சினிமா: நெற்றிக்கண் திரைப்படத்தில் பார்வையற்றோர் குறித்த சித்திரிப்பு – ம. தமிழ்மணி

graphic நெற்றிக்கண் திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ படத்தின் போஸ்டர்

              சமீபத்தில் நயன்தாரா பார்வையற்ற கதாப்பாத்திரமாக நடித்து ஹாட்ஸ்டாரில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம் குறித்து விரல்மொழியர் ஏற்பாடுசெய்திருந்த கிலப்ஹவுஸ் கூட்டத்தில் நம் ஆசிரியர் குழுவில் உள்ள குறைபார்வைகொண்ட திரு. தமிழ்மணி அவர்கள் பேசியிருந்தார்.

          2011- ல் வெளியான ப்லைண்ட் (Blind) என்கிற கொரியன் படத்தின் ரீமேக் ஆகவே இந்த நெற்றிக்கண் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

          எனவே பிலைண்ட் திரைப்படத்திற்கும் நெற்றிக்கண் படத்திற்குமான ஒப்பீடு, அதைவீட இது எந்தெந்த விதத்தில் மேம்பட்டிருக்கிறது, எந்த இடத்தில் சருக்கியிருக்கிறது போன்ற விடயங்களைத் தெளிவாக பேசியிருந்ததன் தொகுப்பே இது.

        ஒருமணி நேரம் 50 நிமிடங்கள் கொண்ட பிலைண்ட் திரைப்படத்தில் தமிழ் ரசிகர்களுக்காக சில விடயங்களைச் சேர்த்து 2 மணிநேரம் 25 நிமிடங்கள் கொண்ட திரைப்படமாக கொடுத்திருக்கிறார்கள்.

          படத்தின் முதல் மற்றும் கடைசி ஐந்து நிமிடங்கள் மட்டுமே கதாநாயகி பார்வையுள்ள கதாப்பாத்திரமாக நடித்திருப்பார்.

        பிலைண்ட் திரைப்படத்தில் கதாநாயகி பார்வையிழந்தவுடன்  எப்படி தன்னை பார்வையின்மைக்கு பழக்கப்படுத்திக்கொள்கிறார் என்கிற விஷயங்களெல்லாம் காட்டப்படாமல் நேரடியாகவே கதை துவங்கிவிடுகிறது.

          ஆனால் நெற்றிக்கண் படத்தில் இடையில் பார்வையிழந்த கதாநாயகி பார்வையின்மைக்கு எவ்வாறு தன்னை முழுமையாக பழக்கப்படுத்திக்கொள்கிறார் என்பதை வழக்கமான தமிழ் படங்கள் போல் அல்லாமல் நுனுக்கமாக காட்டியிருக்கிறார்கள்.

          மொபிலிட்டி, பிரையில் எழுதுதல் மற்றும் வாசித்தல், ஜாஸ் மற்றும் டால்க் பேக் பயன்பாடு என ஒரு பார்வையற்றவருக்கு தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் எடுத்துக்கொள்வதாக காட்டியிருக்கிறார்கள்.

          கதாநாயகிக்கு ஒரு வழிகாட்டி நாய் கொடுக்கப்படுகிறது. எடுத்தவுடனே அது வழிகாட்டுவதுபோல காட்டாமல் ஆரம்பத்தில் ஊன்றுகோளைப் பயன்படுத்திக்கொண்டு நாயையும் உடன் அழைத்துச்செல்வதாக காட்டிவிட்டு நாய் நன்றாக பழக்கப்பட்டதும் நடந்துசெல்லும் கதாநாயகி ஊன்றுகோளை மடக்கிவைத்துவிட்டு நாயுடன் செல்வதாக காட்டியிருக்கிறார்கள்.

          கூடுதலாக சேர்க்கப்பட்டது என்றாலும் தமிழ் சூழலுக்கு பார்வையற்றவர்கள் குறித்த விழிப்புணர்வை ஊட்டும் வகையிலான காட்சிகள்.

          படம் முழுக்க தேவையான இடங்களில் அலைபேசியில் டபுல்டச் பயன்பாடு, அழைப்பவரின் பெயரைக் கேட்டு கால் அட்டெண்ட் செய்வது, ஜாஸ் பயன்படுத்தி புத்தகம் படிப்பது, கணினியில் டைப் செய்வது மாதிரியான காட்சிகளைத் தெளிவாக காட்டியிருப்பது நமக்கு மகிழ்ச்சியான விஷயமே.

graphic bliend திரைப்படத்தின் title card

           பிலைண்ட் திரைப்படத்தில் தலைப்பிற்கு கீழாக பிலைண்ட் (Blind) என்கிற வார்த்தை உன்மையாகவே பிரெயில் புள்ளிகளிலும் எழுதியிருக்கிறார்கள்.

graphc நெற்றிக்கண் என்ற திரைப்படத்தின்  பெயர் படத்தில் இடம்பெறும் போது எடுக்கப்பட்ட படம்

           ஆனால் நெற்றிக்கண் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்கிற வாக்கியமும் நெற்றிக்கண் என்கிற தலைப்பும் வருமிடத்தின் பின்னனியில் பிரெயில் புள்ளிகள் இடம்பெற்றிருக்கும்.

          பிலைண்ட் திரைப்படத்தை முழுமையாக காப்பி அடித்தார்களா? இல்லை ஏதாவது பார்வையற்றவரோடு சேர்ந்து பணியாற்றினார்களா? தெரியவில்லை நெற்றிக்கண் படத்தில் நமது இயல்பான நடவடிக்கைகள் இயல்பாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

            உதாரணமாக நடக்கும்போது கைகளைக் கொஞ்சம் முன்னால் நீட்டி நடந்துசெல்வது. இதுவரை வந்த திரைப்படங்களில் நெஞ்சுக்குநேராக கைகளை உயர்த்தி நீட்டிக்கொண்டு நடப்பதாக காட்டுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் இயல்பாக ரொம்பவும் உயரமாக அல்லாமல் வயிற்றிற்கு நேராக கைகளை நீட்டிக்கொண்டு நடப்பதாக காட்டுகிறார்கள்.

graphic நயன்தாரா அவர்கள் கைகளை முன்நீட்டியபடி நடக்கும் படம்

           அதுபோல பார்வையிழந்த புதிதில் கதாநாயகியை ஒருவர் கூட்டிக்கொண்டு நடக்கும்போதும் கைகளை முன்னால் நீட்டிக்கொண்டு நடப்பதாகவும் படத்தின் பிற்பகுதியில் ஒருவர் கதாநாயகியை கூட்டிச்செல்லும்போது கைகளை நீட்டாமல் இயல்பாக நடப்பதுபோலவும் காட்டியிருக்கிறார்கள்.

          இரண்டு திரைப்படத்திலும் பார்வையற்றவர்கள் ஆடைகளின் வண்ணத்தைக் கண்டுபிடிக்க ஒவ்வொரு ஆடையிலும் அதன் வண்ணங்கள் பிரெயிலில் எழுதப்பட்ட சிறிய பேட்ச்களைக் குத்திவைத்திருக்கிறார்கள். இது நமக்கெல்லாம் சாத்தியமாகுமா தெரியவில்லை.

graphic நெற்றிக்கண் படத்தில் ஆடைகளின் வண்ணம் கண்டறியும் படம்

       பிலைண்ட் திரைப்படத்தில் கதாநாயகி தன் கையிலுள்ள ஒரு கருவியின் பொத்தானை அழுத்திவிட்டு சிக்னலில் சாலையைக் கடப்பதாக ஒரு காட்சி.

      இதை தமிழில் சாலையைக் கடக்கலாம் என்கிற அறிவிப்பைக் கேட்டுவிட்டு கடப்பதாக காட்டியிருப்பது பாராட்டப்படவேண்டிய விஷயம்.  அந்த சிக்னலை சில வாகன ஓட்டிகள் மதிக்காமல் வருவதால் அங்கே அவர்களுக்கு சிறு விபத்து நேர்கிறது. இதுவும் கூட நம் சுமையின் ஒரு சிறு பதிவாக எடுத்துக் கொள்ளலாம்.

      பார்வையற்றவர்களுக்கான சிறப்பு நடைபாதைகளை இரண்டு திரைப்படங்களிலுமே காட்டியிருந்தாலும் பிலைண்ட் திரைப்படத்தில் 30 வினாடிகளாகவும், அதை அடிப்படையக கொண்டே கதாநாயகி ஓடுவதாக காட்டப்பட்டிருப்பது நெற்றிக்கண் படத்தில் வெறும் 10 நொடிகளாகவே காட்டப்பட்டிருக்கிறது.

        கொஞ்சம் கூடுதல் வினாடிகள் அதன் பயன்பாட்டைக் காட்சிப்படுத்தியிருந்தால் இதுகுறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த வாய்ப்பாக இருந்திருக்கும்.

      தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை பார்வையற்றவர்களையும் ஊன்றுகோளையும் பிரிக்கமுடியாது என்பதுபோல காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

      அதனை உடைத்து இந்தத் திரைப்படத்தில் மிக எதார்த்தமாக எங்கெல்லாம் ஊன்றுகோள் தேவைப்படுகிறதோ அங்கு மட்டுமே பார்வையற்றவர்கள் ஊன்றுகோளைப் பயன்படுத்துவார்கள் பழக்கப்பட்ட இடங்களி்ல  ஊன்றுகோள் தேவைப்படாது என்பதை நயன்தாரா தான் வளர்ந்த இல்லத்திற்கு செல்லும் காட்சியில் காட்டியிருப்பார்கள்.

      இல்லத்தின் கேட் வரை ஊன்றுகோள் பயன்படுத்தி நடந்துவரும் நயன்தாரா உள்ளே செல்லும்போது அதனை மடக்கிவிட்டு நடந்து செல்லும் காட்சியைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது.

          இதில் வியப்பு என்னவென்றால் 2021ல் வந்திருக்கக்கூடிய இந்த படத்தில் என்னென்ன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறதோ அவை அத்தனையும் அப்படியே 2011 இல் வெளிவந்த கொரியன் படத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் வியப்பாகத்தான் இருக்கிறது. அந்த ஈசி சென்சார் கருவி ஆகட்டும், ஆர்பிட் ரீடர் கருவி ஆகட்டும், டாக் பேக் வசதி, டபுள் டச் வசதி இவை எல்லாமும் 2011 லேயே வந்துவிட்டது என்பதும் நமக்கு தாமதமாகத்தான் இது அறிமுகமானது என்பதும். குறிப்பாக ஆர்பிட் ரீடர் கடந்த ஒரு இரண்டு வருடங்களாகத்தான் நம்மிடம் பேசுபொருளாக இருக்கிறது என்பதும் வியப்பை அளிக்கிறது.

      இரண்டு திரைப்படங்களிலுமே பார்வையற்றவர்கள் பேசுபவரின் முகம் பார்த்துப் பேசமாட்டார்கள், அவர்களுக்கு நுகர்வு திறன் அதிகம் உண்டு போன்ற நாம் முரண்படும் பல காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. குரல் வரும் திசை நாம் முகம் திருப்பி பேசுவோம் இது நமக்கும் எல்லோருக்கும் அடிப்படை இதை அவர்கள் அறியாமல் போனது அவர்களின் அறியாமை என்று வைத்துக் கொள்ளலாம்.

      மேலும்,  பேசுபவரின் குரலைக் கேட்டு அவரின் வயது, உயரம், எடை போன்றவற்றைக் கணித்துவிடும் காட்சியும் நமக்கு முரணாகப்பட்டாலும் படத்தின் கதாநாயகி ஒரு சிபிஐ அதிகாரி என்பதால் எதிரே இருப்பவரைப் பற்றிக் கணிப்பது அவரின் பழக்கத்தினாலும், பயிற்சியின் வழியும் சாத்தியப்பட்டிருக்கும் என்று சமாதானம் செய்துகொள்ளலாம்.

      2011-ல் வெளியான கொரியன் திரைப்படத்தை அப்படியே வெகுசில மாற்றங்களுடன் காட்சிப்படுத்தியிருப்பதால் நெற்றிக்கண் திரைப்படத்தில் நாம் நிறையாகவும் குறையாகவும்  நினைக்கும் பெறும்பாலான விஷயங்கள் பிலைண்ட் திரைப்படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதுதான்.

      எனவே மகிழ்ச்சியடைவதற்கோ வருத்தப்படுவதற்கோ ஏதுமில்லை.

 

பின் குறிப்பு:

இது திரைவிமர்சனமல்ல பார்வையற்றவர்களை எப்படி காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதன் தொகுப்பு.

*****

எழுத்தாக்கம்: ஜோ. யோகேஷ் 


3 கருத்துகள்:

  1. இரண்டு படங்களையும் முழுமையாக பார்த்து, நேர்த்தியாக தொகுத்தளித்த தமிழ்மணி அவர்களுக்கும், எழுத்தாக்கம் செய்த யோகேஷ் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு