கருத்துக்களம்: ஆசைத்தம்பியும் அறிவுடை நம்பியும் - 9 - வினோத் சுப்பிரமணியன்

graphic இரண்டு நண்பர்கள் பேசிக்கொள்வது போல் அமைந்த கார்டூன் படம்

             தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பூங்காவினுள் நடந்தான் நம்பி. ஏதோ சிந்தனை. அது அவனது கண்களில் தெரிந்தது. பூங்காவிற்குள் வந்து கொண்டிருந்த சிலருக்கும் அது தெரியத்தான் செய்தது. ஆனால் யாரும் நலம் விசாரித்தார்களே தவிர நம்பியிடம் அதைப்பற்றி எதுவும் கேட்கவில்லை. அவர்களைக் கடந்த வண்ணம் சிதறாத சிந்தனையுடன் நடந்தவண்ணம் இருந்தான் நம்பி. அவன் மனதில் ஓடிக்கொண்டிருப்பதை ஹோல்டான் செய்ய ஒருவன் இருக்கிறான் என்பதாலோ என்னவோ யாரும் அவனை கேள்வி இன்றி கடந்து போயினர்.

இப்படி யோசிச்சு யோசிச்சுதான் பாதியைக் காணோம்என்றது ஒரு குரல்.

அது நமது ஆசைத் தம்பியின் குரலென்று வாசகர்களுக்கு சொல்லிப் புரிய வேண்டியதில்லை.

என்னது பாதியைக் காணோம்?” என்றான் நம்பி திடுக்கிட்டு.

இம் ---,

என்னது!”

தலையில இருக்க முடியைச் சொன்னேன்டாஎன்றான் தம்பி. அறிவுடைநம்பி மீண்டும் யோசனைக்குச் சென்றான்.

அப்படி என்னதான் யோசனை நம்பி உனக்குஎன்று கேட்டான் தம்பி.

இப்போ நாம ரோட்டுல நடந்து போறோம்னு வெச்சிக்கோ.”

ஆமாம் பெட்ரோல்  விக்கிர விலைக்கு அதைத்தான் செய்யணும். சரி நீ டென்ஷன் ஆகாம சொல்லு.”

இவன் வேற நேரம் காலம் தெரியாமஎன்று சளித்துக்கொண்ட நம்பி

யாரோ உன் மேல வந்து தெரியாம மோதிட்டாங்க அப்படினா நீ எப்படி ரியாக்ட் பண்ணுவ?” என்றான் தம்பியைப் பார்த்து.

அது யார் வந்து இடிக்குறா அப்படிங்கிரத பொறுத்து. ஜென்சா இருந்தா கோவப்படுவேன். அதுவே லேடிசா இருந்தா எதுவும் சொல்ல மாட்டேன். எதுக்குனா லேடீஸ் பாவம் இல்லையா. பொறுத்துக்குவேன்என்ற ஆசைத் தம்பியின் பதிலைக் கேட்டு அங்கிருந்த யாராலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அந்தச் சிரிப்பொலியைக் கேட்டு திரும்பிய நம்பி அங்கிருந்தவர்களை எண்ணினான். வழக்கத்தைவிட கூட்டம் சற்று அதிகம். இவர்கள் இருவரும் உரையாடும்போது கூட்டம் கூடுவது இயல்பு என்பதால் நம்பி மீண்டும் தம்பியை நோக்கி பேச துவங்கினான்.

பொருத்துக்குவியா இல்ல சந்தோசப் படுவியா?” என்று கிடுக்குப்பிடி போட்டான் நம்பி.

இந்தக் கேள்வியை நான் உன் கிட்ட கேட்டிருந்தா நீ என்ன பதில் சொல்லி இருப்பியோ அதையே பதிலா வெச்சிக்கோ.” என்று சாமர்த்தியமாக தப்பித்தான் தம்பி. ஆனால் அவன் அதோடு நிறுத்தவில்லை.

இப்போ இதையெல்லாம் எதுக்கு கேக்குற அப்படினு நீயே சொல்லிடு நம்பி.”

ஒரு பெருமூச்சு விட்டபடி தொடர்ந்தான் நம்பி.

இல்லடா இந்த மாதிரியான ஒரு கேள்வியைத்தான் பார்வையில்லாதவங்க கிட்ட கேட்டேன். ஆனா கொஞ்சம் வேற மாதிரி.”

வேற மாதிரினா?”

அவங்க கிட்ட என்ன கேட்டேன் அப்படினா, பார்வை இருக்குற ஒருத்தங்கள நீங்க இடிச்சிட்டாலோ தெரியாம அவங்க மேல கை பட்டுட்டாலோ இல்லனா அவங்களோட பொருளைத் தட்டிவிட்டாலோ அதுக்கு அவங்க கொடுத்த மறக்க முடியாத ரீயாக்ஷன் என்னணு சொல்லச் சொன்னேன்.”

அதாவது பார்வை இருக்கவங்களோட எதிர்வினை.”

ஆமாம்.”

பார்வை இல்லாதவங்க மேல.”

அதேதான்.”

இந்தத் தலைப்பு நல்லா இருந்தாலும் கொஞ்சம் நெருடலா இருந்திருக்கும் இல்லையா நம்பி?”

இருக்கும்தான் ஆனா அதுக்குதான் நான் உங்களுடைய நண்பர்களுக்கு நடந்த அனுபவத்தை கூட பகிர்ந்துக்கோங்க அப்படினு சொன்னேன். ஆனா பெரும்பாலானவங்க அவங்களுடைய அனுபவத்தையே பகிர்ந்துக்கிட்டாங்க தம்பி.”

பெரிய விஷயம் தான் நம்பி. எனா மெஜாரிட்டியான டைம்ல இவங்க அவமான படக்கூடிய சூழ்நிலைதான் உருவாகி இருக்கும். அதை வெளிப்படையா உன் கிட்ட வந்து பகிர்ந்துக்கிட்டாங்க அப்படினா அது உண்மையிலேயே கிரேட்.”

ஆமாம் அதனால இந்தமுறை கட்டுரைல சம்பவத்தை மட்டும் பதிவு பண்ணிட்டு சம்மந்தப் பட்டவங்களுடைய பெயர குறிப்பிட வேண்டாம்னு நினைக்கிறேன்என்றான் நம்பி.

அதுவும் சரிதான் நம்பி என்ற தம்பி நம்பியைப் பார்த்து

சரி நீ தொடங்குஎன்றான்.

எங்கிருந்து தொடங்குறதுநூதான் தெரியல.” என்றான் நம்பி குழப்பத்துடன்.

ஒரு நொடி யோசித்த ஆசைத் தம்பி,

சரி நான் சொல்லுறேன். ஓப்பன் பண்ணா ஒரு சினிமா தியேட்டர் அதுல நம்ம ஹீரோ அவருடைய நண்பரோட படம் பாத்துக்கிட்டு இருக்காரு. திடீர்னு பாத்தா ஒரு நாலு பேரு அவர அடிக்க வந்துட்டாங்க. ஏதேதோ பேச ஆரம்பிச்சிட்டாங்க இவங்களுக்கு எண்ணன்னே புரியல. எதுக்கு இவருக்கிட்ட பிரச்சினை பண்ண வந்திருக்காங்கணு நம்ம ஹீரோவோட நண்பருக்கு தெரியல. அவருக்கு மட்டுமில்ல எனக்கும் கூட தெரியல. ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணு கிரியேத் பண்ணி சொல்லுறேன்.” என்றான் ஆசைத் தம்பி.

அது எதுக்குநு எனக்கு தெரியும்.” என்றான் நம்பி.

நானே ஏதோ உளறிக்கிட்டு இருக்கேன் இதுல இவருக்கு காரணம் தெரியுமாம்.” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான் தம்பி. இருப்பினும் நம்பி தொடர்வது அவனுக்கு சற்று ஆர்வத்தை ஏற்படுத்தியது. பேசத்துவங்கினான் அறிவுடை நம்பி.

எதுக்குனா நம்ம ஹீரோ இண்டர்வெல் டைம்ல அந்த நாலு பேர்ல ஒருத்தர இடிச்சிட்டாரு. தெரியாமதான். அதுக்கு மன்னிப்பும் கேட்டுட்டு உள்ள வந்துட்டாரு. ஆனா இடிவாங்குன ஆளுக்கு  இவரு வேணும்நே இடிச்சதாவும் மதிக்காம போனதாவும் ஒரு எண்ணம். அதனால கூட இருந்தவங்கள கூட்டிட்டு வந்துட்டாரு.”

பரவாயில்லையே நம்மள விட நல்லா கதை சொல்லுறானே. இப்போ என்ன பைட் சீனா?” என்றான் தம்பி மனதிற்குள்.

ஹீரோவோட ஃபிரண்ட் எவ்வளவு எடுத்து சொல்லியும் அவங்க கேக்கல. விஷயம் தெரிஞ்ச செக்கியூரிட்டி உள்ள வந்து எல்லாரையும் வெளிய கூட்டிட்டு போயி விசாரிச்சாரு. அவருக்கு பிரச்சின புரிஞ்சிடிச்சு.”

ஆனா எனக்குதாண்டா புரியல. அப்போ பைட் சீன் இல்லையா?” என்ற தம்பி அப்புறம் எதுக்கு இவரு ஹீரோ?” என்றான்

நானா சொன்னேண். நீ சொன்ன நான் கண்டிநியூ பன்னேன் அவ்வளவுதான்.”

ஆமால்ல? சரி சொல்லு. ஆனா நாம அவுட்  ஆப் டாபிக் பேசிக்கிட்டிருக்கோம்னு நினைக்குறேன்.”

ஹாஹாஹா இதுதாண்டா அக்சுவேல் டாப்பிக்கே. அந்த தெரியாம இடிச்சவருக்கு பார்வை கிடையாது. அதைத்தான் அவருடைய நண்பரும் அந்த நாலு பேர்க்கிட்டையும் சொல்லிக்கிட்டிருந்தாரு. அவங்க நம்ப விரும்பல. விஷயம் செக்யூரிட்டி வரைக்கும் போயிடிச்சு. அப்புறம் அந்த செக்யூரிட்டிதான் அவருக்கு பார்வைத் தெரியாதுங்க வேணும்னா கண்ணாடிய கழட்ட சொல்லுறேன் பாத்துக்கோங்க.’ அப்படினு சொல்ல அந்தக் கண்ணு தெரியாதவரும் கண்ணாடியைக் கழட்ட அப்புறம்தான் அந்த நாலு பேருக்கும் கண்ணு தெரிஞ்சிது. இவர்கிட்ட  மன்னிப்பும் கேட்டாங்க.”

அட பாவமே ஒரு பார்வை இல்லாத ஆண் பார்வை இருக்க ஆணை தெரியாம இடிச்சதுக்கே இப்படினா?” என்று தம்பி அதிர்ச்சியில் கேட்க,

பெண்களை இடிச்சா என்ன ஆகும்னு யோசிக்குற அதுதானே?” என்று கேட்ட நம்பி,

என் கிட்ட ஒரு மூணு சம்பவம் இருக்கு.” என்றும் சொல்லி நிறுத்திநான்.

நிறுத்தாத போ போ.”

ஒரு திருவிழா. அங்க ஒரு கூட்டம் நிற்காம ஆடிக்கிட்டே போயிருக்கு. கூட்டத்துல ஒருத்தர் பிளைண்ட். அவரும் இவங்களை பின் தொடர்ந்து நடந்து போய்க்கிட்டிருந்திருக்காரு. அந்த நேரத்தில எவனோ ஒருத்தன் ஆடிக்கிட்டே நிலை தடுமாறி இவர் மேல வந்து விழ, இவரும் நிலை தடுமாறி ஏதோ ஒரு ஓரத்தில விழப்போக கீழ விழாம இருக்க,”

ஏதாச்சும் ஒரு பொண்ணோட கைய பிடிச்சு இழுத்துட்டாரு அதானே? எத்தன படத்துல பாத்திருப்போம்?” என்றான் தம்பி நக்கலாக.

கரக்டு ஆனா அது வெறும் பொண்ணு இல்ல.”

வெள்ளக்காரப் பொண்ணா?

அடே! அவர் கைய பிடிச்சது ஒரு போலீஸ் கான்ஸ்டேபில்டா.”

அய்யய்யோ! அப்புறம்?”

அப்புறம் என்ன! இவர அந்தப் போலீஸ் லேடி திட்டி மேடம் அந்த லத்திய குடுங்க மேடம் அப்படினு அங்க இருந்த எஸ்.. கிட்ட சொல்ல அந்த எஸ்.. இவர ஒரு அடியும் அடிச்சிட்டாங்க.”

என்ன டா சொல்ற! அப்புறம் என்ன அச்சு?”

அப்புறம் என்ன ஆகுறது? அங்க இருந்தவங்க எல்லாம் இவர பத்தி சொல்ல அந்த கான்ஸ்டெபிள் இவர் கிட்ட ஓயாம ஒருமணி நேரம் சாரி கேட்டு வழி அனுப்புநாங்கலாம்.”

உச்சு கொட்டினான் ஆசைத் தம்பி.

ரொம்ப பீல் பண்ணாத தம்பி. அதுக்கப்புறம் அவர் அந்த லேடி போலீஸ இன்னொரு பஸ் ஸ்டேண்டுல பாத்திருக்காரு. இவங்களும் அடையாளம் கண்டு பிடிச்சு ரெண்டு பேரும் பரஸ்பரம் நலம் விசாரிச்சிக்கிட்டாங்கலாம்.”

பெருமூச்சு விட்டுக்கொண்ட ஆசைத் தம்பி.

ஒரு பார்வை இல்லாதவர் ---- கையைப் பிடிச்சதுக்கே இப்படினா,” என்றும் ஆதங்கப்பட்டான்.

கையாவது காலாவது. அந்த நேரத்தில எல்லாம் ஒண்ணுதாண்.” என்ற நம்பி,

இன்னொரு சம்பவம் கேளு. தனது நண்பன் பக்கத்துலதான் நிற்கிறார்னு தவறா புரிஞ்சிக்கிட்ட நம்முடைய மூத்த பார்வையற்ற சகோதரர் ஒருத்தர் அவருடைய நண்பரை நோக்கி கையை நீட்ட அந்த கை ஒரு பெண்மனியுடைய மார்பகத்தில போயி ஆழமா பதிஞ்சதா பதிவு பண்ணி இருக்காரு.”

வாயைப் பிளந்தான் ஆசைத் தம்பி. அவனுக்கு இரண்டு சந்தேகங்கள் உதிர்த்தன. ஆனால் ஒன்றை கூட கேட்க முடியவில்லை.

அதுக்கப்புறம் என்னாச்சு அப்படினுதானே கேக்குற. கண்ணு தெரியாத அந்த நபருடைய காதை காலி பண்ணிடுச்சு அந்த அம்மா.”

அடிச்சாங்களா!”

இல்ல இல்ல. வட சென்னை வெற்றிமாறனுக்கே வகுப்பு எடுக்குற அளவுக்கு வாயில இருந்து வார்த்தைங்க வந்து விழுந்திச்சுனு சொல்லவந்தேன்.”

ஆசைத்தம்பி தனது இரண்டாவது சந்தேகத்தைத் தள்ளிப்போட்டான்.

இதைவிட இன்னொரு சம்பவம் ரொம்ப சுவாரசியமானது.”

பார்வை இல்லாதவங்க திட்டுவாங்குறதும் அடி வாங்குறதும் உனக்கு சுவாரசியமா நம்பி.”

அது அவங்களுடைய பார்ட் ஆப் லைப் தம்பி.”

எது இப்படி அவமான படுறதா?”

இப்போது அவனுடைய இரண்டாவது சந்தேகம் வெளியில் வந்து விழுந்தது.

எப்படி இதையெல்லாம் வெளியில சொல்றாங்க? அதுவும் நீ கேட்டன்னு? என்ன கேட்டா இந்த தலைப்பே வேணாம்னு சொல்லி இருப்பேன். இது ஒரு மாதிரி தர்ம சங்கடமான நெலம நம்பி. உனக்கு புரியுதா இல்லையா?”

அவனது வார்த்தைகளை மெல்லிய புன்னகையுடன் கடந்தான் நம்பி.

நீ கேட்ட கேள்விக்கு என்கிட்ட பதில் இருக்கு தம்பி. ஆனா நான் இதுக்கப்புறம் சொல்லப்போர இன்ஸிடென்செல்லாம் நீ கேட்டா அப்புறம் உன்னுடைய கேள்விதான் இருக்காது.”

ம்ம். இதே மாதிரி இன்னொரு சம்பவம் அவ்வளவுதானே.”

இதேமாதிரி. ஆனா இது வேரமாதிரி. என்று சொன்ன நம்பியே தொடர்ந்தான். எந்த ஆவலும் இன்றி கேட்க ஆரம்பித்தான் ஆசைத் தம்பி.

ஒரு பார்வையற்றவர் ரெண்டு பெண்களோட சாலையில நடந்து போக எதிர்ல வந்த பெண்ணுடைய மார்பு மேல தெரியாம கை பட்டிடுச்சு. அதுக்கப்புறம் அவங்க இவர திட்ட, இவர் கூட வந்த ரெண்டு பேரும் இவர பத்தி சொல்லியும் அவங்க கேக்காம திட்டிக்கிட்டே இருக்க, இவர் கூட வந்த ரெண்டு பேரும் கடுப்பாகி அவங்களை ரொம்ப மோசமா திரும்ப திட்ட ஆரம்பிச்சிட்டாங்க.”

பார்வை இல்லங்குரதியே விட்டுடுவோம். கொஞ்சம் லாஜிக்கலா யோசிப்போம்.  ரெண்டு பொண்ணுங்க கூடதானே போயிக்கிட்டிருந்தாரு அப்புறம் என் எதிர்ல வர யாரோ ஒருத்தர் மேல தெரிஞ்சே இடிக்க போராறு? யோசிக்க வேணாமா? அதுவும் படக்கூடாத இடத்துல பட்டுச்சுன்னா அந்த கூட வந்த ரெண்டு பேரும் என்ன நினைப்பாங்க? அப்படினா தெரியாமதானே பட்டிருக்கும்னு அந்த லேடிக்கு தெரியவேணாமா? 

இதேத்தான் அந்தப் பொண்ணுங்களும் கேட்டாங்க. ஆனாலும் சண்டை ஒஞ்ச பாடு இல்ல. அந்தப் பார்வையற்றவர் என்னவோ மண்ணிப்பு கேட்கவும் விட்டுருங்கணு சொல்லவும் எழுந்தாரூ. ஆனா இவர உட்கார வெச்சிட்டு அந்தப் பொண்ணுங்க ரெண்டுபேரும் அந்த லேடிய வெச்சி செஞ்சிட்டாங்க. அதுவும் அந்த ரெண்டு பேர்ல ஒரு பொண்ணு அந்த லேடிய இறங்கி கேட்டதெல்லாம் வெளியில சொல்ல முடியாத ரகம்.”

அப்படி என்ன கேட்டாங்கலாம்?”

அட போடா டே! அதை எல்லாம் சொல்ல முடியாது. அது மட்டுமில்லாம இப்போவெல்லாம் அடப்பாவி இங்குரதே அடல்ட் கண்டெண்ட் ஆகிப்போச்சு.”

எனக்கென்னவோ அந்த இடத்தில அந்தப் பார்வை இல்லாதவர் எவ்வளவு அசௌகர்யமா உணர்ந்திருப்பாருநு நெனச்சாலே கஷ்டமா இருக்கு. அதுக்குதான் இந்தத் தலைப்பே வேணாம்னு சொன்னேண்.”

அடே! இன்னைக்கு என்னடா ஆச்சு உனக்கு? எதுக்கு சொல்ல வரோம்நே புரிஞ்சிக்காம மூணு மாசமா மூவ்மண்டே குடுக்காத ஐ.டி.சி. பேங்கு மாதிரி அங்கேயே நிக்கிற.”

உன்னுடைய பங்குச் சந்தை அனுபவத்தை எல்லாம் இங்க யாரும் கேட்கல. இவங்களுடைய இம்மாதிரியான அனுபவங்களை இங்க பகிரனுமா அப்படினுதான் கேக்குறேன்.”

அப்படி இல்ல தம்பி. இன்னொரு விஷயம் கேளு. ஒரு பார்வையற்றவரு சமோசா கூடைய தட்டிவிட்டுட்டாரு. அந்த சமோசா கார அம்மாவுக்கு வியாபாரம் போச்சு. கோவத்துல கடுமையா திட்டி இருக்காங்க. அப்புறம் அவங்களே இவருக்கு பார்வை இல்லனு தெரிஞ்சதுக்கப்புறம் இவரு எங்க போகனுமோ அங்கேயே கூட்டிட்டு போயி விட்டாங்களாம். அதே மாதிரி இன்னொரு சம்பவத்துல ஒரு பார்வை இல்லாதவர் சாலையில நடந்து போகும்போது ஒரு பைக்க இடிச்சி அந்த பைக் கீழ விழுந்து அதோட கண்ணாடி ஓடஞ்சி அதோட உரிமையாளர் வந்து ஒரே கத்து. காசு வேற கேக்க ஆரம்பிச்சிட்டாராம். அப்புறம் இவர் பார்வை இல்லாதவர்னு சொல்ல அவரே காலேஜ்ல கூட்டிட்டு போயி விட்டிருக்காரு.” என்று சொன்ன நம்பி,

இன்னொரு விஷயம் கேளு. ஒரு பார்வையற்ற நண்பர் அம்மாவோட பேருந்துல பயணம் செஞ்சிருக்காரு. ஒரு கர்ப்பிணி பேருந்துல ஏற இவர் பக்கத்துல உட்கார்ந்து இருந்த இவருடைய அம்மா எழுந்து அந்த கர்ப்பிணிக்கு இடம் குடுத்திருக்காங்க. இது இவருக்குத் தெரியாது. அம்மாதான் பக்கத்துல இருக்காங்கணு நெனச்சு இப்போ எந்த ஊர் வந்திருக்குனு கேட்க பதில் இல்ல. என்னடா பதில் வரலையேனு தோலைத்தொட்டு கேட்டு இருக்காரு. அந்த கர்ப்பிணி கூட அத அவ்வளவு சீரியஸா எடுக்கல. ஆனா அவங்க கூட வந்த அவங்களுடைய அம்மா பேருந்தை நிறுத்த சொல்லி இவர கண்ட மேனிக்கு திட்டி அப்புறம் இவர் கண்ணாடிய கழட்டுனதும் பார்வை இல்லனு தெறிஞ்சி இவர் கிட்ட மனசோடஞ்சி மன்னிப்பு கேட்டிருக்காங்க.”

ஆனா அத்தன பேரு முன்னாடி அந்த பார்வை இல்லாதவருக்கு எவ்வளவு சங்கடமா இருந்திருக்கும்? அது மட்டுமில்லாம அவருடைய அம்மாவுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்? என்னைய கேட்டா ஒரு வாட்டி தெரியாம இடிச்சாலோ இல்லனா கை பட்டாலோ முதல்ல யோசிச்சிட்டுதான் கோவப்படனும். அப்படியே யோசிக்காம கோவப்படுரவங்களா இருந்தாலும் கூட முதல்ல முறைக்கனுமே தவிர வார்த்தைய விடக்கூடாது. வெறுமனே முறைச்சா அது பார்வை இல்லாதவங்களை பாதிக்காது. அதே மாதிரி பார்வை இல்லாதவங்கள கூட்டிட்டு போரவங்க ரொம்ப கவனமா இருக்கணும். இந்த விஷயத்துல இவருடைய அம்மா எழுந்து போகும்போது ஒரு வார்த்த இவர்கிட்ட சொல்லிட்டு அந்தக் கர்ப்பிணிக்கு இடம் கொடுத்திருக்கலாம். இப்போ பாரு! அவரவிட அவருடைய அம்மாவுக்குதான் இது ரொம்ப வருத்தமா இருந்திருக்கும்.”

எதுக்கிந்த தலைப்புனு கேட்டுட்டு இப்போ எதுக்குனு நீயே புரிஞ்சிக்கிட்டு சொல்ல ஆரம்பிக்குற பாத்தியா. இதுக்குதான் இந்தத் தலைப்பு. இந்தப் புரிதல் எல்லாருக்கும் வரணும். அதுக்காகத்தான் அவமானங்களையும் தாண்டி இது மாதிரியான விஷயங்கள நம்மக்கிட்ட பகிர்ந்துக்கிறாங்க.”

இந்த மாதிரி சம்பவங்கள் பார்வையற்ற பெண்களுக்கு நடக்குமா?” என்றார் கூட்டத்திலிருந்த நபர் ஒருவர்.

நடந்திருக்கு. ஒரு பார்வையற்ற பெண் பேருந்துல பயணம் பன்னும்போது ஒரு ஆண் மேல ரெண்டு முறை தெரியாம கை பட்டதுனால அந்த ஆண் சே அப்படினு சொல்லி இறங்கி இருக்காரு.”

தப்பான பொண்ணுனு நெனச்சிருப்பாரோ.”

அவங்களும் அதேதான் பீல் பன்னாங்க. இன்னொருமுறை இன்னொரு பார்வையற்ற பெண் பேருந்துல இருந்து இறங்கும்போது முன்னாடி இருந்த பெண்ணோட புடவைய மிதிச்சு அப்புறம் அநாகரீகமான வார்த்தைகளாள திட்டு வாங்கி இருக்காங்க. ”

இம். புடவை கழண்டு போரா மாதிரி நிலைமை வந்திருக்கும். ஆனாலும் பார்வை இல்லாதவங்க இந்த மாதிரியான விஷயத்துல கொஞ்சம் கவனமா இருக்கணும். குச்சியை நல்லா பயன்படுத்தணும். முதல்ல குச்சியை பயன்படுத்தணும்.” என்றான்  ஆசைத் தம்பி.

ஒரு பார்வை இல்லாதவர் பார்வை இருக்கவங்களைத் தெரியாம மோதிட்டாலோ இல்லனா தீண்டிட்டாலோ பெரும்பாலானவங்க செஞ்சது பார்வை இல்லாதவங்கனு தெரிஞ்சா பொறுமையாதான் போறாங்க. ஏதாச்சும் ஒண்ணு ரெண்டுதான் ஏடாகூடம்.”

ஆமாம் அந்த ரெண்டு பொண்ணுங்க கூட போனவரு ரூட்ல வந்த பொம்பள மாதிரி.” என்றான் தம்பி.

எனக்கு இதையெல்லாம் விட ஒரு சம்பவம்தான் ரொம்ப கஷ்டமா இருந்திச்சு. ஒரு ரெண்டு பிளைண்ட் ஹோட்டல்கு போனாங்க. சாப்பிட உட்கார்ந்திருக்காங்க. சாப்பாடு வந்திச்சு. அதுல ஒருத்தர் தண்ணிய தட்டிவிட்டு அது டேபிளெல்லாம் சிந்திச்சு. ஆனா இலையில படல. இருந்தாலும் அந்த ஹோட்டல்ல இருந்தவறு இவங்கள பாத்து இதுக்குதான் உங்களை மாதிரி ஆளுங்களை எல்லாம் உள்ள விடுரதில்லநூ சொன்னாராம். இவங்க ரெண்டு பேரும் மனசொடஞ்சி இலைய மூடிட்டு சாப்பிடாம எழுந்து போயிருக்காங்க.  ஆறு மாசம் கழிச்சு அதே ஹோட்டல். அதே ரெண்டு பிளைண்ட். சாப்பாடு வந்தாச்சு. இப்போ சர்வர் தண்ணிய தட்டிவிட்டாறு. இலையெல்லாம் தண்ணி. உடனே முதலாளி ஓடி வந்து அந்த பார்வை அற்றவரோட இலைய எடுத்துட்டு வேற சாப்பாடு கொண்டுவந்து சாப்பிட வெச்சாராம்.”

கதைய பாத்தியா?” என்றது கூட்டத்தில் ஒரு குரல்.

தப்பு அப்படினா என்னணு தெரியுமா தம்பி?”

தெரியும்.”

சொல்லு பாப்போம்.”

தப்பு அப்படின்கிறது என்ன செஞ்சாங்க அப்படிங்கிரத வெச்சி முடிவாகுரதில்ல யாரு செஞ்சாங்க அப்படிங்கிரத வெச்சி முடிவாகிறது.”

graphic கட்டுரையாளர் வினோத் சுப்பிரமணியன் அவர்களின் படம்
கட்டுரையாளர் வினோத் சுப்பிரமணியன்

(கட்டுரையாளர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றுகிறார். ).

slvinoth.blogspot.com என்ற தளத்தில் தொடர்ந்து எழுதிவருகிறார்)

தொடர்புக்கு: slvinoth91@gmail.com

1 கருத்து:

  1. ஒவ்வொரு இதழிலும் நான் விரும்பிப் படிப்பது உங்களுடைய தொடர் காரணம் நீங்கள் குறிப்பிடும் நிகழ்வுகள் அல்ல அதை நீங்கள் தற்கால விமர்சனத்தோடு கோர்த்து தரும் முறையினால் மிக மிக மிக மிக அருமை வார்த்தைகள் இல்லை

    பதிலளிநீக்கு