் பருவத்தில் ஆசிரியர் அறியாவண்ணம் காதுகேள்பொறியைச்  (earphone)  சட்டைக்குள் மறைத்துக் கொண்டு கிரிக்கெட் வர்ணனையை ரசித்த  கல்லத்தனத்தைப  பகிர்ந்து கொண்டார். அவரின் துரதிர்ஷ்டம் அப்பொழுது பிரபலமாக வானொலி வர்ணனைகள் என்றாலே எதிரொலிக்கும் பிஎஸ்என்எல் சக்கா என்பது அதிர்ந்து கேட்க, ஆசிரியரிடம் அகப்பட்டு  பிறகு ஏதோ சொல்லித் தப்பித்த நினைவை நெகிழ்ச்சியோடு விவரித்தார்.

      வர்ணனை என்று வருகிற போது அதில் விருப்பு வெறுப்புக்கு இடம் இருக்கவே கூடாது என்கிற தனது அபிலாஷையை   அழுத்தமாய்சசொல்லும் சக்திவேல், இலங்கை வானொலியில் தமிழுக்குக் குறைந்த ஓவர்களே  கொடுத்து ஜகன்மோகன் என்கிற வர்ணனையாளர் சபிக்கப்பட்டு இருந்ததைப் பகிர்ந்து கொண்டார். அதில் இலங்கை அணி தோற்று விடும் என்கிற நிலை ஏற்படுகிறது என்றால் வர்ணனையை இழுத்துச் சாத்திவிட்டு பாடல்கள் ஒலிபரப்பபபட்டுவிடும் என்பதை சொல்லி விமர்சிக்கததவறவில்லை அவர்.

     மராட்டி உள்ளிட்ட எண்ணற்ற வட்டார மொழிகளில் கிரிக்கட் வர்ணனை செய்வதை தான் கேட்டிருப்பினும், தமிழில் செய்யப்படும் தொழில் நேர்த்தியை அவை கொண்டிருக்கவில்லை என்று சொல்கையில் அவர் குரலில் ஒரு பெருமிதம் இருந்தது.

      பள்ளிப் பருவம் முதலே கிரிக்கெட் வர்ணனையைததீராத வேட்கையோடு கேட்டுக் களிப்புறும், சென்னை மாநிலக் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வரும் திரு. D. ராம்குமார் அவர்கள், 2000 மாவது ஆண்டின் துவக்கத்தில் தமிழ் வர்ணனையை வெகு சிறப்பாக செய்து வந்த ராமமூர்த்தி, கணேசன் மற்றும் அப்துல் ஜாபர் ஆகியோரின் விவரித்தல் நடை மீது தனக்கு மிகச்சிறந்த அபிமானம் இருந்ததாகத் தெரிவித்தார். இந்தியா இதர நாடுகளோடு விளையாடுகிற பொழுதெல்லாம் இவர்கள் வர்ணனையாளராக இருந்து செயல்பட்ட சென்னை-1 மற்றும் ரெயின்போ பண்பலை ஆகிய அலைவரிசைகளை வைத்துக்கொண்டு தனது காதுகளை அவர்கள் வசம் ஒப்படைத்து விட்டதைச் சொல்லுகிற பொழுது அவர் குரல் உற்சாகத்தைததழுவிக்கொள்கிறது.

      அந்த மகிழ்வோடு தொடரும் அவர், தமிழ் வர்ணனைக்கு என்று ராஜ் டிவி, சன்நியூஸ் ஆகிய தொலைக்காட்சிகள் 2007 ஆம் ஆண்டு எடுத்த முயற்சி பெரிதாக சோபிக்கவில்லை என்றும், அதன் பிறகு ஸ்டார் விஜய் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை முழுவதையும் தமிழில் ஒளிபரப்புச் செய்ய எடுத்த முயற்சி ஓரளவுக்கு வரவேற்பைபபெற்றது என்றும், அதன் தொடர்ச்சியாக ஸ்டார்ஸ்போர்ட்ஸ் குழுமம் தமிழுக்கென்று பிரத்தியேகமாக வர்ணனை செய்யத் தொடங்கியது என்றும் அடுக்கிக் கொண்டே சென்றார். அவ்வாறு செய்யப்பட்ட அல்லது செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் வர்ணனைகளில் காணக்கிடைக்கிற ஞானி, அவருக்கு ஒரு திருப்திகரமான வர்ணனையாளராக இருப்பதை உதாரணத்துடன் சொல்லி முடித்துக் கொண்டார் திரு. ராம்குமார்.

      சென்னை பல்கலைக்கழகத தமிழ்ததுறையில் மூத்த முனைவர் பட்ட ஆய்வாளராக இருந்து கொண்டிருக்கும் அருமை நண்பர் லாரன்ஸ் ஜோசப் ஜபரத்திணம் எனப்படும் லாரன்ஸ் ஜெபாவிடம் வர்ணனை குறித்து விரிவாக பேசிய பொழுது, தான் ஒரு தமிழ் இலக்கிய ஆர்வலராக இருப்பினும், வெகுவாக ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் முடிவதற்கு ஆங்கில வர்ணனையைத் தொலைக்காட்சிகளில் முழு ஈடுபாட்டோடுக் கேட்டுக் கொண்டிருப்பது மிக முக்கியமான காரணம் என்று சொல்லி அசரவைத்தார்.

Graphic: வர்ணனையாளற் அறையில் இருந்து வர்ணனை செய்யும் ரவி சாஸ்த்ரி

மேலும், இந்திய கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி செயல்பட்டுக் கொண்டிருப்பதால்தான் வர்ணனையில் அவரைச் சந்திக்க முடியாத பேரிழப்பை விவரிக்க வார்த்தை இல்லை என்று சொல்லி பிசிசிஐ அமைப்பை நொந்து கொண்டார்.

      கிரிக்கெட் வர்ணனையைத் தமிழ்ப் படுத்துவது வரவேற்கத்தக்கதுதான் என்பதைத் தமிழ்மாணவனாக ஒப்புக்கொள்ளும் இவர், ஆங்கில வர்ணனையே கிரிக்கெட்டுக்குப் பொருந்திப் போவதாக சான்றுகளோடு எடுத்துச்சொல்லி நம்மை திகைக்க வைத்தார். அவ்வப்பொழுது சிண்டு முடித்துவிடும் சஞ்சய்மஞ் சுரேகர், செல்லக் குரலில் விவரித்துச் சொல்லி நம்மைக் கிறங்க வைக்கும் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், புள்ளி விபரத்தைப் புட்டுப் புட்டு வைத்து திக்குமுக்காடச் செய்யும் ஹர்ஷா போகுளே என இன்னும் கிரிக்கெட் வர்ணனையை அசரவைக்கும் தொழில் நேர்த்தியோடு செய்கிற அயல்நாட்டு வர்ணனையாளர்கள் குறித்துச் சொல்லிச் சிலாகித்து மகிழ்ந்தார். அத்தோடு இப்பொழுது ஜொலிக்க தொடங்கி இருக்கிற கிரிக்கெட்டின் பெண் வர்ணனையாளர்களான இஷாகுக, லிசாஸ்தா லேகர், ஆகியோர் குறித்தும் அவர் தம் சிறப்புகள் குறித்தும் ஜெபா சொல்லததவறவில்லை.

      தனது பள்ளி நாட்களில் பொதுத் தேர்வு தயாரிப்புக்கு எனப் பிரத்தியேகமாக வழங்கப்பட்ட அறையைக் கிரிக்கெட் விளையாடவும்வர்ணனையைக் கேட்டு மயங்கிக் கிடக்கவும் பயன்படுத்திய அனுபவத்தைச் சொல்லிச் சப்தமிட்டுச் சிரிக்கிற பொழுது அவர் மனம் வர்ணனை தவழ்ந்து வரும் காற்றோடு சேர்ந்து கொள்வதை நம்மால் உணரமுடிகிறது!

      கிரிக்கெட் வர்ணனையை உறக்கத்திலும் கேட்கும் அளவிற்கு உக்கிரம் ஏறிக்கிடக்கும், பச்சையப்பன் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் மேற்கொண்டு வரும் திரு. M. மணிகண்டன் அவர்களிடம் விவாதித்த பொழுது, பூவிருந்தவல்லி அரசு பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் அவசியமான பல சலுகைகள் அர்த்தமற்று மறுக்கப்படும் சின்னமாடியில் இருக்க நேர்ந்ததை எண்ணிப் பார்த்து பெருமூச்சு விட்டபடி, தொடர்ந்து வர்ணனை கேட்பதற்காகவே கட்டுப்பாடுகளை மீறியும் எட்டுபேண்ட் ரேடியோ வைத்திருந்ததை ஆயாசமாகபபகிர்ந்து கொண்டார்.  அதற்காக வீரேந்திர ஷேவாக் பந்துகளை அடித்துததுவைத்தது போல், விடுதிககாப்பாளரிடம் வாங்கிககட்டிக் கொண்டு வீங்கிததிரிந்ததைசசொல்லுகையில் அவர் குரல் தழுதழுத்துபபோனது!

      ரேடியோவில் நிகழ்த்தப்படும் கிரிக்கெட் வர்ணனையை ஒருவர் அவராகவே எழுதும் பரிட்சையோடு ஒப்பிடும் மணிகண்டன், தொலைக்காட்சியில் அரங்கேறும் வர்ணனையை எழுத்தர் கொண்டு எழுதுவதற்கு நிகரென நிறுவுகிறார். ரேடியோ வர்ணனையும்,  அதில் புகழ் பெற்ற வர்ணனையாளர்கள் ஓங்கி அடிக்கப்பட்ட பந்தோடு இணைந்து எழுப்புகிற சப்தமும், அதனோடு பார்வையாளர்கள் போடுகிற உற்சாக கோஷமும், தனது மனம் அந்தப் பந்தோடு பயணித்து மைதானத்தின் எல்லைக் கோட்டை அடைவதைப் பல வேளைகளில் உணர்ந்து இருப்பதாக உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.

      வர்ணனை என்பது ரேடியோவில் செய்யப்பட்டாலும், அவரைப் பொருத்தவரை பார்வையற்றவர்களை மைதானத்திற்கு அவை அழைத்துச் சென்று கிரிக்கெட் விளையாட்டை நேரில் கண்டு ஆரவாரிக்கிற உணர்வை நிரம்ப கிடத்துவதாக   சொல்லிப் புல்லரிக்கச் செய்தார்.

      தொலைக்காட்சி வர்ணனைகளைப் பொருத்தவரை,  மைதானத்தில் அணித் தலைவர் வீரர்களைக் கொண்டு மேற்கொள்ளும் தடுப்புநிலைகள் (fielding position), மற்றும் கிரிக்கெட் மைதானத்திற்கு உரிய கலி, சில்லி பாயிண்ட், ஸ்கொயர்லெக், மிட்விக்கெட், உள்ளிட்ட தனித்த அளவீடுகளை அவதானிக்க பெரிதும் உதவுவதாக உறுதியாக நம்புகிறார்.

Graphic: சொல்லி அடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஆர் ஜே சுரேஷ் மற்றும் அலோசியஸ்

இறுதியாக ஹலோ பண்பலை வரிசையில் சுரேஷ் மற்றும் ஹலோ சியஸ் இணை சொல்லிஅடி நிகழ்ச்சியை நடத்தி ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் என்னும் வர்த்தக முறையிலான கிரிக்கெட் பார்வையற்றவரைச் சென்று சேர, சென்னை மற்ற அணிகளோடு மோதுகிற பொழுதெல்லாம் கொண்டாடி குதுகலம் அடைய காரணமாக இருந்ததாக புன்னகை ததும்பபபகிர்ந்துகொண்டார்.இவர்கள் நால்வர் உள்ளிட்ட பார்வையற்ற கிரிக்கெட் வர்ணனை ரசிக பெருமக்களுக்குப் பிடித்த வர்ணனையாளர்கள் இவர்கள்தான் என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் மணிகண்டன்.

      பந்துக்குப் பந்து பரவசத்தைக் கூட்டி ஆட்டத்தைக் கண்முன்னே... என்ன பிழை செய்துவிட்டேன்... இல்லை இல்லை செவிமுன்னே... அதுவும் இல்லையோ?  சரி, செவிக்குபபக்கவாட்டில் கொண்டு வந்து சேர்த்த வானொலி ஆங்கில வர்ணனையாளர்கள், பிரகாஷ்வாகங்கர், டாக்டர் மிலின் டிப்னெஸ், பிரேம்குமார் உள்ளிட்ட பலரும், தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு பரவலாக இருப்பினும், அதை கொள்கையளவில் எதிர்க்கும் மனநிலையைக் கொண்டிருப்பினும், கிரிக்கெட்டின் ஹிந்தி வர்ணனையை ரசித்து மகிழ்ந்த பார்வையற்றவர்களுக்கு நெருக்கமான குரல்களாக இருந்தவை, சஞ்சய்பேனர்ஜி, வினித் கர், ஆஷிஷ்குமார், குள்விந்தர்சிங் மற்றும் பலரின் குரல்களே.

மற்ற தமிழ் வர்ணனையாளர்களுடன் அமர்ந்திருக்கும்ஆர்.ஜே பாலாஜி

      சமீபகாலமாக பிரசித்தி பெற்று வரும் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் மற்றும் சோனியில் செய்யப்படும் தமிழ் வர்ணனையை ஆண்டு கொண்டிருக்கும் சிகா எனப்படும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், நானி, சடகோபன்ரமேஷ், லட்சுமிபதி பாலாஜி, கிரிக்கெட்டை காட்டிலும் கலாய்ப்பதைப் பெரும் பணியாகக் கொண்டு பலரை வசீகரிக்கும் ஆர்.ஜே.பாலாஜி, பவுண்டரி ஒருமுறை அடிக்கப்பட்டு எல்லைக் கோட்டை அடைவதற்குள் ஆறுமுறை சொல்லித் தெறிக்க விடும் ஹேமங் பதானி உள்ளிட்ட பலரின் வர்ணனையில் இன்றளவும் விளையாட்டை ரசிக்க முடிகிறது.

போதி மரமான வானொலி வர்ணனை:

      புத்தருக்கு எப்படி போதி மரத்திற்கு அடியில் அமர்ந்திருக்கையில் ஞானம் பிறந்ததோ, என்னைப் போன்ற பல பார்வையற்ற விளையாட்டு ஆர்வலர்களுக்கு ரேடியோ மற்றும் தொலைக்காட்சி வர்ணனைக்கு ஒப்புவித்த வேளைகளில் விளையாட்டின் மீதான மதிப்பு உயர்ந்து, ஆர்வம் விசாலப்பட்டது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். இந்தியில் எண்களைப பிழையின்றி சரளமாகச சொல்லவும், ரயில் உள்ளிட்ட பல இடங்களில் வடஇந்தியர்களைச சந்திக்கிற பொழுது பலம் கொண்டு எதிர்த்துச சமாளிக்க வார்த்தைகளை வழங்குவது இந்தி வர்ணனைகள் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள் பலர்.

     எக்ஸ் க்யூஸ் மீ, சாரி, தேங்க்ஸ், யூ ஆர் சோ பியூட்டிஃபுல், ப்ளீஸ் உள்ளிட்ட ஆங்கில வார்த்தைகளைக கடந்தும் ஏராளமான சொற்களைக கிரகிக்கச செய்து வாய்ப்புக் கிடைக்கிற போதெல்லாம் எடுத்துவிட்டுப் பார்வையற்ற காளையர், கன்னியரைககவர்ந்திழுக்கபபயன்பட்டது ஆங்கில வர்ணனைகள் என்று உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. அதுமட்டுமல்ல, பள்ளி பரிட்ச்சைகளிலும், பல்வேறு போட்டித் தேர்வுகளிலும், நேர்முகததேர்வுகளிலும் ஆங்கிலத்தை உறுதியாக எடுத்துககையாள கிரிக்கெட் வர்ணனைகள் கைகொடுத்திருக்கிறது என்பதைப் பதிவிடுவதில் தவறு ஏதுமில்லை.

      லாரன்ஸ் ஜெபா பகிர்ந்துகொண்ட ஒரு முக்கியசசெய்தியை இங்கு குறிப்பிடுவது உத்தமம். தொலைக்காட்சியில் ஆங்கில வர்ணனை நிகழ்ந்து கொண்டிருக்கிற தருணத்தில், அந்தப் போட்டி நடைபெறும் நகரத்தின் அருமை, பெருமைகளை ஒரு காணொளியாக ஓடவிட்டு வர்ணனையாளர் அதை அழகான வார்த்தை கொண்டு விவரிக்கிற தருணம் அத்தனைச் சிறப்புக்குரியது.

      பார்வையற்றவர்களைப் பொருத்தவரை கிரிக்கெட்டால் வர்ணனையா அல்லது வர்ணனையால் கிரிக்கெட்டா என்று கேட்டால் வர்ணனையால் தான் கிரிக்கெட் என்று ஏகோபித்த குரலில் சொல்லி விடுவர். இதற்குசசான்றாக திரு. M. மணிகண்டன் சொன்னது பதிவிடத்தக்கது. இந்திய அணி 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போது பங்களாதேஷ் அணியிடம் தோற்று மூன்றே ஆட்டத்துடன் வெளியேறிய பொழுது, அவர் உள்ளிட்ட பல பார்வையற்ற வர்ணனை ஆர்வலர்கள் இனி நிகழவிருந்த ஆட்டங்களுக்கான வர்ணனை இல்லாமல் போகிறதே என்று ரத்தக்கண்ணீர் வடித்தனர் என்கிற செய்தி தனித்த கவனம் பெறத்தக்கது.

வர்ணனையின் வரலாறு:

      மகாபாரதத்தில் நிகழ்த்தப் பெறும் பதினெட்டு நாள் குருஷேத்ர யுத்தம் குறித்தும், அதனை பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரன் உணர்ச்சி மாறாமல் அவதானிக்க வர்ணனையாளராகபபணியாற்றிய சஞ்சையனின் மகத்துவம் குறித்தும் நாம் ஏற்கெனவே அறிந்திருப்போம். பார்வையற்றவர்களுக்கு வர்ணனை எவ்வளவு முக்கியமானது என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ளலாம். நாடுகளுக்கு இடையே நடைபெறும் விளையாட்டு ஒரு விதத்தில் மனித மனத்தில் பரையோடிபபோயிருக்கிற யுத்த விருப்பத்தைததிருப்திபடுத்துகிற மரபணுபபொருத்தம் கொண்டிருப்பதால் இதைசசுட்டிக்காட்டுவது உகந்ததும் கூட.

      திருதராஷ்டிரன் மற்றும் கணவனுக்காக கண்களை இருக்கககட்டிததன்னை வலுக்கட்டாயமாக இருளில் ஆழ்த்திக் கொள்ளும் காந்தாரி முன்தோன்றும் கிருஷ்ணன் கொடுக்கிற இருவாய்ப்புகளில் பார்வைக்குப் பதிலாக வர்ணனையைத் தேர்ந்தெடுப்பதாக இருக்கிற செய்தித் தனித்த கவனம் பெறுகிறது. அப்படிப் பொறுப்புக் கொடுக்கப்பட்டு அதனை நிறைவேற்றுகிற சஞ்சையன் யுத்தகளத்தின் அனைத்து அரங்கேற்றங்களையும் மன்னனுக்குள் கடத்துகிற பணியை அத்தனை துல்லியத் தன்மையோடு செய்து முடிப்பதன் விளைவாக, திருதராஷ்டிரன் உள்ளாகும் பலதரப்பட்ட உணர்ச்சிகள் தனித்த ஆய்வுக்கு உரிய ஒன்று என்பதனால் அங்கு அதனை விட்டு விட்டு மீண்டும் விளையாட்டு வர்ணனைக்குள் சென்று விடுவது நல்லது.

      விளையாட்டுக்கான குரல் வர்ணனை (Voice brotcasting) தொடங்கியதைபபின்னோக்கிப் பார்த்தோமே என்றால், அது 1921 ஏப்ரல் 11 அன்று ஆரம்பம் ஆனதாக ஒரு குறிப்பு இருக்கிறது. அந்தககாலகட்டத்தில் அயல் தேசத்தில் தொடங்கிய வர்ணனை முயறசிகள் பெரும்பாலும் கால்பந்து, குத்துச்சண்டை, பேஸ்பால் போன்ற விளையாட்டுகளுக்கு மேற்கொள்ளப்பட்டதாக வலைதள தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்று உலகை நடுநடுங்கசசெய்து கொண்டிருந்த ஹிட்லர் தனது ஆரிய மேலாதிக்கத்தை விளையாட்டிலும் நிறுவும் பொருட்டு வெகுவிமர்சையாக நடத்திய பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளும் வர்ணனை செய்யப்பட்டதாக அறிய முடிகிறது. கிரிக்கெட் வர்ணனை முதன்முதலாக ஆஸ்திரேலியாவில் செய்யப்பட்டதாக தகவல்கள் காணக் கிடைக்கின்றன.

வர்ணனையும் நானும்:

      இந்தககட்டுரையின் அளவு சச்சின் டெண்டுல்கர் அடித்த சதங்களைப போல் நீண்டு செல்லாமல் இருக்கும் பொருட்டு எண்ணற்ற பல அதிதீவிர வர்ணனை ரசிகர்களின் எண்ண ஓட்டத்தைக் கேட்டுப் பகிர இயலாமல் போனதை வருத்தத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன். இதர விளையாட்டுகளையும் பார்வையற்றவர் ரசிக்க அவற்றின் வர்ணனை காரணமாக இருக்கும் என்பதில் ஐயம் இருக்க முடியாது.

      2011-ஆம் ஆண்டில் திரு. அரங்கராஜா அவர்கள் சென்னையில் உதயநிலா என்ற அமைப்பின் சார்பாக நடத்திய கிரிக்கட் போட்டியை, ஆங்கிலத்தில் வர்ணனை செய்ய எனக்கு வாய்ப்பு வழங்கியது என்றும் மனதில் பசுமையான அனுபவமாக நிழலாடிககொண்டிருக்கிறது. அப்பொழுது என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது ரவிசாஸ்திரி அவர்கள் கிரிக்கட்டை வர்ணிக்கிற வேளைகளில் லாவகமாக கையாளும் ஆங்கில உதாரணங்களே.

      இதில் ஒரு ட்விஸ்ட் யாதெனில், வர்ணனையை வெகுவாக ரசித்து புளகாங்கிதம் அடையும் பார்வையற்றவரின் விளையாட்டு நிகழ்கிற பொழுது மைதானத்தில் வர்ணனையைசசத்தமிட்டுச் செய்ய இயலாது என்பதே. காரணம், விளையாடுகிறபோதும் அவர்கள் செவியின் ஆற்றலை அதிகமாக முதலீடு செய்ய வேண்டியிருப்பதால்தான்.

நிறைவு செயவதற்கு முன்பு :

      விளையாட்டுக்காக நிகழ்த்தப்படும் வர்ணனையாலும், இயற்கையான பயிற்சி மற்றும் ஆற்றலோடும் எண்ணற்ற பார்வையற்ற விளையாட்டு வீரர்கள் வலம் வந்தாலும், அவர்களுக்கான அங்கிகாரம் என்பது பெரிதாக இல்லை என்பதே மறுக்க இயலா உண்மை.  தேசிய மற்றும் சர்வதேச கிரிக்கட் மற்றும் இதர விளையாட்டு வீரர்கள், ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராகவும், இதர விளையாட்டு சார்ந்த வாய்ப்புகளிலும் தங்களை நிலைநிறுத்திக் கொள்கிற பொழுது, பார்வையற்ற பல மிகச்சிறந்த வீரர்கள் எந்த நிலையிலும் சோபிக்க இயலவில்லை. அவர்களுக்கான அங்கிகாரம் அரசிடம் இருந்து கிடைப்பதே இல்லை. இவையெல்லாம் களையப்பட்டு ஊக்கம் அளிக்கப்படுமேயாயின் ஏராளமான பார்வையற்றவர்களின் திறமைகள் இருட்டடிப்புக்கு உள்ளாகாமல் போகும்.

      உண்மையைசசொல்வதெனில் வர்ணனை பார்வையற்றோரின் மனதில் ஏற்படுத்துகிற பாதிப்புக் குறித்தான ஒரு அறிமுகத்தை மட்டுமே இந்தககட்டுரை வழங்கியிருக்கிறது. அது ஒரு பெருங்கடல், ஆனால் இங்கு உருண்டோடி இருப்பதோ சில துளிகள். ஆனாலும், பார்வையற்றவர்களின் நெருக்கமான தோழர்களாய், அவர்கள் பார்வையாளர்கள் என்ற நிலையை அடைய உதவும் கண்களாய் வர்ணனைகள் திகழ்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

(கட்டுரையாளர் சென்னை சர். தியாகராயர் கல்லூரியின் ஆங்கிலத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்).
தொடர்புக்கு: mahendranbefrank@gmail.com


1 கருத்து:

  1. கட்டுரை மிகவும் அருமை.
    வர்ணனைகளை விளக்கியிருக்கும் வரிகளும் விதமும் மிகவும் அருமை

    பதிலளிநீக்கு