விவாதம்: - அரசியலில் நாம், (3)

ரா. பாலகணேசன்
சென்ற இதழில் பார்வை மாற்றுத்திறனாளிகளின் அரசியல் பங்களிப்பு குறித்து பல வாசகர்களின் கருத்துகளைப் பார்த்தோம். இந்த இதழில் சில மூத்த பார்வை மாற்றுத்திறனாளி செயல்பாட்டாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் விவாதத்தைத் தொடர்வோம்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் வே. சுகுமாரன், ‘காத்திருப்பு’, ‘நெருப்பு நிஜங்கள்’ ஆகிய கவிதை நூல்களின் ஆசிரியர். பார்வையற்றவர்கள் ஏன் அரசியல் வானில் ஜொலிக்க முடியவில்லை என்ற கேள்விக்கு அவர் தரும் பதில் இது.

“அரசியல் என்பது தேர்தல் சார்ந்தது மட்டுமல்ல. கொள்கை சார்ந்ததும் கூட. நம்மவர்களில் பெரும்பாலானோர் கொள்கை அரசியல் சார்ந்த புத்தகங்களைப் படிப்பதில்லை. அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வதில்லை. கொள்கைத் தெளிவு இருந்தால் தானே அதை நடைமுறையில் செயல்படுத்த முடியும்”.

ஆம். தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளில் மிகச் சிலவற்றைத் தான் கொள்கை சார்ந்ததாக வகைப்படுத்த முடியும். மற்றவை மக்கள் நலன் என்ற பெயரில் இயங்கினாலும், தனக்கென தனிப்பட்ட கொள்கைகள் இல்லாதவையாகவே இருக்கின்றன.
 திராவிடம், தமிழ் தேசியம், தலித்தியம், ஹிந்துத்துவம், பொதுவுடைமை முதலியவை தான் இங்கு அதிகம் பேசப்படும் கொள்கைகள்.

தனக்கென நூற்றாண்டு வரலாறு கொண்டது திராவிட அரசியல். திராவிடர் கழகம் முதலிய சமூக அமைப்புகளாலும், தி.மு.க என்ற அரசியல் இயக்கத்தாலும் தொடர்ந்து பேசப்படும் கொள்கை இது. தமிழ் தேசியத்திற்கும் நீண்ட வரலாறு உண்டு. தற்போது நாம் தமிழர், மே 17 முதலிய இயக்கங்கள் இக்கொள்கையை முன்னிறுத்துகின்றன. ஹிந்துத்துவக் கொள்கையில் பாஜக தீவிரமாக இயங்கிவருகிறது. தலித்தியம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் உரையாடிவருகின்றன. உலகளாவிய சிந்தனையான பொதுவுடைமைக் கொள்கையை CPM, CPI ஆகிய தேர்தல் அரசியல் கட்சிகளும், இன்னும் சில சமூக அமைப்புகளும் முன்னிறுத்திவருகின்றன.

இவை ஒவ்வொன்றிற்கும் என தனித்தனி கொள்கை விளக்க நூல்கள், வரலாற்று ஆவணங்கள், தலைவர்களின் கருத்துகள் முதலியவை எழுத்து வடிவில் கிடைத்தாலும், பார்வையற்றவர்களால் அவற்றை நேரடியாகப் படித்துவிட முடியாது. பெரும்பாலான நூல்கள் பிரெயிலிலும் இல்லை; கணினியில் படிக்க வசதியாக ஒருங்குறி (Unicode) வடிவிலும் இல்லை. பிற மனிதர்களின் துணை கொண்டுதான் நாம் அவற்றைப் படித்தாகவேண்டும். அப்படியென்றால், நமக்காக வாசிப்பவர்களுக்குத் தொடர்புடைய கொள்கை சார்ந்த ஈர்ப்பு இருக்கவேண்டும். இக்காரணங்களால் பார்வை மாற்றுத்திறனாளிகள் அரசியல் கொள்கை விளக்கம் குறித்த நூல்களில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.

வாசிப்பகங்களில் (Reading centres) படிக்கும் பார்வையற்றவர்களும் தமக்கான பாடங்களைத் தாண்டி புனைவுகளைக் கூட நிறைய படிக்கின்றனர்; அரசியல் கொள்கை விளக்க நூல்களையோ, வரலாற்று நூல்களையோ படிப்பதாகத் தெரியவில்லை. பார்வையற்றோருக்காக புத்தகங்களைச் சேமித்துத் தரும் இணைய தளங்களிலும் அரசியல் கொள்கை சார்ந்த நூல்களைப் பார்ப்பது அரிதாகவே இருக்கிறது.

கொள்கை சார்ந்து தொடர்ந்து விவாதிக்கும் இதழ்களான விடுதலை, தீக்கதிர்,  தலித் முரசு முதலியவையும் பார்வையற்றோர் படிக்கும் வகையிலான வடிவத்தில் கிடைப்பதில்லை. வாசிப்பாளர்கள் உதவியோடு படிக்க வாய்ப்பு பெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகளும் இவற்றைப் படிப்பதில்லை. இந்நிலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் கொள்கை அரசியல் அறிவில் தேர்ச்சி பெறுவது எப்படி?

“எனக்குத் தெரிந்த அளவில் கட்சி கொள்கைகள் குறித்து வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சில மூத்த கொள்கை அரசியல்வாதிகளிடம் பேசியிருக்கிறேன். அந்த விவாதத்தில் அவர்கள் தரும் ஒரே பதில் இதுவாகத்தான் இருக்கும். ‘ ஒங்களுக்கு எதுக்கு தம்பி இதெல்லாம்? நல்லாப் படிச்சு வேலைக்குப் போங்க.’ இப்படி பதில் வரும்போது நாம் கொள்கை அரசியலில் எப்படித் தேர்ச்சி அடையமுடியும்?” என்கிறார் பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் மதுரை கிளையின் தலைவர் முனைவர். S. பாலாஜி.

கொள்கைத் தேர்ச்சி மிக்க அரசியல் தலைவர்களுக்கு பார்வை மாற்றுத்திறனாளிகள் மீது நன்மதிப்பு இருப்பதில்லை. அவர்கள் முற்போக்குச் சிந்தனையாளர்களாக இருந்தாலும் கூட. அவர்கள் பெரும்பாலும் இன்னும் பார்வையற்றவர்களைக் கருணைக்குரியவர்களாகவே பார்த்துவருகிறார்கள்.

“கொள்கை விளக்கம் பேசும் எத்தனை அரசியல் இயக்கங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான செயல் திட்டம் வைத்திருக்கின்றன?” என்று கேட்கிறார் கவிஞர் சுகுமாரன். உண்மைதான். மாற்றுத்திறனாளி தலித்கள், மாற்றுத்திறனாளி திராவிடர்கள், தமிழ் தேசியத்தில் மாற்றுத்திறனாளிகள் என்ற வகையில் இங்கு சிந்தனைகள் முகிழ்த்திருக்கின்றனவா?

 சில மாதங்களுக்கு முன் ஒரு பொதுக் காரியத்திற்காக குறிப்பிட்ட அளவு நிதி திரட்டிக்கொண்டு தன் கட்சித் தலைவரைச் சந்திக்கச் சென்றிருக்கிறார் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி தொண்டர். மகிழ்ச்சியாக அவரை வரவேற்ற தலைவர், அவரது நிதி திரட்டும் ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்திருக்கிறார். அதே நேரம், “பணம் இருக்கட்டும். நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பெயரில் நாங்கள் இந்தப் பணத்தை எழுதிக்கொள்கிறோம். நீங்கள் தரவேண்டாம்” என்றும் கூறியிருக்கிறார். இது நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைத்த செய்தி. ஆக, இன்னும் நாம் கருணைக்குரியவர்களாகவே கருதப்படுகிறோம். நாம் உரிமைகள் பற்றி பேசத் தொடங்கிவிட்டோம் என்றாலும், பொதுச் சமூகத்திற்கு நம்மால் ஆன பங்களிப்பைச் செலுத்த முடியும் என்கிற எண்ணத்தை பார்வையுள்ளவர்களிடம் ஏற்படுத்த முடியவில்லை.

“அரசியல் கட்சிகளின் மாற்றுத்திறனாளிகள் குறித்த பார்வையில் இப்போது மாற்றங்கள் ஓரளவு தெரியத் தொடங்கிவிட்டன” என்கிறார் பேரா. முருகானந்தன். ‘மக்கள் அதிகாரம்’ என்ற பொதுவுடைமை இயக்கத்தில் களப்பணி ஆற்றிய பார்வையற்றவர் இவர். ‘பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்கள் பேரவை’ என்ற அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் மாற்றுத்திறனாளிகள் குறித்தும் பேசப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் பேரா. முருகானந்தன்.

மாற்றுத்திறனாளிகளும் ஒரு வாக்கு வங்கிதான். அவர்களிடமும் நிறைய வாக்குகள் உள்ளன என்பதை அரசியல் கட்சிகள் உணரத் தொடங்கிவிட்டன. ஆனாலும், மாற்றுத்திறனாளிகளிலேயே பார்வையற்றவர்களின் அரசியல் பங்களிப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது.

பேரா. தீபக் தலைமையிலான டிசம்பர் 3 இயக்கம் திராவிட இயக்கங்களை வெளிப்படையாக ஆதரிக்கிறது. RSS அமைப்பின் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவாக இ\யங்கிவருகிறது ஸக்ஷம். CPM-இன் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பு தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கம். இவற்றில் பார்வை மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது.
இத்தகு சூழ்நிலையிலும், அக, புறத் தடைகளைத் தாண்டி அரசியல் இயக்கங்களில் பங்காற்றிவரும் சில பார்வை மாற்றுத்திறனாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை அடுத்த இதழில் சந்திப்போம்.
தொடர்புக்கு: balaganesan2285@gmail.com

தொடர்புடையவை

விவாதம்: அரசியலில் நாம் (2) - ரா. பாலகணேசன் 
விவாதம்: அரசியலில் நாம் - ரா. பாலகணேசன்  

1 கருத்து:

  1. ஐயா அரசியல் என்பது சேவை நோக்கம் கொண்ட நபர்கள் தங்களது பணியை செய்யும் இடம் பார்வையற்றவர்கள் தங்களுக்காக சேவையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எப்படி தாங்கள் இந்த பொது மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும் பார்வையற்றோர் அதிலும் குறிப்பாக தற்பொழுது கல்லூரி பயின்று கொண்டிருக்கும் அல்லது தனது இளங்கலை அல்லது முதுகலை கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் எந்த விழா ஏற்பாடு செய்தாலும் அதில் தாங்கள் பங்கேற்பதற்கு ஏதாவது ஒரு இலவச பொருள் எதிர் பார்த்து செல்கின்றனர் இப்படி இருக்கும் பார்வையற்ற இளைஞர் எப்படி அரசியலில் கவனம் செலுத்துவார்கள்

    பதிலளிநீக்கு