கருத்துக்களம்: ஆசைத்தம்பியும் அறிவுடை நம்பியும் - 2 - வினோத் சுப்பிரமணியன்

graphic இரண்டு நண்பர்கள் பேசிக்கொள்வது போல் அமைந்த கார்டூன் படம்

 என்னடா நம்பி! போன முற ஏதோ கட்டுர எழுதுறேன்னு போனியே! என்ன ஆச்சு?” என்று கேட்டபடியே பூங்காவில் இருந்த இருக்கையில் அமர்ந்தான் ஆசைத்தம்பி.

நல்லபடியா முடிஞ்சிச்சு. ஆசிரியருக்குப் பிடிச்சிருந்துச்சாம். ஆனா ரீடர்சோட ரியாக்ஷந்தான் தெரியல.” என்று சொன்னபடியே நம்பியும் அமர்ந்தான். 

அதெல்லாம் போகப்போகப் பிக்கப் ஆயிரும் பாரேன்.” என்று ஆறுதல் கூறிய ஆசைத்தம்பி அறிவை நோக்கி, சரி உனக்கு எப்பிடிடா இந்தப் பார்வையற்றவர்களுடைய உலகத்துல தொடர்பு கெடச்சுது? ஏதாச்சும் சுவாரசியமா இருந்தாச் சொல்லேன்

எனக்குக் கெடச்சதப் பத்தி அப்புரம் சொல்லுறேன். பார்வையில்லாதவங்க அவங்களோட உலகத்துக்குள்ளே எப்படிப் போனாங்க அப்பிடிங்குரதுதான் நீ முக்கியமா தெரிஞ்சிக்க வேண்டியது.” 

புரியலடா நம்பி.”

உனக்குப் புரியாதுன்னு எனக்குத் தெரியுமே! அத நீ சொல்லித்தான் தெரியனும்னு அவசியம் இல்ல தம்பி.” 

பொறுப்பில்லாம என்ன கலாய்க்காத நீ. கொஞ்சம் பொறுப்பா கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு. இப்பிடி கேட்ட கேள்விக்கு பொறுப்பில்லாம பதில் சொல்லுற உனக்கெல்லாம் யாருடா கட்டுர எழுத வாய்ப்பு கொடுக்குறா?”

“பாலகனேசன்.” 

என்னது?”

நீ கேட்ட கேள்விக்குப் பதில். கொஞ்ச நேரம் என்னைய பேசவிடு. பாலகனேசன் அப்பிடினு ஒருத்தரு பார்வை இல்லாம பெறக்குறாரு. அப்பா படிக்கல. அம்மா மூனாம் வகுப்பு.” 

ஃபெயிலா? பாசா?”

இப்ச். சொல்லுறதக் கேளு. அவங்க அம்மா அவங்களுக்குத் தெரிஞ்சதையெல்லாம் வீட்டிலையே பாலகனேசனுக்குச் சொல்லிக்கொடுத்திருக்காங்க. இதுக்கெடையிலதான் பாலகனேசனுடைய அப்பாவுக்குப் பழக்கமான ஒரு பார்வையற்றவரோட உதவி கெடச்சுது. தற்செயலா பார்வையற்றவங்களப் பத்தி அந்தப் பார்வையற்றவர் விசாரிக்க, தன் மகனுக்குக் கூட பார்வையில்லனு இவர் சொல்லி இருக்காறு. பெறகு அந்தப் பார்வையற்றவரே பாலகனேசன சிவகங்கைல இருக்கிற பார்வையற்றோருக்கான பள்ளியில சேர்த்துவிட்டு இருக்காறு. இத்தனைக்கும் அவருக்கு நெரந்தர வருமானம் கெடையாது. குடும்பம் பார்வை இல்லனு அவர ஒதிக்கிடுச்சு. ஒரு ஏழ பொண்ண கல்யாணம் பண்ணினாரு. அவ இவருக்கிட்ட இருக்குறதெல்லாத்தையும் திருடிக்கிட்டு ஓடிட்டா. ஆனா அவ்வளவு கஷ்டத்திலையும் பாலகனேசன்னு ஒரு பார்வை இல்லாதவருக்குப் படிக்க வாய்ப்பு உருவாக்கித்தரனும்னு சிறப்புப் பள்ளியில சேத்திருக்காறு. இப்படி பார்வை இல்லாதவங்களுக்காக உருவாக்கப்பட்ட பள்ளிகள், சங்கங்கள், தொழில்நுட்பக் கூடங்கள், சிறப்புப் பயிற்சி மையங்கள், பிரத்தியேகக் கருவிகள், சற்றே வித்தியாசமானத் தொழில்நுட்பங்கள்தான் அவங்களோட உலகம். பார்வையில்லாத ஒவ்வொருத்தரும் அவங்களோட அந்த உலகத்துல இணஞ்சி எல்லாத்தையும் கத்துக்கிட்டுதான் வெளி உலகத்தோட போராட முடியும்.” 

ஓஹோ. அந்தப் பாலகனேசன் என்கிறவர படிக்கவைக்கனும்னு உதவி செஞ்சவரு பேரு

தெரியாது.” 

ச்சே. அந்த மனுஷனப் போயி ஏமாத்திட்டு போயிருக்காங்களே.” என்று ஆதங்கப்பட்ட ஆசைத்தம்பி, பாலகனேசனுக்கு ஒருத்தர் வழிகாட்டிட்டாரு அந்த மாதிரி எல்லா பார்வை இல்லாதவங்களுக்கும் நடக்குமா என்ன?”

இன்னைக்குத் தேதிக்கு நடக்கும். ஆனா முன்னையெல்லாம் ரொம்ப கஷ்டம். பார்வை இல்லாதவங்களுக்குனு தனியா பள்ளி இருக்குனே பாதிப் பேருக்குத் தெரியாது. ஷியாமலாவுக்கு அவங்க கூட பொறந்தவங்களோட பள்ளியில படிக்குற இன்னொரு பையனோட பாட்டி மூலமாவும், நசுருதீனுக்கு அவருடைய உறவினர் மும்தாஜ் அப்பிடிங்குறவங்க மூலமாவும் உடனே பார்வையற்றோருக்கான சிறப்புப்பள்ளி பத்தின தகவல் தெரிஞ்சதுனால எளிமையா சேக்கமுடிஞ்சது. ஷியாமலா சென்னை சிறுமலர் சிறப்புப் பள்ளியிலும், நசுருதின் திருப்பத்தூர் TELC சிறப்புப்பள்ளியிலும் சேந்தாங்க. ஆனா எல்லாருடைய வாழ்க்கையும் அப்படித்தான்னு சொல்லிட முடியாது. அவ்வளவு ஏன்? தன் பிள்ளைக்குப் பார்வையில பிரச்சின இருக்குன்னே சில பெத்தவங்களால ரொம்ப தாமதமாதான் கண்டுபிடிக்க முடிஞ்சதாம். தன் பிள்ள மட்டும்தான் பார்வை இல்லாம இருக்குனு கூட சிலர் நெனச்சிருக்காங்க. அதனாலேயே பார்வை இல்லாதவங்கள வீட்டிலையே வெச்சிக்குவாங்களாம்.  

graphic மதுரை சென் ஜோசப் சிறப்புப் பள்ளியின் முகப்பு படம்

 உதாரணத்துக்கு செலின் அப்பிடிங்குரவங்கள பள்ளிக்கு அனுப்பவே பயந்த அவங்களோட அப்பா அம்மாவ கன்வின்ஸ் பண்ணி மதுரை சென் ஜோசப் சிறப்புப் பள்ளியில சேத்துவிட்டது அவங்க ஊர் ஃபாதர் சகாயராஜ். செலின் பள்ளிப்படிப்ப முடிச்சு கல்லூரி போனப்ப கூட இவர் அவங்கள அடிக்கடிப்போய் பாப்பாராம்.”

நல்ல மனிதர்.” 

செலின் மாதிரியே பார்வை இல்லாம பொறந்த சுபா னு ஒருத்தங்க. அவங்களையும் பெத்தவங்களும், சொந்தக்காரங்களும் பள்ளிக்கு அனுப்பப் பயப்பட, மக்கள் தொகை கணக்கெடுக்க வந்த ஒருத்தங்க சுபாவோட அம்மா கிட்ட சிறப்புப்பள்ளி விஷயத்தச் சொல்ல, சுபாவோட அம்மா தயங்க, பெறகு கிரிஸ்டீனா னு அந்த சிறப்புப்பள்ளிய சேந்த ஒரு ஆசிரியை இவங்களுக்குப் பார்வையில்லாதவங்களுடைய தற்சார்பு வாழ்க்கை முறைய பள்ளிக்கு கூட்டிட்டுப்போயி விவரிக்க, வீட்டிலிருந்தவங்க எதிர்ப்பயெல்லாம் மீறி சுபாவ பள்ளியில சேத்திருக்காங்க அவங்க அம்மா.”

graphic பார்வையற்ற சிறுவர் சிறுமியர் ஊன்றுகோலோடு நடந்து செல்லும் படம்

ஆமா. இன்னைக்குக் கஷ்டப்பட்டா நாளைக்கு நல்லா இருக்க முடியும்.”

அதே மாதிரி பெரியதுரைனு ஒருத்தரு. முன்னால் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியனோட உதவியினால பாளயங்கோட்டை சிறப்புப் பள்ளியில சேந்துட்டாரு.” 

graphic பாளயங்கோட்டை சிறப்புப் பள்ளியின் முகப்பு படம்

ஓஹோ! அதுசரி பார்வை இல்லாதவங்களுக்கான தனி உலகமோ சிறப்புப்பள்ளியோ இருக்குனு கண்டு பிடிக்க லேட் ஆச்சுனா ரொம்ப கஷ்டம் இல்ல?”

ரொம்பவே. அதுக்கு என் கிட்ட நெறைய உதாரணம் இருக்கு. பேரு பொன். சக்திவேல். நார்மல் பள்ளியில ஒன்னாவது மூனு முற படிச்சும் பார்வை இல்லாததால பாசாக முடியாம, அப்புரம் ஐயாச்சாமின்னு ஒருத்தர் உதவியால புதுக்கோட்டைச் சிறப்புப்பள்ளியில மறுபடியும் ஒன்னாவது சேந்து படிச்சிருக்காரு.”  

ஒன்னாவதிலேயே மூனு வருஷமா! அடக் கடவுளே!”

நீயே ஃபீல் பண்ணுற பாத்தியா! அதுதான் நெலம.” 

ஆமாம் நம்பி. ரொம்ப பாவம். கூடப் படிச்ச பொம்பலப் புள்ளைங்க எல்லாம் அடுத்த வகுப்புக்குப் போயிட்டா ரொம்ப கஷ்டமா இருக்கும்ல?”

கொஞ்சம் சீரியசா பேசு டா டே.” 

சரி சாரி. எனக்கு வராது. நீயே பேசு.” 

graphic சென்னை சிறுமலர் பள்ளியின் முகப்பு படம்

 “பேரு முத்துதுரை. ஊரு ஈரோடு. எட்டு வயசு வரை விஷயம் தெரியாம இருந்திருக்காரு. இவருக்கு பார்வப் பிரச்சின இருக்குறத அவங்க பள்ளி தலைமை ஆசிரியர்தான் கண்டுபிடிச்சிருக்காரு. அப்புரம் அரவிந்த் மருத்துவமணை உதவியால கோவையில ஒரு பள்ளியில முதல் வகுப்பு சேந்தாராம். அதே மாதிரி கார்த்தி னு ஒருத்தர். ஊரு வேலூரு. 14 வருஷமா கொழந்த இல்லாத தம்பதிக்கு பார்வ இல்லாத மகனா பொறந்து, மூனாவதுவரைக்கும் பொதுப் பள்ளியில படிச்சிட்டு அப்புரம் சங்கர நேத்ராலையா மருத்துவமணை, சிறப்புப் பள்ளி பத்தி சொல்ல சென்னை சிறுமலர் பள்ளியில சேந்திருக்காரு. அப்புரம் திரிச்சிய சேந்த சந்தோஷ் குமாருக்கு எட்டாவது வரைக்கும் நார்மல் ஸ்கூல்தான். பெறகுதான் சர்வ சிக்ஷா அபியன்ல இருந்து ஜானகினு ஒருத்தங்க சிறப்புப் பள்ளிப் பத்திச் சொல்ல முதல்ல திரிச்சி மகளீர் சிறப்புப்பள்ளிக்குத் தவறுதலாப் போயி அப்புரம் அங்கிருந்து தஞ்சாவூர் சிறப்புப் பள்ளி முகவரி வாங்கிட்டுப் போயி 9ஆம் வகுப்புல போயி சேந்திருக்காரு. திருநெல்வேலி ராஜதுரைக்கு நாலாவது வரைக்கும் நார்மல் ஸ்கூல். அப்புரம் அங்கிருந்த சத்தியா னு ஒருத்தங்க சிறப்புப்பள்ளிப் பத்தி சொல்ல ராஜதுரையோட பாட்டி அலையோ அலைனு அலஞ்சி கடலூர் ல ஒரு சிறப்புப் பள்ளியக் கண்டுபிடிச்சு கொண்டுபோயி சேக்க மறுபடியும் நாலாவதுல இருந்து ராஜதுரை படிச்சிருக்காரு. இதுல ராமநாதபுரம் ராகேஷுதான் ஹைலைட். அஞ்சாவது வரைக்கும் பொதுப் பள்ளியில படிச்சிட்டு அப்புரம் அசோகன் னு ஒருத்தர் ராகேஷோட அப்பாவோட நண்பராம். அவர் மூலமா பாளயங்கோட்டை சிறப்புப் பள்ளியில சேர்ந்து மறுபடியும் மொதல்ல இருந்து

எது மறுபடியும் ஃபஸ்ட்ல இருந்தா?” 

ஆமாம். பார்வையற்றோர் உலகத்தப் புரிஞ்சுக்க வேணாமா? பிரெயில் படிக்க வேணாமா? எப்படியோ டபுல் ப்ரோமோஷன டபுல் டைம் வாங்கி கொஞ்சம் வயசுப் பிரச்சினைய ஈடு கட்டிட்டாரு.”

ஆமா. நான் கூட பிரெயில் பத்தி கேள்வி பட்டிருக்கேன். அது அவங்களுக்கு ரொம்ப முக்கியந்தானே?”

graphic பார்வையற்ற மாணவர்கள் பிரெயில் புத்தகம் படிக்கும் படம்

ஆமா. அவங்களோட துவக்கப்புள்ளியே அந்த பிரெயில் புள்ளியிலதான் ஆரம்பிக்குது. அத கத்துக்காததுனாலையே நெப்போலியன்நு ஒருத்தர ஃபெயில் ஆக்கிட்டே இருந்தாங்களாம் அவங்களோட பள்ளியில.”

பிரெயில் அவ்வளவு முக்கியமா? அத கத்துக்காம பார்வை இல்லாதவரால அடுத்த கட்டத்துக்குப் போகவே முடியாதா?”  

போகலாம். ஆனா பிரெயில் வழிமுறை மாதிரி மத்த வழிமுறையெல்லாம் எல்லா நேரத்துலையும் கை கொடுக்காது. என்னதாண் டெக்னாலஜி சப்போட்டு, ரெக்கார்டிங் மெத்தெட்னு பல வழி இருந்தாலும் பிரெயில்தான் அவங்களோட முதல் தனி அடையாளம். சிறப்புப்பள்ளியில சேருற எல்லாருக்கும் பிரெயில் கத்துக்கொடுத்துடுவாங்க.”

எல்லாரும் சிறப்புப் பள்ளியிலதான் சேர முடியுமா?”

graphic பள்ளியில் பார்வையுள்ள மாணவர்களோடு அமர்ந்து பார்வையற்ற பெண் பிரெயிலில் குறிப்பெடுக்கும் படம்

 “இல்ல. மத்த பசங்களோட பார்வை இல்லாதவங்களும் கலந்து படிக்குற மாதிரியான பள்ளிகளும் அங்கங்க இருக்கு. உதாரனத்துக்கு மதுரைய சேந்த சரவணன் அப்புரம் திரிச்சி ஃபெலிக்ஸ் மாதிரி நெறையபேர் கலப்புப் பள்ளிக்கூடத்துலதான் படிச்சிருக்காங்க.”

இம். எது எப்படி இருந்தாலும் பார்வை இல்லாம பொறந்து, பள்ளியக் கண்டுபிடிக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும் இல்ல?.”

உண்மைதான். ஆனா இப்போ நான் சொல்லப்போரது ஒரு வித்தியாசமான அனுபவம் இருக்க ஒருத்தரப்பத்தி.” 

இதுவே வித்தியாசம்தான் எங்களுக்கெல்லாம்.”

இம். சேலம் செவ்வாப்பேட்டையில ஒரு சிறப்புப் பள்ளி இருக்காம். அந்த ஊருல சௌண்டப்பன் னு ஒருத்தரு குடும்பத்தோட வசிச்சு வராரு. அந்தப் பள்ளிக்கு அப்பப்போ உதவி செய்வாங்களாம் அந்தக் குடும்பம். சௌண்டப்பனும் அவருடைய 8 வயசுல அந்தப் பள்ளிக்குப் போயிருக்காரு. அன்னைக்கு அவங்க குடும்பம்தான் அந்தப் பள்ளிக்கு உணவு கொடுத்துச்சாம். அப்புரம் வீட்டுக்கு வந்துட்டாங்க. பத்து வயசு வரைக்கும் நல்லாக் கண்ணு தெரிஞ்சிக்கிட்டிருந்த சௌண்டப்பனுக்கு திடீருனு பார்வ போச்சு. ஆப்பரேஷன் எல்லாம் தோல்வி. எந்தப் பள்ளியில பார்வை இல்லாதவங்களுக்கு அந்தக் குடும்பம் உதவி செஞ்சிட்டு வந்திச்சோ அதே பள்ளியில ஒரு பார்வை இல்லாதவரா சௌண்டப்பன் அவரோட பத்தாவது வயசுல சேந்தாரு.”

graphic தஞ்சாவூர் சிறப்புப் பள்ளியின் முகப்பு படம்

 “அடப்பாவமே! எவ்வளவு பெரிய வலி இல்ல இது?”

 “ஆமா. பார்வையில்லாதவங்களோட உலகத்த ஏற்கனவே தெரிஞ்சி வெச்சிருந்தாலும் அதுக்குள்ள இவரு போன விதம் ரொம்ப கொடுமையானதுதான்.”

 “அதுவும் பத்து வயசுல.”

 “இவங்களாச்சும் பரவாயில்ல. அஷோக் பாலா னு ஒருத்தரு. பாதியில பார்வ போக. பள்ளிப்படிப்ப ஆறாவதிலேயே நிறுத்திட்டு தனது முப்பதாவது வயசு வரைக்கும் வீட்டிலேயே இருந்திருக்காரு. அதுக்கப்புரம்தான் இமானுவேல்ராஜ், அருள்மாதவன் அப்பிடிங்குரவங்க உதவியால தேசிய பார்வையற்றோருக்கான மையத்துல (NIVH) சேர்ந்திருக்காரு. வள்ளி நு ஒருத்தங்க இவருக்கு மொபிலிட்டி சொல்லிக் கொடுத்திருக்காங்க.”

graphic தேசிய பார்வையற்றோருக்கான மையத்தின் (NIVH) முகப்பு படம்
Add caption

 “முப்பது வயசுலையா! வருஷம் எல்லாம் வீனாப் போச்சே.”

 “ஆமா. நெறைய பார்வை இல்லாதவங்களுக்கு அவங்களுக்குனு ஒரு உலகம் இருக்குறது கூட ரொம்பத் தாமதமாதான் தெரியவருது. அதுக்குள்ள அவங்களோட பாதி வாழ்க்கை முடிஞ்சிடும்.“

 ”எதுக்கு அந்த உலகத்துக்குள்ள வரனும்? எப்படியாச்சும் பார்வைய வரவெச்சிக்க முடியாதா? இப்போதான் டெக்னாலஜி எல்லாம் வளந்திடிச்சுல?”

நீ என்னதான் அறுவை சிகிச்சை எல்லாம் பண்ணாலும். நூத்துல தொன்னூறு பேருக்கு பார்வ வரதில்ல. அதையும் மீறி சக்சசானாலும் கொஞ்ச நாளைக்குதான் அந்தப் பார்வ இருக்குமாம். அப்புரம் கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சிடுமாம்.”

யாரு சொன்னா?” 

ஈரோடு செந்தில் குமார்.” 

அவரு நெறைய ஆப்பரேஷன் பண்ணாரா?”

ஆமா. 1984, 86, 2004 அப்புரம் 2015 க்கு மேலனு நெறைய.

ஓஹோ! எதுவுமே சக்சசாகலையா?”

 ”ஆச்சு. முதல்ல பண்ணது ஆச்சு. அப்புரம் ரெண்டாவது பண்ணப்போ முதல்ல பண்ணுன கண்ணுல இருந்த பார்வையையும் காலி பண்ணிடுச்சு. அப்புரம் நவீன தொழில்நுட்பத்துல 2004 ஆம் வருஷம் ஒன்னு சாதகமா அமைய கொஞ்ச நாள் கழிச்சு அந்தப் பார்வையும் குறைய. அதுக்கப்புரம் ரீசண்டா ஒன்னு முயற்சி செய்ய ஏதோ கொஞ்சம் இருக்கு.”

 “என்ன கொடும டா இது?”

 “ஒரு உண்மைய சொல்லட்டுமா. யாருக்குமே பார்வ இல்லாம வாழனும் அப்பிடிங்குர ஆசையெல்லாம் கெடையாது. அந்த உலகத்துல வரவும் அவங்க விரும்ப மாட்டாங்க. பார்வ கெடைக்க எவ்வளவு முயற்சி செய்யனுமோ அதச் செஞ்சி இதுக்கப்புரம் எதுவுமே செய்யமுடியாதுனு தெரிஞ்சதுக்கப்புரம்தான் இந்த உலகத்துக்குள்ள வேற வழி இல்லாம வருவாங்க. அதுவும் செந்தில்குமாரெல்லாம் பத்தாவது வரைக்கும் பொதுப் பள்ளியில படிச்சு, பத்தாவதுல 443 மார்க்கு எடுத்து, ஈரோட்டுல தமிழ் பாடத்துல முதலாவதா வந்து, அப்போ தமிழக முதல்வரா இருந்த கலைஞர் கிட்ட விருது எல்லாம் வாங்கி, அப்புரம் பார்வ இல்லாமப் போயி அறுவை சிகிச்சைல மட்டுமே கவனம் செலுத்தி வீட்டிலையே இருந்து......

 ”அதுக்கப்புரம் படிக்கலையா?”

இல்ல.”

அப்ப அவரு லைஃபு?”

அப்பா அம்மா அரசு வேலையில இருந்ததால பொருளாதார ரீதியா பாதிக்கப்படலனாலும் பார்வையற்றோருக்கான உலகத்தத் தெரிஞ்சிக்க ரொம்ப தாமதமாகி இருக்கு. பார்வையற்றோருக்கான இசைப்பள்ளியில சேர்ந்து ஞானபிரகாசம் அப்பிடிங்குற பார்வையற்றவரோட உதவி கெடச்சு இப்போ பார்வையற்றோருக்கான உலகத்துக்குள்ள வந்திருக்காரு. அப்புரம் சுரேஷ்னு ஒரு பெரம்பலூர் காரரு. பார்வையில கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும் மத்தவங்க மாதிரியே பள்ளி, கல்லூரி படிப்பெல்லாம் முடிச்சு தமிழ் ஆசிரியரா வேல செய்ய ஆரம்பிச்சதுக்கப்புரம் மொத்த பார்வையும் போக மதுரை அரவிந்த் மருத்துவமணை உதவியோட மதுரையில இருக்க தேசிய பார்வையற்றோர் சங்கத்துல சேர்ந்து பார்வையற்றோருக்கான உலகத்துல சேர்ந்திருக்காரு.”

graphic மதுரை IAB பள்ளியின் முகப்பு படம்

பாதியில பார்வ போனா ரொம்ப கஷ்டம் பா. அதுசரி பார்வையற்றோருக்கு சங்கமெல்லாம் இருக்கா?”

அதெல்லாம் நெறையாவே இருக்கு. பார்வையற்றோருக்கான சங்கத்துக்குள்ள வந்ததுதான் தனக்கு மிகப்பெரிய அங்கீகாரம்னு திரு சந்தானம் நு ஒருத்தரு சொல்லி இருக்காரு. சங்கத்து மூலமா நெறையா போராட்டத்துலையும் கலந்திருக்காராம்.” என்று சொல்லி முடித்தான் நம்பி. 

இன்னும் எத்தன பார்வை இல்லாதவங்க அவங்களுக்குனு ஒரு உலகம் இருக்குனு தெரியாம வீட்டுலையே இருக்காங்களோ தெரியலையே.” என்று சொல்லியபடி இடத்தைவிட்டு எழுந்தான் ஆசைத்தம்பி.

 “ஒருவிதத்துல நீ சொல்லுறது சரிதான். ஆனா இன்னைக்குத் தேதிக்கு இந்தப் பிரச்சினைய ரொம்ப எளிதா தீத்திடலாம்.”

இம். புரியுது. கண் மருத்துவமணைகளுக்கு விளம்பரங்கள் மூலமா தொலைக்காட்சிகள் கொடுக்குற முக்கியத்துவத்த பார்வையற்றோருக்கான சிறப்புப்பள்ளிகளையும் விளம்பரப் படுத்தி எல்லாருக்கும் தெரியப் படுத்தலாம். கொறஞ்ச பட்சம் அரசுகளோட கட்டுப்பாட்டுல இருக்க தொலைக்காட்சிகளாச்சும் செய்யலாம்.”

graphic பூவிருந்தவள்ளி சிறப்புப் பள்ளியி்ன் முகப்புப் படம்

 “பெரும்பாலான சிறப்புப்பள்ளியெல்லாம் நண்கொடைலதான் ஓடிக்கிட்டு இருக்கு. இதுல தொலைக்காட்சி விளம்பரத்துக்கு எல்லாம் அவங்க கிட்ட காசு இருக்காது தம்பி.” என்று சொல்லியபடியே அறிவுடை நம்பியும் எழுந்தான்.

 “ஏன்? இலவசமா செஞ்சி கொடுக்க மாட்டாங்களா?”

 இதற்கு நம்பியிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

இருவரும் அமைதியாய்ப் பூங்காவைக் கடந்தனர்.

 

(கட்டுரையாளர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றுகிறார். ).

slvinoth.blogspot.com என்ற தளத்தில் தொடர்ந்து எழுதிவருகிறார்)

தொடர்புக்கு: slvinoth91@gmail.com

2 கருத்துகள்:

  1. கட்டூரை அருமை.

    வாழ்த்துக்கள் வினோத்.

    பதிலளிநீக்கு
  2. கட்டுரையும் அதில் உள்ளடக்கப்பட்ட உணர்வுப் பூர்வமானக் கருத்துகளும் அருமை வாழ்த்துக்கள் வினோத் சார்

    பதிலளிநீக்கு