ஆதங்கம்: அறிவை அடமானம் வைத்துவிட்டோமா நாம்? - M.பாலகிருஷ்ணன்

graphic Recognize Reject Report FRAUD என்ற ஆங்கில வார்த்தைகள் அமைந்த படம்

      மனிதனுடைய மிகச் சிறந்த கண்டுபிடிப்பு  பணம். இதைப் பெறுவதற்காகவே நாம் வாழ்வின் முக்கால்வாசி நாட்களைச் செலவிடுகிறோம். அதனாலோ என்னவோ, மனிதன் இறக்கும்வரை பணத்தின் மீது தீராத மோகம் கொண்டவனாக இருக்கிறான். இந்தப் பணத்தால்தான் அவனுக்கு எல்லாமும் கிடைக்கிறது; அதே சமயம், எதுவும் கிடைக்காமலும் போய்விடுகிறது. இப்படி இருக்க, பணம் சம்பாதிக்க இருக்கும் நேர்மையான வழிகளைவிட குறுக்கு வழிகள்தான் நம்மை விரைந்து வந்தடைகின்றன; அதையே நாமும் விரும்புகிறோம்.

      நீங்கள் வேண்டுமென்றால் யூடியூபில் சென்று,குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பது எப்படி?’ எனத் தேடிப்பாருங்கள். நிறைய வீடியோக்கள் கிடைக்கும். தினம்தோரும் வரும் செய்தித்தாள்களில் ஒரு பண மோசடி செய்தியாவது இடம்பெற்றிருக்கும். காரணம், மனிதனுக்கு இருக்கும் பணத்தின்மீதான ஆசைதான். யாரோ ஒருவரது ஆசைக்கு பல நடுத்தர மற்றும் ஏழை மக்களின் அறியாமையைப் பயன்படுத்திச் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். நாமும் பணம் எளிதாகக் கிடைக்கிறதே என்று எண்ணி எளிதில் ஏமாந்துவிடுகிறோம்.

      அன்மையில் எனக்குத் தெரிந்த அளவில் 2 வகைகளில் இப்படி மக்கள் ஏமாந்திருக்கிறார்கள்.

1.ரூ 60000 கட்டினால் வருட இருதியில் ரூ 120000மாக கிடைக்கும் என கூறியவர்களிடம்.

 2. ரூ 15000 கட்டினால் வருட இருதியில் ரூ 81000 வரும் என கூறியவர்களிடம்.

இவர்கள் இருவருமே, தெரிவித்த தொகை படிப்படியாக  மாதந்தோறும் வங்கியில் வரவு வைக்கப்படும் எனக் கூறியவர்கள். ஆனால், இன்றுவறை ஒருவருக்குக் கூட அவர்கள் உறுதியளித்த தொகை முழுமையாகக் கிடைக்கவில்லை என்பதே பலரும் கூறும் தகவல்.

பார்வையற்றவர்களும் ஏமாந்திருக்கிறார்கள்

      முதலாம் பிரிவில் நான் அறிந்த பலர் ரூ 60000 கொடுத்து ரூ 16000 மட்டுமே பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கொடுப்பதற்கு முன்பே நான் எச்சரித்தேன் ஆனால் யாருக்கு தான் பணத்தின் மீதான ஆசை விட்டது? கேட்கவில்லை. இப்போது 46000 அம்பேல்.

      நான் குறிப்பிட்ட இரண்டாம் வகையில்தான் பார்வை மாற்றுத்திறனாளிகளும் பெருவாரியாகப் பணம் போட்டு ஏமாந்துள்ளார்கள் என்பதை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. அது குறித்து சற்று விரிவாகவே பார்ப்போம்.

      அவர்கள் தெரிவித்த அந்த நிறுவனம் கேரளாவிலிருந்து இயங்குவதாகக் கூறுகிறது  கூகுள். பிட்காயின்களில் தாங்கள் முதலீடு செய்வதன் மூலம் தங்களது சந்தாதாரர்களுக்குப் பணம் கொடுப்பதாக அவர்கள் எனது நன்பர்களிடம் தெரிவித்துள்ளார்கள். ஆனால், இவை முறையான பிட்காயின் கிடையாது என இந்தியன் எக்ஸ்பிரஸ், எக்கனாமிக் டைம்ஸ் போன்ற செய்தித் தாள்கள் கூறுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு இந்த நிருவனத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார் என்றும் அவை கூறுகின்றன.

      இதில் என்னையும் முதலீடு செய்ய எனது நன்பர்கள் வற்புருத்தியதால், நானும் எனது நன்பர் ஒருவரும் இது குறித்து கூகுலில் தேடும்போது கிடைத்த தகவல்கள் இவை. தொடர்புடைய நிறுவனம் குறித்து தொடர்ந்து கிடைத்த தகவல்கள் எல்லாமே இன்னும் எதிர்மறையாகவே  இருந்தன.

எல்லை மீறிய ஆசை

      இது குறித்து நண்பர்களிடம் எடுத்துரைக்க முயன்று தோற்றுவிட்டேன். அவர்கள் நான் கூறுவதைக் கண்டுகொள்வதாக இல்லை. காரணம், அவர்களிடமிருந்த பணம் சம்பாதிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் எல்லை மீரிவிட்டது.

      நிரந்தரமாக மாதச் சம்பளம் வாங்குபவர்கள் தொடங்கி, நாள் ஊதியம் பெறுபவர்கள், வேலை இல்லாதவர்கள் வரை இதில் பணம் போட்டுள்ளார்கள். ஏமாந்தவர்களில் படிக்காதவர்கள் சிலர் இருந்தாலும் படித்தவர்கள், அதிலும்  தினந்தோரும் செய்திகளைப் பார்ப்போரும் ஏமாந்திருக்கிறார்கள் என்பது வருத்தத்தைத் தருகிறது. படித்து அரசு வேலையில் இருப்பவர்கள் கூட, மற்றவர்களை மூளைச் சலவை செய்துள்ளார்கள்.

      ஏமாந்தவர்களில் பெரும்பாலோர் படித்தவர்கள்; இனையத்தை இயக்கத் தெறிந்தவர்கள். ஒரு 15 நிமிடம் ஒதுக்கி இணையத்தில் இது குறித்துத் தேடியிருந்தார்கள் என்றால், இத்தனை பேர் ஏமாறாமல் இருந்திருக்கலாம்.

ஏன் நாம் இவ்வளவு சோம்பேரியாக இருக்கிறோம்?

      ஒரு யூடியூப்பில் சொல்பவர்களை நம்பத் தயாராகிவிட்டோம். சிந்தனை செய்யத் தவறிவிட்டோம்.

       பணத்தை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துவிட்டு அதை ஓரளவு திரும்பிப் பெற்ற சிலர், “போட்ட பணம் நமக்கு திருப்பி வந்திருச்சு. கூடுதல் பணம் வந்தால் என்ன? வரலைன்னா எனக்கென்ன?” என்ற குருகிய மனநிலைக்குச் சென்றுவிட்டார்கள். உங்களுக்கு வந்த பணம் எல்லாம் உதிரியாய் வந்தவை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா?

      இன்னும் சிலர், நான் அதில் பணம் போடவேயில்லை என வெளியில் பொய் சொல்லிவிட்டு தானும் பணம் செலுத்தி, மற்றவர்களையும்  மூளைச்  சலவை செய்கிறார்கள். காரணம், முதலீடு செய்தவர் இன்னொருவரைச் சேர்த்துவிட்டால் அவருக்குச் சில ஆயிரங்கள் கிடைக்கும். அதனால், தானும் விழுந்து, மற்றவர்களையும் பாதாளக் குழியில் தள்ளுவது எவ்விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை. நமது பிரதமர் கூட அந்தக் கம்பெனி விளம்பரத்தில் நடித்திருக்கிறார் என்று கூட சிலர் கதை விட்டிருக்கிறார்களாம்!

நம்மவர்கள் யோசிக்கவேண்டும்.

      பணம் எல்லோருக்கும் ஒன்றுதான். லாபமோ, நட்டமோ எல்லோருக்கும் ஒன்றுதான். . ஒருவர் மற்றொருவரைச் சேர்த்துவிடுவதன் மூலம் கிடைக்கும் ரூபாய்க்கு ஆசைப்பட்டு அவர்களை பாதாளக் குழியில் தள்ளுவது எவ்வகையில் நியாயம்? தள்ளிவிடபட்டவர்களும் 15000 ரூபாய் கொடுத்தால் 81000 ரூபாய் எப்படிக் கிடைக்கும் என யோசிக்க வேண்டாமா? இத்தனை வருடம் நாம் பெற்ற அறிவை எங்கு அடமானம் வைத்தோம் எனத் தெரியவில்லை.

      பணம் சம்பாதிக்கப் பல வழிகள் உள்ளன. ஆசைப்படுபவர்களு்க்கு அது குறித்த புரிதல் வேண்டும். முடிந்தால் ‘Rich Dad, Poor Dad’ (தமிழில்பணக்காரத் தந்தை, ஏழைத் தந்தை’) என்ற புத்தகம் படியுங்கள். அதன்மூலம் ஒரு தெளிவு நமக்குக் கிடைக்கும். இது மட்டுமின்றி, பணம் சம்பாதிப்பது தொடர்பாகப் படித்துத் தெரிந்துகொள்ள நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. அதனை வாங்கிப் படித்துவிட்டு முதலீடு செய்து பணத்தைப் பெருக்குங்கள். அதைவிட்டுவிட்டு இம்மாதிரியான போலியான கம்பெனிகளில் பணத்தைப் போட்டுவிட்டுப் பிறகு புலம்பாதீர்கள்.

என்ன செய்யலாம்?

      இது போன்ற ‘BLACK CHAIN’ கம்பெனிகளில் பணம் போடும்பொழுது உங்களது நன்பர்கள், சொந்தக்காரர்களைக்கூட நம்பவேண்டாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஏனெனில், அவர்கள் உங்களைச் சேர்த்துவிட்டால் அவர்களுக்குக் குறிப்பிட்ட தொகை கிடைக்கும்.

அடுத்து கூகுல் கோரா (quora) போன்ற கேள்வி பதில் இனையதளங்களில் சென்று குறிப்பிட்ட நிருவனம் குறித்துக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அதில் கிடைக்கும் தகவலை அடிப்படையாக வைத்து உங்களது மேலான முடிவினை எடுக்கலாம்.

      இந்த யூடியூப், வாட்ஸப் போன்ற ஃபார்வேடுகளை நம்ப வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

இறுதியாக

      மேலே சொன்ன விஷயங்களை நீங்களே தேடுங்கள், உங்களது அறிவை மற்றவர்களிடம் அடமானம் வைத்துவிட வேண்டாம்.

பணம் அன்றாட வாழ்விற்குத் தேவைதான், அதற்காக நமது சுய அறிவை இழந்துவிடுவது சரியல்ல.  எளிதில் பணம் கிடைக்கும் என யாராவது உங்களிடம் கூறினால் அது 99% போலியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.  இவற்றை மனதில் கொண்டு பணம் சம்பாதியுங்கள்.

graphic கட்டுரையாளர் M.பாலகிருஷ்ணன் அவர்களின் படம்
கட்டுரையாளர் M.பாலகிருஷ்ணன்

 

((கட்டுரையாளர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்றவர்().

 

தொடர்புக்கு: m.bala10991@gmail.com

5 கருத்துகள்:

 1. சிறப்பான பதிவு பாஸ். நாம் பேசியதை நீ எழுத்தாக்கிவிட்டாய். நிறைய எதிர்ப்பார்க்கிறேன். தொடர்ந்து எழுதவும்.

  பதிலளிநீக்கு
 2. நிச்சயம் எடுத்துரைக்கப்பட வேண்டிய விடயம். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 3. ஜெயராமன் தஞ்சாவூர்1 ஜனவரி, 2021 அன்று PM 10:34

  ஆசையை தவிர்த்து அறிவுடன் சிந்தித்து செயல்பட வேண்டும் என்ற கருத்தை உதாரணங்களுடன் விளக்கியிருக்கும் கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. i read the article. excellent compilation of informations of cheating. this article gives awareness at the right time to me. i was thinking to invest in such a company. i searched information in the youtube about that company. i understood their conspiracy. thanks for this useful article.

  பதிலளிநீக்கு