விவாதம்: பார்வையற்ற பெண்களே விழித்துக்கொள்ளுங்கள்...! - சோபியா மாலதி

graphic பார்வை மாற்றுத்திறனாளி பெண் ஊன்றுகோலிட்டு நடந்து செல்லும் படம்
 

      பெண்மையைப் போற்றாத உலகம் இல்லை. ஆதி முதல் அந்தம் வரை பெண் ஒவ்வொரு உயிருக்கும் அவசியப்படுகிறாள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதற்காக,நான் இடித்த புளி போல் இருப்பேன்; எனக்குச் சேவை செய்பவனே கணவன் என்று இன்றைய சில பார்வையற்ற பெண்கள் கூறும் கான்செப்ட்டை ஏற்கமுடியவில்லை.

      ஆம், நான் பெண்கள் குறித்துப் பேசுபவள் தான். அவர்கள் மிதிபடும்போதும், கண்ணீர் விடும்போதும் துடிக்கும் என் இதயம். அவர்கள் எதுவுமே தெரியாமல் புழுக்களாய் நெளிந்து கிடக்கும்போதும் என் இதயம் பதறுகிறது. இதைச் சுட்டிக்காட்டி, ஒரு சிறு மாற்றத்தையேனும் உருவாக்கிடவே இந்த முயற்சி.

      பார்வையற்ற பெண்களே! சற்று விழித்துக்கொள்ளுங்கள் இல்லையேல், பறிபோவது உங்களது திருமண வாழ்க்கை என்பதை உணருங்கள்.

      பார்வையற்ற பெண்கள் இன்றைய காலச் சூழலில் பலதரப்பட்ட துறைகளில் முன்னேறி வருவதை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் பலதரப்பட்ட பெண்கள் அதுவும் 90_களில் பிறந்த சில பார்வையற்ற பெண்கள் தங்களைக் கல்வியில் வளர்த்துக்கொள்கின்றனரே அன்றி. அவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் தங்களை வளர்த்தெடுத்துக் கொள்வதில்லை என்பது தான் உண்மை.

      அனைத்துப் பெண்களையும் குறை கூறுவது இக்கட்டுரையின்  நோக்கம் அன்று. தற்போதைய காலச் சூழலில் பல பார்வையற்ற பெண்கள் படித்துவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். அதைத் தவிர, வேறு எந்த  வேலையையும், குறிப்பாகத் தன்னைப் பேணும் செயலைக் கூட கற்றுக்கொள்ளாமல் பிறரைச் சார்ந்து, அவர்களை மட்டுமே நம்பியிருப்பவர்களாக இவர்கள் இருப்பதுதான்  கொடுமை.

      எனது இக்கருத்தை உணர மறுக்கும் பெண்கள் தங்களுக்குத் திருமண வாழ்க்கை மட்டும்  போதும்; வீட்டு வேலைகளையும், ஏன் தன்னை பராமரிப்பதையும் கூட மாமியாரோ! அல்லது வேலையாட்களோ! செய்துவிடுவார்கள் என எதிர்பார்க்கின்றனர். தன் சம்பளத்தைக் கொண்டு இவற்றைப் பூர்த்தி செய்துகொள்ளலாம் என யோசிப்பது அகம்பாவத்தின் உச்சம்.

ஏன் இந்த நிலை? இதை எப்படிச் சரி செய்வது?

      1985 களுக்குப் பிறகு பிறந்த பார்வை சவால் கொண்ட பல பெண்கள் தங்களைப் பேணத் தெரியாமல் இருக்கின்றனர். அதிலும் திருமணத்திற்குப் பின் கணவரோ மாமியாரோ வேலைகளைச் செய்யவேண்டும்; செய்தால் தான் என்ன என்று கேட்கும் நிலை. அது போக ஒரு அவசரத்திற்குக் கூட குடும்பத்தைப் பராமரிக்கத் தெரியாத நிலை. குழந்தை வளர்ப்பில் கோட்டை விடுவது ஏன் தெரியுமாதானே தன்னை இன்னும் குழந்தை போல் பாவித்துக்கொள்வது தான்.

      எனக்குத் தெரிந்த பல முழு பார்வையற்ற பெண்கள் தங்களையும், தங்களது குடும்பத்தையும், குழந்தைகளையும் அழகாக, பொறுப்பாக பேணிப் பாதுகாப்பதைக் காண முடிகிறது.

      எனக்குத் தெரிந்த ஒரு அக்கா மண்ணெண்ணெய் ஸ்டவ்வை கூட ரிப்பேர் செய்து சமைப்பதைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்.

      நான் கல்லூரி படிக்கும்போது தனியார் விடுதியில் தங்கியிருந்தேன். அப்பொழுது சமைப்பதற்கு ஆட்கள் இல்லை. அது சென்னையில் சுனாமி வந்த காலம்விடுதியில் தங்கியிருக்கும்போது அங்குள்ள 30/40 பேருக்குமான சாப்பாட்டுப் பாத்திரத்தை ஒரு முழு பார்வையற்ற அக்காதான் தனியாகத் தூக்கி வடிப்பார். அவர்  வடிப்பது ஒரு அழகுதான். கேஸ் ஸ்டவ்வை நிறுத்தி, பாத்திரத்தை உரிய இடத்தில் வைத்து, வடிநீர்   கொட்ட வேண்டிய பாத்திரத்தை உரிய இடத்தில் வைத்து, பின் வடித்து கையோடு சாப்பாட்டுப் பாத்திரத்தை வெளிப்புரங்களில் துடைத்தும் வைப்பார். பார்க்கவே அழகாக இருக்கும்.

      என் தோழி விசித்ரா தன் குழந்தைக்கு உணவு ஊட்டுவதும் ஒரு கலைதான். மகளை மடியில் உட்காரவைத்து, தலையைப் பிடித்துக்கொண்டு, வலது கையால் உதடுகளை விரல் நுனிகள் உரசியதும் ஊட்டுவாள். சமையலறை பராமரிப்பில் சக்கரவர்த்தி அவள்.

      எங்கள் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை திருமதி. கோ. அனுஷியா தேவி  அவர்களைப் போல எவராலும் வீட்டை பராமரிக்க முடியாது. இது எல்லாம் எப்படிச் சாத்தியமானது?

      முன்பிருந்த பார்வையற்ற சகோதரிகள் தங்களைத் தாங்களே சுயமாக வளர்த்துக்கொண்டனர். அதற்கான தேடல் அவர்களிடமிருந்தது. அது மட்டும் அன்றி, விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு தங்களைத் தாங்களே பேணுவது, வீட்டு வேலை, சமையல் வேலை முதலியவை  தெரிந்திருக்கும்.

      முன்பெல்லாம் பள்ளிகளில் மனையியல் பாடப்பிரிவு இருந்தது. அதில் மனிதனது பிறப்பு முதல் இறப்பு வரை அத்தனை விஷயங்களும் பாடமாகக் கூறப்பட்டிருக்கும். அதை பலர் செக்ஸ் கல்வி என்று கிண்டல் செய்வதைக்கூட நான் பார்த்திருக்கிறேன். அதில் வீட்டைப் பராமரிப்பது எப்படி, முதலுதவி, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள், உடல் அமைப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள், இனப்பெருக்கம், ஆடை அலங்காரம், ஆளுமை, போன்ற அத்தனையும் அடங்கும். அதைப் படிக்கும்போது என்னை ஒரு மருத்துவர் போல  உனர்ந்திருக்கிறேன்.

      ஆனால் வீடுகளில் அன்பு, பாசம், அனுதாபம் என்ற பெயரில் பார்வையற்ற பெண்களைக் கெடுத்தது பெற்றோர். விளைவு, அந்தப் பார்வையற்ற பெண்களுக்கு வெளி உலகமும் தெரிவதில்லை; தன்னைப் பேணவும் தெரியவில்லை; பிறரிடம் பழகவும் தெரியவில்லை.

      இதற்குக் காரணம் பள்ளிகளில் முன்பு போன்று அனுபவப் பாடம் இல்லை. மதிப்பெண்களை நோக்கி ஓடும் கல்வி நிறுவனங்கள் ஏனோ வாழ்க்கைக் கல்வியைக் கற்றுத்தர சற்று தடுமாறுகின்றன.   சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைவிட பார்வையுள்ளவர்களோடு இணைந்து படிக்கும் மாணவர்களுக்கு இத்தகு அனுபவங்கள் குறைவு என்பதுதான் என்னுடைய கருத்து; இது அனைவருக்கும் பொருந்தாது. பெற்றோரின் அதீத பாசம், மற்றவரது அனுதாப அணுகுமுறைகள் இவையாவும் இன்றைய பெண்களின் இத்தகு நிலைக்குக் காரணங்கள் எனலாம்,

இவற்றை மாற்றியாக வேண்டும்

      என்னிடம் ஒரு நண்பர் கூறினார்.நான் திருமணத்திற்குப் பிறகு என் மனைவியைச் சந்திக்கும் பொழுதெல்லாம் அவள் என்னிடம் மகிழ்ச்சியாகப் பேசுவதில்லை. கட்டிலின் மறுபக்கம் திரும்பி அமர்ந்துகொள்கிறாள். என்னிடம் பேசவும், சிரிக்கவும் மறுக்கிறாள் ஆனால் நான் அவளுக்குப் புடவை அணிவிப்பது முதல் உணவைச் சமைத்துத் தருவது வரை எல்லா வேலைகளையும் செய்துதருகிறேன். என்னிடம் பாசம் காட்டக்கூட யோசிக்கும் அவளுக்காக நான் இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே இருக்கமுடியும்?” என்று தன் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்.

      சென்னை பூவிருந்தவல்லி பார்வையற்றோருக்கான பள்ளியின் முன்னாள் பட்டதாரி ஆசிரியை திருமதி சந்திரிகா அம்மையார் அவர்கள் என்னிடம் பேசியபோது கூறியதாவது. "நான் பல பெண்களோடு பழகியிருக்கிறேன். என்னிடம் பயின்ற மாணவிகளும் இருக்கின்றார்கள். ஆனால் இப்பொழுது பார்வையற்ற பெண்கள் பெரும்பாலானோர் தங்கள் கல்வியை முன்னிறுத்தியே வாழ்ந்து விடலாம் என்று நினைக்கின்றனர். பிறரை மதிப்பதில்லை; குடும்பத்தைப் பேணிப் பாதுகாக்கவும் தெரியாத நிலை. இது எனக்குப் பெருத்த வருத்தத்தைத் தருகிறது. இந்நிலை மாறவேண்டும்."

      நான் அவர்களுக்குக் கூறும் அறிவுரை யாதெனில், மாணவக் கண்மணிகளே! நீங்கள் கல்வியோடு சேர்ந்து பிற செயல்களையும், வீட்டு வேலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களையும் உங்கள் குடும்பத்தையும்  உற்றார் உறவினர்களையும் அரவணைக்கத் தெரிந்திருக்கவேண்டும். அது மட்டுமே உங்களைச் சிறந்த பெண்மணியாக இந்தச் சமுதாயத்திற்குப் பிரதிபலிக்கும் என்றார்.

தியரி மட்டும் தெரிந்தால் போதுமா?

      என்னிடம் ஒரு தோழி தனக்கு மணமகன் பார்க்கச் சொல்லியிருந்தார். ஆனால் அவரிடம் நீ வீட்டு வேலைகள் மற்றும் இன்ன பிற வேலைகள் எல்லாம் செய்துவிடுவாயா?” என்று கேட்டபொழுது அவர் கூறிய பதில் எனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

      அவர் கூறியதாவது:அக்கா, எனக்குச் சமைக்கத் தெரியும்; ஆனால் கேஸில் சமைக்கத் தெரியாது. தியரியாகத் தெரியும்; பிராக்டிகலாகத் தெரியாது. பாத்திரம் கழுவி, துணி மடிப்பேன். ஆமாம். இது பற்றி ஏன் கேட்கிறீர்கள்? திருமணத்திற்கும் நீங்கள் கேட்பதற்கும் என்ன சம்மந்தம்? திருமணம் ஆனால் என்ன, வீட்டு வேலைகளை வேலைக்காரி செய்துவிடப் போகிறார் என்றாள்இந்த வார்த்தைகள்தான் என்னை இக்கட்டுரை எழுதத் தூண்டின.  இன்றைய காலச் சூழலில் இதுதான் பெரும்பாலான பார்வையற்ற தோழிகளின் நிலையாக இருக்கிறது.

      எதிலும் அலட்சியம்; எங்கும் அலட்சியம். அதை மாற்றிக்கொள்ள முற்படவேண்டும். வாழ்க்கைக்கு எவையெல்லாம் தேவையோ அவற்றைத் தேடி கற்றறிய வேண்டும். வெறும் தியரி வாழ்க்கைக்கு ஒத்துவராது; பிரக்டிகல் அவசியம் தேவை. இதைத்தான்ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாதுஎன்கிறார்கள் தியரியில் சமைத்து இலையில் பரிமாறுவது எப்படி?

      தியரி தான் உங்கள் கான்செப்ட் என்றால் கணவனும், குழந்தையும், திருமண வாழ்க்கையும் கனவில் மட்டுமே இருக்கும். பார்வையற்ற பெண்களே! இனியேனும் விழித்துக்கொள்ளுங்கள். மணமகன்கள் உங்களை நிராகரிக்கும் காலம் இது.

      நீங்கள் வீட்டில் எஜமானியாக இருக்கலாம், இருந்தாலும் எஜமானியும் நிர்வாகம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் எஜமானிக்கு மரியாதை; இல்லையேல் வீட்டு வேலைக்காரி உங்கள் இடத்தை நிரப்பக்கூடும்.

 

(கட்டுரையாளர் தஞ்சை பார்வைக் குறையுடையோருக்கான அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்).

தொடர்புக்குsophiamalathi77@gmail.com

9 கருத்துகள்:

  1. நல்ல அறிவுரைகள். ஆனால் உங்களிடம் ஏனோ அனல் குறைந்துவிட்டது. எப்போதுமே தெறித்து விழும் கருத்துக்கள் தற்பொழுது தெளித்து விடப்பட்டுள்ளன.
    இன்னொரு கட்டுரை எழுதுங்கள். அதில் முற்றிலும் பார்வையற்ற பெண்களுக்கு பறிபோகும் திருமண கனவை குறித்து விரிவாய் பேசுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. இந்த நிலை என்பது எல்லாக் கால பார்வையற்ற பெண்களிலும் ஒரு சாராருக்கு உரித்தானது. கட்டுரையில் 1985க்கு பிறகு என்கிறீர்கள். உங்கள் தோழி விசித்ரா 1986 தானே. எனவே விஷயம் அது இல்லை. மனையியல் (home science) இதுவரை அரசு சிறப்புப் பள்ளிகளான பூவிருந்தவல்லி, திருச்சி மற்றும் தஞ்சைப் பள்ளிகளில் இல்லையே. DLS Daily Living Skill என்ற ஒரு பாடவேளையாவது நமது சிறப்புப் பள்ளிகளின் அன்றாட வகுப்பறைச் சூழலில் வகுத்திருக்கிறோமா? தொழில்கல்வி ஆசிரியர்கள் உண்டா? அதுதான் முக்கியக் காரணம்..

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் டீச்சர் உங்களுடைய மாணவனாகிய முனிய பிள்ளை நான் பேசுகிறேன் டீச்சர்உங்களுடைய கட்டுரையானது மிகவும் அருமையாக இருக்கும் டீச்சர் டீச்சர் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது எங்க டீச்சர் ஏன் நீங்கள் பெண்களை பற்றி மட்டுமே நீங்கள் சொல்கிறீர்கள் ஆனால் உங்களைப் போன்ற பார்வையற்ற ஆண்களாகிய எங்களுக்கும் இதே நிலைமைதான் டீச்சர் இந்த சமுதாயத்தில் நிலைமை இருக்கிறது டீச்சர்சொன்னீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை டீச்சர்ஆண்களுடைய நிலைமையும் இதுதான் எங்க டீச்சர்

    பதிலளிநீக்கு
  4. அக்கா, தங்களின் எழுத்து நடை மிகசிறப்பாக அமைந்திருக்கிறது. ஆனால், தங்களின் கருத்திற்கு நான் முற்றிலும் முரண்படுகிறேன். தங்களின் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவகை பார்வையற்ற பெண்கள் எல்லா காலகட்டத்திலும் வெகுசிலர் இருக்கிறார்கள் என்பது நிச்சயம். அதற்காக ஒரு குறிப்பிட்ட காலத்தை சார்ந்த பார்வையற்ற பெண்களை இவ்வாறு குறைத்து "அகங்கார போக்கு" என்றெல்லாம் எழுதுவது முற்றிலும் தகுந்ததல்ல. இக்காலத்தில் வாழும் பார்வையுள்ள பலர் இத்தகைய வீட்டுப்பணிகளை மேற்கொள்ள தயங்கும் வேளையில், அதனை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைக்கும் பார்வையற்ற பெண்கள் இருக்கிறார்கள். அதிலும் தங்களை போன்ற குறை பார்வையுடையவர்கள் முழு பார்வைக்குறைபாடுள்ள பெண்கள் மேற்கொள்ளவேண்டிய வீடுசார் பணிகளை வழிக்காட்டியிருக்கலாம், இயன்ற பல யுக்திகளை பயன்படுத்த தெரிவிக்கலாம். அதைவிடுத்து ஊனமுற்றோர் குறித்த கல்வியியலுக்கு பரிந்துரைக்கப்படவிருக்கின்ற இத்தகைய பொது தலத்தில் மற்றும் சமூக ஊடகங்களில் இவ்வாறான கருத்துக்களை அறவே தவிர்க்குமாறு ஒரு பார்வையற்ற பெண்ணாக தங்களை கேட்டுக்கொள்கிறேன். தங்களை போன்றவர்களின் எழுத்துக்கள் இளையவர்களுக்கு தகுந்த சூழலை உருவாக்க முயலவேண்டுமேயந்த்ரி, இவ்வாறு குறைகூறுதல்கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பெண்ணிய பார்வை. உங்களை போன்ற பெண்கள் இறுக்கும் வறை. பார்வையற்ற பெண்களுக்கு பின்னடைவு என்பது இருக்காது.

      நீக்கு
  5. பார்வையற்ற பெண்களுக்கு பொது சமூகத்தில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய பதிவு.

    பதிலளிநீக்கு
  6. ஜெயராமன் தஞ்சாவூர்1 டிசம்பர், 2020 அன்று PM 7:00

    இந்த கட்டுரையில் பார்வை மாற்றுத்திறனாளர் பெண்களின்
    வாழ்க்கை சிறப்பாகவும் ஒளிமயமாக்குவும்
    திகழ வேண்டும் என்ற கட்டுரையாளரின் உண்மையான அக்கறையும் நோக்கமும் தெரிகிறது.

    எழுத்தில் சற்று காரம் கூடி போய் இருக்கலாம்
    அதனால், கருத்தில் சற்று தொய்வு ஏற்பட்டது போல தோன்றினாலும்,
    பெண்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தினை துணிச்சலோடு கூறி இருக்கும் கட்டுரையாளர் பாராட்டுக்குரியவர்.

    பதிலளிநீக்கு
  7. அன்பிற்கினியவள் சித்ரா2 டிசம்பர், 2020 அன்று PM 10:26

    படைப்பு தனது கண்ணை தாமே குத்திக்கொள்வதுபோல் உள்ளது.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் மேடம் நீங்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் மிக மிக அருமை இதை வழங்கியமைக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் நீங்கள் கூறிய இந்த தகவலை கேட்டாவது பெண்கள் விழித்துக் கொண்டால் அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு