தொழில்நுட்பம்: வாசிச்சுக் காட்டறதோட நிக்கக்கூடாதுனு நினச்சேன் - இன்ஸ்டா ரீடர் அனுபவம் பகிறும் கீர்த்திகா! - பொன். குமரவேல்

graphic இன்ஸ்டா ரீடர் செயலியின் படம்
 

       எழுத்துனரி. இன்றைய கால கட்டத்தில் வாசிப்பை நேசிக்கும் ஒட்டுமொத்த பார்வையற்றோர் சமூகத்தின் எனர்ஜி பூஸ்ட்டாக மாறி இருக்கிறது இந்தச் சொல். இந்த எழுத்துனரிகளுக்கெனவே பல செயலிகள் ஆன்ராய்டு உலகில் நிறைந்து கிடக்கின்றன. அச்செயலிகள் எல்லாமே புகைப்படம் மற்றும் PDF கோப்புகளை எழுத்துகளாக மாற்றித்தரும் வேலையை மட்டுமே செய்துகொண்டிருக்கின்றன. இவற்றிலிருந்து சற்றே வித்தியாசமாக யோசித்து, ‘இன்ஸ்டா ரீடர்’  (insta reader) என்னும் இன்ஸ்டண்ட் ரீடிங் செயலியை வடிவமைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான கீர்த்திகா. 

graphic கீர்த்திகா அவர்களின் படம்
கீர்த்திகா

      இவர் வடிவமைத்திருக்கும் செயலி போலவே ஆங்கிலத்திற்கென பல இனையதளங்களும், சில செயலிகளும் தொழில்நுட்ப உலகில் வலம்வந்துகொண்டிருக்கின்றன. இந்தச் செயலியின் சிறப்பே நமது தமிழ் மொழியையும் இதனுள் உள்ளடக்கி இருப்பதுதான்!

      அப்படி அவர் உருவாக்கி இருக்கும் செயலியின் சிறப்புதான் என்ன? மேலும் என்ன மாதிரியான தொழில்நுட்பங்களை இச்செயலிக்குள் புகுத்தியிருக்கிறார்? இவர் இந்தச் செயலியை உருவாக்கக் காரனம் என்ன? போன்ற கேள்விகளோடு கீர்த்திகாவை ஒரு மாலை வேலையில் ஜூம் வழியே சந்தித்தேன். விரல்மொழியரைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டதும், உற்சாகமாய் பேசத் துவங்கினார்.

      “எனது சொந்த ஊர் வேலூர். நான் படிச்சு வளர்ந்தது எல்லாம் சென்னைலதான். பள்ளியில் இருந்தே கணினி அறிவியலில் ஆர்வம் இருந்தது. அதனால கல்லூரியிலையும் கணினி அறிவியல விருப்பப் பாடமா எடுத்துப் படிச்சேன். நான் படிச்சது MIT கல்லுரி. அங்கதான் விஸன் கம்பேனியன் (vision companion) அப்டிங்கிர அமைப்புல சேர்ந்து பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்குப் புத்தகங்களை வாசித்துக் காட்றதும், அஸைவ்மெண்ட்களை எழுதிக் கொடுக்குரதுமா இருந்தேன். இப்டித்தான் பார்வையற்றவர்கள் உலகிற்குள் காலடி எடுத்துவைத்தேன்.

      நான் ஒவ்வொரு நாளும் பார்வையற்றவர்களுக்கு வாசிச்சுக் காட்றப்பதான் எனக்கு ஒரு ஐடியா தோனுச்சு. இப்படி யாராச்சும் வாசிச்சுக் காட்டி பார்வையற்றவர்கள் படிக்கிறதுக்குப் பதிலா அவர்கள் பயன்படுத்தற ஸ்மாட் ஃபோன்லையே ஆடியோவா வாசிச்சுக் காட்ற மாதிரி ஒரு செயலி இருந்தா நல்லா இருக்குமே! அப்டினு நானே களமிறங்கி ஒரு வருஷ உழைப்புல உருவாக்குனதுதான் இந்த இன்ஸ்டா ரீடர். அதுமட்டும் இல்லாம, சில நேரங்கள்ல விசன் கம்பேனியன் அமைப்புக்கு வர்ர பார்வையற்றவர்களுக்கு வாசிப்பாளர்கள் கிடைக்காமல் சிலர் திரும்பிப் போரதையும் நான் பாத்திருக்கேன். இந்த நிகழ்வுதான் எனக்கு இச்செயலிய உருவாக்க உந்துதலா இருந்துச்சு.

செயலியை எப்படிச் செயல்படுத்துவது?

      இந்த இன்ஸ்டா ரீடரோட செயல்பாடு என்னன்னா நீங்க உங்கள்ட்ட இருக்க PDF மற்றும் இமேஜ் கோப்புகளைச் செயலிக்குள்ள அப்லோடு செஞ்ஜிட்டிங்கன்னா அத இந்தச் செயலி ஆடியோவா உங்களுக்கு மாத்திக் கொடுத்துரும். அதுமட்டுமில்லாம உங்கள்ட்ட இருக்க ஹாட் காப்பி புத்தகங்களையும் நீங்கள் இந்தச் செயலி மூலமா ஃபோட்டோ எடுத்து அதையும் ஆடியோவா மாத்திக்களாம். தற்போதைக்குத் தமிழ் மற்றும் ஆங்கிலத்துக்கு மட்டுமே ஆடியோவா  கிடைக்கற மாதிரி வடிவமைத்திருக்கிறேன். வரும் காலங்களில் மத்த இந்திய மொழிகளையும் இணைக்கிற திட்டம் இருக்கு.

உள்ளிருக்கும் தொழில்நுட்பம்

      இந்த இடத்துல இன்ஸ்டாவோட தொழிநுட்பச் செயல்பாட்டையும் விளக்கிடறேன். இன்ஸ்டா ரீடர்ல நீங்கள் அப்லோடு பன்னுர புத்தகங்கள் எல்லாம் இணையம் இல்லாம ஆடியோவா மாத்தற மாதிரிதான் வடிவமைத்திருக்கிறேன். இதற்கென்று டெசராக்ட் அப்டின்ற OCR தொழிநுட்பத்த இந்தச் செயலில பயன்படுத்திருக்கேன். இந்த டெசராக்ட் OCR பயன்படுத்தறது மூலமா இணையம் இல்லாமலே நீங்க விரைவா புத்தகங்கள ஆடியோவா மாத்திக்க முடியும்.

கூகுள் OCR தொழில்நுட்பத்தை இந்தச் செயலிக்குப் பயன்படுத்த இயலாதா?

      கூகுள் OCR அப்டிங்கறது இணைய இணைப்பைப் பின்பற்றிச் செயல்படுது. எனது முதன்மையான நோக்கமே இணைய இணைப்பு இல்லாமலேயே இச்செயலி செயல்படனும். அதனாலதான் கூகுள் OCR தொழிநுட்பத்த செயலிக்குள் பயன்படுத்தமுடியல. கூகுள் OCR தொழில்நுப்பமும் இணைய இணைப்பு இல்லாம செயல்படத் தொடங்கினா இச்செயலிக்குள்ளும் நம்ம கூகுளையும் கொண்டுவரலாம்.

ஒலி வடிவில் மாற்றப்பட்ட கோப்புகளைச் சேமிக்கமுடியுமா?

      நான் இப்போதைக்கு ஆடியோவா சேமிக்கிற வசதி கொண்டுவரல. வரும் காலங்களில் இந்த வசதியக் கொண்டுவருவேன். இங்க புத்தகங்கள ஆடியோவா சேமிக்கிர வசதியில இருக்கிற சில சிக்கல்களையும் நான் குறிப்பிட்டாகனும். முக்கியமா ஆடியோவா புத்தகங்கள மாத்தறப்ப அதோட MP3 கோப்போட அளவு அதிகமா இருக்கும். அடுத்த விஷயம், ஆடியோவா புத்தகங்கள மாத்தி MP3 கோப்பா மாத்தறதுக்கும் நேரம் பிடிக்கும். அதனாலதான் நான் தற்போதைக்கு இந்த வசதியக் கொண்டுவரல. இப்போ நீங்க செயலியில் மாத்தற ஆடியோ புத்தகங்கள் எல்லாமே KB கணக்குல உங்களோட இண்டர்னல் ஸ்டோரேஜ்ல சேமிக்கிற மாதிரி வடிவமைச்சிருக்கேன். இது இந்தச் செயலிக்கான பிரத்தியேக வடிவத்துலதான் உங்க ஃபோன்ல சேமிக்கப்படுது. இந்த ப்ரத்தியேக வடிவக் கோப்ப நீங்க இன்ஸ்டா ரீடர் மூலமா மட்டும்தான் ப்லே செஞ்ஜு கேக்க முடியும். இந்த MP3 கோப்புகளைக் கன்வர்ஸன் செய்வது தொடர்பாவும் ஆராய்ச்சி செஞ்சிக்கிட்டிருக்கேன்.

செயலிக்கான டுட்டோரியலில் தமிழிலும், ஆங்கிலத்திலும் டாக்பேக் பயன்படுத்தியிருந்தீர்களே! அது எப்படி?

      எனக்கு டாக்பேக் பயன்பாடு பத்தியெல்லாம் பெரிய அளவில தெரியாது. பார்வையற்றவர்கள் ஆன்ராய்டு ஃபோனைப் பயன்படுத்துறத நான் வாசிப்பாளராச் செயல்பட்டபோது பாத்திருக்கேன். அப்போ அவங்ககிட்ட டாக்பேக்கோட அடிப்படை குறித்து மட்டும் கேட்டுத் தெரிஞ்சுவச்சுக்கிட்டேன். அதுல எனக்குப் புரிஞ்சது. ஒரு விரலைக் கொண்டு இடமிருந்து வலமாக ஸ்வைப் செய்தால் அடுத்த ஐக்கானுக்குச் செல்லமுடியும், அதே வலமிருந்து இடமாக ஸ்வைப் செய்தால் முந்தைய ஐக்கானுக்குச் செல்லலாம். அந்த ஐக்கான் வேண்டுமெனில் ஐக்கானின் பெயரை டாக்பேக் உச்சரிக்கையில் இரு முறை திரையில் எங்கு வேண்டுமானாலும் டச் செய்யவேண்டும். இந்த அடிப்படைய வச்சுதான் நான் அந்த 2 டுட்டோரியலையும் உருவாக்கினேன்.

இந்தச் செயலியில் உங்களது எதிர்காலத் திட்டம் என்ன?

      நான் இப்போதைக்கு PDF மற்றும் இமேஜ் கோப்புகளை மட்டுமே ஆடியோவா மாத்தற மாதிரி வடிவமைச்சிருக்கேன். கோப்புகளோட வகைகள அதிகரிக்கனும். அதாவது, DOCX, EPUP, Text போன்ற கோப்புகளையும் ஆடியோவா மாத்தற மாதிரி செயலிய மேம்படுத்தனும். அதுமட்டுமில்லாம இதர மொழிகளுக்கும் சப்போட் செய்ர மாதிரியும் வடிவமைக்கனும்.  நான் இந்த ஆடியோ கன்வர்ஸனுக்குத் தற்போதைக்குப் பயன்படுத்தறது கூகுளோட எஞ்ஜின். இதையும் விரிவுபடுத்தனும். பெரும்பாலான பயன்பாட்டாளர்கள் ஈஸ்பீக் அப்டிங்கற எஞ்ஜினக் கேட்டிருக்காங்க. அதையும் விரைவில் செயலிக்குள் கொண்டுவரனும். இதர OCR செயலிகள் மாதிரி ஆடியோவோடு டெக்ஸ்ட் ரீடிங் ஆப்ஷனை மட்டும் கொண்டுவரலாம்னு நினைக்கிறேன்.

      இந்த இடத்துல ஒரு சின்ன சவாலையும் சொல்லி ஆகனும். இதர மொழிகள்ல இந்த செயலிய விரிவுபடுத்தறப்ப அந்த மொழிகளோட உச்சரிப்பக் கவனிக்கிறது ஒரு சவாலா இருக்கும்னு நினைக்கிறேன். இதத் தவிர்க்கற வழிமுறைகளையும் யோசிச்சுட்டிருக்கேன். இன்னும் யூஸர்ஸோட பிண்னூட்டங்களப் பொறுத்துச் செயலிக்குள்ள நிறைய செயல்பாடுகளக் கொண்டுவருவேன்.    

செயலியைப் பற்றி வந்த முதல் பாராட்டு யாருடையது? இந்தச் செயலிக்கு யாராவது அனுகல் தன்மை பரிசோதனை செய்து கொடுத்தார்களா?

      நான் இந்தச் செயலிய உருவாக்குனதும் பலரும் ப்லேஸ்டோர் வாய்லா ரிவியு கொடுத்திருந்தாங்க. அண்ணா நூலகத்தச் சேர்ந்த ஷங்கர் சுப்பையா சார் ஃபோன் மூலமா வாழ்த்துச் சொல்லி செயலி தொடர்பா சில ஆலோசனைகளையும் வழங்கினார். அதுமட்டுமில்லாம அவர் குமரேசன், நவரசன், மணிகண்டன் போன்ற சில பார்வையற்றவர்கள்ட்ட இருந்து செயலி குறித்த அனுகல்தன்மை ப்ரச்சனைகளையும் பெற்றுக் கொடுத்தார். அதனால இந்த நேரத்துல அவருக்கு எனது நன்றிய தெரிவிச்சுக்கறேன். 

இச்செயலி வணிகரீதியாகக் கொண்டுவரப்படுமா?

      அப்படி இப்போதைக்கு எந்த யோசனையும் எனக்கு இல்ல. இப்போதைக்கு நான் மட்டும்தான் இந்தச் செயலிய மெய்ண்டேன் பண்னிட்டிருக்கேன். பிற்காலங்கள்ல நிறைய யூசர்ஸ் வந்து, பயன்படுத்துனாங்கன்னா சர்வர் மேய்ண்டனன்ஸ்க்கு சொர்ப்பத் தொகைய வசுலிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படிப் பணம் கட்டுபவர்களுக்கு ஏதேனும் ப்ரிமியம் பயன்பாடுகளை அளிக்கலாம். மற்றபடி இலவசச் சேவை தொடரும்.

நீங்கள் இதற்கு முன் ஏதேனும் செயலிகளை வடிவமைத்திருக்கிறீர்களா?

      நான் இதுக்கு முன்னால பொதுப் பயன்பாட்டிற்குன்னு எந்தச் செயலியையும் வடிவமைக்கல. கல்லூரிக் காலத்தில ஹேக்கத்தான் போட்டிக்காக பேரிடர் சம்மந்தப்பட்ட செயலியைக் குழுவாச் சேர்ந்து உருவாக்கினோம். அது பேரிடர் காலங்கள்ல ஆபத்து இல்லாத பகுதிகளக் கண்டறிந்து மக்களுக்குக் காட்டும். ஆனா, சில சேட்டிலைட் அங்கிகாரச் சிக்கல்கள் காரனமா அத  எங்களால் பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடியல. ஆனாலும், மைக்ரோசாஃப்ட் நடத்திய அந்த ஹேக்கத்தான்ல நாங்க உருவாக்கிய அந்தச் செயலிக்கு இரண்டாம் பரிசு கெடைச்சது. நான் உருவாக்கிப் பொதுப் பயன்பாட்டுக்கு வந்த முதல் செயலி இன்ஸ்டாரீடர்தான்! 

அடுத்த பதிப்பு.....

      கடந்த ஜூலையில் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டது இன்ஸ்டாரீடர். அடுத்த சோதனை பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் கீர்த்திகா அவர்கள் மேலே சொன்ன பல வசதிகளை இப்பொழுது தனது இரண்டாவது சோதனை பதிப்பில் கொண்டு வந்திருக்கிறார். குறிப்பாக அவர் சொன்ன இதர மொழிகள் ஆப்ஷனையும் கொண்டு வந்துவிட்டார். வாழ்த்துகள் கீர்த்திகா! தொழிநுட்பம் வழியாகவும் உங்கள் தன்னார்வளர் பணி தொடரட்டும்!

 

கீர்த்திகா அவர்களைத் தொடர்புகொள்ளinstareader12@gmail.com


இன்ஸ்டா ரீடர் செயலியைப் பதிவிறக்க:

https://play.google.com/store/apps/details?id=com.suyam.instareader

 

கீர்த்திகா அவர்களுடனான விரிவான உரையாடல் நமது யூடியூப் தளத்தில் விரைவில் வெளியிடப்படும்.

 

தொடர்புக்கு: kumaravel.p95@gmail.com

10 கருத்துகள்:

  1. கீர்த்திகாவுக்கு நன்றிகளும், குமரவேலுக்கு வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  2. வாசிப்பதோடு நின்றுவிடாமல் நீண்டகாலத்திற்கு பயன்தரக்கூடிய ஒரு உதவியை செய்து விட வேண்டும் என்கிற கீர்த்திகாவின் எண்ணத்தை மனதாரப் பாராட்டுகிறேன். நீங்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சி ஒரு விதைக்கான முழு தகுதியையும் கொண்டிருக்கிறது. உங்களைப் போன்ற ஆற்றல் மிக்க உதவியாளர்களை எங்களின் உற்ற துணை புத்தகங்களை வாசிப்பதற்கு. நல்ல எதிர்காலம் உங்களுக்கு வாய்க்க வேண்டும் சமூகம் மேம்பட உழைக்கும் உங்கள் எண்ணம் மேம்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. இந்தக் கட்டுரையை நேர்த்தியாக எழுதி தந்து இருக்கக்கூடிய தம்பி குமரவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான பயனுள்ள பணி
    கீர்த்திகா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. ஜெயராமன் தஞ்சாவூர்27 அக்டோபர், 2020 அன்று PM 8:41

    கீர்த்திகா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    அவர்களின் வாழ்க்கையில் எல்லா வளமும் பெற இறைவன் அருள் புரிவாராக.

    திரு குமரவேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு